மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 29

சிவமகுடம் - 29
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - 29

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

சிவமகுடம் - 29

அன்றைய வைகறைப் பொழுது வழக்கத்துக்கு மாறானதாகவே புலர்ந்தது, சோழ தேசத்துக்கு!

கீழ்த்திசையில் தோன்றி மெள்ள மெள்ள சிரகிரி மலையின் உச்சியை நோக்கி நகர்ந்துவிட்டபோதிலும், உறையூர் நகரிலும் அதன் கோட்டையைச்  சுற்றிலும் அன்று நிகழவிருக்கும் பெரும்போரையும் அதன் விளைவுகளையும் உத்தேசித்து, இன்னமும் தனது செவ்வண்ணத்தை மாற்றிக் கொள்ளாமல் செங்கதிர்களை வீசி, ஒட்டுமொத்த சோழ நில பரப்பையும் சிவப்பாக்கிக்கொண்டிருந்தான், காலைக் கதிரோன்!

சிவமகுடம் - 29

உறையூர்க் கோட்டையைச் சுற்றி ஓடிய அகழிக்காவிரியின் நீர்ப் பரப்பும் செந்நிறமாகவே காட்சியளித்தது. ஆனால், அதற்குக் காரணம் ஆதவனின் கிரணங்கள் அல்ல; அகழிக் காவிரியில் பாண்டிய வன்படையினரும், சோழ வீரர்களும் பொருதியதால் சிந்தப்பட்ட குருதியால் விளைந்தது அந்த செந்நிறம்!

அகழிக் காவிரியைப் போன்றே... பெரும் விருட்சங்களையும் கொடிய விலங்குகளையும் தன்னகத்தே கொண்டு திகழும் அந்த பெரிய வனமும், காற்றின் அசைவினால் உண்டான விருட்சங்களின் இடைவெளி வழியே ஊடுறு விப் பாய்ந்த பகலவனின் செங்கதிர்களால், ஆங்காங்கே செம்மைப் பூசியே திகழ்ந்தது.

அந்தப் பெருங்காட்டை ஊடறுத்தபடி நீண்டு விரிந்துகிடந்த நெடும்பாதையில், பொதிவண்டியில் அமர்ந்தபடி அதன் மாடுகளை விரட்டிக்கொண்டிருந்த நம்பியின் விழிகளும் சிவந்திருந்தன. ஓரிரவு தூங்காமல் விழித்திருந்ததாலா அல்லது பகைவர் மீது கொண்ட சினத்தினாலா எது காரணம் என்று உணர முடியாதபடி பெரிதும் இறுகிக் கிடந்தது அவனது வீரமுகம்.

வழியில் சுற்றிவளைக்க முற்பட்ட பாண் டிய வீரர்களிடம் இருந்து ஒருவழியாகத் தப்பித்தாகிவிட்டது. அவர்களுடனான சண்டையின்போது ஏதோவொரு தருணத்தில்  வரியிலார்க்கிழவனும் தப்பி மறைந்து விட்டான். அந்தச் சண்டைக்குப் பிறகு நம்பி எதுவும் பேசாமலேயே பயணத்தைத் தொடர்ந்தான். அவ்வப்போது மாடுகளையும் தூண்டிவிட்டு பயணத்தை வேகப்படுத்திக் கொண்டிருந்தான்.

பின்னால் அமர்ந்திருந்த பொங்கிதேவி, அவனுடைய மெளனத்தைக் கலைக்க முற்பட்டாள். ‘‘ஆபத்தின் எல்லையைத் தாண்டிவிட்டோம். ஆனாலும் உபதளபதி யாரின் சகோதரர் பயத்தின் எல்லையைத் தாண்டவில்லை போலும்!’’

அவளது பேச்சில் ஏளனம் தொனித்ததை நம்பி கவனிக்கத் தவறவில்லை. ஆயினும் பேச்சுக்கொடுக்கவும் இஷ்டப்படாமல் மெளனத்தைத் தொடர்ந்தான். பொங்கி தேவியே பேச்சைத் தொடர்ந்தாள்.

‘‘நம்பிதேவரே, வண்டியின் குலுங்கல் என் மேனியை வருத்துகிறது. ஆபத்துதான் நீங்கி விட்டதே, இன்னும் ஏனிந்த வேகம்?’’

இப்போது, சற்றே குரலை உயர்த்தி பதில் சொன்னான் நம்பி:

‘‘நாம் ஆபத்தைக் கடந்துவிட்டோம்; ஆனால் சோழ தேசத்தின் நிலை அப்படி இல்லையே...’’

‘‘ஒஹோ... நீங்கள் விரைந்துசென்றால், சோழத்தின் ஆபத்தை தடுத்துவிடலாம் என்று எண்ணமா’’

‘‘தடுக்கலாம் என்பதைவிடவும் தவிர்க்க லாம் என்று சொல்வது சரியாக இருக்கும்’’

‘‘இரு தேசங்களின் போரைத் தவிர்க்கும் அளவுக்கு வானளாவிய அதிகாரம் வாய்த்து விட்டதா என்ன, உபதளபதியாரின் தம்பிக்கு’’

சிவமகுடம் - 29

பொங்கியின் பேச்சில் இன்னமும் ஏளனம் தொடர்வதைக் கண்டு துணுக்குற்றான் நம்பி.

‘‘பொங்கிதேவியாரே! கேலிப் பேச்சுக்கும் நகையாடலுக்கும் ஓர் எல்லையுண்டு. தவிரவும், அவற்றுக்கான நேரமும் இதுவல்ல.  போரை நான் தவிர்க்க முடியாதுதான். ஆனால், இளவரசியார் நினைத்தால் தவிர்க்கலாம் அல்லவா?’’

இப்போது பொங்கிதேவியும் பேச்சில் தீவிரத்தைக் காட்டினாள்: ‘‘நம்பிதேவரே! உமக்கு சோழர்குலத்தில் உதித்த நலங்கிள்ளி மன்னரைப் பற்றித் தெரியும் அல்லவா?’’

அவள் பேச்சை திசைமாற்றுகிறாளோ என்று எண்ணத் தோன்றியது நம்பிக்குள். என்றாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் பதில் சொன்னான்: ‘‘இளவரசியாரின் அணுக்கத் தோழியாருக்குத் தெரிந்ததில் சிறிதளவாவது, சோழர் மரபு குறித்த வரலாறு இந்த எளியேனுக்கும் தெரியும். நீங்கள் நம்பலாம்...’’

மேலும் அவனைத் தொடரவிடாமல் இடைமறித்துப் பேச ஆரம்பித்தாள் பொங்கி தேவி: ‘‘வீரரே! சோழர்களின் வீர வரலாறை நீர் முழுமையாக அறிந்திருப்பீர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனாலும் ஒரு விஷயத்தின் பொருட்டு உமக்கு நினைவுறுத்த விரும்பினேன். 

சொல்கிறேன் கேளும். நலங்கிள்ளி காலத்தில் கோவூர்க்கிழார் எனும் *பொருநர்  ஒருவர் உண்டு. அவரால்,பெரிதும் போற்றிப் பாடப்பட்டவர் மாமன்னர் நலங்கிள்ளி. மதுரையையும், மலைநாட்டையும் வென்ற நலங்கிள்ளி, தங்கள் மீதும் எந்நேரமும் பாயலாம் என்று ‘துஞ்சா கண்ணராக’ வட புலத்தரசர்கள் அஞ்சி நடுங்கிக் கிடந்ததாகப் பாடியிருக்கிறார் அந்தப் பெரும் பொருநர்’’

‘‘இந்த வீர வரலாறுகள் எல்லாம் நாமறிந்தது தானே... இதில் நீங்கள் சொல்லவரும் விசேஷத் தகவல் என்ன தேவியாரே..?’’

‘‘விஷயம் இருக்கிறது நம்பிதேவரே. மன்னர் நலங்கிள்ளி பாடல் புனைவதிலும் வல்லவர் என்பது தெரியுமல்லவா? அப்படி அவர் பாடிய பாடல் ஒன்று விஷயத்தையும் விசேஷத்தையும் உமக்கு உணர்த்தும்’’ என்றவள், அந்தப் பாடலின் வரிகளையும் ஒப்புவித்தாள்.

அவள் பாடலை ராகமாகப் பாடா விட்டாலும், மேடு-பள்ளங்களில்  ஏறியிறங்கிச் செல்லும் வண்டியின் அசைவாலும், குலுங்கலாலும்  ஏற்பட்ட குரல்நடுக்கமே, அந்தப் பாட்டுக்கு ஒருவித ராகத்தைக் கொடுத்ததாகப்பட்டது நம்பிக்கு.

அந்தப் பாடல் இதுதான்....

மெல்ல வந்தென நல்லடி பொருந்தி
ஈ யென இரக்குவராயின சீருடை
முரசுகெழு தாயத் தரசே தஞ்சம்
இன்னுயிர் ஆயினும் கொடுக்குவென்
உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதில்
துஞ்சுபுலி இடறிய சிதடன்போல
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே...


- பாடலைப் பாடியவள் விளக்கமும் சொன்னாள்.

‘‘என் காலைப் பிடித்துக் கெஞ்சினால், நாட்டை மட்டுமல்ல இன்னுயிரையும் தருவேன். எதிர்த்து வந்தாலோ யானைக் காலில் மிதியுண்ட இளமூங்கில் ஆவார்கள் என்று பாடுகிறார் நலங்கிள்ளி.

நம்பி தேவரே! நம் இளவரசியாரும் அவர் ரகம்தான். கூன்பாண்டியர் கேட்டிருந்தால் ஏராளமான உதவிகள் தாராளமாகக் கிடைத்திருக்கும். ஆனால், பாண்டியர் குறுக்குவழியை நாடியிருக்கிறார். ஆகவே,
இளவரசியாரும் பதிலடி கொடுக்கத் தயாராகி விட்டார். இந்த நிலையில், நீர் போய் என்ன கேட்டுக்கொண்டாலும் பலன் இல்லை’’

பொங்கிதேவியின் விவரிப்புக்குப் பெருமூச்சொன்றை பதிலாகத் தந்தான் நம்பி. தொடர்ந்து, ‘‘இயன்றைவரை முயற்சிப்போம். இந்தப் போரினால் சோழத்துக்குப் பயன் இல்லை. கூன்பாண்டியர், உறையூரைக் களமாகக் கொண்டு காஞ்சியின் மீதும் சாளுக்கியத்தின் மீதும் பாய யத்தனிக்கிறார். நாம் அதற்குப் பலியாகிவிடக்கூடாது என்பதுதான் எனது நோக்கம்...’’

அவனது உரையாடல் உணர்ச்சியுடன் மேலும் மேலும் தொடர்ந்தது; உறையூரில் ஏற்கெனவே விபரீதங்கள் துவங்கிவிட்டன என்பதை அறியாமல்!

உறையூருக்கு இன்னும் சிலகாத தூரமே இருக்கும் நிலையில், பொங்கி அவனை இடைமறித்து ஏதோ சொல்ல வாயெடுக்க முற்பட்ட தருணத்தில், எங்கிருந்தோ பாய்ந்துவந்த அம்பொன்று நம்பியின் வலது புஜத்தைத் தாக்கியது.

தொடர்ந்து, நிலம் அதிரக் கேட்டது பெரும் சத்தம். உறையூர்ச் சமவெளிக் கானகத்தில் பரமேசுவரப்பட்டரின் செவிகளில் விழுந்த அதே பிரளயச் சத்தம்!

என்ன ஏதென்று நம்பியும் பொங்கியும் அனுமானிப்பதற்குள், பெரும் விருட்சங்கள் ஒன்றிரண்டு முறிந்து விழுந்தன, அவர்களின் எதிரில். அதையடுத்து, பெரும் மலைகள் உயிர்ப்பெற்றது போல் பாதையின் இரு மருங்கிலும் வனப்பகுதியில் இருந்து பெரும் பிளிறலுடன் வெளிப்பட்ட களிறுகள் இரண்டு, பெரும் வேகத்துடன்  முன்னோக்கி நடைபோட்டன. அடுத்தடுத்து அந்த வனமெங்கும் குதிரைகளின் கனைப் பொலிகளும், ரதச் சக்கரங்களின் இரைச்சலும் தொடர்ந்து கேட்டன.

பாதையின் இருபுறமும் வனத்தின் மறைவிலேயே, மிகப் பெரியளவில் படைகள் நகர்வதை சடுதியில் புரிந்துகொண்டாள் பொங்கிதேவி. அடுத்து அவள் ஒரு முடிவு எடுப்பதற்குள் நிலைமை கைமீறி விட்டிருந்தது.
திடுமென ஏற்பட்டுவிட்ட களேபரத்தினால் மாடுகள் மிரள, அம்பு காயத்தின் காரண மாக நம்பியும் தன் பிடியை தளரவிட, மாடுகள் நிலையிழந்து வழியில் குறுக்கிட்ட ஓடைக்குள் வண்டியை இழுத்துச் சென்றன. அதை எதிரிகளும் கவனிக்கத் தவறவில்லை. மேலும் மேலும் அம்புகள் பாய்ந்தன அந்த வண்டியின் மீது!

நம்பியின் கரத்தில் பாய்ந்த அம்பைப் பிடுங்க முயன்றும் முடியாத அளவுக்கு நெருக்கடி சூழவே, அவனுடைய பெரும் வீரவாளை கையில் எடுத்துக்கொண்டு ஓடை யின் நீர்ப்பரப்பில் பாய்ந்தாள் பொங்கிதேவி!
காலமும், வெகு சுவாரஸ்யத்துடன் அந்த யுத்த சரிதத்தை எழுதத் தயாரானது!

- மகுடம் சூடுவோம்...

* அந்நாளில் பாணர், விறலியர், கூத்தர், பொருநர் என்ற நால்வகை பாடகர்கள் உண்டு. இவர்களில், போர்க்களத்திலும் பாசறையிலும் வீரர்களுக்கும் மன்னர்களுக்கும் எழுச்சியூட்டி பாடுவோர் `பொருநர்' வகையினர்.