Published:Updated:

சோமாஸ்கந்த மூர்த்தம்... இல்லற நெறியை போதிக்கும் இறை வடிவம்!

சோமாஸ்கந்த மூர்த்தம்... இல்லற நெறியை போதிக்கும் இறை வடிவம்!
சோமாஸ்கந்த மூர்த்தம்... இல்லற நெறியை போதிக்கும் இறை வடிவம்!

சோமாஸ்கந்த மூர்த்தம்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`ல்லறமல்லது நல்லறமன்று' என்று நமக்கு உணர்த்துவதுபோல் அமைந்த சிவ மூர்த்தம்தான், 'சோமாஸ்கந்த மூர்த்தம்.' குடும்பத் தலைவனாக, மனைவிக்குச் சம உரிமை தரும் கணவனாக, குழந்தையிடம் பாசமுள்ள தந்தையாக, சிவபெருமான் மேற்கொண்ட சோமாஸ்கந்த வடிவம், சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவடிவங்களில் ஒன்று.

`சத் - சக்தி; சித் - சிவம்; ஆனந்தம் - முருகன். இந்த மூவரின் ஒருங்கிணைந்த வடிவமே சோமாஸ்கந்த வடிவம். உண்மை, அறிவு, இன்பம் ஆகிய மூன்று இயல்புகளின் ஒருங்கிணைந்த அழகிய வடிவமே சோமாஸ்கந்த வடிவம்’ என்று தத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.

தந்தை சிவபெருமானுக்கும் தாய் பார்வதிக்கும் இடையில் அமர்ந்த கோலத்தில் முருகப்பெருமான் தேவர்களுக்கு தரிசனம் தந்த வடிவம்தான் சோமாஸ்கந்த வடிவம் என்று புராணங்கள் கூறுகின்றன.

சிவபெருமான் கொண்ட திருக்கோலங்களில் சாந்தம் தவழும் திருக்கோலம் சோமாஸ்கந்த திருக்கோலம். இதழ்களில் குறுநகை தவழ, உமையவளுடனும் குழந்தை முருகனுடனும் காட்சி தரும் சிவபெருமானின் சோமாஸ்கந்த வடிவம், தரிசிப்பவர்களைப் பரவசம் கொள்ளச் செய்யும் அற்புத வடிவம். இல்லற வாழ்க்கையே நல்லறத்துக்கு உதவும் சாதனமாகும் என்பதை, தான் கொண்ட சோமாஸ்கந்த வடிவத்தின் மூலம் நமக்கு அறிவுறுத்துகிறார் சிவபெருமான்.

தமிழ் நாட்டின் தனிச் சிறப்பு வாய்ந்த வடிவம் சோமாஸ்கந்த மூர்த்தி. கி.பி 7 மற்றும் கி.பி 8-ம் நூற்றாண்டு காலத்தில் தமிழகத்தில் சைவம் (சிவம்), சாக்தம் (உமை), கௌமாரம் (முருகன் ) ஆகிய மூன்று வழிபாடுகளையும் ஒருங்கிணைத்துப் பல்லவர் காலத்தில் பிரபலமான வடிவம் இது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

சோமாஸ்கந்தர் திருமேனி பல்லவர் காலத்தில், குறிப்பாக ராசசிம்ம பல்லவன் (நரசிம்மவர்மன் II) காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில்தாம் புகழ் பெற்றதாக விளங்கத் தொடங்கியது. ராசசிம்மன் கட்டிய அனைத்துக் கோயில்களின் கருவறையிலும் சிவலிங்கத்துப் பின்புறச் சுவரில் சோமாஸ்கந்தர் உருவத்தைச் செதுக்கிய பிறகே சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தான். இதற்கு ஆதாரமாக, ராசசிம்ம பல்லவ மன்னன் கட்டிய காஞ்சி கைலாசநாதர் கோயில், மாமல்லபுரக் கடற்கரை சிவன் கோயில், சாளுவன்குப்ப அதிரண சண்டேஸ்வரம் எனும் குடைவரைக் கோயில் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். ஏனெனில், இந்தக் கோயில்களில்தாம் காலத்தால் முந்தைய சோமாஸ்கந்தர்கள் அருள்புரிகிறார்கள்.

மக்களுக்கிடையில் ஒற்றுமையை வளர்ப்பதற்காகவே ராசசிம்ம பல்லவன் அனைத்து முதன்மையான தெய்வங்களையும் ஒன்றிணைத்து சோமாஸ்கந்தர் சிற்பத்தை அனைத்துக் கோயில்களிலும் செதுக்கி வணங்கினான்.

சோமாஸ்கந்தர் திருமேனி குறித்து ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியம், ``ராசசிம்மன் தீவிரமான சிவபக்தன். அவன் தன்னை, `சிவ சூடாமணி' என்றும் அழைத்துக் கொண்டிருக்கிறான். சைவத்தின் முக்கியக் கோட்பாடு குடும்ப நெறி. குடும்பத்துடன் வாழ வேண்டும் என்ற சைவ நெறியை மக்களிடம் பரப்ப வேண்டும் என்றே ராசசிம்மன், தான் கட்டிய அனைத்துக் கோயில்களிலும் சோமாஸ்கந்தர் வழிபாட்டை முதன்மைப்படுத்தினான். குடும்ப நெறியைப் போதிப்பதே சைவம். ஆதலால்தான் அந்தக் காலத்தில் சமணம், பௌத்தம் போன்ற மதங்கள் பரவியதன் காரணமாக, மக்களுக்குத் துறவறத்தில் நாட்டம் ஏற்பட்டுவிட்டது. துறவறத்தில் நாட்டம் கொண்ட மக்களுக்கு இல்லறத்தின் மேன்மைகளை உணர்த்துவதற்கே ராசசிம்மன் சோமாஸ்கந்தர் திரு உருவத்தை தான் கட்டிய அனைத்துக் கோயில்களிலும் செதுக்கி வழிபட்டான்" எறு குறிப்பிடுகிறார்.

வலையப்பேட்டை ரா.கிருஷ்ணனிடம் பேசினோம்... `` `துறவறமே பேரின்பம்' என்ற கொள்கை செயல்பட்ட காலத்தில், இல்லற வாழ்வின் நலன்களை உணர்த்தி பக்தி இயக்கத்தின் மூலம் குடும்ப வாழ்வின் நலனையும், சிறப்பையும் எடுத்துச் சொல்ல அமைந்த வடிவமே சோமாஸ்கந்த மூர்த்தம். சோமாஸ்கந்த மூர்த்தத்தை வழிபட்டால் புத்திர பலன் கிடைக்கும். ஆகையால்தான் இந்த வடிவில் உமையம்மை `புத்திர சௌபாக்கிய பிரதாயினி' என்று போற்றப்படுகிறார்" என்றார்.

அறுபத்து மூவரில் சிறுதொண்ட நாயனாருக்கு மட்டும் சோமாஸ்கந்த வடிவில் காட்சியளித்த இறைவன், இப்பொழுது நம் அனைவருக்கும் சோமாஸ்கந்த வடிவில் காட்சியளிக்கிறார். இல்லற நெறியைப் போதிக்கும் இறைவனை வணங்கி சைவத்தின் நெறியை தழைக்கச் செய்வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு