Published:Updated:

சித்திர ராமாயணம்

சித்திர ராமாயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
சித்திர ராமாயணம்

பி.ஸ்ரீ., ஓவியம்: சித்ரலேகா

மயக்கம் தெளிகிறது

ரும்பால் வார்த்த உருவங்கள் போல நிற்கும் வேடர்களை நோக்கி, கோப நெருப்பைக் கக்கும் ஓர் எரிமலை போல நின்று குமுறிக் கோஷித்துக்கொண்டிருக்கும் குகனைப் பரதனுக்குச் சுட்டிக்காட்டுகிறான் சுமந்திரன். ‘‘எவனுடைய தயவில்லாமல் நாம் இந்த கங்கையாற்றைக் கடந்துபோக முடியாதோ, அந்த ஆசாமி அதோ நிற்கிறான். கணக்கில்லாத தோணிகளுக்குச் சொந்தக்காரன் - நாவாய் வேட்டுவன் (தோணிக்கார வேடன்)’’ என்கிறான்.

சித்திர ராமாயணம்

‘‘வடகரையில் உள்ள முனிவர்களும் தென்கரை வேடர்களைப் போல் குகனுடைய குடிகள்’’ என்று தொனிக்கப் பேசுகிறான் சுமந்திரன். வேடர்கோன் முனிவர்களுக்கும் காவலாகத்தான் இருக்கிறான்; காவலன்தானே அரசன்? எனவே, ‘‘நாம் ஆளும் காடு’’ என்று குகன் வேடர்களை நோக்கிப் பெருமிதம் தோன்றக் குறிப்பிட்ட அந்தக் கானக ராஜ்ஜியம்-அந்தக் காட்டரசு-கங்கையின் இருகரையிலும் பரவிக்கிடப்பதுதான்.

‘கல்காணும் திண்மையான் கரைகாணாக் காதலான்
அல்காணில் கண்டனைய அழகமைந்த மேனியான்
மல்காணும் திருநெடுந்தோள் மழைகாணும் மணி நிறத்தாய்-
நிற்காணும் உள்ளத்தான் நெறிஎதிர் நின்றனன்’ என்றான்.


குகன் கோபம் கொப்புளிக்க மதயானை போல் நிற்கின்ற நிலையைப் பார்த்ததும், ‘அது அவனுடைய சுபாவம்’ என்றுதான் நினைக்கிறான் சுமந்திரன். மூங்கில் வில்லைப் பிடித்த வேடர் கூட்டம் கருங்கடல் போல் கொந்தளிப்பதைப் பார்த்ததும், ‘‘பரதனை வரவேற்கத்தான் அவ்வளவு ஆடம்பரமும்’’ என்று கருதுகிறான். ‘‘உன்னுடைய அண்ணனது உயிர்த் தோழன் உன்னை காண்பதற்குத்தான் நிற்கிறான்’’ என்று ஊகமாகச் சொல்கிறான்.

பரதன் பிரேமையும்
குகன் பச்சாதாபமும்


குகனைக் குறித்துச் சுமந்திரன் இப்படிப் பேசியதும் பரதனுக்கு ஆனந்தம் பொங்கிவிட்டது. தன் தமையனுடைய உயிர்த் தோழன் தன்னை வந்து பார்ப்பதைக் காட்டிலும் தானே போய் அவனைப் பார்ப்பது நல்லதென்று நினைத்தான். தன்னிடம் படகு இல்லாததால், முதல் முதல் தான் அவனைப் போய் பார்க்க முடியாது என்பதுகூட இப்போது நினைவில் இல்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சித்திர ராமாயணம்

‘‘அண்ணனுடைய உயிர்த் தோழனும் எனக்கு அண்ணன்தான்! நானே எதிர்சென்று வரவேற்கவேண்டும்’’ என்று சொல்லிக் கொண்டு, அப்படியே எழுந்து நடந்து கங்கை வெள்ளத்தின் ஓரத்திலே வந்து நின்றான். இப்போதுதான், ‘இந்த வெள்ளத்தை எப்படித் தாண்டுவது?’ என்ற பிரச்னை உள்ளத்தில் பிறக்கிறது. இப்போதுதான் குகனும் பரதனுடைய நிலையை உள்ளவாறு காண்கிறான்:

வற்கலையின் உடையானை பாசடைந்த மெய்யானை
நற்கலையில் மதியென்ன நகை இழந்த முகத்தானைக்
கல்கனியக் கனிகின்ற துயரானைக் கண்ணுற்றான்;
வில்கையில்நின்(று) இடைவீழ விம்முற்று நின்றொழிந்தான்!


மரவுரியும் மாசடைந்த மெய்யுமாக நிற்கும் பரதனுடைய முகத்தைப் பார்த்துவிட்டான் குகன். அழகான வட்டமுகம். பூரண சந்திரன் போல் மகிழ்ச்சி வாய்ந்தது. ஆனால், இப்போது எப்படியிருக்கிறது? அதே சந்திரவட்டம் மேற்கே அஸ்தமிக்கும்போது சூரியன் கிழக்கே ஜொலிக்க, இந்த உதயம் காரணமாக அது ஒளியிழந்துபோயிருக்கும் அல்லவா? முழுவட்டம் அப்படியே இருந்தும் ஒளியும் அழகும் மங்கிப்போனதால் நிறங்கெட்டு வெளிறிப்போன ஏதோ ஒரு மேகத்தின் வட்டமோ என்று சொல்லத் தோன்றும். அப்படித் தோன்றுகிறதாம் குகனுக்குப் பரதன் திருமுகம்.

துயரத்திலே கனிந்தது போலிருக்கும் அந்த முகத்தைப் பார்த்தால், கல்லிலே செதுக்கிய சிலையும் கனிந்துவிடும்! குகனுடைய கரைகாணாக் காதலுள்ளம் பட்ட பாட்டை என்னவென்பது?

குகன் ஸ்தம்பித்து உணர்ச்சியற்று நிற்கிறான். கை வில் நழுவித் தடாரென்று கீழே விழுந்துவிடுகிறது. குகன் திடுக்கிட்டு மயங்கி இப்படிச் சிறிதுநேரம் நின்ற பின்புதான் மயக்கம் தெளிகிறது.

எனினும் தான் செய்த பிழையை ஒப்புக்கொள்ளத் தயங்குகிறான், வேடர்களிடம். வெட்கத்தை மறைக்க முயன்று, ஏதோ சந்தேகம் கொண்டவனைப் போல் வேடர்களை நோக்கிப் பேசுகிறான்:

‘உண்(டு) இடுக்கண் ஒன்றுடையான் உலையாத அன்புடையான்
கொண்டதவ வேடமே கொண்டிருந்தான் குறிப்பெல்லாம்
கண்டுணர்ந்து பெயர்கின்றேன் காமின்கள் நெறி’ என்னா
தண்துறையோர் நாவாயில் ஒருதனியே தான்வந்தான்


‘‘முகத்தைப் பார்த்தால் ஏதோ ஒரு மனக்கஷ்டம் உடையவன் என்றும், கைகூப்பி நிற்கின்ற நிலையைப் பார்த்தால் ராமனிடம் உலையாத அன்பு உடையவன் என்றும் தோன்றுகிறது. ராமனுடைய தவ வேஷத்தை இவனும் தரித்துக்கொண்டு ஆண்டிபோல் வந்திருக்கிறான். எனினும் நகரவாசியல்லவா? வேஷத்தை நம்பி மோசம் போய்விடலாகாது. நானே நேரில் போய் உள்ளக் கருத்தையெல்லாம் உள்ளபடியே கண்டு உணர்ந்து வருவேன். நீங்கள் அதுவரையிலும் ஜாக்கிரதையாகவே கரையேறும் துறைகளையெல்லாம் பாதுகாத் திருங்கள்’’ என்று கட்டளையிடுகிறான் குகன் வேடர்களை நோக்கி.

பிறகு, தன்னந்தனியனாக ஒரு தோணியில் ஏறிக்கொண்டு வடகரையை நோக்கி வருகிறான்.

பரஸ்பர வணக்கம்

குகன் தோணியில் வருவதைப் பரதன் பார்த்துவிடுகிறான். தொழுதுகொண்டே எதிரில் நிற்கிறான். ராமன் போன தென் திசையை நோக்கிப் பரதன் தொழுதுகொண்டிருப்பதாக ஊகித்தானே குகன், அந்த ஊகம் சரியன்று. குகன் இருந்த திசையை நோக்கித்தான் பரதன் அப்போதும் தொழுதான், இப்போதும் அவனுக்கு எதிரே தொழுது நிற்கிறான்.

சித்திர ராமாயணம்

படகில் வந்த குகன் கரையில் குதித்ததும், தொழுது நின்ற பரதனை வணங்குகிறான்; காலில் விழுந்து கும்பிடுகிறான். தானும் அப்படியே அவன் காலில் விழுகிறான் பரதன். அப்படி விழுந்த பரதனைத் தூக்கித் தழுவிக்கொள்கிறான் குகன்.

கோசல நாட்டுக் கிரீடம் சூட்டியிருக்க வேண்டிய பரதன், காட்டில் உள்ள வேடர் தலைவன் அடிகளில் விழுந்து, ‘‘அண்ணனுடைய தோழனும் நமக்கு அண்ணன்தான்!’’ என்று வணங்குவதையும், அந்த வேடத் தமையன் இந்தத் தவ வேட ராஜகுலத் தம்பியைத் தழுவி மகிழ்வதையும் எவ்வளவு ஆனந்தமாக நோக்குகிறான் கவிஞன்.

வந்(து) எதிரே தொழுதானை வணங்கினான்; மலர்இருந்த
அந்தணனும் தலைவணங்கும் அவனும், அவன் அடிவீழ்ந்தான்
தந்தையினும் களிகூரத் தழுவினான்; தகவுடையோர்
சிந்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியான்.


குகனும் பரதனும் ஒருவரை ஒருவர் அடி வீழ்ந்து வணங்கும் ஆனந்தக் காட்சியை அகக்கண்ணால் நேரே கண்டுகொண்டான் கம்பன்; கண்டு அக்காட்சியிலே அன்பு மயமான, பக்திமயமான, சகோதர தர்மம்-சமதர்மம் காண்கிறான்.

* 14.9.47 மற்றும் 21.9.47 ஆனந்தவிகடன் இதழ்களில் இருந்து...