Published:Updated:

வடகலை, தென்கலை சர்ச்சை.... காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் என்ன நடக்கிறது?

வடகலை, தென்கலை சர்ச்சை.... காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் என்ன நடக்கிறது?

வடகலை, தென்கலை சர்ச்சை.... காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் என்ன நடக்கிறது?

வடகலை, தென்கலை சர்ச்சை.... காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் என்ன நடக்கிறது?

வடகலை, தென்கலை சர்ச்சை.... காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் என்ன நடக்கிறது?

Published:Updated:
வடகலை, தென்கலை சர்ச்சை.... காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் என்ன நடக்கிறது?

ஸ்ரீமன் நாராயணன் எங்கும் நீக்கமற நிறைந்த ஆனந்தசொரூபன். அவனைத் தொழுத அடியார்கள் அவனைப் பல்வேறு திவ்ய தேசங்களில் பல்வேறு திருநாமங்களில்  வழிபட்டுக் கொண்டாடினார்கள். கொண்டாடியவர்கள் உருவாக்கிய வழிபாட்டுப் பேதங்களால் வைஷ்ணவத்தில் சில பிரிவுகள் ஏற்பட்டன. அவற்றுள் பிரதானமாக இருக்கும் வடகலை, தென்கலை ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கிடையே அவ்வப்போது மோதல் போக்கு நிலவி வருகிறது.  காஞ்சிபுரத்தில் சமீபகாலமாக நடந்து வரும் சம்பவங்களும் அதன் விளைவாக எழுந்த சர்ச்சைகளும், தற்போது இந்தக் கருத்துவேறுபாட்டை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கின்றன. 


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை கடந்த 29-ம் தேதி நடைபெற்றது. அதில் நம்மாழ்வார் அவதார நட்சத்திரத்தன்று அவரது சந்நிதியில் வரதராஜ பெருமாளை எழுந்தருளச் செய்து தென்கலை அன்பர்கள்  நாலாயிரத் திவ்ய பிரபந்தப் பாசுரங்களை பாடி சேவிப்பதுடன், நம்மாழ்வாருக்கு பெருமாளின் சடாரி வைத்து மரியாதை செய்வது வழக்கம். இந்த ஆண்டும் அவ்வாறு பாடும்போது,  'மறுநாள் அதிகாலையில் கருடசேவை நிகழ்ச்சிக்குப் பெருமாளை அலங்காரம் செய்ய வேண்டும்'  என்று கூறி வடகலை அர்ச்சகர்கள்  பெருமாளை எடுத்துச் சென்றார்கள். அதிலும் பெருமாளை வஸ்திரத்தால் முழுவதும் மறைத்து, அப்பிரதட்சிணமாக எடுத்துச் சென்றார்கள். பொதுவாக பெருமாள் வீதியுலா செல்லும்போது, வழியில் ஏதேனும் இறப்பு நேரிட்டிருந்தால் அப்போது மட்டுமே பெருமாளை வஸ்திரத்தால் மறைத்து எடுத்துச் செல்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

பெருமாளை அவசரமாக எடுத்துச் சென்றதுடன், சம்பிரதாயமும் மீறப்படவேதான், இரு பிரிவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு உண்டாகி சர்ச்சையானது. ஆன்மிகப் பெரியோர்கள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தலையிட்டு, பிரச்னை பெரிதாகிவிடாமல் சரி செய்துவிட்டனர். ஆனால், மறுபடியும் தங்கப் பல்லக்கில் பெருமாள் உலா வரும்போது தென்கலை அன்பர்கள்  பாசுரங்களைப் பாடினார்கள். கோயிலுக்குள்தான் பாசுரங்கள் பாட வேண்டும் என்று கூறி  வடகலை அன்பர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுவும் பெரும் சர்ச்சையாகியது. தொடர்ந்து இப்படி சர்ச்சைகள் ஏற்படுவது குறித்து, காஞ்சிபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட திருமலை விஞ்சமூர் வெங்கடேஷிடம் பேசினோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


'பெருமாள் ஒருவர் என்பதே உண்மை. அவரை வழிபடும் முறைகளால் பிற்காலத்தில் உருவானவையே இந்தப் பிரிவுகள். நாதமுனிகள் காலத்தில் ஆழ்வார்களின் பாசுரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவை பெருமாள் கோயில்களில் பாடப்படும் முறை உருவானது. அதை விஸ்தாரமாகச் செயல்படுத்தியவர் ஸ்ரீராமாநுஜர். இவர்கள் காலத்தில்கூட எந்த பேதமும் இல்லாமல் வைணவம் இருந்து வந்தது. 
13-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழில் பாடும் முறையை விரும்பாத சிலரின் தலையீடு காரணமாக  பிரச்னை உருவானது. வடமொழியில் பல நூல்களை எழுதிய வேதாந்த தேசிகரை அடியொற்றி வந்த சிலர், வடமொழியில் பாடுவதே பெருமாளுக்கு உகந்தது என்றெண்ணி செயல்பட்டார்கள். அதே காலக்கட்டத்தில் வாழ்ந்த பிள்ளை லோகாச்சாரியார் தமிழ் மரபிலேயே பாசுரங்களைப் பாடி வழிபாடுகளைத் தொடர்ந்தார். அப்போதும் பெரிதாக பிரிவினை ஏதும் உருவாகவில்லை. 

1323ஆம் ஆண்டு உலூக்கான் (முஹமது பின் துக்ளக்) படையெடுத்து வந்த பிறகு தமிழ்நாட்டில் கோயில்களில் வழிபாடுகள் தடைப்பட்டுவிட்டன. பின்னர் 1371-ஆம் ஆண்டில் விஜய நகரப் பேரரசு காலத்தில் மீண்டும் வழிபாடுகள் தொடர்ந்தன. இந்த காலக்கட்டத்தில் பழைமையான சம்பிரதாயங்கள் மறைந்து போயின. அப்போது மணவாள மாமுனிகள் தோன்றி ஸ்ரீராமாநுஜரின் அடியொற்றி தமிழ்ப் பாசுரங்களை முதன்மையாகக் கொண்டே ஆலய வழிபாடுகளை நடத்தி வந்தார். அப்போதும் பிரிவினை எதுவும் உருவாகவில்லை. ஆனால், மொழி பேதம் மற்றும் சரணாகதி தத்துவங்களால் மெள்ள மெள்ள வைணவர்களுக்குள் பிரிவு உண்டாகி புகைச்சலாகிக் கொண்டிருந்தது. 1720ளஆம் ஆண்டுக்குப் பிறகுதான் வடகலை, தென்கலை என்ற பிரிவுகள் உருவாகி இருவேறு நாமங்கள், தத்துவங்கள், வழிபாட்டு முறைகள் ஏற்பட்டன. இதனால் வடகலை சம்பிரதாயத்தைக் கடைப்பிடித்தவர்கள் பெரும்பான்மையாக இருந்த கோயில்கள் அவர்கள் வசமாகின. தென்கலை சம்பிரதாயத்தைக் கடைப்பிடித்தவர்கள் பெரும்பான்மையாக இருந்த கோயில்கள் அவர்கள் வசமாகின.

ஆனால், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருபிரிவினரும் சமமாக இருந்தபடியால் சிக்கலானது. எந்த சம்பிரதாயத்தைக் கடைப்பிடிப்பது என்பதில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக மோதல் ஏற்பட்டது. 1825-ஆம் ஆண்டு, 1852ஆம் ஆண்டு ஆகிய இரு ஆண்டுகளில் வெளியான கோர்ட் தீர்ப்புகளில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தென்கலை அன்பர்களுக்கே சொந்தம் என்று தீர்ப்பானது. ஆனாலும், கடந்த 200 ஆண்டுகளில் காஞ்சியில் இந்த இருபிரிவினருக்கும் இடையே பல மோதல்கள் சின்னச் சின்னதாக நடைபெற்று வருகிறது. மெள்ள மெள்ள வரதராஜ பெருமாள் கோயில் வடகலை அன்பர்களின் வசமானது. 1940-ஆம் ஆண்டு இந்தக் கோயில் வடகலையை சேர்ந்தவர்களுக்கே உரிமையானது என்று கோர்ட் தீர்ப்பு வழங்கியது. கோயிலின் அனைத்து சந்நிதிகளும் வடகலையைச் சேர்ந்தவர்களுக்கு உரிமையானது. நம்மாழ்வார், மணவாள மாமுனிகள் சந்நிதிகள் மட்டும் தென்கலை அன்பர்களுக்கு உரிமையானது. இதன் காரணமாக ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் இந்த இரு சந்நிதிகளில் நடைபெறும் விழாக்களில் மட்டும் மோதல் வலுக்கிறது.

இப்படித்தான் அன்று நம்மாழ்வாருக்குப் பாசுரம் பாடியபோது, வடகலை அன்பர்கள் நேரமாகி விட்டது என்று கூறி ஸ்வாமியை கொண்டு சென்றனர். வேதாந்த தேசிகரை பெருமாளுக்கு இணையாக வழிபடும் அவர்கள், ஆழ்வார்களில் சிறப்பான நம்மாழ்வாருக்கும் மரியாதை செலுத்தி ஒரு பத்து நிமிடம் காத்திருந்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் இந்த மோதலே ஏற்பட்டிருக்காது. இந்த மோதலுக்கு நிரந்தரமாக ஒரு தீர்வை ஏற்படுத்தவேண்டும் என்று அறநிலையத்துறை ஆணையரைக் கேட்டிருக்கிறோம்'' என்றார்.
இந்தச் சம்பவம் குறித்து மற்றொரு தரப்பைச் சேர்ந்த ஶ்ரீவத்சன் கூறுகையில், ஒவ்வோர் உற்சவத்தின்போதும் தேவஸ்தானத்தில் முன்கூட்டியே மீட்டிங் போட்டு, எந்தெந்த நேரத்தில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடைபெறவேண்டும் என்று சொல்லிவிடுவார்கள். இந்த வருடமும் கோயில் செயல் அலுவலர் நேர அட்டவணை போட்டுக்கொடுத்துவிட்டார். அன்று மாலை 4 மணிக்கு சந்நிதியிலிருந்து புறப்படவேண்டிய பெருமாள் ஒருமணி நேரம் தாமதமாக 5 மணிக்குத்தான் புறப்பட்டார். இரவு 10.30 மணிக்கு வாகன மண்டபத்திலிருந்து புறப்பட்டு நம்மாழ்வார் சந்நிதிக்கு வந்து பாசுரங்கள் பாடிவிட்டு, இரவு ஒரு மணிக்குள் சந்நிதிக்கு வந்துவிடவேண்டும். அப்போதுதான் அலங்காரம் முடிந்து கருட வாகனத்தில் பெருமாளை எழுந்தருளச் செய்ய முடியும். எனவே, சீக்கிரம் பாசுரங்களைப் பாடி முடிக்கச் சொன்னார்கள். அதற்கு அவர்கள், 'நாங்கள் நிதானமாகத்தான் பாடுவோம்' என்று சொன்னதுடன், அவர்களுக்குள்ளேயே சண்டை போட்டுக்கொண்டார்கள்.

இதற்கிடையில் பூஜை செய்து நைவேத்தியமும் செய்துவிட்டார்கள். ஆனாலும், தென்கலையைச் சேர்ந்தவர்கள் காலத்தைக் கடத்திக்கொண்டேயிருந்தார்கள். எனவே, அவர்களிடம் திரையை இறக்கச்சொன்னார்கள். சுவாமிக்கு மாலை, பரிவட்டம், சடாரி போன்றவற்றைக் கொண்டு வந்தார்கள். நேரமாகிக்கொண்டிருந்ததால், மணியக்காரர் சுவாமியை வெளியே கொண்டுவரும்படிக் கூறினார். அப்போது தென்கலையைச் சேர்ந்தவர்கள் நம்மாழ்வார் சந்நிதிக் கதவை மூடிவிட்டார்கள். பரிவட்டம் கட்டும் நேரத்தில் தென்கலையைச் சேர்ந்த அர்ச்சகர், மாலையைப் பிடித்து இழுத்ததுடன், ஸ்வாமியைக் கொண்டுபோகக்கூடாது என்று சொன்னதால், இருதரப்பினருக்கும் அடிதடி தகராறு ஏற்பட்டது. காவல்துறையினர் வந்தபோது அவர்களிடமும் தென்கலை அர்ச்சகர்கள் தகராறு செய்தனர்'' என்றார்.

ஹரியும் சிவனும் ஒன்றாகிவிட்ட நிலையில் ஹரியை வணங்கும் ஒரே பக்தர்களுக்குள் இந்த பேதங்களும், மோதல்களும் வேண்டாமே என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பு. சமயப்பெரியோர்கள் இதை உணர்ந்து ஆவன செய்ய வேண்டும். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சகலருக்கும் என்ற நிலை உருவாக வேண்டும். அதுவே பெருமாளுக்கு நாம் செய்யும் உண்மையான வழிபாடு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism