Published:Updated:

கயிலை... காலடி... காஞ்சி! - 17

கயிலை... காலடி... காஞ்சி! - 17
பிரீமியம் ஸ்டோரி
கயிலை... காலடி... காஞ்சி! - 17

ஒற்றை ரூபாய் காணிக்கை!நிவேதிதா

கயிலை... காலடி... காஞ்சி! - 17

ஒற்றை ரூபாய் காணிக்கை!நிவேதிதா

Published:Updated:
கயிலை... காலடி... காஞ்சி! - 17
பிரீமியம் ஸ்டோரி
கயிலை... காலடி... காஞ்சி! - 17

ஹிமானீ-ஹந்தவ்யம் ஹிமகிரி-நிவாஸைக-சதுரௌ

நிசாயாம் நித்ராணம் நிசி சரமபாகே ச விசதௌ

வரம்லக்ஷ்மீபாத்ரம் ச்ரிய-மதிஸ்ருஜந்தௌ ஸமயினாம்

ஸரோஜம் த்வத் பாதௌ ஜனனி ஜயதச்-சித்ரமிஹகிம்

கயிலை... காலடி... காஞ்சி! - 17

கருத்து: தாமரையோ பனியில் கருகிப் போவது; உனது திருவடித் தாமரைகளோ பனிமலையிலும் மலர்ச்சியுடன் திகழும் தன்மை கொண்டது. இரவுப் பொழுதில் தாமரை தன் இதழ்களை மூடிக்கொண்டு கூம்பிவிடும்; உன் திருவடித் தாமரைகளோ இரவிலும் இரவு விடிந்தபோதும் மலர்ச்சியுடன் திகழ்பவை. தாமரை தன்னிடம் லக்ஷ்மி வாசம் செய்யும்படி இருப்பது; உன் திருவடித் தாமரைகளோ லக்ஷ்மி கடாட்சத்தையே அருளக்கூடியது. ஆகவே உன்னுடைய பாத கமலங்கள் தாமரையை வெற்றிகொள்வதில் அதிசயம் என்ன இருக்கிறது?!

- சௌந்தர்ய லஹரி

தேனம்பாக்கம் திருத்தலத்தில் நீண்ட நெடிய தவம் இயற்றி, அந்தப் புனிதத் தலத்தை வேண்டுவோர்க்கு வேண்டியபடி அருளும் அருள்கோட்டமாக பரிமளிக்கச் செய்த கருணா சாகரம் மஹா பெரியவா.  அவர் தவம் இயற்றிய அந்த தவபூமிக்குச் சென்று தரிசித்ததன் பலனாக, நீண்டகாலம் திருமணம் தடைப்பட்டு வந்த தன் பெண்ணுக்கு வரன் அமைந்ததில் மிகவும் மகிழ்ச்சி  அடைந்தார் ரேவதி.

ஆனாலும்,  ஏப்ரல் 29-ம் தேதி நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறிப்பிட்டுவிட்ட நிலையில் கையில் பணம் இல்லை. செய்வது அறியாமல் தவித்து மறுகிய ரேவதி, மஹா பெரியவா அனுக்கிரஹத்தால் அந்தப் பிரச்னையும் நீங்கிய அற்புதத்தை நம்மிடம் விவரித்தார்.

‘‘வெள்ளிக்கிழமை சாயந்திரம் நிச்சயதார்த்தம் என்று முடிவு செய்தாகிவிட்டது. ஆனால், வியாழக்கிழமை ராத்திரி வரை பணம் எதுவும் கிடைக்காம ரொம்ப தவிச்சிட்டிருந்தேன். ஆனாலும் நான் நம்பிக்கையை மட்டும் இழக்கலே. மஹா பெரியவா அனுக்கிரஹத்தாலதான் இந்தக்  கல்யாணம் நிச்சயமாச்சுங்கறதால, தேவையான பணத்துக்கு அவர் எப்படியும் ஏற்பாடு செஞ்சிடுவார்னு உறுதியா நம்பினேன்.

யார் சொன்னாங்களோ எப்படி சொன்னாங்களோ எனக்குத் தெரியலை. என் மீது ரொம்பவே பாசம் காட்டும் சத்யாங்கற தம்பி தன்னோட பேங்க் கணக்குல இருந்த 10,000 ரூபாயை அப்படியே கொண்டு வந்து தந்துச்சு. அந்தப் பணம் வந்த நேரம், மறுநாள் நிச்சயதார்த்தம் நடத்தத் தேவையான அளவுக்கு பணம் எனக்குக் கிடைச்சிடுச்சி. நிச்சயதார்த்தமும் நல்லபடியா முடிஞ்சுது. செப்டம்பர் மாசம் 6-ம் தேதி கல்யாணத்துக்கு நாள் குறிச்சு நிச்சயம் செய்துக்கிட்டோம்.நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சி. ஆனா, கல்யாண செலவு இருக்கே... அதை நெனைச்சப்ப எனக்கு ஒரே மலைப்பா இருந்துச்சு. நாள் நெருங்க நெருங்க என்ன செய்றதுன்னு  புரியாம தவிச்சிட்டிருந்தேன். கையில பணம் இல்லை. கடன் வாங்கவும் கூடாது. கடன் வாங்கினாலும் திரும்பத் தரணுமே. என்ன செய்றதுன்னு தெரியாம தவிச்சிட்டிருந்தேன்.

கயிலை... காலடி... காஞ்சி! - 17

ஆனாலும், மஹா பெரியவா அருளால எல்லாம் நல்லபடியா முடிஞ்சுடும்ங்கற நம்பிக்கையை மட்டும் நான் இழக்கல. என்னோட நம்பிக்கை வீண்போகாதபடி மஹா பெரியவா என்னை அற்புதமா வழிநடத்தினார்.
மஹா பெரியவா மகிமையை எனக்குச் சொல்லி, என்னை தேனம்பாக்கத்துக்கு போகச்சொன்ன பத்மா மாமிகிட்ட பேசினேன்.

அவங்க, ‘நான் கல்யாணம், வேலை, கடன் தொந்தரவு போன்ற விஷயத்துலல்லாம் தலையிடக் கூடாதுன்னு தாத்தாவோட (ஸ்ரீராகவேந்திரர்) உத்தரவு. நீ வேணும்னா ஒண்ணு செய். தாத்தாக்கிட்ட ஒரு ரூபாய் காணிக்கை வெச்சு வேண்டிக்க. அதான் என்னால சொல்ல முடியும்’ னுட்டாங்க.

அவங்க சொன்னதுபோலவே நானும் ஸ்ரீராகவேந்திரர் படத்துக்கு முன்னாடி ஒரு ரூபா வெச்சு வேண்டிக்கிட்டேன். அந்த ரூபாயை என்கிட்டயே கொடுத்த பத்மா மாமி, கொஞ்சம் பணம் போட்டு பூஜை மணி வாங்கிக்கச் சொன்னார்.

சரியா அந்த நேரம் பார்த்து பத்மா மாமியோட அக்கா அங்க வந்தாங்க. வந்தவங்க விஷயத்தைக் கேள்விப் பட்டுட்டு, அப்ப அவங்க கையில இருந்த 3,000 ரூபாயைத் தந்து பூஜை மணியோட பூஜைக்கான விளக்கு, தாம்பாளம், பஞ்சபாத்திரம்னு பூஜை சாமான்களை வாங்கிக்கச் சொன்னார்.

அதுக்கப்புறம் மஹா பெரியவா அனுக்கிரஹத்தால், யார் யார் மூலமாவோ என் பொண்ணு கல்யாணத்துக்குத் தேவையான பணம் கிடைச்சிடுச்சு. நாங்க எவ்வளவு செலவுன்னு முடிவு செஞ்சிருந்தோமோ அந்த அளவுக்குப் பணம் கிடைச்சிடுச்சு. அதுக்குமேலயும் சிலர் உதவ வந்தாங்க. ஆனா, நாங்க நினைச்ச அளவுக்கு தேவையான பணம் கிடைச்சிட்டதால இனிமேல்  எதுவும் வேண்டாம்னு மறுத்துட்டேன்.

கல்யாணமும் சிறப்பா நடந்துடுச்சு. ரொம்ப வருஷமா தடைப்பட்டுக் கிட்டிருந்த என் பொண்ணோட கல்யாணம், மஹா பெரியவா அனுக்கிரஹத்தால நல்லபடியா நடந்துச்சு.

கல்யாணம் முடிஞ்சப்பறம் ஒரு ரூபாய்தான் என் கையில இருந்துச்சு. நான் தாத்தா படத்துக்கிட்ட வெச்சு,  பூஜை மணி வாங்கிக்கச் சொல்லி திரும்பவும் என்கிட்ட கொடுத்த ரூபாதான் அது.

அந்த ஒரு ரூபாயை நான் திரும்பவும் தாத்தாக்கிட்டவே வெச்சுட்டேன்’’ என்று நெகிழ்ச்சியில் கண்ணீர் பெருக நம்மிடம் விவரித்தார். அதுமட்டுமல்ல, தன்னுடன் தேனம்பாக்கத் துக்கு வந்து வேண்டிக்கொண்டு திருமணம் நிச்சயமான ஒரு பெண்ணின் அம்மாவையும் நமக்கு அறிமுகப்படுத்தினார்.

சென்னை அசோக் நகரைச் சேர்ந்த அந்தப் பெண்மணிக்கு மஹா பெரியவா அனுக்கிரஹத் தால் நிகழ்ந்த அந்த அருளாடல்...

- திருவருள் தொடரும்

காஞ்சி மாமுனிவர் தந்த 10 கட்டளைகள்

மாந்தர்குலம் உய்வு பெறுவதற்காகவே கயிலை சங்கரனின் அம்சமாக அவதரித்த மஹா பெரியவா, நாம் எல்லோரும் உய்வு பெறு வதற்காக பத்து கட்டளைகளை அருளி இருக்கிறார். நம் எல்லோராலும் பின்பற்றக்கூடிய அந்த பத்து கட்டளைகள்...

1.காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடங்களாவது கடவுளை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்.

2.அன்றைய தினம் உனக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்காகவும்  நல்ல நாளாக அமைய கடவுளை வேண்டிக்கொள்

3. நம் தேசத்தின் புண்ணிய நதிகள், கோமாதா, சிரஞ்ஜீவிகள், சப்த கன்னியர்கள் முதலியவர்களை குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது மனதுக்குள் நினைத்து வழிபடு.

4. வாரத்தில் ஒரு நாளாவது அருகிலுள்ள திருக்கோயிலுக்குச் சென்று கடவுளை வழிபடு.

5. உன் உறவினர்கள் நண்பர்களிடம் மட்டுமல்லாமல் அனைவரிடமும் அன்பு செலுத்தவேண்டும்.

6. சாப்பிடும் முன் மிருகங்களுக்கோ, பட்சிகளுக்கோ ஆகாரம் அளித்துவிட்டு, பிறகு சாப்பிடுவதை வழக்கமாக வைத்திரு.

7. தினமும் முடிஞ்ச அளவுக்கு மற்றவர்களுக்கு தானம் செய்.

8. தினமும் நெற்றியில் திருநீறு, குங்குமம் போன்ற சமயச் சின்னங் களை இட்டுக்கொள்ள வேண்டும்.

9. உறங்கச் செல்லுமுன் அன்றைய நாளில் நீ செய்த நல்லது கெட்டதுகளை நினைத்துப் பார்

10. ஆண்டவன் நாமத்தை 108 முறை உச்சரித்துவிட்டு பின்பு உறங்கு.

இதுதான் அந்த பத்து கட்டளைகள். இதில் எதைத்தான் நம்மால் பின்பற்ற முடியாது? எல்லோராலும் எளிதில் பின்பற்றக்கூடிய இந்த பத்து கட்டளைகளை நாமும் பின்பற்றலாமே!