Published:Updated:

மீட்கப்பட்ட ராஜராஜன், உலகமாதேவி திருமேனிகள்... காணாமல் போன  66-க்கும் மேற்பட்ட சிலைகளை மீட்பது எப்போது ?

மீட்கப்பட்ட ராஜராஜன், உலகமாதேவி திருமேனிகள்... காணாமல் போன  66-க்கும் மேற்பட்ட சிலைகளை மீட்பது எப்போது?

மீட்கப்பட்ட ராஜராஜன், உலகமாதேவி திருமேனிகள்... காணாமல் போன  66-க்கும் மேற்பட்ட சிலைகளை மீட்பது எப்போது ?
மீட்கப்பட்ட ராஜராஜன், உலகமாதேவி திருமேனிகள்... காணாமல் போன  66-க்கும் மேற்பட்ட சிலைகளை மீட்பது எப்போது ?

மிழர்களின் வீரத்தையும் பண்பாட்டையும் உலகறியச் செய்த சோழப் பேரரசன் ராஜராஜன் கட்டியெழுப்பிய தஞ்சைப் பெரியகோயில் தமிழர்களின் கலை, பண்பாட்டு அதியசமாக ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது. சோழ தேசத்தின் கௌரவங்களில் ஒன்றாகக் கருதப்பட்ட இக்கோயிலுக்கு ராஜராஜன் மட்டுமன்றி, அவனது மனைவியர், சகோதரி, நிர்வாக அதிகாரிகள், தளபதியர் எனப் பலரும் பொன்னையும் பொருளையும் அள்ளிக்கொடுத்தார்கள்.

கோயிலெங்கும் யார் யார், என்னென்ன பொருள்களை கோயிலுக்குக் கொடையாகக் கொடுத்தார்கள் என்ற செய்தியைக் கல்வெட்டாக வெட்டி ஆதாரமாக வைத்துச் சென்றிருக்கிறான் ராஜராஜன். அந்த வகையில், கோயிலின் மேற்குத் திருச்சுற்றில் உள்ள ஒரு கல்வெட்டு `ஸ்வஸ்தி ஸ்ரீ உடையார் ஸ்ரீ ராஜராஜஸ்வரமுடையார்க்கு ஸ்ரீ காரியம் செய்கின்ற பொய்கை நாடு கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான்' என்பவனைப் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன. 

ஆதித்தன் சூரியன் என்பவன், சோழ வளநாடுகளில் ஒன்றான ராஜேந்திர சிங்க வளநாட்டில் இருந்த பொய்கை நாடு எனும் உட்பிரிவின் தலைவன். `தென்னவன் மூவேந்த வேளான்' எனும் சிறப்புப் பட்டம் கொடுத்து இவனைச் சிறப்பித்துள்ளான் ராஜராஜன். மிகச்சிறந்த சிவபக்தனான இந்த ஆதித்த சூரியன்தான் தஞ்சைப் பெரிய கோயிலின் நிர்வாக அதிகாரி. 

குஜராத் அருங்காட்சியகத்திலிருந்து மீட்கப்பட்ட ராஜராஜன், உலகமாதேவியார் திருமேனி

ஆதித்தன் சூரியன் நிர்வாகப் பொறுப்பை ஏற்றபோது, ராஜராஜன், அவனது பட்டத்து அரசி உலகமாதேவியார், சுந்தரர், பரவை நாச்சியார், அப்பர் உள்ளிட்ட 13 பேரின்  செப்புத் திருமேனிகளையும் செய்து கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியிருக்கிறான். இந்தச் செய்தியைக் கல்வெட்டாகவும் பதிவு செய்து வைத்திருக்கிறான்.

குறிப்பாக, ராஜராஜனின் திருமேனியை `பெரிய பெருமாள்' என்றும், உலகமகாதேவியை `ஒலோகமகாதேவியர்' என்றும் கல்வெட்டில் பொறித்திருக்கிறான். அதுமட்டுமன்றி, ராஜராஜனின் திருமேனி உயரம் `ஒருமுழமே நாலவிரலரை உசரத்து' என்றும். உலகமகாதேவி திருமேனியின் உயரம் `இருபத்து இருவிரலே இரண்டு தோரை உசரத்து ' என்றும் பதிவு செய்திருக்கிறான். 

1900 - ம் ஆண்டு வரை தஞ்சை பெரியகோயிலில் ராஜராஜன், உலகமாதேவி இருவரின் திருமேனிகளும் இருந்துள்ளன. அதன்பிறகு, யாரோ சிலர் இரு திருமேனிகளையும் திருடி, அதற்குப் பதிலாக புதிய சிலை ஒன்றைச் செய்து, அதன் பீடத்தில் `பெரிய கோயில் ராசா ராசேந்திர சோள ராசா' என்று பொறித்துவிட்டார்கள். திருடப்பட்டது ராஜராஜனின் செப்புத் திருமேனி என்று தெரியாமலே அவனது மகன் ராஜேந்திரச் சோழனின் பெயரை வெட்டியிருக்கிறார்கள் அந்தத் திருடர்கள். 

எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில், ராஜேந்திரன் பெயர் பொறிக்கப்பட்ட அந்தச் சிலைக்குக் காஞ்சி மடம் வைரக் கிரீடம் ஒன்றை வழங்கியது. அந்தக் கிரீடத்தை அணிவிக்க அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியைத் தஞ்சைக்கு அழைத்து வந்தார் எம்.ஜி.ஆர். அந்தத் தருணத்தில், தொல்லியல் ஆய்வாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன், `தஞ்சையில் இருப்பது ராஜராஜனின் சிலை இல்லை. இப்போது இருப்பது போலியான சிலை' என்று கல்வெட்டு ஆதாரத்துடன் கூறினார்.

ராஜராஜன் மற்றும் உலகமாதேவியாரின் உண்மையான செப்புத் திருமேனிகள் அகமதாபாத்தில் உள்ள கவுதம் சாராபாய் அறக்கட்டளைக்குச் சொந்தமான `காலிக்கோ' அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

டெல்லி தேசிய அருங்காட்சியகம், இந்தியாவின் அரிய செப்புத் திருமேனிகள் பற்றி, `The Great Tradition India Bronze Master Pieces' என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டது. அந்த நூலில், `காலிக்கோ அருங்காட்சியகத்தில் உள்ளது ராஜராஜன் - உலகமாதேவி  சிலைகள்தாம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை’ என்று தெள்ளத்தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார் முன்னாள் தமிழகத் தொல்லியல்துறை இயக்குநர் முனைவர் நாகசுவாமி. காலிக்கோ அருங்காட்சியத்தின் குறிப்பேட்டிலும் இந்தச் சிலைகளை `கிங்க் ஆஃப் கிங்க்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் அவர். 

இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர் ஆகியோர் சிலையை மீட்டெடுக்க முயற்சி மேற்கொண்டார்கள். ஆனால், முடியவில்லை. தஞ்சைப் பெரிய கோயில் எழுப்பப்பட்டு ஆயிரம் ஆண்டு நிறைவு விழாவின்போது ராஜராஜன் சிலையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்திலிருந்து அப்போதைய கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுலாத்துறை செயலாளர் வெ.இறையன்பு, தொல்லியல் அறிஞர் முனைவர். நாகசுவாமி, குடவாயில் பாலசுப்ரமணியம் ஆகியோர் அடங்கிய குழு குஜராத் சென்றது. ஆனால், அந்தத் தருணத்திலும் மீட்க முடியவில்லை. ஆனால், ராஜராஜன், உலகமாதேவி செப்புத் திருமேனிகள் மட்டுமன்றி 20-க்கும் மேற்பட்ட செப்புத் திருமேனிகள் காலிக்கோ அருங்காட்சியகத்தில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பிறகு தஞ்சை மேற்குக் காவல் நிலையத்தில் சிலை கடத்தல் பற்றி புகார் கொடுக்கப்பட்டது. தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரணையைத் தொடங்கினார். அவரது விசாரணையில், கோயில் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் 68 செப்புத்திருமேனிகளும் காணாமல் போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கபிஸ்தலம் அருகே உள்ள சறுக்கை கிராமத்தைச் சேர்ந்த ராவ் பகதூர் சீனிவாச கோபாலாச்சாரியார் என்பவர் மூலம் அகமதாபாத் காலிக்கோ அருங்காட்சியகத்திடம் பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்திய தமிழகச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு, ராஜராஜன், லோகமாதேவி செப்புத்திருமேனிகளை மீட்டெடுத்துள்ளது. இந்தச் சிலைகள் நாளை (31.5.2018) ரயில் மூலம் தமிழகம் கொண்டு வரப்படவுள்ளன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய முன்னாள் தொல்லியல் துறை கண்காணிப்பாளர் முனைவர். மார்க்சியா காந்தி, ``தஞ்சை பெரிய கோயிலில் காணப்படும் கல்வெட்டில் இருகரம் கூப்பிய `பெரிய பெருமாள்' என்று செப்புத் திருமேனி பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. குஜராத் தனியார் அருங்காட்சியகத்தில் காணப்படும் செப்புத் திருமேனியும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டதைப் போலவே காணப்படுகிறது. அருங்காட்சியகத்தின் தகவல் குறிப்பேட்டிலும் முனைவர் நாகசுவாமி `ராஜராஜன்' என்றே எழுதியிருக்கிறார். மேற்கொண்ட தகவலின் அடிப்படையில் அருங்காட்சியகத்தில் காணப்பட்ட செப்புத் திருமேனிதான் பெரியபெருமாள் எனப்படும் ராஜராஜன் என்று முடிவு செய்யப்பட்டு குஜராத்திலிருந்து மீட்கப்பட்டிருக்கிறது. இது மகிழ்ச்சியளிக்கக் கூடிய செய்தி" என்று தெரிவித்தார். 

மீட்கப்பட்டுள்ள செப்புத்திருமேனிகளின் மதிப்பு 100 கோடிக்கு மேல் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

`குஜராத் அருங்காட்சியகத்தில் காணப்படும் மற்ற செப்புத் திருமேனிகளும் மீட்கப்பட வேண்டும். மீட்கப்பட்ட ராஜராஜன், லோகமாதேவி செப்புத் திருமேனிகளை அருங்காட்சியகத்திலோ அல்லது சிலைகள் வைப்பறையிலோ வைக்காமல், தஞ்சை பெரிய கோயிலில் பழையபடி வைக்க வேண்டும். திருடப்பட்ட திருமேனிகள் என்று தெரிந்தே அவற்றைப் பெரும்தொகை கொடுத்து வாங்கிய அருங்காட்சியகத்தார்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தொல்லியல் ஆர்வலர்களும் தஞ்சை வாழ் மக்களும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.