Published:Updated:

கல்விளக்கில் கார்த்திகை தீபம்!

குன்றாண்டார் கோயில் அற்புதம்!

கல்விளக்கில் கார்த்திகை தீபம்!

குன்றாண்டார் கோயில் அற்புதம்!

Published:Updated:
கல்விளக்கில் கார்த்திகை தீபம்!
##~##
தி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ருச்சி - புதுக்கோட்டை  சாலையில்,  திருச்சி யில் இருந்து சுமார் 27 கி.மீ. தொலைவில் உள்ளது கீரனூர். இங்கிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது குன்றாண்டார் கோவில். அழகிய குன்றின் மீது, கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீபர்வதகிரீஸ்வரர். இங்கு அம்பிகையின் திருநாமம் - ஸ்ரீஉமையாம்பிகை.

இந்தத் தலத்துக்கு அருகில் உள்ள குளத்தில் இடுப்பளவு நீரில் இருந்தபடி, சங்கம ரிஷி என்பவர், சிவனாரை நினைத்துக் கடும் தவம் புரிந்தார். அப்போது அவருக்குத் திருக்காட்சி தந்த சிவபெருமான், 'இங்கு ஆலயம் அமையும்’ என அருளினாராம். அதையடுத்து அந்தக் குளத்துக்கு, சங்கமக் குளம், சங்கக்குளம் எனப் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல புராணம். பின்னாளில், நந்திவர்மபல்லவன், கலை நயத்துடன் இங்கே கோயில் எழுப்பினான்! குடைவரைக் கோயில் இது.

ஸ்ரீவலம்புரி விநாயகரும் ஸ்ரீபர்வதகிரீஸ் வரரும் காட்சி தரும் அழகே அழகு! ஸ்ரீவள்ளி தெய்வானை சமேதராக ஸ்ரீமுருகப்பெருமான் தனிச்சந்நிதியில் காட்சி தருகிறார்.  

கார்த்திகை மாதம் துவங்கிவிட்டாலே, புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்ட மக்கள் பலரும், இந்தத் தலத்து இறைவனைத் தரிசித்து வணங்கிச் செல்கின்றனர். தீபத் திருநாளன்று, ஸ்ரீபர்வதகிரீஸ்வரருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. குறிப்பாக, கார்த்திகேயன் எனும் திருநாமம் கொண்ட ஸ்ரீசுப்ரமணியருக்கு, விசேஷ அபிஷேக - அலங்காரங்கள் செய்யப்படுகின்றன.  

கல்விளக்கில் கார்த்திகை தீபம்!

ஸ்ரீசண்முகர் சந்நிதிக்கு எதிரில், கல் விளக்கு ஒன்று உள்ளது. சுமார் 100 லிட்டர் எண்ணெய் பிடிக்கிற பிரமாண்ட கல் விளக்கு இது. பக்தர்கள் கொண்டு வரும் எண்ணெயை இந்தக் கல்விளக்கில் ஊற்றி, விளக்கேற்றும்போது, 'அரோகரா’ கோஷம் விண்ணைத் தொடும் எனச் சொல்லிச் சிலிர்க்கின்றனர், பக்தர்கள்!  இந்தக் கல் விளக்கில், எண்ணெயிட்டு விளக்கேற்றி ஸ்ரீசுப்ரமணியரையும் ஸ்ரீஉமையாம்பிகை சமேத ஸ்ரீபர்வதகிரீஸ்வரரையும் வழிபட்டால், நினைத்த காரியம் யாவும் கைகூடும் எனப் போற்றுகின்றனர் அன்பர்கள்.

திருக்கார்த்திகை தீபத்திருநாளில், ஸ்ரீபர்வதகிரீஸ்வரர் திருவீதியுலா வரும் அழகைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர். திருமண தோஷம் உள்ள பெண்கள், இங்கு வந்து விளக்கேற்றி, மஞ்சளை (விரலி மஞ்சள்) அம்பிகையின் சந்நிதியில் வைத்துச் சென்றால், விரைவில் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்! தவிர, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்பாளுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. இதனால் தேவிக்கு, 'மஞ்சள் நாயகி’ எனும் திருநாமமும் அமைந்ததாம். இந்த திருக்கோலத்தில் அம்பிகையைத் தரிசித்தால், சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது நம்பிக்கை!  

தோஷம் மற்றும் நோயால் அவதிப்படும் குழந்தைகள் பூரண ஆரோக்கியம் பெற, அவர்களை இறைவனுக்கு தத்துக் கொடுக்கிற சடங்கு, இந்த ஆலயத்தில் நடைபெறுகிறது.

- பெ.தேவராஜ்
படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism