Published:Updated:

சிவமகுடம் - 28

சிவமகுடம் - 28
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம் - 28

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

சிவமகுடம் - 28

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
சிவமகுடம் - 28
பிரீமியம் ஸ்டோரி
சிவமகுடம் - 28

ணு முதற்கொண்டு அண்டபகிரண்டம் அனைத்தும் ஏதேனும் ஓர் இலக்கணத்துக்கு உட்பட்டவையே. ஒவ்வொன்றும் தமக்கு உரிய நியதிப்படியே இயங்கியாகவேண்டும். நியதி மாறுமெனில், இலக்கணம் மாறும்; இலக்கணம் மாறுபட்டால், இயக்கங்கள் முரண்படும்; இலக்குகள் சிதறும்.

அண்டபகிரண்டம் எனும்போது, அதில் மனிதர்களும் சேர்த்தியல்லவா? ஆனால், அவர்கள் எல்லோரும் எப்போதும் இலக்கணங்களுக்கோ நியதிகளுக்கோ உட்பட்டவர்களாக இருந்ததில்லை. மூவகையாகப் பிரிந்து கிடக்கிறார்கள்!

முதலாவது வகையினர் இலக்கணங்களுக்குக் கட்டுப்பட்ட வர்கள்; காலத்தை அண்டியிருப்பவர்கள். இரண்டாவது வகையினர் இலக்கணங்களை மீறியவர்கள்; காலத்தால் அழிக்கப்படுகிறார்கள். மூன்றாவது வகையினரோ, தமக்கென ஓர் இலக்கணத்தை வகுத்துக்கொள்பவர்கள். இவர்கள் காலத்தையே வசப்படுத்திவிடுகிறார்கள்!

சிவமகுடம் - 28

இவர்களில்... *மாறவர்மன் அரிகேசரி என்றும், அரிகேசரி பராந்தகன் என்றும், சுந்தர பாண்டியன் என்றும், நெடுமாறன் என்றும் பிற்காலச் சரித்திர நூல்களும், சமய நூல்களும், செப்பேடுகளும் சிறப்பித்த கூன்பாண்டியர், நிச்சயம் மூன்றாம் வகையினராகவே இருந்திருக்க வேண்டும்.  இல்லையெனில், இப்படியொரு படை நகர்த்தலுக்கும், வியூக யுக்திக்கும் சாத்தியம் இல்லாமல் போயிருக்கும்.

சோழ இளவரசி மானி, `பூ வியூகம்' அமைத்து உறையூர்க் கோட்டையைக் காத்து நின்றாள் என்றால், அந்தப் பூவைக் காம்புடன் சேர்த்துக் கொய்துவிடும் வேடனாக அல்லவா கணை தொடுத்திருக்கிறார் கூன்பாண்டியர்?!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிவமகுடம் - 28தொடுத்தவரைப்போலவே தொடுக்கப்பட்ட கணையும் தனக்கென ஓர் இலக்கணத்தை வகுத்துக் கொண்டிருந்தது. இங்கே நாம் 'கணை' என்று குறிப்பிட்டது கூன்பாண்டியரின் அஸ்திர வியூக அணிகளையே! குறுக்குவழியை நாடுவதுபோல் நாடி, சோழர்களின் கவனத்தைத் திசைதிருப்பி, எதிர்பாராத  ஒரு தருணத்தில் சட்டென்று நேருக்கு நேராக புயல்பாய்ச்சல் காட்டுகிறது என்றால், அதன் தீரத்தை என்னவென்பது.

களத்தில், எதிரிகளின் பலவீனத்தை சாதகமாக்கிக்கொள்ளும் இலக்கணம் உண்டு. ஆனால், பகைவரின் பலத்தையே தங்கள் பலமாக்கிக்கொள்ளும் விநோத இலக்கணத்தை சிருஷ்டித்துவிட்டிருந்தார்கள் கூன்பாண்டியரும், அவரது படைகளும்!

சோழர்களின் முதல் பலம்  முன்னெச்சரிக்கை. அதையே தமக்கான மூலதனமாகக் கொண்டு, 'புலியூர் மீது போர்' என்ற செய்தியை வேண்டுமென்றே கசியவிட்டு, அவர்களின் முன்னெச்சரிக்கையை இரட்டிப்பாக்கிவிட்டார் கூன்பாண்டியர். விளைவு, உறையூரில் இருந்த சோழர் படையில் கணிசமான பகுதி புலியூரை நோக்கி நகர்ந்துவிட்டது. பாண்டியர் படைகளோ கேரளப் புலியூரை நோக்கி முன்னேறிக் கொண் டிருந்தன. அத்துடன்,  கடற் பரப்பில் பாண்டியர் தமது கலன்களை சிறிது நகர்த்த, சோழர்களின் முன்னெச்சரிக்கை மும்மடங்காக அதிகரித்தது. அதனால், அவர்களுக்கு உதவியாக வந்திருந்த பரதவர் படையில் பாதி, கடற்புறம் நகர்ந்தது. 
 
இரண்டாவது பலம் கோட்டைக்காவல். வீரத்தில் சிறந்த மணிமுடிச்சோழரும், மதியூகியான பட்டர்பிரானும் முறையே உள்ளேயும் வெளியிலுமாக உறையூர்க் கோட்டைக் காவலிலேயே கவனம் செலுத்தியிருக்க, அதைப் பயன்படுத்திக்கொண்டு, தனது படைகளை வனப்பகுதிகளிலேயே மறைவாகச் செலுத்தி வந்து, சோழத்தின் எல்லைப்புறங்களை நாற் புறமும் அடைத்துவிட்டார் கூன்பாண்டியர். அவ்வப்போது, வயற்புறங்களில் அவர் எரிபரந்தூட்டலை நிகழ்த்தியதும், எல்லைப் புறத்தில் சோழர்களின் சிரத்தை எப்படியிருக்கிறது என்பதை சோதிப்பதற்காகத்தான்.

ஆனால், ஒவ்வொரு முறையும் உபதளபதி கோச்செங்கணே எல்லைக்கு வந்தான். அங்ஙனம் அவன் வரும்போது பின்வாங்கிவிட வேண்டும் என்று கூன்பாண்டியரின் கட்டளை திட்டமாக இருந்தபடியால், எதிர்ப்புக் காட்டாமல் மறைந்தது பாண்டிய சேனை. கோச்செங்கணும் அவர்களது திட்டத்தையோ, அசைவையோ துல்லியமாகக் கணிக்கமுடியாமல் திரும்பிக்கொண்டிருந்தான். அப்படியும் ஒருமுறை, வலுவில் அவர்களைத் துரத்திச்சென்றான். ஆனால், எவரோ அவனது பின் மண்டையில் கடுமையாகத் தாக்கியதால் மயக்கமுற்றவன், தனது புரவியின் உதவியால் உறையூருக்கு மீண்டு வந்தான்!

மூன்றாவது பலம்-அகழிக்காவிரி. உறையூர்க் கோட்டையின் ஒருபுறத்தை சுற்றிவளைத்துச் சென்ற காவிரியின் கிளைநதி, அகழியின் மற்ற பாகங்களுக்கும் தனது நீரையே உபயமளித்திருந்தது. புதிதாகப் பார்ப்பவர்களுக்கு, முற்றிலும் காவிரியே உறையூரைச் சூழ்ந்து காபந்து செய்வதாகப் படும். அதன் வெள்ளப் பெருக்கு எப்போது குறையும், எப்போது அதிகரிக்கும் என்று திட்டமாகக் கணிக்க முடியாது ஆகையால், எதிரிகளால் அதைக் கடந்து கோட்டையை அணுகிவிட முடியாது என்பது சோழர்களின் எண்ணம். ஆனால், அதையும் சாதகமாக்கிக்கொண்டு, அகழிக்காவிரியில் தனது வன்படையை இறக்கி விட்டிருந்தார் கூன்பாண்டியர்.

அப்படி, காவிரியின் நீர்ப்போக்கிலேயே மூழ்கியபடி நீந்தி வந்து அகழிக்காவிரியில் எழுந்த பாண்டிய வன்படை வீரர்கள், நூலேணி மூலம் ஏறி, சிறைச் சாளரம் வழியே கோட்டைக்குள் புக முயன்ற தருணத்தில்தான் கோச்செங்கணின் தடைக்கு ஆட்பட்டார்கள். அவனோடு ஆக்ரோஷமான சண்டையிலும் இறங்கிவிட்டிருந்தார்கள்.

சிவமகுடம் - 28

அகழிக்காவிரியில் திடுமென எழுந்த இந்த சலசலப்பு, கோட்டையின் வெளிப்புறச் சமவெளியைத் தாண்டி, வனத்தில் மறைந்து உறைந்திருந்த சோழ சைன்னியத்தை சலனப்படுத்த, சட்டென்று ஒரு பிரிவு வனத்தில் இருந்து வெளிப் பட்டு அகழியை நோக்கிப்பாய்ந்தது; அங்கிருந்த பாண்டியர்களைத் தாக்கி அழிக்க!

உணர்ச்சி வேகத்தில் திடுமென நிகழ்ந்துவிட்ட படைநகர்வால், கோட்டைக்குக் காப்பாக சோழர் பிரான் அமைத்திருந்த பெரும் வளைய வியூகத்தின் ஒரு பகுதி உடைந்துவிட்டதை உணர்ந்தார், பட்டர்பிரான். அவர் சுதாரித்து அடுத்து ஆணையைப் பிறப்பிக்குமுன், விபரீதம் பெரிதாகிவிட்டிருந்தது. வளையம் உடைபட்ட பகுதியை நோக்கி  திடுமென புழுதிப் புயல் கிளம்பியது. தொடர்ந்து தமது திருவடியின் கீழ் நிலம் பெரிதாய் அதிர்வதை உணர்ந்தார், பரமேசுவரப்பட்டர். அந்த அதிர்வுக்கான காரணத்தை அவர் அறிந்தபோது பேரதிர்ச்சிக்கு ஆளானார். எதற்கும் அசையாத அவரது கனத்த சரீரமும் பெரிதாய் ஒரு குலுங்கு குலுங்கியது!

``இதெப்படி சாத்தியம்?'' என்று அவரது வாய் முணுமுணுக்கவும் தவறவில்லை!

அதே தருணத்தில்தான்... பரமேசுவரப் பட்டரைப் போன்றே சோழ பூமியின் அதிர்வுக்குக் காரணத்தைத் தெரிந்துகொண்டுவிட்ட - கண்காணிப்புக் கோபுரத் தில் நின்றிருந்த கோட்டைக்காவலன், கோட்டையை எச்சரிக்கும் விதம் மிகப்பெரிதாக சங்கநாதம் எழுப்பினான். தொடர்ந்து கோட்டையின்  பேரிகை களும் அபாய முழக்கம் செய்தன.

அதனால் உண்டான சத்தமே, பூஜையறையில்  தியானத்தில் இருந்த சோழ இளவரசி மானியை யும் உசுப்பியது. கண்விழித்து, சடுதியில் நிலவரத்தை அறிந்துகொண்டவள், ``சிறைக் கொட்டடியின் கற்கதவுகளை இறக்குங்கள்'' என்று ஆணையிட்டு விட்டு, நொடிப்பொழுதில் போருடை தரித்துக் கொண்டு, கோட்டை மதிலை நோக்கி விரைந்தாள். இளவரசியைக் கண்டதும் உறையூரின் போர்ச் சன்னத்தம் இன்னும் அதிவேகமானது.அவை யாவற்றையும் கவனித்தபடி, விறுவிறுவென கோட்டை மதிலின் கண்காணிப்பு கோபுரத்தை அடைந்தவள், வெளியே உருவாகியிருந்த நிலையை உள்ளது உள்ளபடி கண்டாள்.

அவள் இடத்தில் வேறு எவர் இருந்திருந்தாலும் பெரும் பீதிக்கு ஆளாகியிருப்பார்கள். ஆனால், மானி அசரவில்லை. சட்டென்று கோட்டைக்காவலனின் கையில் இருந்த சங்கினை வாங்கி, தனது இதழ்களில் பொருத்தி சங்கநாதம் எழுப்பினாள். தாழ்ந்தும் உயர்ந்தும் ஏற்றமும் இறக்கமுமாய் விதவிதமாக ஒலித்த அவளின் சங்கநாதம், அடுத்தடுத்த கணங்களில் கோட்டையின் வெளிப்புறத்தில் பெரும் விநோதத்தை நிகழ்த்திக்காட்டியது.

அவளின் சங்கநாதத்துக்கு தக்கபடி அசைந்தன சோழப்படைப் பிரிவுகள். ஒருசில நொடிகளில் எல்லாம், அகழிக்காவிரியை நோக்கி பிரிந்து சென்றுவிட்ட படைப்பிரிவால் உடைபட்டிருந்த சோழரின் வியூக வளையம், மீண்டும் ஒன்றுபட்டது. அத்துடன் சங்கநாதத்தை நிறுத்தியவள், ஒரு முறை படையணிகளின் மீது பார்வையைச் செலுத் தினாள். நெருக்கடியான அந்தச் சூழலையும் மீறி, தியாகக்குணமும் நெஞ்சுரமும் நிறைந்த தனது வீரர்களைக் கண்டு பேருவகையும் பெருமிதமும் கொண்டாள்.

`விளைவயல் கவர்புஊட்டி மனைமரம் விறகு ஆகக் கடிதுறைநீர்க் களிறுபடீஇ...' என்றொரு பழந்தமிழ்ப் பாடல் சொல்வதற்கேற்ப, பகைவரை நாசம் செய்து, அவர்தம் கழனியைக் கவர்ந்து, காவற்குளங்களில் யானைகளை இறக்கி அழித்து கொடும்போர் இயற்றும் பெரும்படை கொண்ட சோழத்தின் வீரமும், படைவலுவும் இன்னும் பழுதுபடவில்லை என்று தீர்மானித்தவள், அதனால் விளைந்த சந்துஷ்டியால், சிறிது புன்னகைக்கவும்  செய்தாள்.  அவள் புன்னகையைக் கண்டதும்தான் தாமதம் `சோழம்... சோழம்... சோழம்' என்று எண்திக்கும் எதிரொலிக்க ஆர்ப்பரித்து எழுந்தது, சோழ சைன்னியம்.

அதேநேரம்... `சோழத்துக்கு நான்காவதாகவும் ஒரு பலம் உண்டு; அதன் பெயர் மானி' என்பதை அறியாமல், நிலம் அதிர நெருங்கிக் கொண் டிருந்தது பகைவரின் பெரும்படை!

அதன் வரவை ஆர்வத்துடன் எதிர் நோக்கிய இளவரசி, மீண்டும் ஒருமுறை சங்கநாதம் எழுப்பினாள். வெளிப்புறப் படைகளுக்குத் தலைமையேற்று நின்றிருந்த பரமேசுவரப்பட்டர், மானியின் அந்த சங்கநாதத்துக்கானஅர்த்தத்தைப் புரிந்துகொண்டவராக, உறையூர்க் கோட்டை மதிலின் மீது ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த பனையோலைக் கூம்புகளை நோக்கி எரியம்பு ஒன்றை ஏவினார்.

எரியம்பின் உபயத்தால், தீப்பற்றிக்கொண்ட ஓலைக் கூம்புகள் வெளிப்படுத்திய புகையைக் கண்டு, தூர திசையில் அதை எதிர்ப்பார்த்து  காத்திருந்த நபர் மட்டுமல்ல, வேறொருவரும் தனக்குள் சிரித்துக்கொண்டார். அந்தச் சிரிப்பின் விளைவு உறையூரில் எதிரொலித்தது!

- மகுடம் சூடுவோம்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism