Published:Updated:

திருப்பதியைத் தொல்லியல் துறை கைப்பற்ற முயல்வதற்கு இதுதான் காரணமா? #Tirupati

திருப்பதியைத் தொல்லியல் துறை கைப்பற்ற முயல்வதற்கு இதுதான் காரணமா? #Tirupati
திருப்பதியைத் தொல்லியல் துறை கைப்பற்ற முயல்வதற்கு இதுதான் காரணமா? #Tirupati

தொண்டைமான் சக்கரவர்த்தி, திருப்பதி ஏழுமலையானுக்கு ஆலயம் அமைத்தார். அவரைத் தொடர்ந்து, திருவரங்கத்திலிருந்து திருப்பதி வந்து தரிசனம் செய்த ராமானுஜர் வைகாநஸ ஆகம விதிப்படி கோயிலில் நடக்கவேண்டிய பூஜைகள், விழாக்கள் ஆகியவற்றை நிர்மாணித்து, அவை தங்கு தடையின்றி நடக்கவும் ஏற்பாடு செய்தார். கோயில் நிர்வாகத்தைக் கவனிக்க `சடகோப யதி' என்னும் பெரிய ஜீயரையும் நியமித்தார். அது இன்றளவும் தொடர்ந்து நடைபெறுகிறது.  

சோழ அரசர்கள், சாளுக்கிய அரசர்கள்... எனப் பல நாட்டவரும் வணங்கிடும் தெய்வமாக வேங்கடவன் விளங்கினார். இவர்களுடைய திருப்பணிகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல், விஜய நகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் கோயிலுக்கு ஏராளமான நகைகள், ஆபரணங்கள், நிலங்கள், சொத்துகள் ஆகியவற்றை வழங்கினார். ஶ்ரீமணவாள மாமுனிகள் சின்ன ஜீயர் மடத்தை நிறுவி, நிர்வாகம் மேம்படச் செய்தார். இவரது சீடர் பிரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமி என்பவர்தான் சுப்ரபாதத்தை இயற்றினார். அது இன்றும் திருமலையில் முறைப்படி பாடப்படுகிறது. அன்னமய்யா, தரிகொண்ட வெங்கமாம்பாள், ஹாதிராம் பாவாஜி ஆகியோர் ஒவ்வொரு காலகட்டத்தில் திருமலையின் மேம்பாட்டில் அக்கறை கொண்டு ஏராளமான பணிகளை ஆற்றிவந்தனர்.

திருப்பதி தேவஸ்தானம் 1932-ம் ஆண்டு தொடங்கி, தன்னாட்சி பெற்ற தனி நிர்வாகமாக ஓர் அரசாங்கம்போல் செயல்பட்டு வருகிறது. பல கோடி இந்து மக்களின் நம்பிக்கைக்குரிய புனிதத் தலமாக திருப்பதி இருப்பதால், ஆங்கிலேயர்களும் சரி ஆற்காடு நவாப்களும் சரி... இதன் நிர்வாகத்தில் தலையிடுவதில்லை.

சுதந்திரத்துக்கு முன்னர் வரை கரடு முரடான மலைப்பாதையில் 11 கிலோமீட்டர் பயணம் செய்துதான் ஏழுமலையானை தரிசிக்க வேண்டும். அதன் பிறகு விஞ்ஞான வளர்ச்சி, நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சிகளின் காரணமாக மலைக்குச் செல்ல சீரான படிக்கட்டு வசதிகளும், பஸ், ஜீப் போய் வருவதற்கு வசதியாக மலைப்பாதை வசதியும் செய்யப்பட்டது.

1980-ம் ஆண்டு வரை பெருமளவில் வைணவர்களும் சிறிய அளவில் சைவர்களும் சென்று வழிபாடு செய்துவந்தனர். ஆனால், என்.டி.ராமராவ் முதலமைச்சரான பிறகுதான் திருமலை தென்னிந்திய அளவில் முக்கியத்துவம் பெற்ற கோயிலாக மாறியது. திருமலையில் தங்குமிடம், முடிக்காணிக்கை, உணவு, தரிசனம் என எல்லாவற்றையும் இலவசமாக்கினார். திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பத்து, இருபது மடங்குகளாக வளரத் தொடங்கியது. 

திருமலையின் நிர்வாகம் ஒரு தனி அரசாங்கம்போல் மிகுந்த கவனத்துடன் நடைபெறத் தொடங்கியது. இத்தனை ஆயிரம் மக்கள் வருவதைத் தொடர்ந்து அதற்கேற்ப குடிநீர், உணவு, சுகாதாரம் ஆகியவற்றைப் பெரிய அளவில் செய்யவேண்டியதாயிற்று.  2000-ம் ஆண்டுக்குப் பிறகு வெளிநாடு வாழ் இந்தியர்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கியது. 2010-ம் ஆண்டுக்குப் பிறகு வட இந்தியர்களின் வருகையும் அதிகரித்திருக்கிறது. இதனால் திருப்பதி கோயிலின் வருமானமும் பெரிய அளவில் அதிகரித்திருக்கிறது.

இந்தியாவிலேயே செல்வச் செழிப்புமிக்கக் கோயிலாக இருப்பதுடன், வருடம் முழுவதும் பக்தர்களால் நிரம்பிவழியும் கோயிலாகவும் திருப்பதி இருக்கிறது. நாளொன்றுக்குச் சராசரியாக 60 ஆயிரம் பேரும், வாரக் கடைசியில் 80 ஆயிரம் பேரும் சுவாமி தரிசனம் செய்வதால் வருடம் முழுக்க இந்தக் கோயிலுக்கு வசந்தகாலம்தான். 

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குக் கோயில் நிர்வாக அதிகாரியாக ஐ.ஏ.எஸ் படித்த ஒருவர் நியமிக்கப்படுவார். அவர் அரசு சார்பில் தேவஸ்தானத்துக்கு உதவிகரமாக இருந்து நிர்வகிப்பார்.  
ஶ்ரீராமாநுஜர் காலம் தொடங்கி இன்றுவரை வைகாநஸ ஆகம முறைப்படி அங்கே பூஜைகளும் ஆரத்திகளும் நடைபெற்று வருகின்றன. காலம் காலமாக நான்கு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தாம் மூலவருக்கு அர்ச்சனை, அபிஷேகங்கள் செய்து வருகிறார்கள். 
அதாவது, `கொல்லப்பள்ளி குடும்பம்’, `பைடப்பள்ளி குடும்பம்’, `பெத்தண்டி குடும்பம்’, `திருப்பதி அம்மா குடும்பம்’ என நான்கு குடும்பத்தினர்தாம் பல  தலைமுறைகளாக சாமிக்கு சேவை சாதித்து வருகின்றனர். 

திருப்பதி மலையில் தினமும்  திருமலையானுக்கு `கொலு' எனும் நிகழ்ச்சி நடைபெறும். ஸ்ரீநிவாச மூர்த்தியை மங்கள வாத்தியம் முழங்க, ஸ்நாபன மண்டபத்தில் தங்க சிம்மாசனத்தில் கொலுவிருக்க வைப்பார்கள். ஆஸ்தான பண்டிதர் ஸ்ரீநிவாச பிரபுவுக்குப் பஞ்சாங்கத்தை வாசித்து, அன்றைய திதி, வார, நட்சத்திர, யோக, கரணங்களைச் சொல்வார்கள். அன்றைய உத்ஸவ விசேஷங்களையும் ஸ்வாமிக்குத் தெரிவிப்பார்கள்.

எப்போதுமே ஆந்திர அரசாங்கத்துக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கும் இடையில் மோதல் போக்கு இருந்ததில்லை. தேவஸ்தான அர்ச்சகர்களுக்கிடையேயும் பெரிய அளவில் கருத்து வேறுபாடுகள் இருந்ததில்லை. இப்போது முதன்முறையாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. சர்ச்சையைக் கிளப்பியிருப்பவர் `கொல்லப்பள்ளி’க் குடும்பத்தைச் சேர்ந்த ரமண தீட்சிதர். இவர் கடந்த முப்பது வருடங்களாகக் கோயிலில் பணியாற்றி வருகிறார். பத்து வருடங்களுக்கு முன்னர்  தலைமை அர்ச்சகரானார். அவருக்குக் கடந்த வாரம் பணி ஓய்வைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழங்கியது. 

இந்தச் சூழ்நிலையில்தான் ரமண தீட்சிதர் தேவஸ்தானத்தின் மீது பெரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். அவற்றில் முக்கியமானது. `ஆகம விதிகளுக்கு மாறாக திருப்பதி தேஸ்தானம் இயங்குகிறது. கோயில் கருவறையை இரவு பத்து மணிக்கு மூடிவிட்டு விடியற்காலை 2 மணிக்குத் திறக்க வேண்டும் என்பது ஒன்று. கோயிலின் மடப்பள்ளியை 25 நாள்கள் மூடிவைத்ததால், சுவாமிக்கு நைவேத்தியங்களை முறையாகப் படைக்கவில்லை. கோயில் நகைகள் பல கொள்ளை போய்விட்டன. அவற்றில் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரக்கல் ஒன்று வெளிநாட்டில் ஏலம் விடப்பட்டிருக்கிறது'' என்று கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆகமபிரவரா ஆலோசகர் என்.ஏ.கே.சுந்தரவரதன் பட்டாச்சார்யாரை நேரில் சந்தித்தோம். ரமண தீட்சதரின் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்டோம். 

அவரோ ``இஷ்டப்படி கோயிலின் ஆகம விதிகளுக்கு எதிராக இவர்தான் செயல்பட்டு வந்தார்...’’ என்று அடுக்கடுக்காக ரமண தீட்சிதரின் மேல் புகார் சொல்ல ஆரம்பித்தார். 

``எழுபது வயதான ரமண தீட்சிதர் கர்நாடக மாநிலம் முளபாகலு பகுதியைச் சேர்ந்தவர். மூலவர் சந்நிதிக்குச் சேவை செய்பவர்களைத் தவிர மற்றவர்களை அழைத்துவரக் கூடாது. ஆனால், இவர் தன்னுடைய பேரனை அழைத்துவந்தார். அது ஆகம விதிப்படி தவறு.  

ஒய். எஸ்.ஆர் ராஜசேகரரெட்டியை அவருடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று `யாக பூஜை' செய்தார். அதுவும் ஆகம விதிகளுக்கு எதிரானது. அம்பானி, திருப்பதிக்கு வந்திருந்தபோது அவர் தங்கியிருந்த இடத்துக்கே சென்று பூஜை, புனஸ்காரங்களைச் செய்து ஆசீர்வாதம் செய்தார்.

இவை தவிர தேவஸ்தானத்துக்குத் தெரியாமல், அனுமதி பெறாமல் வெளியூர்களுக்குச் சென்று கல் தான உற்சவங்களை முன்னின்று நடத்தி, அவற்றின் மூலம் பணம் சம்பாதித்தார். தேவஸ்தான அனுமதியோடுதான் இவற்றைச் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாதது பெரிய குற்றம். இன்று அவரின் சொத்து மதிப்பு 100 கோடி ரூபாய்க்கும் மேல் உள்ளது. 

சாமிக்கு நைவேத்தியம் செய்வதில் எந்தக் குறையும் இல்லை. அந்தக் கட்டடத்தை இடிக்கவில்லை. சமையல்கூடத்தில் புகையும் அழுக்கும் படிந்திருந்தன. அதனால் சமையல் அறையிலுள்ள மேடைகளைப் புதுப்பித்தோம். அவ்வளவுதான்.  ரமணாவின் மகனுக்குத் தலைமை அர்ச்சகர் பதவியைத் தராமல், அவருடைய  தம்பி வேணுகோபால் தீட்சிதருக்குக் கொடுத்ததால்தான் அவர் நிர்வாகத்தின் மீது கோபத்தையும் வெறுப்பையும் தெரிவிக்கிறார்.

இப்போது நிர்வாகத்திடம் உள்ள மூலவர் உற்சவர் நகைகள் 150 கிலோ இருக்கும். அந்த நகைகளை பத்திரமாகப் பாதுகாத்து வருகிறோம். எந்த நகையும் திருடு போகவில்லை. பரம்பரையாக பூஜை செய்து வந்த நான்கு குடும்பங்களில் உள்ளவர்களைத்தான் இப்போதும் நியமித்திருக்கிறோம். கொல்லப்பள்ளிக் குடும்பத்திலிருந்து வேணுகோபால் ( ரமண தீட்சிதரின் தம்பி), பெத்திண்டிக் குடும்பத்திலிருந்து சீனிவாசன்,  பைடிப்பள்ளிக் குடும்பத்திலிருந்து கிருஷ்ண சேக்ஷாசலம், திருப்பதி அம்மா குடும்பத்திலிருந்து கோவிந்தராஜ் ஆகியோரைத்தான் நிர்வாகம் தேர்வு செய்திருக்கிறது. தேவஸ்தான நிர்வாகம் பற்றித் தவறாகப் பத்திரிகை செய்தி வெளியிட்டதற்கு விளக்கம் கேட்டு ரமண தீட்சிதருக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம்'' என்கிறார் என்.ஏ.கே.சுந்தரவரதன் பட்டாச்சார்யார்.. 

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மீது குற்றம் சாட்டியிருக்கும் ரமண தீட்சிதருக்கும் அங்குள்ள டாலர் சேஷாத்திரி என்னும் இன்னொரு பட்டாச்சார்யாருக்கும் நடக்கும் சண்டையாகத்தான் இந்த நிகழ்வை ஆந்திர மீடியாக்கள் பார்க்கின்றன. கிட்டத்தட்ட எட்டு மாதங்களாகத்தான் இந்தக் கருத்து மோதல்கள் நடந்துவருகின்றன. 

சந்திரபாபு நாயுடு ஏழுமலையான்மீது பக்தி மிக்கவர். இதனால், அவர் கோபத்தின் உச்சத்துக்கே போய்விட்டார். ``பி.ஜே.பி-யும் நரேந்திர மோடியும் திருமலை திருப்பதியைத் தங்கள் வசம் எடுத்துக்கொள்ள நினைக்கிறார்கள். அதனால்தான் திருப்பதி கோயிலை தொல்லியல் துறை மூலமாகக் கைப்பற்றப் பார்க்கிறார்கள். ஆனால், அதற்கு மிகப் பெரிய விலையை அவர்கள் தரவேண்டியிருக்கும். யார் தவறு செய்திருந்தாலும் அவர்களை பெருமாள் பார்த்துக்கொள்வார்’’ என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து சென்னையிலிருக்கும் பெயர் வெளியிட விரும்பாத வைணவ பட்டாச்சார்யார் ஒருவரிடம் பேசினோம். ``கோயிலின் ஆகம விதிகளில், அரசாங்கம் தலையிடுவது தவறு. ஆறு பேர் கொண்ட திருமலை அறங்காவலர் குழுவில் ஒரு தமிழர்கூட இல்லை. இத்தனைக்கும் திருப்பதி வரலாற்று ரீதியாகத் தமிழர்களின் வாழ்வில் கலந்திருக்கும் கோயில் என்பதுதான் வேதனையான  விஷயம்'' என்றார் அவர் இப்போது நடக்கும் எல்லா  நிகழ்வுகளுக்கும் குழப்பங்களுக்கும் மோகனப் புன்னகையுடன் நிற்கும் மலையப்பசாமிதான் பதில் தர வேண்டும்.