Published:Updated:

சித்திர ராமாயணம்

சித்திர ராமாயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
சித்திர ராமாயணம்

பி.ஸ்ரீ., ஓவியம்: சித்ரலேகா

பரதன் போன வழி

மைச்சர்களும் படைத் தலைவர்களும், நகரத் தலைவர்களும், சிற்றரசர்களும், பெரியோர்களும் வந்து பரதனைச் சூழ்ந்து கொண்டார்கள். வசிஷ்டர் பக்கத்தில் இருந்தார். பரதனுடைய முகத்தைப் பார்த்ததும் ஒருவருக்கும் பேச நா எழவில்லை. எனினும், யாராவது சொல்லித்தானே ஆகவேண்டும். வசிஷ்ட முனிவருக்கும் தைரியமில்லையே, அந்தப் பேச்சை எடுப்பதற்கு? மதி மந்திரி சுமந்திரன் பார்த்தான், முனிவர் முகத்தை! அந்தப் பார்வை பேச வேண்டியதைப் பேசிவிட்டது. அந்த நோக்கை வாக்கினால் உணர்த்துகிறார் முனிவர் பரதனுக்கு. ஏன் இந்தத் தயக்கம்? இவர்கள் பரதனுக்குத் தெரிவிக்கப் போகும் அந்தச் செய்திதான் என்ன?

சித்திர ராமாயணம்

‘பரதன் ராஜ்ய காரியத்தைக் கவனிக்க வேண்டும், - அரசு செய்ய வேண்டியதுதான்’ என்பதைச் சொல்லியாக வேண்டும்.

முனிவர் புத்திமதி

‘ராஜ்யத்தில் நீதியும் தருமமும் நிலை நாட்டுவதற்கு அரசு தக்க முறையில் நடைபெற வேண்டும்’ என்கிறார் வசிஷ்டர். நீதியின் காவலனாக இருக்கும்படி நீதியின் நிலைய மாகிய பரதனை வேண்டுகிறார். ‘தந்தையோ இறந்தான்; தமையனோ தந்தை வாக்கிற்குக் கட்டுப்பட்டு நாடு துறந்தான். அம்மைக்கு அவன் கொடுத்த வரத்தினால் உனக்கு உரிமையாகிவிட்ட இந்தப் பேரரசை நீ பாதுகாப்பாய். இங்கே வந்து கூடிய எங்கள் எண்ணம் இது’ என்று, எல்லாரும் ஒரு முகமாகச் செய்திருந்த அந்த ஆலோசனையைப் பரதனிடம் தெரிவித்தார் முனிவர்.

‘ராஜ்யத்தை ஒப்புக் கொள்’ என்று வசிஷ்டர் சொன்னது, ‘நீ நஞ்சைச் சாப்பிடு, நாசமாய்ப் போ!’ என்பது போல விழுந்ததாம் பரதன் செவியில்:

‘தஞ்சம்இவ் வுலகம்நீ தாங்கு வாய்’ எனச்
செஞ்செவே முனிவரன் செப்பக் கேட்டலும்,
‘நஞ்சினை நுகர்!’ நடுங்கு வாரினும்
அஞ்சினன், அயர்ந்தனன், அருவிக் கண்ணினன்.


பரதனுக்கும் கோபமா?


ரதன் நடுங்கிக் கண் இடுங்கிப் பேச முடியாமல் நாக்குத் தடுமாற உயிர் ஒடுங்கிச் சிறிது நேரம் அப்படியே இருந்து, பின்பு உணர்வு பெற்றுத் தன் உள்ளக் கருத்தை ஒருவாறு தெளிவுபடுத்தினான். முதலில் கோபமாகவே பேசினான். ‘முன்னே பிறந்த உரிமையாளன் இருக்க, நான் மகுடம் சூடி மகிழ்வது பெரியோர்களாகிய உங்களுக்குத் தருமமாகிவிட்டது! உங்களுக்கும் கைகேயிக் கும்தான் என்ன வித்தியாசம்?’ என்று வசிஷ்டர் முதலானவர்களைக் குறிப்பாய்ப் பழிப்பது போல் கடிந்து பேசிவிட்டான். ஆனால் ‘இந்தக் கோபம் தர்மாவேசம்தான்!’ என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டார்கள்.

‘அரசாளுவது அண்ணன் கடமைதான்; அந்தக் கடமையிலிருந்து அவன் தப்பிவிடாமல் காட்டிலிருந்து அழைத்து வந்து முடிசூட்டி வைப்பதே உங்கள் கடமை, தருமம். அதை விட்டு என்னை அரசனாக்கப் பார்ப்பது தருமக் கொலைதான்!’ என்று சொன்னவன், அவர்கள் தங்கள் கடமையிலிருந்து தவறிவிடும் பட்சத்தில், தான் செய்யப்போகும் காரியத்தையும் தெளிவுபடுத்தினான்:

அன்(று)எனில், அவனொடும் அரிய கானிடை
நின்(று) இனி(து) அருந்தவம்  
       நெறியின் ஆற்றுவென்;
ஒன்றினி யுரைப்பின், என் உயிரை நீக்குவென்!’
என்றனன்...


அந்த உறுதியையும் தியாக வெறியையும் கண்டு பிரமித்த அச்சபையோர், ‘இந்தப் புகழுக்கு எந்தச் சக்கரவர்த்தியின் புகழ்தான் ஈடாகும்? இந்தத் தியாகத்துக்கு எந்த யாகம் தான் ஒப்பாகும்?’ என்று கோஷித்தார்கள். ஆனந்த வெள்ளம் பொங்க, அவர்கள் வாழ்த்திய வாழ்த்தொலியைக் கேளுங்கள்:

ஆழியை உருட்டியும், அறங்கள் போற்றியும்,
வேள்வியை இயற்றியும் வளர்க்க வேண்டுமோ?
ஏழினோ(டு) ஏழ்எனும் உலகும் எஞ்சினும்,
வாழிய நின்புகழ்!’ என்று வாழ்த்தினார்.


சோர்ந்து கிடந்த பரதனுடைய உள்ளத்தில் ஓர் எழுச்சி உண்டாகிவிட்டது. தம்பி சத்துருக்ன னைக் கூவியழைத்து, ‘ராமனை அயோத்திக்குக் கொண்டு வந்துவிடுவோம்’ என்று பறைசாற்றச் சொன்னான்.

ஜனங்களுக்கெல்லாம் ‘ராமன் திரும்பி வந்து முடிசூடுவான்!’ என்ற ஒரே ஆசைதான். கைகேயிக்கோ ஆசையெல்லாம் நிராசையாகி விட்டது. ஜனங்கள், படைத் தலைவர், மந்திரிமார், தாய்மார் எல்லாரும் புறப்பட்டனர், ரதங்களிலும், குதிரைகளிலும், யானைகளிலும் ஏறிக்கொண்டு. அந்தத் தாய் மார்களில் கைகேயியும் உண்டு. இதைக் காட்டிலும் அதிசயம் கூனியும் பயணமானதுதான்.

`ராமன் காட்டுக்கு எப்படிப் போனான் என்று விசாரித்துக்கொண்ட பரதன், தானும் அப்படியே போனான்.

‘ஆண்டுநின்(று) ஆண்தகை அடியின் ஏகினான்
ஈண்டிய நெறி!’ எனத், தானும் ஏகினான்,
தூண்டிடு தேர்களும் துரக ராசியும்
காண்தகு கரிகளும் தொடரக் காலினே!


ஏறிப் போகத் தேரிருக்க, யானையிருக்க, குதிரையிருக்க, ‘அதோ பார்த்தாயா, காலினால் நடந்து போகிறான்!’ என்று எவ்வளவு சோகமாய்க் காட்டுகிறான் கவிஞன். தேர்களும் குதிரைகளும் யானைகளும் பின்தொடர நடந்து போகும் தர்மாத்மாவின் - தியாக மூர்த்தியின் - அந்தக் காலைத் தானும் பார்த்து நாமும் பார்க்கக் காட்டிவிடுகிறான்.

காதலில் பிறந்த கோபம்

ங்கையாற்றின் வடகரை. எங்கே பார்த்தா லும் யானைப்படை குதிரைப் படை முதலிய படைகளே கண்ணுக்குப் புலனாகின்றன. எதிர்க் கரையில் ஒருவன் நின்றுகொண்டு இந்தப் படைகளை நோக்கிய வண்ணமாய் இருக்கிறான். பரதனுடைய தோற்றம் எவ்வளவு பரிதாபமாயிருக்கிறதோ, அவ்வளவு  சீற்றத்துடன் காணப்படுகிறது அந்த வீரன் தோற்றம். என்ன வினோதமான முரண்பாடு!

ராமனைப் பிரிந்த குகன், அவன் தலை மறையும் வரையில் அந்தக் காட்டு வழியைப் பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருந் தானல்லவா? உருவம் கண்ணுக்கு மறைந்தும் மனக் கண்ணுக்கு மறையவேயில்லை! நீலமேகம் போன்ற அந்த அழகும், பவளம் உரையாடுவது போன்ற அந்த வசீகர அன்புப் பேச்சும், வேடர் தலைவனுக்கு எப்போதும் பிரத்தியட்சம்தான்!

சித்திர ராமாயணம்‘குண சௌந்தரியமும் ரூப சௌந்தரியமும் வாய்ந்த ராமனோடு போர் செய்ய அல்லவா வந்துவிட்டது படை?' என்று நினைத்து விட்டான் குகன், வடகரையிலுள்ள சேனை யைக் கண்டதும். அப்படி நினைத்ததும் பொங்கியெழுந்தது கோபம்.

வேடத் தம்பியின் பேராசை


டுப்பிலே பட்டாக் கத்தியைச் சொருகிக் கொண்டு, உதட்டைக் கடித்த வண்ணம் பேசப் பார்க்கிறான்; இல்லை, வீசப் பார்க்கிறான் வார்த்தைகளை வாள் வீசுவது போலே. படபடவென்று உடுக்கையடித்துக் கொம்பு ஊதுகிறான். பேச வேண்டியதையெல்லாம் அந்தக் கொம்பிலே வைத்து அப்படியே ஊதி விடுகிறான், - தூரத்திலுள்ள வேடர்களுக்கும் காதில் விழும்படி.

`போர் கிடைத்து விட்டது!' என்று பூரித்த தோள்களுடன், தீயைக் கக்கும் விழிகளுடன், ‘வெட்டிய மொழி’கள் வெளியிட முடியாத கருத்துக்களை ஊதித் தள்ளுகிறான் வேடர் - கோன்.

எலிகளும் புலிகளும்

ன்ன பாஷையோ அது? ‘இதோ எலிகள் வந்து விட்டன!' என்று ஊதுகிறதாம்,  ஓதுகிறதாம் அந்தக் கொம்பு. என்ன, எலிகளா? பரதன் படையைக் குறித்தல்லவா பேசுகிறான்?
 
ஆம், ‘இதோ எலிப் படை! இதற்கு நான் பாம்பு!' என்று ஒரு கணம் சீறுகிறது, வீரவாதம் புரிகிறது ஊது கொம்பு. மறுகணம் ‘வாருங்கள் வேடர்களே! இந்த வேடிக்கையை வந்து பாருங் கள்' என்று உத்ஸாகமாய்க் கூவி அழைக்கிறது.

என்ன இந்திரஜாலம் இது? எலிகளைக் குறிக்கும்போதே, புலிகளாகி விட்டன மரமும் செடியும் புதருமாய் இருந்த இடங்களெல்லாம்! ‘காட்டுப் புலிகளெல்லாம் ஒரே இடத்தில் திரண்டனவோ?' என்று பிரமிக்கும்படி அவர்கள் அப்படி ஒரே கூட்டமாய் மொய்த்து விட்டார்கள். வடகரையிலும் பரதனுடைய சேனை வெள்ளம், தென்கரையில் வேடர்படை யென்னும் கருங்கடல், இடையில் கங்கையாறு.

சித்திர ராமாயணம்

இடிப் பேச்சு

கூட்டத்தின் ஆர்ப்பாட்டங்களையும் அட்டகாசங்களையும் கடைந்துகொண்டு கிளம்புகிறது கோடையிடிக் குரல். அந்தக் குரலிலேதான் என்ன கோபம், என்ன பரிகாசம், என்ன பேரன்பு, என்ன மிடுக்கு, துடுக்கு!

‘`என் தோழனான ராமன்மேல் படை யெடுக்கத் துணிந்தார்களே, என்ன அநியாயம். என்ன அறியாமை! இந்தக் கங்கையாற்றின் ஆழத்திலே இவர்களைச் ‘சமாதி’ செய்துவிட மாட்டேனா? முதலைகளுக்கும் மச்சங் களுக்கும் விருந்தளிக்கமாட்டேனா? இந்த ஆற்றைத் தாண்டிப் போகவா இவர்கள்?”

‘`என்ன, இப்படி யானைப் படையைக் கொண்டு மிரட்டப் பார்க்கிறான், ‘பூச்சி’ ‘பூச்சாண்டி’ காட்டுவதுபோலே? யானைக்குப் பயந்து விலகி வழிவிடுகிற ஆசாமிகளா நாம்? நமது வில்வரிசை அம்புகளை உதைத்துத் தள்ளும்போது யானைப்படையில் ஒரே குழப்பமாகி விடாதா? யானைகளே வெறி கொண்டு அந்த மற்றப் படைகளைத் துவைத்து விடும்படி அம்புகளைப் பொழிந்து தள்ளுவோம் என்பதை அறியாமல் அல்லவா வந்து விட்டார்கள்?” என்று பொங்குகிறான், அபாயச் சங்கு ஊதுகிறான், எதிரிகளை எச்சரித்து.

இவ்வளவு கோபாவேசத்திற்கும் வீராவேசத் துக்கும் இடையே ராமன் தன்னைத் தோழனாக் கிக் கொண்ட அந்தத் தூய பேரன்பு நினைவுக்கு வருகிறது.

தோழமை என்றவர் சொல்லிய சொல் ஒரு சொல்லன்றோ?


என்ற  நட்புக் காதல்,  குரலிலே உருக்கத் தையும், இதயத்திலே அந்தத் தோழனுக்காக உயிர்த்தியாகம் செய்ய வேண்டும் என்ற பேராசையையும் உண்டாக்கிவிடுகிறது. அந்தத் தோழமையையும் தன்னுடைய ஏழைமையையும் எண்ணிப் பார்த்து அப்படியே உருகிப் போகிறான். ‘`ஒன்றுக்கும் உதவாத இந்த ஏழை வேடன் உயிரை விட்டிருக்க வேண்டாமா அந்தத் தோழனுக்காக? - என்று உலகம் ஏசுமே!” என்று அங்கலாய்த்துக் கொள்கிறான்.

முன்னவன் என்று நினைத்திலன்; மொய்(ம்)புலி

அன்னான் ஓர் பின்னவன் நின்றனன் என்றிலன்!


‘`லட்சுமணன் என்ற தம்பியைத்தான் நினைத்துப் பார்க்கவில்லை! போகட்டும்; நான் ஒரு தம்பி இருக்கிறேனே, என்னையும் இகழ்ந்து தானே இந்த என் ராஜ்யத்தின் எல்லைப்புறத் திலே இப்படி வந்து நிற்கிறான்?” என்ற ஆங்காரம் வேறு வந்துவிடுகிறது.

* 17.8.47, 24.8.47, 31.8.47 ஆனந்த விகடன் இதழ்களில் இருந்து...