Published:Updated:

2,000 வருடப் பாரம்பர்யம் மிக்க புஷ்கர் பிரம்மா கோயில் உருவான கதை!

2,000 வருடப் பாரம்பர்யம் மிக்க புஷ்கர் பிரம்மா கோயில் உருவான கதை!
2,000 வருடப் பாரம்பர்யம் மிக்க புஷ்கர் பிரம்மா கோயில் உருவான கதை!

டைக்கும் கடவுளெனப் போற்றப்படும் பிரம்மாவுக்கென்று தனிக் கோயில்கள் மிகச் சிலவே இந்தியாவில் காணப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் மாவட்டம் புஷ்கர் பிரம்மா கோயில். விஸ்வாமித்திர மகரிஷியால் ஏற்படுத்தப்பட்ட புஷ்கர் பிரம்மா கோயில், சுமார் 2,000 வருடங்கள் பழைமையானது. இப்போதிருக்கும் ஆலயம் 14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்கிறார்கள். இந்தியாவில் பிரபலமான இந்தக் கோயில் புஷ்கர் நகரின், `புஷ்கரணி’ எனும் புனிதக் குளத்தின் அருகே அமைந்துள்ளது. புஷ்கர் என்றால் `நீலத் தாமரை' என்று சொல்லப்படுகிறது. இந்த நகரின் தொன்மையும் கோயில் உருவான புராணக் கதையும் சுவாரஸ்யமானது.


பத்ம புராணக் கதையின்படி, வஜ்ரனபா என்ற அசுரனை தனது தாமரை மலரால் பிரம்மா வதம் செய்தார். அப்போது அவரது தாமரை மலரிலிருந்து விழுந்த இதழ்கள் புஷ்கர் ஏரி, மத்திய புஷ்கர் ஏரி, கனிஷ்ட புஷ்கர் ஏரி என்ற மூன்று தீர்த்தங்களை உருவாக்கியது. புனிதமிக்க புஷ்கர் பகுதியில் நான்முகன் உலக நன்மைக்காக ஒரு யாகம் செய்ய ஆரம்பித்தார். யாகத்தை கொடியவர்களிடமிருந்து காக்க வடக்கில் நீலகிரி மலை, தெற்கில் ரத்னகிரி மலை, கிழக்கில் சூர்யகிரி மலை, மேற்கில் சோன்சூர் மலைகளை அரண்களாகக்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தார். இந்த மலைகளின் மீது அஷ்டதிக் பாலர்களைக் காவலாகவும் வைத்தார். யாகம் செவ்வனே நடந்துவந்தது. 

யாகத்தில் பிரம்மாவின் மனைவியான சரஸ்வதி தேவி ஆஹூதி தரவேண்டிய வேளை வந்தது. ஆனால், அங்கே சரஸ்வதி தேவி இல்லை. தோழியர்களை அழைத்துவரச் சென்றிருப்பதாகச் சொல்லப்பட்டது. இதனால் யாகம் தடைபடக் கூடாது என்று கருதிய பிரம்மா அங்கிருந்த 'குஜ்ஜர்' இனத்தைச் சேர்ந்த காயத்ரியை மணமுடித்துக்கொண்டு யாகத்தை நிறைவுசெய்தார். பின்னர் அங்கு வந்த சரஸ்வதி தேவி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்ட பிரம்மாவைக் கண்டு கோபமாகி 'பிரம்மனுக்கு வேறெங்குமே வழிபாடு கூடாது' என்று சபித்தார். மேலும் 'திருமணமான ஆண்கள் எவரும் இங்கு வந்து வழிபட்டால் தோஷமடைவார்கள்' என்றும் சபித்தார். ஆனால், `பிரம்மாவுக்கு புஷ்கரைத் தவிர வேறெங்கும் வழிபாடு இருக்காது’ என்றும், 'புஷ்கருக்கு வந்து வழிபடும் ஆண்களுக்கு எந்த தோஷமும் ஏற்படாது’ என்றும் சரஸ்வதியின் சாபத்தைச் சற்றே மாற்றியமைத்தார் காயத்ரிதேவி

இதனால் மேலும் கோபமான சரஸ்வதி தேவி அந்த இடத்தைவிட்டு நீங்கி, ரத்னகிரி மலையில் நீரூற்றாகி 'சாவித்ரி ஜர்னா' என்று அழைக்கப்பட்டார். பின்னர், சரஸ்வதி தேவி தனிக் கோயிலில் குடிகொண்டாள் என்று புராணம் கூறுகிறது. 


ராஜஸ்தானில் இருக்கும் பிரம்மாவின் ஆலயம் மற்றும் அந்த நகரின் பெருமை குறித்து ராஜஸ்தான் மொழியியல் துறை, மத்தியப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் முனைவர் லட்சுமி ஐயரிடம் கேட்டோம்... 

"புஷ்கர் பிரம்மன் ஆலயம் செந்நிறத்தில் அழகிய கோபுர‌த்தை‌க் கொண்டுள்ளது. கோயிலின் வாசலில் நான்முகனின் வாகனமான அன்னம் அழகுடன் காட்சியளிக்கிறது. ஆலயத்தின் கருவறையில் பிரம்மா, காயத்ரி தேவியுடன் காட்சியளிக்கிறார். இங்கு பூஜை செய்யும் பூசாரிகள் அனைவரும் பிரம்மச்சாரிகள். புஷ்கர் பிரம்மா ஆலயத்தின் பின்புறத்திலுள்ள மலையின் மீது சரஸ்வதிக்கான கோயில் அமைந்துள்ளது. சினம் தணிந்த சரஸ்வதிதேவி, பிரம்மாவுக்கு இங்குதான் காயத்ரி மந்திரத்தை உபதேசித்தார் என்று கூறப்படுகிறது. அந்த மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டே தற்போதைய காயத்ரி மந்திரத்தை விஸ்வாமித்திரர் மனிதகுல நன்மைக்காக உபதேசித்தார் என்றும் சொல்லப்படுகிறது. புஷ்கர் பிரம்மா கோயிலில் கார்த்திகை தீப விழா விசேஷமானது. இது, 'புஷ்கர் கார்த்திக் பூர்ணிமா மேளா' என்ற பெயரில் உலகப்புகழ் பெற்றது. இங்கு நடக்கும் ஒட்டகச் சந்தையும் விசேஷமானது. புஷ்கர் ஏரி புனித தீர்த்தமாகப் போற்றப்படுகிறது. இங்கு தீர்த்தமாடி, தர்ப்பணம் கொடுப்பது மிகச் சிறப்பானது. இந்த ஏரியில்தான், முதலையின் வாயில் சிக்கித் தவித்த யானையை திருமால் காத்தருளிய `கஜேந்திர மோட்சம்' நடந்ததாக இங்குள்ள மக்கள் கூறுகிறார்கள். உள்ளூர் மக்களைவிட இங்கு வெளிநாட்டுப் பயணிகள் அதிகம் வருகிறார்கள். ஜெய்ப்பூர் அரண்மனை, ஆஜ்மீர் தர்காவுக்கு வரும் பலரும் இங்கு வந்து பிரம்மாவின் கோயிலைத் தரிசிக்கிறார்கள். புஷ்கரில் இந்துக்களும் உருதுமொழியைச் சரளமாகப் பேசுவார்கள். அந்த அளவுக்கு அங்கு இந்து - முஸ்லிம் ஒற்றுமை இருந்துவருகிறது. நபிகள் நாயகத்தின் வழித்தோன்றலான ஞானி காஜா மொய்னுதீன் சிஸ்தி என்பவரின் தர்க்கா ஆஜ்மீரில் உள்ளது. இஸ்லாமியர்களால் `காஜா கரிபுன்நவாஸ்' என்று போற்றப்படும் இந்த ஞானியை வழிபட உலகெங்குமிருந்து இஸ்லாமியர்கள் வருவார்கள். இந்த ஆஜ்மீர் தர்க்கா, புஷ்கருக்கு 15 கி.மீ தொலைவில் உள்ளது'' என்றார்.

மத ஒற்றுமைக்கும் தொன்மையான வழிபாட்டுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் புஷ்கர் பிரம்மாவின் கோயிலைத் தரிசித்தால் தலைவிதி மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. முடிந்தவர்கள் அங்கு சென்று நான்முகனையும் அவன் நாயகி கலைமகளையும் தரிசித்துப் பலன் பெறலாம்.