Published:Updated:

மாமல்லபுரம் கோயில்கள்... தமிழர்களின் பெருமை, பாரம்பர்யத்தின் அடையாளம்! #VikatanPhotoStory

மாமல்லபுரம் கோயில்கள்... தமிழர்களின் பெருமை, பாரம்பர்யத்தின் அடையாளம்! #VikatanPhotoStory

மாமல்லபுரம் கோயில்கள்... தமிழர்களின் பெருமை, பாரம்பர்யத்தின் அடையாளம்...

மாமல்லபுரம் கோயில்கள்... தமிழர்களின் பெருமை, பாரம்பர்யத்தின் அடையாளம்! #VikatanPhotoStory

மாமல்லபுரம் கோயில்கள்... தமிழர்களின் பெருமை, பாரம்பர்யத்தின் அடையாளம்...

Published:Updated:
மாமல்லபுரம் கோயில்கள்... தமிழர்களின் பெருமை, பாரம்பர்யத்தின் அடையாளம்! #VikatanPhotoStory

ற்களையெல்லாம் கவின்மிகு கலைகளாக்கி தமிழர்களின் பெருமையையும் புகழையும் உலகுக்கு உணர்த்திச் சென்றவர்கள் பல்லவ மன்னர்கள். அப்படி, கலைக் கருவூலங்களாக விளங்கும் மாமல்லபுர கோயில்கள் நம் பண்பாட்டுச் சின்னங்கள்; யுனெஸ்கோ பாரம்பர்ய நினைவுச்சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டவை. நம் பெருமையையும் கலாசாரத்தையும் உலகுக்கு உணர்த்தும் மாமல்லபுரம்...

அங்கே ஓர் உலா...

சாளுவன் குப்பம் புலிக்குகை


 

தமிழகக் குடைவரைக் கோயில்களில் வேறுபட்ட அமைப்பைக் கொண்டது. `புலிக்குகை’ என்று அழைக்கப்பட்டாலும், 16 யாளித் தலைகளுடன் காணப்படும் இந்த யாளிக் குடைவரை கொற்றவைக்காக அமைக்கப்பட்டது.

அதிரணசண்ட மண்டபம்

ராஜசிம்ம பல்லவன் மூலம் எழுப்பப்பட்ட அதிரணசண்ட பல்லவேஸ்வர கிருஹம். இங்கு காணப்படும் கல்வெட்டில், `சிவன் உமையோடும் குகனோடும் எப்பொழுதும் இங்கு தங்கியிருக்கட்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொற்றவை போரிடும் காட்சி

அதிரணசண்ட பல்லவேஸ்வர கோயிலுக்கு எதிரே இருக்கும் பாறையில், கொற்றவை மகிஷாசுரனுடன் போரிடும் காட்சி புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. வலது காலை தாமரை மலர்ப் பீடத்தின் மீது ஊன்றி, இடது காலை சிம்மத்தின் மேல் வைத்த நிலையில், ஆறு திருக்கரங்களுடன் காணப்படும் கொற்றவை மகிஷனுடன் போர் புரிகிறாள். மகிஷன் புறமுதுகிட்டு ஓடுகிறான்.

சாளுவன் குப்ப முருகன் கோயில்

சங்ககாலத்தில் முருகனுக்காகக் கட்டப்பட்ட பழைமையான கோயில். பல வருடங்களுக்கு முன்னர் மண்ணுக்குள் புதைந்து போயிருந்த இது, 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது வெளிப்பட்டது. சங்ககால செங்கல் அடித்தளம் மட்டுமே இப்போது எஞ்சியிருக்கிறது.

அர்ச்சுனன் தபஸ்

90 அடி பாறையில் அமைந்திருக்கும் உன்னதமான கலைப்படைப்பு `அர்ச்சுனன் தபஸ்’ என்ற இந்தப் பாறைச் சிற்பம். கோடைக்கால உச்சிப்பொழுதில் பாசுபத அஸ்திரத்துக்காக அர்ச்சுனன் சிவபெருமானை நோக்கித் தவம் இருந்த காட்சி சித்திரிக்கப்பட்டிருக்கும் காட்சி, காண்பவர்களை வியப்பிலாழ்த்தும் அற்புதச் சிற்பம்.

கிருஷ்ணன் மண்டபம்

அர்ச்சுனன் தபஸ் பாறைச் சிற்பத்துக்கு அருகில் காணப்படுகிறது கிருஷ்ணன் மண்டபம். `இந்திரன் ஏவிய மழை, புயலிலிருந்து கோகுல ஆயர்களையும், ஆடு, மாடுகளையும் கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாகத் தூக்கிக் காத்தான்’ என்கிறது புராணம். பல்லவர்கள், இதையே சிற்பமாக வடித்துள்ளார்கள்.

கோவர்த்தன மலையைத் தூக்கும் கண்ணன்

கிருஷ்ணன் மண்டபத்துக்குள் காணப்படும் கோவர்த்தன சிற்பத் தொகுதி. கண்ணன் கோவர்த்தன மலையைக் குடையாகத் தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறான். மலைக்கு அடியில் மாடுகள், கன்றுகள், ஆயர்கள், ஆய்ச்சியர் மகிழ்ச்சியாக நிற்கும் காட்சி.

குழலூதும் கண்ணன்

கோவர்த்தன மலைக்கு அருகில் நின்றபடி கண்ணன் குழல் ஊதுகிறான். அதைக் கேட்டு ஆநிரைகள் அனைத்தும் அவனைச் சூழ்ந்துவிட்டன. இந்திரன் ஏவிய மழை, புயலைக் கண்டு அச்சப்பட்ட ஒருவனை பலராமர் ஆறுதல்படுத்துகிறார். மக்கள் அனைவரும் தமது அன்றாடப் பணியை அச்சமின்றி செய்துகொண்டிருக்கும் காட்சி.

முற்றுப்பெறாத அர்ச்சுனன் தபஸ்

முற்றுப்பெறாத சிற்பத் தொகுதி. அர்ச்சுனன் தபஸ் செய்யும் காட்சியை முதன்முதலில் செதுக்க முயற்சி செய்த இடம் இது.

பஞ்சரதம்


ஐந்து பொருள்கள் எங்கு இணைந்து காணப்பட்டாலும் அதைப் பஞ்ச பாண்டவர்களுடன் சேர்த்துக் கூறுவது நமது மரபாகிவிட்டது. எனவே, ஐந்து கோயில்களும் `பஞ்ச பாண்டவ ரதங்கள்’ என அழைக்கப்படுகின்றன.

ஓலகனேஸ்வரர் கோயில்

ஏழாம் நூற்றாண்டு கால கற்கோயில். இந்தக் கோயிலில் எரிந்த விளக்குதான் பல்லவர்கள் காலத்தில் துறைமுகக் கலங்கரை விளக்கமாக இருந்தது.

மகிஷாசுரமர்த்தினி குகை

ஓலகனேஸ்வரர் கோயிலுக்குக் கீழே காணப்படும் குடைவரைக் கோயில். இந்தக் குகையில் மகிஷாசுரனை அழித்த கொற்றவையின் சிற்பம், சோமாஸ்கந்தர் சிற்பம், அனந்தசயனப் பெருமாள் சிற்பம் உள்ளிட்ட தலைசிறந்த சிற்பங்களைக் கண்டு ரசிக்கலாம்.

கொற்றவை, அரக்கன் மகிஷாசுரனுடன் போரிடும் சிற்பம்

சிங்கத்தின் மீது அமர்ந்த கொற்றவை, வில் அம்புடன் தனது பத்துக் கரங்களுடன் மகிஷாசுரனுடன் நேருக்கு நேர் ஆக்ரோஷமாகப் போர் புரியும் காட்சி. தேவியால் தாக்கப்பட்டவர்கள் நிலை குலைந்து விழுகிறார்கள்.

அனந்தசயனப் பெருமாள் சிற்பம்

ஆதிசேஷன்மீது பள்ளிகொண்டிருக்கிறார் பெருமாள். மது, கைடபன் ஆகிய அசுரர்கள் அவரைத் தாக்க வரும் காட்சியைச் சிற்பமாக வடித்திருக்கிறார்கள்.

ஆபத்தான கற்கோயில்

குன்றின் மீது காணப்படும் பாழடைந்த கற்கோயில். எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழும் நிலையில் காணப்படும் கோயிலின் மீது ஏறி, மாணவர்கள் விளையாடுகிறார்கள்.

ராமாநுஜ மண்டபம்

சிவனுக்கு உரியதாகக் குடையப்பட்ட குடைவரை. சிவன், பிரம்மா, திருமால் என்று மூன்று கருவறையுடன் குடையப்பட்டது. சிவன் கோயிலான இந்தக் குடைவரை அழிக்கப்பட்டு பின்னாளில் பெருமாள் குடைவரையாக மாற்றப்பட்டுள்ளது.

ராயர் மண்டபம்

விஜயநகரப் பேரரசர்களின் காலத்தில் தொடங்கப்பட்ட கோயில். முற்றுப்பெறாமலே பாதியில் நிற்கிறது. விஜயநகரப் பேரரசு காலத்தில் தொடங்கப்பட்டதால் இது ‘ராயர் மண்டபம்’ என அழைக்கப்படுகிறது.

ராயர் மண்டபக் கல் தூண்

ராயர் மண்டபத்தில் அழகான சிற்ப வேலைப்பாடுகளுடன் உயர்ந்து நிற்கும் தூண்களில் ஒன்று.


வராக மண்டபம்

முற்றுப்பெற்ற அழகான குடைவரைக் கோயில். இந்தக் குடைவரையின் சுவர்களில் வராக மூர்த்தி, தாமரை மீது அமர்ந்துள்ள திருமகள், கொற்றவை மற்றும் உலகளந்த பெருமாளின் சிற்பங்கள் காணப்படுகின்றன.

வராக மூர்த்தி

வராக மூர்த்தியின் தொடையில் பூமிதேவி நாணத்துடன் தலைசாய்ந்து அமர்ந்திருக்கும் அற்புதக் காட்சி. அவரது காலை தன் தலைமீது கொண்ட ஆதிசேஷன், சூரியன், பிரம்மா, நாரத முனிவர் ஆகியோர் வணங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

உலகளந்த பெருமாள்

வாமன அவதாரம் எடுத்து, மூன்றடி இடம் கேட்டு ஒரு காலால் நிலத்தையும், மறுகாலால் விண்ணையும் அளந்து, மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்று மகாபலியிடம் கேட்கும் உலகளந்த பெருமாளின் அவதாரக் காட்சியை விளக்கும் அற்புதமான சிற்பம் இது.


கொற்றவை சிற்பம்

பண்டைய காலத்தில் தமிழகத்தில் அரசர்களின் நலனுக்காகவும், போரில் வெற்றி பெறவும் கொற்றவைக்குத் தன்னையே பலியிடும் வழக்கம் இருந்தது. அதை வெளிப்படுத்துவதுபோல மறவர்கள் சிலர் தன் தலையைத் தானே வெட்டிக்கொண்டு பலி கொடுக்கும் காட்சி.

கணேச ரதம்

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சேதமடையாத கோயில். மாமல்லபுரத்தில் உள்ள கற்கோயில்களில் வழிபாட்டில் இருக்கும் ஒரே சிற்பக் கோயில் இதுதான். சிவனுக்காக எழுப்பப்பட்ட கோயில், பிற்காலத்தில் விநாயகர் கோயிலாக மாற்றப்பட்டது.
 

கோனேரி மண்டபம்

ஐந்து கருவறைகள் கொண்ட குடைவரைக் கோயில். மாமல்லபுரத்தில் கோனேரி குளத்தின் கரையில் காணப்படுவதால், `கோனேரி மண்டபம்’ என அழைக்கப்படுகிறது.


 

பிடாரி ரதம்

கோனேரிக் குப்பத்திலிருந்து சற்றுத் தள்ளி மேற்கே காணப்படும் முற்றுப் பெறாத இரண்டு கற்கோயில்கள் `பிடாரி ரதம்’ என அழைக்கப்படுகின்றன. கணேச ரதத்தைப்போலவே ஒரே கல்லில் செதுக்க நினைத்த பல்லவர்களின் முயற்சியை வெளிப்படுத்தும் காட்சி

கடற்கரைக் கோயில்

சிவனுக்காக ராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற இந்தக் கோயிலின் பெயர் `சத்திரிய சிம்ம பல்லவேஸ்வர கிருஹம்.’ ஒரு காலத்தில் மூன்று விமானங்களுடன் இருந்த இந்தக் கோயில் இப்போது இரண்டு விமானங்களுடன் மட்டுமே காணப்படுகிறது.