Published:Updated:

கேள்வி - பதில்: ஆலய வளாகங்களில் தர்ப்பணம் செய்யலாமா?

கேள்வி - பதில்: ஆலய வளாகங்களில்  தர்ப்பணம் செய்யலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்: ஆலய வளாகங்களில் தர்ப்பணம் செய்யலாமா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

? திருச்செந்தூர் முருகன் கோயிலில், உத்ஸவ காலங்களில் ‘பச்சை சாத்துதல்’ வைபவம் நிகழும். வஸ்திரங்கள் முதற்கொண்டு மாலைகள் வரையிலும் அனைத்தும் பச்சை வண்ணமாகத் திகழ, வீதியுலா வருவார் முருகப்பெருமான். இப்படி, உத்ஸவ காலங்களில் இறைத் திருவுருவங்களுக்கு மாறுபட்ட வஸ்திரங்கள், அணிகலன்கள் அணிவித்து வழிபடுவதற்கான தாத்பரியம் என்ன?  

- கனகமணி சுப்பையா, பரமன்குறிச்சி

! உத்ஸவ காலங்களில் இறைத் திருவுருவங் களுக்கு மாறுபட்ட அணிகலன்களை அணிவித்து வழிபடுவது உண்டு. இதுபோன்ற வழிபாடுகளும், ஆராதனைகளும் பக்தர்களை ஈர்ப்பதற்குப் பயன்படும். அதேநேரம் ஸ்தல புராணங்கள், கோயில் மரபு போன்றவையும் காப்பாற்றப்படும். வெளித் தோற்றத்தைச் சிறப்பிக்கும் விஷயங்களில், இறைத் தத்துவத்தின் பங்கும் இருக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை.

நம்முடைய மனம் மற்றும் அறிவுக்கு உகந்தவாறு, நம் உள்ளத்துக்குக் களிப்பு அளிக்கும் வகையில், இறைவனுக்கான ஆடை அலங்காரங்களைச் செய்வர். இறைவனுக்கான இந்தப் பணிவிடையில், ‘நாம் தெய்வத்தை மகிழ்வித்தோம்; அவர் நம்மை மகிழ்விப்பார்’ என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும்.

பல வண்ணங்களில் ஆடை - ஆபரணம் அணிந்து காட்சி தரும்  இறை மூர்த்தங்களின் அலங்காரம், பக்தர்களுக்குப் பர தத்துவத்தை அறியும் அறிவைப் பெற்றுத்தரும்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கேள்வி - பதில்: ஆலய வளாகங்களில்  தர்ப்பணம் செய்யலாமா?



? முன்னோர் ஆராதனைக்கு உரிய நாட்களில்,  சில திருக்கோயில்களின் வளாகங்களில் தர்ப்பணம் செய்துவைக்கப்படுகிறதே, இது சரியா?

- எஸ்.கெளரி சங்கரன், சென்னை-44


! அமாவாசை தர்ப்பணம் என்பது, நாம் குடியிருக்கும் இடத்தில், அதாவது வீட்டில் செய்யப்படவேண்டிய சடங்கு. கோயில் - இறைவனை எல்லோரும் வழிபடும் இடம்! ஆகவே, பொது இடத்தில் முன்னோர் ஆராதனையைச் செய்வது சரியல்ல.

வீடு - வாசலை விட்டு வெளியூர் சென்றிருக்கும் தருணத்தில், இக்கட்டானதொரு சூழலில், முன்னோர் ஆராதனையைச் செய்தாகவேண்டுமெனில், அந்த அவசர வேளையில் கோயிலைப் பயன்படுத்தலாம். ஆனால், அருகில் ஆறு - குளங்கள் இருந்தால், கோயிலைப் பயன்படுத்தக்கூடாது!

கேள்வி - பதில்: ஆலய வளாகங்களில்  தர்ப்பணம் செய்யலாமா?
கேள்வி - பதில்: ஆலய வளாகங்களில்  தர்ப்பணம் செய்யலாமா?

வீட்டில் செய்யவேண்டிய சடங்குகளை, ‘வீட்டைவிட கோயில் தூய்மை’ என்று எண்ணி, அங்கே செய்து, கோயிலின் தூய்மையைக் கேள்விக்குறியாக்குவோரும் உண்டு; வியாபார நோக்கத்துடன் அதற்குக் கோயிலில் இடம் தருவோரும் உண்டு. மகாருத்ரம், அதிருத்ரம் முதலான பிராயச்சித்த கர்மாக்களையும், 60-ஆம் கல்யாணம், சதாபிஷேகம் போன்ற தனிமனித விழாக்களையும் கோயிலில் நடத்துவது நல்ல நடைமுறை அல்ல. முன்னோர் ஆராதனையை, வீட்டில் அல்லது நதி மற்றும் குளக்கரையில் செய்வதே சிறப்பு!

கேள்வி - பதில்: ஆலய வளாகங்களில்  தர்ப்பணம் செய்யலாமா?

? கணபதி ஹோமம் வளர்க்கும் குண்டத்திலேயே மற்ற ஹோமங்களையும் செய்கிறார்களே... இது சரியா?

- சொ.சண்முகநாதன், செங்கல்பட்டு

! ஒரு ஹோமத்துடன் மற்ற ஹோமங்களை இணைக்கக் கூடாது. ஒளபாசனாக்னியில் செய்யவேண்டிய ஹோமங்கள், ஒன்றையடுத்து ஒன்று எனத் தொடரும். இவை, ப்ராதான கர்மாவின், அங்க ஹோமங்கள். உத்வாஹ ஹோம அக்னியில், பிரவேச ஹோமமும் தொடரும். அதேபோல், பும்சுவன ஹோமத் தில், சீமந்த ஹோமத்தைத் தொடரலாம். இவை அனைத்தும் சூத்திரக்காரரின் அறிவுரையில் நிகழ்ந்தவை!

கணபதி ஹோமத்துடன் மற்ற ஹோமத்தை இணைக்க இயலாது. ஹோமம் முடிந்து உபஸ்தானம் செய்தபிறகு, அந்த அக்னியானது, லௌகீகாக்னியாக மாறும் என்பது உண்மைதான். ஆனாலும், அக்னிப்ரதிஷ்டாபனத்தில் இருந்து ஆரம்பித்துச் செயல்பட்டால்தான், அடுத்த ஹோமத்தில் நிறைவு இருக்கும்.

தவிர, கணபதி ஹோமத்தின் திரவியங்கள், அவ்வளவு எளிதில் ஜீரணமாகாது. அதன்பிறகு, உபஸ்தானம்வேறு செய்யவேண்டும். அதற்கு நெடுநேரமாகும்! உபஸ்தானம் ஆகாத நிலையில், அதிலேயே சேர்ப்பது இரண்டு ஹோமங்களின் நிறைவையும் பாதிக்கும்.

உத்வாஹ ஹோமம் முடிந்து ஒளபாசனப் பானையில் சேமிக்கப்படும் அக்னி, பிரவேச ஹோமத்தின்போது அக்னிப் பிரதிஷ்டாபனத் துடன் ஆரம்பமாவதைக் கவனிக்கவேண்டும். ஸம்ஸாகர காரியங்களில் - அடுத்த ஹோமம் அதே அக்னியானாலும், அக்னிப்ரதிஷ்டாபனத்தில் இருந்து ஆரம்பமாவதை கவனிக்கும்போது, நிமித்த ஹோமங்களிலும், பிராயச்சித்த ஹோமங்களிலும் இரண்டையும் முறையின்றி இணைப்பது தவறு!

? சில கோயில்களில் தெய்வ மூர்த்தங்களுக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபடு கிறார்கள். வழிபாடுகளில் வெற்றிலை பயன்பாடு குறித்த நியதிகள் என்னென்ன?

- எம்.ராமலட்சுமி, விழுப்புரம்

! நம் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும் தாவரங்கள் ஏராளம் உண்டு. நம்முடைய உடல் உறுப்புகளுக்கு ஊக்கமளிக்கும் உணவு வகைகளும் ஏராளம். ஆனாலும், அன்றாட உணவில் நாம் சேர்க்கவேண்டிய தாவரங்கள் குறித்து வரையறைப் பட்டியல் உண்டு. ஒரு செயல்பாடு என்பது, வரையறுக்கப்பட்ட நியதியுடன் இருந்தால்தான் சிறக்கும். கடவுள் வழிபாட்டிலும் ஒரு வரையறை வேண்டும்.

வில்வம், துளசியைப் போன்றதுதானே வெற்றிலையும்; அதை மாலையாக அணிவிக்கலாம் என்கிற புது சிந்தனை வரையறையை மீறியது. இறையுருவத்தை வழிபட, சாஸ்திரம் பரிந்துரைத்தவற்றை மட்டுமே பயன்படுத்த வேண்டும். நமது விருப்பத்தை நுழைக்கக்கூடாது. வெற்றிலையை உபசாரமாக அறிமுகம் செய்திருக்கிறது சாஸ்திரம். ஆக, உணவுக்குப் பிறகு உட்கொள்ளும் வெற்றிலையை மாலையாக அணிவிப்பது நடைமுறைக்குப் புறம்பானது. பயன்பாடு பலனளிக்காமல் இருக்கும் உபசாரங்கள் ஏற்புடையது அல்ல. வழிபாட்டை விளையாட்டாக எண்ணக்கூடாது. அந்தந்தப் புலன்களின் தகுதிக்கு உரிய பொருள்களை மட்டுமே உபசாரத்தில் சேர்க்கலாம்.

கேள்வி - பதில்: ஆலய வளாகங்களில்  தர்ப்பணம் செய்யலாமா?

அதேபோல், உபசாரத்தில் வெற்றிலையின் எண்ணிக்கையை நாம் ஏற்படுத்துகிறோம். சுப காரியம், அசுப காரியம் என்ற பாகுபாட்டை வைத்து வெற்றிலையின் எண்ணிக்கையை வரையறுப்பது சம்பிரதாயம். 16 உபசாரங்களில் வெற்றிலையும் ஒன்று. உண்ட உணவு சீரணிக்க வேண்டும் என்பதற்காக, பண்டைய காலங்களில் தாம்பூலம் ஏற்பதுண்டு. இதை மனதில் கொண்டு, ஆண்டவனுக்கும் உணவளித்த பிறகு வெற்றிலையும் அளிக்கிறோம்.நமது நடைமுறையை ஆண்டவனிடமும் திணிக்கிறோம். அதாவது, நமது அனுபவம், கடவுள் உபசாரத்தில் ஊடுருவியிருக்கிறது. நமக்கு எது மகிழ்ச்சி அளிக்குமோ அதை சாஸ்திரத்தின் பரிந்துரைக்கு உட்பட்டு செயல்படுத்துகிறோம்.

வெற்றிலை, பழம் போன்ற மாலைகளை அணிவதில் நமக்கு விருப்பம் இருக்காது. வாழை இலையில் உணவு அருந்துவோம். அந்த இலையை உட்கொள்ளமாட்டோம். அதேபோல், குழம்பில் இருக்கும் கறிவேப்பிலையையும் தவிர்த்துவிடுவோம்.

இறைவனுக்கு மாலையாக அணிவிக்க, இரண்டு கைகளில் அள்ளி அர்ச்சனை செய்ய இயற்கை அளித்த புஷ்பங்களே உகந்தவை. நுகர்ந்து மகிழும் மற்ற பொருட்களைவிட புஷ்பங்களுக்குத் தனியிடம் உண்டு. அதன் வாசனை - நுகரும் புலனையும், மென்மை - தொடுபுலனையும் மகிழவைக்கும்.

மொய் எழுதும்போது, பணத்தையோ அல்லது பெற்றுக்கொள்பவரை மகிழ்விக்கும் பொருளையோதான் அளிக்கிறோம். வெற்றிலை மாலை அணிவிப்போமா என்ன?! ஆகவே, பக்தி மேலீட்டால், கிடைத்த பொருட்களை எல்லாம் கடவுளுக்கு அர்ப்பணிக்கலாம் என்ற எண்ணத்துடன் தேங்காய் - பழம், வெற்றிலை, கடலை, வடை என புதுப்புது நடைமுறைகளை அறிமுகம் செய்திருக்கிறோம். சாஸ்திரத்துக்கு உடன்பாடு இல்லை என்றாலும், பக்தியை வளர்க்கிறதே என்று பெரியோர்களும் மௌனம் சாதிக்கிறார்கள்.

‘இப்படி வழிபடுபவர்கள் காலப் போக்கில் தெளிவு ஏற்பட்டு, உண்மையை ஏற்பார்கள்’ என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு. ஆரம்பத்தில் விருப்பப்படி செயல்பட்டாலும், காலப்போக்கில் சிந்தனை வளம் பெற்று, வழிபாட்டு வரைமுறையை அறிந்து செயல்படும் பக்குவம் கிடைக்கும். வெற்றிலை வழிபாடும் அப்படித்தான்!

கேள்வி - பதில்: ஆலய வளாகங்களில்  தர்ப்பணம் செய்யலாமா?

? என் தாயார் காலமாகி பல வருடங்கள் ஆகின்றன. இப்போது என் தந்தையாருக்கு 80 வயது பூர்த்தியாகிறது. அம்மா இல்லாத நிலையில், அவருக்கு சதாபிஷேகம் போன்ற சாந்தி ஹோமங்களைச் செய்துகொள்ளலாமா?

- கே.ராமசுப்ரமணியன், மானாமதுரை


! அறுபது வயது நிரம்பியவர், ஆயிரம் பிறைகளைக் கண்டவர் அத்தனைபேரும் ஆண் - பெண் பேதமின்றி, அந்த இரண்டு சடங்குகளையும் நடைமுறைப்படுத்தலாம். வயதின் அளவை வைத்து நிகழ்த்தப்படுவதால், குறிப்பிட்ட அந்த வயதுகளை எட்டியவர்களின் பிறப்புரிமை அது.

திருமணம் ஆகாதவரும் அந்த வயதை எட்டுவார். ஆகையால், அவருக்கும் உண்டு.

தம்பதிகளில் இழப்பு என்பது நிகழக்கூடிய ஒன்று. இழந்தவர்களும் வயதை எட்டுவார்கள். இருவரும் இருந்தால் மட்டுமே அதை நடைமுறைப்படுத்தலாம் என்று சொல்ல முடியாது. அது, தாம்பத்தியத்தின் அடிப்படை யில் ஏற்பட்ட சடங்கு அல்ல. குறிப்பிட்ட அந்த வயதை எட்டியவரின் உரிமை.

இறந்தவர்களின் நூறாவது பிறந்த நாள் கொண்டாட்டம் உண்டு. வெள்ளி விழா, தங்கவிழா, வைரவிழா... என்று அமரத்துவம் அடைந்தவர்களுக்காகவும் அனுஷ்டிப்பது உண்டு. ஆக, இழப்பைக் காரணம் காட்டி, உரிமையை மறுப்பது சரியில்லை. பண்டைய நாட்களில் இழப்பைச் சந்தித்தவர்கள், கொண்டாட்டத்தைத் தவிர்த்தார்கள்; தனி மனிதனின் விருப்பு, வெறுப்பு செயல்பட்டது. ஆனால், சாஸ்திரம் மறுக்கவில்லை!

- பதில்கள் தொடரும்...