?அம்மன் கோயில்களில் எலுமிச்சை தீபம் ஏற்றுவதுண்டு. அதேபோல், தற்போது சில ஆலயங்களில் தேங்காய் தீபமும் ஏற்றுகிறார்களே, இது சாஸ்திர சம்மதமா?
- சு.பாலசுப்ரமணியன், திருச்செந்தூர்
தீபம் ஏற்ற தேங்காய் எதற்கு? தூய்மை மற்றும் பொருளாதார நோக்கில்... மண்ணால் ஆன அகல் விளக்குகளே சிறந்தவை. எவரோ ஒருவர், தற்செயலாக தேங்காயை உடைத்து தீபம் ஏற்ற... மற்றவர்களும் அதைப் பின்பற்றத் தொடங்கிவிட்டனர்!


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அது மட்டுமா? எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றும் சம்பிரதாயமும் இப்போது வலுத்துவிட்டது. ‘இந்த தெய்வத்துக்கு எலுமிச்சம்பழ விளக்கு விசேஷம். இந்தக் கடவுளுக்குத் தேங்காய் தீபம் சிறப்பு’ எனும் பிரசாரமும் கிளம்பிவிட்டது!
இலக்கணம் மற்றும் நடைமுறைகள் எல்லாம் விளக்கேற்றும் விஷயத்திலும் உண்டு. எதில் வேண்டுமானாலும் விளக்கேற்றலாம் என்பதை தர்மசாஸ்திரம் அனுமதிக்கவில்லை.
சில கிராமங்களில், இறந்தவரது இல்லத்தில் தேங்காய் விளக்கைப் பயன்படுத்துவர். அம்மனை நெய் தீபமேற்றி வழிபட, தேங்காய் விளக்கைப் பயன்படுத்துபவர்களும் உண்டு. இவையெல்லாம் நம்பிக்கையில் விளைந்தவை. நம் பண்பாட்டில் விளைந்த விளக்குகளைப் பயன்படுத்துவதே அழகு. இடையே வந்த புதிய தகவல்கள் மற்றும் முறைகளை தாராளமாகப் புறக்கணிக்கலாம்.
?‘காசேதான் கடவுளடா’ என்றொரு பழைய பாடலைக் கேட்டிருக்கிறேன். ‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகு இல்லை’ என்கிறது குறள் வாக்கியம். சமீபத்திய செய்திகளும், நிகழ்வுகளும் இதை மெய்ப்பிப்பது போல் இருக்கின்றனவே. நீங்கள் சொல்லுங்கள், பணம் இல்லையேல் வாழ்க்கை இல்லையா?
-எம். பத்மசெல்வி, சென்னை-87
பணம் கடவுளுக்குச் சமமல்ல. அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும், பொருட்களைப் பெறவும் பணம் ஒரு கருவி. அதை அறிமுகம் செய்தது நாம்தான். பண்டமாற்று வழியில், தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்ட காலமும் உண்டு. ஆக, மனிதன் சிபாரிசு செய்த பணம், கடவுளுக்கு எப்படி இணையாகும்?!
‘காசு இருந்தால் காரியம் நடந்தேறும்; கௌரவம் உயரும்; கவலைகள் விலகும்; மற்றவர்களைக் கவனிக்கவைக்கும்; முதியவர், அறிவாளி, ஒழுக்க சீலர் என அனைவரும் பணம் படைத்தவனின் முன்னே கைகட்டி, கைங்கர்யம் செய்யக் காத்திருக்கின்றனர்’ என்கிறது சுபாஷிதம். கடவுள் அருளால் கிடைக்கவேண்டிய சில விஷயங்கள், பணத்தால் கிடைத்து விடுகின்றன என்பதற்காக, கடவுளுடன் பணத்தை ஒப்பிடுவது தவறு. வெறும் 500, 1,000 என்று எண்களைக் கொண்டு பணத்தைக் கணக்கிடுகிறோம்.
திடீரென, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்து விட்டார்கள். அதுமுதல் அவை வெற்றுக் காகிதங்களாகிவிட்டனவே!

ஆகவே, பணத்தை மிகைப்படுத்திப் பார்க்கக்கூடாது. ஒழுக்கம், கல்வி, இரக்கம், கொடை, அன்பு, பண்பு ஆகியவையே உண்மையான செல்வங்கள். இவற்றைக் கடவுளுக்கு நிகராகச் சொல்லலாம். ஏனெனில், நாம் கடவுளை நெருங்குவதற்கு இந்தக் குணநலன்களே உதவி செய்கின்றன.
? ஒவ்வொரு தெய்வத்துக்கும் உகந்த வஸ்திரம், நிறம், அவர்களை வழிபடவேண்டிய மலர்கள், சமர்ப்பிக்க வேண்டிய பதார்த்தங்கள் இன்னின்ன... என வகுத்திருப்பது ஏன்?
- பி. சூரியகலா, விருதுநகர்
`மஞ்சள் உடை அணிந்தவன்' என்று கண்ணனைக் குறிப்பிடுவோம். நீல உடை அணிந்தவன் பலராமன். புலித்தோல் அணிந்தவன் பரமேஸ்வரன்.
அதேபோல், கண்ணனுக்கு வெண்ணெய் பிடிக்கும். குசேலன் கொடுத்த அவலை, பிரியத்துடன் உட்கொண்டார் அவர். எனவே, அவலும் கண்ணனுக்குப் பிடிக்கும். ‘அம்பாளுக்குச் சர்க்கரைப் பொங்கல் பிடிக்கும்’ என்கிறது லலிதா சஹஸ்ரநாமம். பிள்ளையாருக்குக் கொழுக்கட்டையும், முருகனுக்குத் தேனும் தினைமாவும் பிடிக்கும்.
பூக்கள் மற்றும் இலைகளை எடுத்துக் கொண்டால், விஸ்வேஸ்வரன் வில்வபத்திரத்தில் மகிழ்வார்; தும்பைப் பூவும் அவருக்குப் பிரியமானது. மகாவிஷ்ணுவுக்குத் துளசி இலை பிடிக்கும். அம்பாளுக்குப் பாடல புஷ்பம் பிரியம். இவை அத்தனையும் புராணத் தகவல்கள். இந்தத் தகவல்களைக் கொண்டு நாமும் விதவிதமான பதார்த்தங்களை; பூக்களை; இலைகளைப் பயன்படுத்துகிறோம்.
மறைக்கவேண்டிய இடத்தை மறைப்பதற்கு உடை தேவை. எனவே, நிறம் ஒரு பொருட்டல்ல. ஆடையில் நூலாடை சிறந்தது. நூலின் நிறம் வெண்மை; அதுவே போதுமானது. பூக்களில் அழகும் வாசனையும் கொண்டவை பூஜைக்கு உகந்தவை. அவற்றில் இருக்கும் பாகுபாடுகள் ஒரு பொருட்டல்ல. அதேபோல்... ருசியும், உடலுக்கு இதமும், உள்ளத்துக்கு மகிழ்ச்சியும் தரும் பதார்த்தங்களை இறைவனுக்கான பணிவிடையில் சமர்ப்பிக்கலாம்.
நமக்கு எவை எல்லாம் மகிழ்ச்சி அளிக்குமோ அவற்றை எல்லாம் இறை உருவங்களுக்கு அளித்து மகிழலாம். பருவ காலங்களின் மாறுபாடு மற்றும் தேசத்துக்கு தேசம் ஆசாரங்களின் மாறுபாடு ஆகியவற்றின் காரணமாக இறையுருவ வழிபாடுகளில் மாற்றம் இருக்கும். தென்னக வழிபாடுகளில் ‘துலக்க சாமந்தி’ பங்குபெறாது; வட மாநிலங்களில் அது தென்படும். விஷ்ணு வழிபாட்டில் அலங்காரத்துக்கு முதலிடம்; ஈசனுக்கான வழிபாட்டில் அபிஷேகத்துக்கு முதலிடம். திரவ பதார்த்தம், அபிஷேகம் செய்ய உதவும். ஆனால், விபூதி மற்றும் பழங்களையும் அபிஷேகத்துக்குப் பயன்படுத்துவோம். ஆக, பக்தியுடன் எந்தப் பொருளையும் இறைவனுக்கு அளிக்கலாம்.
அறுகம்புல், கொத்துக்கடலை, பழம் மற்றும் வெற்றிலை ஆகியவற்றை மாலையாக அணிவிக்கிறோம். இதற்கெல்லாம் நம்முடைய மனமே காரணம். தெய்வத்துக்குப் படைப்பவை அனைத்தும் நாம் ஏற்றுக்கொண்டு மகிழவே! இறைவனின் தொடர்பு உடையவை எல்லாம் துலங்கும் என்ற எண்ணத்தில் அவற்றைப் பிரசாதமாக ஏற்கிறோம். ‘எதைப் படைக்க வேண்டும் என்பதற்கு தர்மசாஸ்திரம் மட்டுமே சான்று. நீ எதைச் செய்ய வேண்டும்; எதைச் செய்யக் கூடாது என்பதை அறிய தர்மசாஸ்திரத்தை அணுகு’ என்கிறார் கண்ண பரமாத்மா. ஆகவே, நமது புலன்களுக்குக் கேடு விளைவிக்காத பொருள்களையும், உள்ளத்தின் அமைதியைக் கெடுக்காத உணவு வகைகளையுமே கடவுளுக்கு வழங்கவேண்டும். அதுதான் அளவுகோல்.
? முன்னோருக்கு தர்ப்பணம் செய்யும் நீரை, விருட்சங்களில் சேர்ப்பது வழக்கம். அவ்வாறு, எந்தச் செடியிலும் மரத்தடியிலும் ஊற்றக்கூடாது என்கிறார்களே? அதேபோன்று சந்தியாவந்தனம் செய்யும் நீரை என்ன செய்யலாம்?
- சீ.ரகுராம், கும்பகோணம்
வீட்டில் தர்ப்பணம் செய்யும்போது, அந்த நீர் தரையில் விழாமல் இருக்க கீழே பாத்திரம் ஒன்றை வைத்துக்கொள்வோம். பின்னர் பாத்திரத்தில் விழுந்த நீரை, நீர் நிலைகளில் சேர்த்துவிடுவோம். கால மாற்றத்தால், நீர் நிலைகள் இல்லாத இடங்களில் குடியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தர்ப்பணத்துக்குப் பயன்படுத்தப்படும் நீரை, சுத்தமான இடத்தில் அதாவது தென்னை மரத்தடி அல்லது ஏதேனும் செடிகொடிகளில் சேர்ப்பதில் தவறேதும் இல்லை. நீரில் கலந்திருக்கும் எள்ளை மண்ணில் சேர்த்து விட வேண்டும். அதேநேரம், எள் முளைப்பதற்கு இடம் தரக்கூடாது.

ஸந்தியா வந்தனம் செய்த நீரை சேமிக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டுக்கு வெளியே தரையில் நீர் விழும்படி ஜபம் செய்யலாம். வீட்டுக்கு உள்ளேயே, பாத்திரத்தை கீழே வைத்துக்கொண்டு சந்தியா வந்தனம் செய்வது புதிய நடைமுறை. தங்களது புதிய நடைமுறைக்காக சாஸ்திரத்தைத் தேடி அலையாதீர்கள். விருப்பப்படி செயல்பட்டு, அதன்பின் சாஸ்திர விளக்கம் தேடுவது சிறுபிள்ளைத்தனம்.
? விசேஷ தினங்களில் வீட்டுக்கு அருகிலுள்ள ஆலயத்துக்குச் சென்று விளக்குகள் ஏற்றிவைப்பது எனது வழக்கம். அதற்காக, வீட்டில் இருந்து எடுத்துச் செல்லும் எண்ணெய்... விளக்கேற்றியது போக மீதம் இருந்தால், மீண்டும் வீட்டுக்கு எடுத்து வரலாமா?
- கி. சுலோச்சனா, தர்மபுரி
காசி, ராமேஸ்வரம் போன்ற புனித ஸ்தலங்களுக்கு வழிபடச் செல்கிறோம். அதற்காகும் செலவு போக மீதமிருக்கும் பணத்தை, வீட்டுக்குக் கொண்டு வந்துவிடுவோம். பொதுவாக வெளியே கிளம்பும்போது, ‘எதிர்பாராத செலவுகள் நேர்ந்தால்... எதற்கும் இருக்கட்டுமே’ என்று கூடுதலாக பணத்தை எடுத்து வைத்துக்கொள்வது இயல்பு. அதில், மீதமிருப்பதைத் திரும்ப கொண்டு வருவதில் தவறு ஒன்றும் இல்லையே!
அதுபோல், கோயிலில் விளக்கேற்றவும் கூடுதலாக எண்ணெய் எடுத்துச் செல்லலாம். விளக்கேற்றியது போக எண்ணெய் மீதம் இருந்தால், தாராளமாக வீட்டுக்குக் கொண்டு வந்து இஷ்டம் போல் பயன்படுத்தலாம்.
ஒரு காரியத்தில் மன நிறைவுடன் செயல்பட, அதற்கு உதவும் பொருளை தேவைக்கு அதிகமாக வைத்திருப்பதில் தவறு இல்லை. அளவாகக் கொண்டு சென்று பற்றாக்குறை நேர்ந்தால், வீண் மனநெருடல் ஏற்படும்.
- பதில்கள் தொடரும்...