Published:Updated:

மண் மணக்கும் கோயில்கள்... குறை தீர்க்கும் சாமிகள்!

மண் மணக்கும் கோயில்கள்... குறை தீர்க்கும் சாமிகள்!
பிரீமியம் ஸ்டோரி
மண் மணக்கும் கோயில்கள்... குறை தீர்க்கும் சாமிகள்!

மண் மணக்கும் கோயில்கள்... குறை தீர்க்கும் சாமிகள்!

மண் மணக்கும் கோயில்கள்... குறை தீர்க்கும் சாமிகள்!

மண் மணக்கும் கோயில்கள்... குறை தீர்க்கும் சாமிகள்!

Published:Updated:
மண் மணக்கும் கோயில்கள்... குறை தீர்க்கும் சாமிகள்!
பிரீமியம் ஸ்டோரி
மண் மணக்கும் கோயில்கள்... குறை தீர்க்கும் சாமிகள்!
மண் மணக்கும் கோயில்கள்... குறை தீர்க்கும் சாமிகள்!

மண் மணக்கும் கோயில்கள்... குறை தீர்க்கும் சாமிகள்!

ம் முன்னோரின் வாழ்க்கை, அறம், ஆன்மிகம், வீரம், தியாகம் ஆகிய அனைத்துக்கும் இன்றைய சாட்சியங்களாகத் திகழ்பவை, கிராமத்துக் கோயில்கள். இவை, நமது பாரம்பரியத்தின்- கலாசாரத்தின் தொட்டில்கள் என்றே சொல்லலாம். கல்வெட்டுகளும் சாசனங்களும் தராத சரித்திரத் தகவல்களை இந்த எல்லைக் கோயில்களின் திருக்கதைகள் விவரிக்கும்.

இயற்கையில் துவங்கி இறை தத்துவம் வரை வழிபாட்டின் துவக்கமாகவும் திகழ்வன, இந்தக் கோயில்கள்.

கடும்புயல், பெருமழை, வெள்ளப்பெருக்கு என தனது சீற்றத்தால் ஒருபுறம் மனிதனை அச்சுறுத்தினாலும், மறுபுறம் தனது கொடைகளால், அவனது வாழ்க்கையில் இரண்டறக் கலந்தது இயற்கை. அதற்கான நன்றி நவிலலுடன் ஆரம்பமானது நம் முன்னோரின் வழிபாடு.

மண் மணக்கும் கோயில்கள்... குறை தீர்க்கும் சாமிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒளி தரும் ஆதவனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டவர்கள், மழை தந்த வானத்துக்கும் உழுதுப் பயிரளித்த மாடுகளுக்கும் வந்தனம் செய்தார்கள். நெல் விதைத்தால் பொன் விளைந்த பூமியைத் தாயாகவே கருதிப் போற்றினார்கள். மரங்களையும் மலைகளையும்கூட மகேசனாகக் கருதி வழிபட்டார்கள்.

இயற்கையை மட்டுமா? தன் முன்னோரை, கூட்டத்தின் தலைவனை, கற்பிலும் தியாகத்திலும் சிறந்த குலப்பெண்களையும் தெய்வங்களாக்கி வணங்கினார்கள். இன்றைக்கும் வில்லுப்பாட்டுக் கதைகளிலும் கணியன் மற்றும் நாட்டுப்புறப் பாடல்களிலும் வாழும் அந்த எல்லைச்சாமிகளின் சரிதம், நமக்கும் நம் சந்ததியினர் வாழ்வுக்கும் சிறந்த வழிகாட்டி.

அப்படியான சில காவல் தெய்வங்களின் திருக்கதை களையும், அவர்கள் அருள் பாலிக்கும் கோயில்களையும், திருத்தலங்களையும் நாமும் தெரிந்துகொள்வோம்.

பிள்ளை வரம் தருவாள் அங்காள பரமேஸ்வரி

மண் மணக்கும் கோயில்கள்... குறை தீர்க்கும் சாமிகள்!

திருவள்ளூர் மாவட்டம், காரனோடையில் இருந்து மேற்காகச் செல்லும் கிராமத்துச் சாலையில், சுமார் 7 கி.மீ. தூரம் பயணித்தால் வருவது எருமைவெட்டிப் பாளையம். இந்த ஊரின் கிழக்கு எல்லையில், சிறு குன்று போன்ற பகுதியில் கோயில் கொண்டிருக்கிறாள் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி.

‘நான்கு கன்னிகளைத் தவிர வேறு எவராலும் தனக்கு மரணம் நிகழாது’ என்று சிவனாரிடம் வரம்பெற்றவன், மகிஷாசுரன். இந்த நிலையில், வனவாசத்தில் இருந்த ஸ்ரீராமனும் சீதாதேவியும் இந்தப் பகுதிக்கு வந்து தங்கினர். ஒரு நாள், சீதாதேவி ஆற்றில் நீராடிக் கொண்டிருக்கும்போது அவள் முன் தோன்றினான் அசுரன். அவனைக் கண்டு பயந்த சீதாதேவி, ஸ்ரீராமனிடம் தஞ்சம் புகுந்தாள். அவர், தர்ப்பைப்புல் ஒன்றை எடுத்து நான்கு துண்டுகளாகக் கிள்ளி, நான்கு திசைகளிலும் போட்டார். மறுகணம், தர்ப்பைப்புல் துண்டுகள் நான்கும் தேவதைகளாக மாறின!

அங்காள பரமேஸ்வரி, பொன்னியம்மன், மரக்காலத்தம்மன், கைகாத்தம்மன் என வடிவெடுத்து நின்ற அந்த நான்கு தேவதைகளும் மகிஷாசுரனைத் துரத்தினர். தப்பித்து ஓடியவன், மகிஷாசுர பட்டணம் சென்று, எருமையாக உருமாறி அங்கிருந்த புண்ணியகோடி நதியில் பதுங்கிக் கொண்டான். அசுரனை விடாமல் துரத்திச் சென்ற அங்காள பரமேஸ்வரி, நதியில் இறங்கி அசுரனை சம்ஹாரம் செய்தாள். அதன் பிறகு, ஊர் மக்கள் வேண்டிக்கொண்டதற்கு இணங்க, அந்த நான்கு தேவியரும் ஆளுக்கொரு திசையில், காவல் தெய்வமாக அமர்ந்தனர். அதன்படி, ஊரின் கிழக்கு எல்லையில் அமர்ந்தவளே ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி.

குழந்தை வரம் வேண்டி இந்தக் கோயிலுக்கு வருபவர்களுக்கு, அம்மனின் மடியில் வைத்த எலுமிச்சம் பழத்தைப் பிரசாதமாக தருகின்றனர். இந்தப் பழத்தை சாறு பிழிந்து அருந்தினால், சங்கடங்கள் நீங்கி மகப்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை. ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி, துஷ்டனை அழித்த சக்தி. ஆதலால், காத்து- கருப்பால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மனநிலை சரியில்லாதவர்கள் ஆகியோர் இங்கு வந்து, ஈரத் துணியுடன் அம்மனை வலம் வந்து வணங்குவதுடன், மூன்று நாட்கள் இங்கு தங்கி வழிபட்டுச் சென்றால் எல்லாப் பிணிகளும் அகலும் என்பது நம்பிக்கை.

எண்ணியதை ஈடேற்றும் பாடகலிங்க சாஸ்தா

மண் மணக்கும் கோயில்கள்... குறை தீர்க்கும் சாமிகள்!

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக் குறிச்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவில், மலையான்குளம் எனும் மலையடிவார கிராமத்தில் அமைந்திருக்கிறது ஸ்ரீபாடக லிங்க ஸ்வாமி திருக்கோயில்.

கருவறையில் இரண்டு லிங்க மூர்த்தங்கள் உள்ளன. அரசி ஒருத்தியின் பாடகங்கள் (கால் தண்டை போன்றதொரு அணிகலன்) இருந்த இடத்தில் இரண்டு லிங்கங்கள் தோன்றியதாக தலவரலாறு. ஆகவே, லிங்க மூர்த்திகளில் ஒருவருக்கு ஸ்ரீபாடக லிங்கம் என்று திருப்பெயர். மற்றவருக்கு ஸ்ரீமகாலிங்கம் என்று திருப்பெயர். லிங்கத் திருமேனிகளுக்குப் பின்னால் ஸ்ரீசித்திரபுத்திர தர்மசாஸ்தா அருகிலேயே பாடகலிங்க நாச்சியார்; அரசனும் அரசியுமே இப்படி இங்கு அருள்பாலிக்கிறார்களாம்!

கோயிலுக்கு வந்து, பிரதான தெய்வங்களான பாடகலிங்கம், மகா லிங்கம் மற்றும் சாஸ்தாவை பிரார்த்திக்க, எண்ணிய காரியங்கள் ஈடேறுமாம். இந்த ஆலயம் கேரள மன்னனால் கட்டப்பட்டது என்பதால், ஆவணி ஓணமும் பங்குனி உத்திரத் திருவிழாவும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. அதுமட்டுமின்றி ஒவ்வொரு தமிழ் மாதப் பிறப்பன்றும், கடைசி சனிக் கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த நாட்களில், தங்களின் தீவினைகள் தீரவும், குடும்பத்தில் சுபிட்சம் பெருகவும் வேண்டி சாஸ்தாவையும் பாடகலிங்க- மகாலிங்க ஸ்வாமியையும் வழிபட்டுச் செல்கிறார்கள் பக்தர்கள்.

மேலும், இந்த ஆலயத்தில் குடியிருக்கும் ஸ்ரீபிரம்மராட்சியம்மனுக்கு பொட்டு தாலி அணிவிப்பதுடன் குங்குமம், மஞ்சள் பொடி, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ மற்றும் பன்னீர் ஆகியவற்றுடன் விளக்கெண்ணெய் கலந்து திருமஞ்சனம் செய்து ஸ்ரீபிரம்மராட்சியம்மன் நெற்றியில் சாற்றி வழிபட, திருமண தோஷம், புத்திர தோஷம் முதலானவை நீங்கும்; கல்யாண வரமும், குழந்தை இல்லாதவருக்கு குழந்தை வரமும் கிடைக்கும் என்கிறார்கள்.

மங்கல வாழ்வு தருவாள் யமுனாம்பாள்

மண் மணக்கும் கோயில்கள்... குறை தீர்க்கும் சாமிகள்!

தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 35 கி.மீ. தொலைவில் உள்ளது நீடாமங்கலம்.

தஞ்சைத் தரணி, மராட்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த காலகட்டம் அது. மகான் ஸ்ரீதரவேங்கடேச ஐயாவாள் மைசூரில் இருந்து திருவிசநல்லூருக்கு விஜயம் செய்து, அங்கு தங்கியிருந்தார். அவரைத் தரிசிக்க அடிக்கடி திருவிச நல்லூருக்கு வந்துசென்றார் மன்னர். ஒருநாள், மகாராணியார் தானும் மகானைத் தரிசிக்க வருவதாகக் கூற, அவரையும் உடன் அழைத்து வந்தார் மன்னர். அன்று, மகானின் ஆசியுடன் ஸ்ரீராம நாம மந்திர உபதேசமும் கிடைத்தது மகாராணியாருக்கு. அதற்குப் பிறகு எப்போதும் ஸ்ரீராம நாம தியானத்திலும் இறை சிந்தையிலுமே லயித்திருந்தார் மகாராணியார். நிறைமாத கர்ப்பிணியாகவும் இருந்த அவர், ஒருநாள் தோட்டத்தில் இருந்த மாமரத்தில் இரண்டறக் கலந்துவிட்டார். மாமரத்தில் ஐக்கியமான மகாராணியை, ஒட்டுமொத்த தேசமும் தெய்வமாகவே கொண்டாடியது.

பிற்காலத்தில் (1725-ஆம் ஆண்டு), மராட்டிய வம்சத்தில் பிறந்த பிரதாப சிம்ம மகாராஜா, மாமரத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபட்டு, புத்திர தோஷம் நீங்கப்பெற்றாராம். அதனால் மகிழ்ந்த அவர், அந்த ஊருக்கு யமுனாம்பாள்புரம் என்று மகாராணியாரின் பெயரைச் சூட்டியதுடன், அங்கே மகா ராணியார் பெயரில் சத்திரம் ஒன்றும் நிறுவி, அனைத்து வித தர்மங்களையும் செய்ததாகச் சொல்கிறது சரித்திரம். 1972-ம் ஆண்டு, இயற்கைச் சீற்றத்தில் அந்த மாமரம் முறிந்துவிட்டது. தற்போது, மாமரத்தின் எஞ்சிய பகுதிக்குச் செப்புக் கவசம் இட்டு ஊர் மக்கள் வழிபட்டு வருகின்றனர். அத்துடன், மாமரத்துக்கு முன்பாக, கையில் படி(நாழி)யுடன் திகழும்  யமுனாம்பாள் விக்கிரகத்தை நிறுவி, சந்நிதியும் அமைத்துள்ளனர்.

வருடம்தோறும் தை மாத கடைசி வெள்ளியன்று  யமுனாம்பாளுக்குக் கோலாகலமாகத் திருவிழா நடைபெறும். மேலும், பஞ்சம் நீங்கி சகல வளங்களும் பெருகிட வளர்பிறைப் பஞ்சமிகளில் சிறப்பு வழிபாடும், பௌர்ணமி தினங்களில் விசேஷ அபிஷேகமும் அன்னதானமும் நடைபெறுகின்றன. இந்த வைபவங்களில் கலந்துகொண்டு அம்பாளைத் தரிசித்து வழிபட, திருமணப் பாக்கியம், தீர்க்க சுமங்கலி பாக்கியம், புத்திரப் பாக்கியம், கல்வி, செல்வம் எனச் சகலமும் அருள்வாள் அம்பாள் என்பது நம்பிக்கை.

கல்யாண வரம் தரும் ஈச்சங்குடி சாஸ்தா

மண் மணக்கும் கோயில்கள்... குறை தீர்க்கும் சாமிகள்!

தஞ்சை மாவட்டம், திருவையாறில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில், சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது ஈச்சங்குடி கிராமம்.

பாண்டவர்கள் வனவாசம் இருந்தபோது, சிவனார் இங்கே அவர்களுக்குக் காட்சி தந்ததால், இந்த ஊர் ஈசன்குடி என அழைக்கப்பட்டு, பின்னாளில் ஈச்சங்குடி என மருவியதாகச் சொல்வர்.

இந்த ஊருக்கு இன்னொரு பெருமையும் உண்டு. காஞ்சி மகாபெரியவாளின் தாய்வழிப் பாட்டனாரின் ஊர் இது. தவிர, பெரியவா தமது ஐந்து வயது வரை, தாயார் மகாலட்சுமி அம்மாளுடன் இந்த ஊரில்தான் வசித்து வந்தாராம். எனவே, காஞ்சி மகா பெரியவா இந்த ஆலயத்துக்குப் பலமுறை வந்து ஸ்வாமி தரிசனம் செய்திருக்கிறார். மேலும், ஈச்சங்குடியில் மகாபெரியவாளின் தாயார் பெயரில் வேதபாடசாலை ஒன்று நிறுவப்பட்டு, இன்றளவும் இயங்கி வருகிறது.
இத்தகு சிறப்புகள் கொண்ட ஈச்சங்குடி தலத்தில், காவிரிக் கரையோரத்தில், அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார், ஓர் ஐயனார். இவரின் திருநாமம் ஸ்ரீஉடைப்பு காத்த ஐயனார். இவர் அருள்பாலிக்கும் ஆலயம், ஆயிரம் வருடப் பழைமையானது.

பல வருடங்களுக்கு முன்பு, காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அதனால், கோயிலைச் சுற்றி உள்ள இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின. அப்போது கரையின் உடைப்பை அடைத்து, ஊருக்குள் வெள்ளம் வருவதிலிருந்து ஊர் மக்களைக் காத்தருளினாராம் ஐயனார். அதனால், உடைப்பு காத்த ஐயனார் எனும் திருநாமம் இவருக்கு அமைந்ததாகச் சொல்கிறது ஸ்தல வரலாறு.

ஆனால், ‘கல்யாண சாஸ்தா’ என்றே அழைக்கின்றனர் ஊர்மக்கள். ‘இவர் கல்யாணம் முதலான வரங்களைத் தரக்கூடியவர். எனவே, இவரை கல்யாண சாஸ்தா என்று அழைப்பதே சரி!’ என ஐயனாருக்கு இந்தத் திருநாமத்தைச் சொல்லி அருளினாராம் மகாபெரியவா. ஆமாம்... கல்யாணத் தடையால் வருந்தும் அன்பர்கள் அவசியம் தரிசித்து வழிபட வேண்டிய ஸ்வாமி இவர்!

சுகப்பிரசவத்துக்கு அருளும் குணவதியம்மன்

மண் மணக்கும் கோயில்கள்... குறை தீர்க்கும் சாமிகள்!

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த வணிகர் ஒருவர், ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தார். குடும்பத்தில் ஏற்பட்ட சிறு பூசலின் காரணமாக, கர்ப்பிணியான வணிகரின் மனைவி வீட்டை விட்டு வெளியேறினாள்.

தாமிரபரணியின் கரையோரமாக, கால்போன போக்கில் நடக்க ஆரம்பித்தவள், உச்சிப்பொழுதில், முத்தாலங்குறிச்சி பகுதியை நெருங்கினாள். பயணக் களைப்பும், தாகமும் அவளை வாட்டின. சிரமத்துடன் நடந்தவளுக்கு, திடுமென பிரசவ வலி எடுத்தது. ‘அம்மா... என்னைக் காப்பாற்று’ என்று அரற்றியபடி தரையில் சாய்ந்தாள். மறுகணம்... வயதான பெண்ணொருத்தி அங்கே வந்து, மயங்கிக்கிடந்தவளை ஒரு குடிசைக்குத் தூக்கிச் சென்று பிரசவம் பார்த்தாள்; வணிகரின் மனைவிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், மனைவியைத் தேடி முத்தாலங்குறிச்சி பகுதிக்கு வந்த வணிகர், சிறுமி ஒருத்தியின் வழிகாட்டலில் மனைவியைக் கண்டார். அவளிடம் மன்னிப்பும் வேண்டினார். அவரிடம் நடந்ததை விவரித்தாள் மனைவி. இருவரும் மருத்துவச்சிக்கு நன்றி சொல்வதற்காகக் காத்திருந்தனர். இரவு வந்தது. தங்களையும் அறியாமல் இருவரும் கண்ணயர்ந்தனர். அப்போது, வணிகரின் கனவில் சிரித்த முகத்துடன் தோன்றிய பெண்ணொருத்தி ‘‘நான்தான் குணவதியம்மன். மருத்துவச்சியாகவும் சிறுமியாகவும் வந்தது நானே. இங்கே எனக்கு ஓர் கோயில் கட்டு!’ என்று கூறி மறைந்தாள். திடுக்கிட்டு கண்விழித்தார் வணிகர். விடிந்ததும் ஊருக்குள் சென்று விஷயத்தைக் கூறினார். அம்மன் அருளியபடியே ஆலயமும் அமைத்தார். அங்கே, ‘நல்ல பிள்ளை பெற்ற குணவதியம்மன்’ என்ற பெயருடன் கோயிலில் குடியேறினாள் அம்பிகை!

திருநெல்வேலி - தூத்துக்குடி சாலையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது செய்துங்க நல்லூர். இங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது முத்தாலங்குறிச்சி. குழந்தைப் பேறு இல்லாதவர்கள், குணவதியம்மனுக்கு அபிஷேகிக்கப்படும் தீர்த்த நீரை வாங்கிப் பருகினால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்குமாம். கர்ப்பிணிகளின் பெற்றோர், தங்கள் மகளுக்கு சுகப்பிரசவம் நிகழவும், இந்த அம்மனைப் பிரார்த்தித்து அருள்பெற்று செல்கின்றனர்.

மீனவர்களின் காவல் தெய்வம் குட்டியாண்டவர்

மண் மணக்கும் கோயில்கள்... குறை தீர்க்கும் சாமிகள்!

கடலூர் மாவட்டம் - சிதம்பரத்துக்கு கிழக்கே சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது தெற்கு பிச்சாவரம். வெள்ளையர்களின் ஆட்சி காலத்தில் இந்தப் பகுதி, பிச்சாவரம் ஜமீனுக்கு உட்பட்டு இருந்தது.

ஒருமுறை... பேய்பரங்கி என்ற துரை ஒருவரின் கப்பல், தெற்கு பிச்சாவரம் வனப்பகுதிக்கு நேர் எதிரே கடலில் தரை தட்டி நின்றது. அப்போது, இந்த வனத்துக்குள் இருந்து ஒளிக்கீற்று ஒன்று வெளிப்பட்டதாம். தொலைநோக்கியின் மூலம் ஒளி வந்த திசையைப் பார்த்த பேய்பரங்கி அதிர்ந்தார்! ஒளிக்கற்றையின் நடுவே குட்டியாகத் தெரிந்த உருவம் ஒன்று, ‘‘இந்த இடத்தில் எனக்கு ஆலயம் கட்டு... உன்னையும் உன் தொழிலையும் செழிக்க வைக்கிறேன். சம்மதித்து சத்தியம் செய்தால், கப்பல் நகரும்!’’ என்றது. பேய்பரங்கி துரையும் சத்தியம் செய்து கொடுத்தார். அந்த கணமே அங்கிருந்து நகர்ந்தது கப்பல்! அத்துடன், மும்மடங்கு லாபமும் கிடைத்தது. லாபத்தில் ஒரு பகுதியை தனியே வைத்தவர், கோயில் கட்டத் தேவையான கட்டுமானப் பொருட்களை வாங்கி கப்பலில் ஏற்றி, தெற்கு பிச்சாவரத்துக்கு வந்தார். ஜமீன்தாரின் உதவியுடன் ஆலயம் ஒன்றைக் கட்டினார். அதுதான்... இப்போது உள்ள குட்டியாண்டவர் ஆலயம் என்கிறார்கள்.

மேற்கு நோக்கி அமைந்திருக்கிறது ஆலயம். ஒளி வடிவில் காட்சி தந்ததால், கருவறையில் விக்கிரகம் எதுவும் இல்லை. சுவரில் மூன்று ஆணிகளும் அவற்றைச் சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் திருவாசியுமே ஆண்டவராகப் போற்றி, வணங்கப்படுகிறது. கருவறைச் சுவர், சுமார் ஆறடி அகலத்தில் இருக்கிறது. எனவே, ‘சுவருக்குள் விக்கிரகத்தை வைத்து கோயிலைக் கட்டிவிட்டனர்’ என்று சொல்பவர்களும் உண்டு. கருவறையில் விக்கிரகம் இல்லை. ஆனால், எதிரே வெளியில் இருக்கும் தகரக் கொட்டகையில், ஆண்டவரின் திருவுருவ விக்கிரகத்தை வைத்துள்ளனர்.

இப்பகுதி மீனவர்களின் கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறார், குட்டியாண்டவர். இவர் பேரைச் சொல்லி கடலில் இறங்கினால், தொழில் அமோகமாக இருக்குமாம். இங்கு வந்து தொட்டில் கட்டிவிட்டுப் போனால், குழந்தை வரம் கிடைக்கும்; புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் இங்கு வந்து குறிப்பிட்ட நாட்கள் தங்கினால் மனநிலை சீராகும் என்பது நம்பிக்கை.

வழித்துணையாக வருவாள் முப்பந்தல் இசக்கி

மண் மணக்கும் கோயில்கள்... குறை தீர்க்கும் சாமிகள்!

கன்னியாகுமரி - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில், நாகர்கோவிலில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது ஆரல்வாய்மொழி. இந்த ஊருக்குக் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கிறது முப்பந்தல்.

சேர - சோழ - பாண்டிய மன்னர்கள், தங்களது பிரச்னைகளைப் பேசித் தீர்க்க, கூடிக் கலையும் இடம் என்பதால், ‘முப்பந்தல்’ என்ற பெயர் வந்ததாம்.

இவ்வூரை அடுத்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் பழவூர். இதன் அருகில் உள்ள மற்றொரு கிராமத்தில் நாட்டியக்காரி ஒருத்தி வசித்தாள். இவளின் மகள் இசக்கியை விரும்புவதுபோல் நடித்து, கல்யாணமும் செய்த பிறகு, வஞ்சித்துக் கொன்றான் வணிகரின் மகன் ஒருவன். ஆனால், அதன் பிறகு தாகத்துக்கு தண்ணீர் எடுக்கச் சென்றவன் பாம்பு கடித்து இறந்தான்.

இந்நிலையில், தெய்வப் பிறவியான இசக்கி, வணிகரின் மகனை தானே பழிவாங்க வேண்டும் எனக் கருதினாள். சிவனாரிடம் வரம் வாங்கி அவனை உயிர்த்தெழுதச் செய்தவள், அவன் ஊருக்கே சென்று அவனை அழித்தாள். பிறகு அந்த ஊரையும் தீக்கிரையாக்கினாள். பின்னர், நீலி கோலத்துடன் மேற்கு நோக்கி நடந்தாள். அன்று... முப்பந்தல் கிராமத்தில் மூவேந்தர்களும் ஒளவையும் கூடி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியே நீலிக் கோலத்தில் செல்லும் இசக்கியைப் பார்த்த ஒளவை பிராட்டியார், அவளை அழைத்து சாந்தப்படுத்தி, அந்த இடத்திலேயே தங்கச் செய்தார். இசக்கியும் ஊரைக் காக்கும் தெய்வமானாள். முப்பந்தலில் குடியேறியதால், ‘முப்பந்தல் இசக்கியம்மன்’ என்று பெயர் கொண்டாள்.

இசக்கியம்மன் கோயிலில், 41 நாட்கள் அம்மனின் திருப்பாதத்தில் வைத்து பூஜித்துத் தரப்படும் கயிறைக் கட்டிக்கொண்டால், திருஷ்டி கழியும்; காத்து - கருப்பு அண்டாது என்பது நம்பிக்கை.

மேலும், தேசிய நெடுஞ்சாலையில் இசக்கியம்மன் கோயில் கொண்டிருப்பதால், இந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள், மறக்காமல் அம்மனுக்குக் காணிக்கை செலுத்தி விட்டுச் செல்கின்றனர். இதனால், தங்களுடன் வழித்துணையாக வருவாள் இசக்கியம்மன் என்பது அவர்களது நம்பிக்கை!

அமோக விளைச்சலுக்கு அருளும் கன்னிமார் அம்மன்

மண் மணக்கும் கோயில்கள்... குறை தீர்க்கும் சாமிகள்!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது மடத்துப்பாளையம். சுமார் எட்டு தலைமுறைக்கு முன், பொன்காளியப்ப கவுண்டய்யன் என்பவர் இங்கு வாழ்ந்தார். இவரின் தங்கை வள்ளியம்மாள். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்ட இவர்கள், ஒருவர் மீது ஒருவர் மிகுந்த பாசம் வைத்திருந்தனர்.

இந்த நிலையில் தாராபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கடும் வறட்சி ஏற்பட்டது. தங்கையை, உறவினர் ஒருவரது பொறுப்பில் விட்டுவிட்டு, ஆடுமாடுகளை தானே ஓட்டிக் கொண்டு பொள்ளாச்சிக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தார் கவுண்டய்யன். ஆனால், அவரைப் பிரிய மனம் இல்லாத வள்ளியம்மாள் தானும் அவருடன் சென்றாள். இருவரும் பொள்ளாச்சியிலேயே தங்கினர். ஒருநாள்... ஆடுமாடுகளை மேய்க்கச் சென்ற இடத்தில் பாம்பு கடித்து இறந்துபோனாள் வள்ளியம்மாள்.

அதனால் கலங்கிய கவுண்டய்யன், இனியும் இந்த ஊரில் இருக்கக்கூடாது என்ற முடிவுடன் சொந்த ஊருக்கே வந்து சேர்ந்தார். ஆனாலும் தங்கை இறந்த சோகத்தில் இருந்து அவரால் மீள முடியவில்லை. இந்த நிலையில் ஒருநாள்... கவுண்டய்யனின் கனவில் வந்தாள் வள்ளியம்மாள். `‘அண்ணா, வருந்தாதே! நான் உன்கூடவே இருக்கேன்; ஊருக்குக் கிழக்கில், ஊஞ்சை வனச்சோலையில்... இச்சி மர நிழலில் அடக்கமாகி இருக் கிறேன். நீயும் நம் சொந்தங்களும் வருடத்தில் ஒருநாள் என்னை வழிபடுங்கள். நம் சொந்த பந்தங்களை மட்டுமின்றி, இந்த ஊரையே செழிக்க வைக்கிறேன்’' என்று கூறி மறைந்தாள்!

விழித்தெழுந்த கவுண்டய்யன், ஊஞ்சை வனச்சோலைக்கு ஓடினார். அங்கே, இச்சி மரத்தடியில் இருந்த கல்லின் மீது, காராம்பசு ஒன்று பால் சொரிந்தபடி இருந்தது. இதைக் கண்டு மெய்சிலிர்த்த கவுண்டய்யன், ஊருக்குள் ஓடி தகவலை விவரித்தார். அதிசயித்த ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து, அந்த இடத்தில் வள்ளியம்மாளுக்குக் கோயில் எழுப்பி வழிபடத் துவங்கினர். வள்ளியம்மாள் கன்னிப் பெண் என்பதால், கூடவே ஏழு கன்னிமார்களுக்கும் சிலைகள் பிரதிஷ்டை செய்து கன்னிமார் அம்மன் எனப் பெயரிட்டனர். இந்த அம்மனை வழிபட்டால், அமோக விளைச்சல் பெருகும்; குழந்தை பாக்கியம் கிடைக்கும்; திருமணத் தடை அகலும் என்கின்றனர் பக்தர்கள்.

பாதுகாவலாய் வருவார் பாண்டி முனீஸ்வரர்

மண் மணக்கும் கோயில்கள்... குறை தீர்க்கும் சாமிகள்!

மதுரை மக்களின் காவல் தெய்வம் பாண்டி முனீஸ்வரர், மதுரை மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்திலுள்ள மேலமடை கிராமத்தில் கோயில் கொண்டுள்ளார்.

ஒரு காலத்தில் மதுரைக்கு பஞ்சம் பிழைக்க வந்த ஒரு கூட்டம், மானகிரி எனும் கிராமத்தில் தங்கியது. அவர்களில் கிழவி ஒருத்திக்கு கனவு வந்தது. அதில் தோன்றிய ஜடாமுடி தரித்த உருவம், ஓரிடத்தைக் குறிப்பிட்டு, ‘`அங்கு நான் பூமிக்குள் புதைந்திருக்கிறேன். என்னை வெளியில் எடுத்து, வழிபட்டு வந்தால், உன்னையும் உன் வம்சத்தையும் சிறப்பாக வாழ வைப்பேன்!’' என்று கூறி மறைந்தது. விடிந்ததும் தன் கூட்டத்தாரிடம் அவள் கனவை விவரிக்க... அனைவரும் அந்த இடத்துக்குச் சென்று பூமியைத் தோண்டினர். பூமிக்குள் தவக்கோலத்தில் பத்மாசன கோலத்தில் கற்சிலை இருந்தது. பயபக்தியுடன் அந்தச் சிலையை எடுத்து, சிறிய குடிசையில் பிரதிஷ்டை செய்தனர். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு பலரும் வந்து, அந்தச் சிலையைத் தரிசித்துச் சென்றனர்.

ஒருநாள் சந்நியாசி ஒருவர் வந்தார்.சிலையைத்  தரிசித்ததும் அருள் வந்தது அவருக்கு. ‘பாண்டியன் நெடுஞ்செழியனின் கோட்டை இருந்த இடம் இது. இதே இடத்தில் வைத்து பாண்டியனை சபித்த கண்ணகி, மதுரையை எரித்தாள். மறுபிறப்பெடுத்த பாண்டியன், முற்பிறவியில் செய்த தவற்றுக்குப் பரிகாரமாக, இங்கு சிவனாரைக் குறித்து தவமிருந்தான். அதனால் மகிழ்ந்த ஈசன், மறுபிறப்பு நீக்கி அவனைத் தன்னிடமே அழைத்துக்கொண்டார். எனவே, தவக்கோலத்திலேயே கல்லாகி மண்ணுக்குள் புதையுண்டு போன பாண்டியன், இப்போது வெளிவந்திருக் கிறான். இவனால், இனிமேல் இந்த இடம் பிணி போக்கும் ஸ்தலமாகத் திகழும்!’’ என்றார். அதை நம்ப மறுத்த ஊரார், அப்போதே அந்த பகுதியைச் சுற்றி பல இடங்களில் தோண்டிப் பார்த்தனர். மண்ணுக்குள் கருகிய செங்கற்களும் கருங்கற்களுமாகக் கிடந்தன. அவற்றைப் பார்த்த ஊராருக்கு, பெரியவரது வார்த்தைகளில் நம்பிக்கை வந்தது. அவரைத் தேடியபோது, அவர் அங்கு இல்லை. அவரது வாக்கை தெய்வ வாக்காகவே கருதி, அன்று முதல் அந்தச் சிலையை ‘பாண்டி முனீஸ்வரர்’ என்ற பெயரில் வழிபட ஆரம்பித்தார்களாம்!

மாங்கல்ய தோஷம் நீக்கும் நிசும்பசூதனி

மண் மணக்கும் கோயில்கள்... குறை தீர்க்கும் சாமிகள்!

ஒன்பதாம் நூற்றாண்டில், தஞ்சைத் தரணியை விஜயாலயச் சோழன் ஆட்சிசெய்து வந்தான். திடுமென, தேசத்தில் இனம் தெரியாத கொள்ளை நோய் தாக்கி, மக்கள் பலரும் மாண்டனர்.

இந்நிலையில் ஒருநாள் இரவு, சோழனின் கனவில் சந்நியாசி வடிவில் காட்சி தந்த சிவனார், ‘`ஒருகாலத்தில் அசுரர்களை அழிக்க என்னால் சிருஷ்டிக்கப்பட்ட நிசும்பசூதனி, உனது எல்லைக்குள் உக்கிரமாகி இருக்கிறாள். அவளைக் குளிர்வித்து, பூஜைகள் செய்’’ என்று அருளி மறைந்தார். விடிந்ததும், அரண்மனை ஜோதிடர்களிடம் விவாதித்த மன்னன், அவர்கள் சொன்ன ஆரூடத்தின்படி, சும்ப - நிசும்பர்கள் வதம் செய்யப்பட்ட இடத்தில் நிசும்பசூதனிக்கு ஆலயம் எழுப்பினான். காளியாக உருவெடுத்து அசுர வதம் நிகழ்த்தியவள் என்பதால், நிசும்பசூதனி உக்கிரகாளியம்மனின் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்தான். அன்று துவங்கி இன்றளவும் தஞ்சையின் வடகிழக்கு எல்லையைக் காக்கும் தெய்வமாக அருளாட்சி நடத்திவருகிறாள் நிசும்பசூதனி!

தஞ்சாவூரின் குயவர் குடியிருப்பை ஒட்டி அமைந்துள்ளது நிசும்பசூதனி உக்கிரகாளியம்மன் ஆலயம். கருவறையில், கையில் சூலம் ஏந்தி, வலது காலை மடக்கி, இடது காலால் அசுரனின் தலையை மிதித்தபடி ஆக்ரோஷமாகக் காட்சி தருகிறாள் அம்மன். கருவறையை அடுத்துள்ள மண்டபத்தில் சிவபெருமானும் விநாயகரும் சந்நிதி கொண்டுள்ளனர்.கோயிலுக்குள் நுழைந்ததும் வலது பக்கத்தில், விஜயாலயச் சோழனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட காளியையும் தரிசிக்கலாம்.

திருமணத் தடையால் அவதிப்படுபவர்கள், தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகள் கோயிலுக்கு வந்து, ராகு கால வேளையில் காளியம்மனுக்கு விளக்கேற்றி, வேப்ப மரத்தில் மஞ்சள் சரடு கட்டிப் பிரார்த்தித்தால், விரைவில் வீட்டில் கெட்டி மேளச் சத்தம் கேட்கும் என்பது நம்பிக்கை. மேலும், மாங்கல்ய தோஷம், தம்பதிக்கு இடையே பூசல், வழக்கில் இழுபறி ஆகியவற்றால் கலங்குவோர், நிசும்பசூதனியிடம் பிரார்த்தித்துச் சென்றால், விரைவில் பலன் கிட்டுமாம்.

திருட்டுப் போனதை மீட்டுத்தரும் பெரமைய்யா சாமி

மண் மணக்கும் கோயில்கள்... குறை தீர்க்கும் சாமிகள்!

பட்டுக்கோட்டையில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில், சுமார் 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மதுக்கூர். இதன் கிழக்கு எல்லையில் உள்ளது தனியகுளம். இங்கே, மக்களின் காவல் தெய்வமாக கோயில் கொண்டிருக்கிறார் பெரமைய்யா.

இந்தப் பகுதியில் வாழ்ந்த பெரமைய்யா என்ற சிறுவன், மண்ணால் ஆன அரிவாளைக் கொண்டு தன் கழுத்தை வெட்டும்படி நண்பர் களிடம் சொன்னான். அவர்களும் விளையாட்டாகக் கருதி வெட்ட, அந்த இடத்திலேயே குருதி பொங்க வீழ்ந்தான் பெரமைய்யா. விஷயம் அறிந்து ஊரே கலங்கியது. நாட்கள் நகர்ந்தன. திடுமென ஊரில் பல அசம்பாவிதங்கள் நிகழத் துவங்கின. இதற்குத் தீர்வு காண விரும்பிய ஊர் மக்கள் ஒன்றுகூடி, கோடாங்கியை அழைத்து வந்து குறி கேட்டனர். கோடங்கியின் மீது அருளாக வந்து இறங்கிய பெரமைய்யா, ‘‘மண் அரிவாளால் உயிரை விட்டு, இந்த இடத்திலேயே ஊரைக் காக்கும் தெய்வமாக இருக்கணுங்கறதுதான் நான் வாங்கி வந்த வரம். ஆனால், என் உடலைப் புதைத்த கையோடு, என்னை நீங்கள் மறந்தே போனீர்கள். அதனால் ஏற்பட்ட விளைவு களே எல்லாம்'' என்றான்.

அதைக்கேட்டு சிலிர்த்த ஊர் மக்கள், அடுத்த சில நாட்களில், பெரமைய்யாவுக்குக் கோயில் எழுப்பி, வழிபடத் துவங்கினர். அது முதல், ஊரைக் காக்கும் தெய்வமானான் பெரமைய்யா.

குளக்கரைக் கோயிலுக்கு, இன்றளவும் பெண்கள் வருவதில்லை. சாலையோரத்திலும் கோயில் அமைத்திருக்கிறார்கள். பெண்கள் சாலையில் உள்ள கோயிலுக்கு மட்டும் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இந்தப் பகுதி வழியே வாகனங்களை ஓட்டிச்செல்லும் வாகன ஓட்டிகளுக்கு வழிவிடும் தெய்வம், வழியில் காக்கும் தெய்வம் எல்லாம் பெரமைய்யாதான்.

மேலும், பொருட்கள் ஏதும் திருடு போய்விட்டால், இங்கு வந்து கற்பூரம் ஏற்றி வைத்து, வேண்டிக்கொண்டால் போதும்... திருடியவர்கள், அந்தப் பொருட்களைத் தாங்களாகவே கொண்டு வந்து, வைத்து விடுவார்களாம். இல்லையெனில், அவர்களின் நிம்மதியையும் தூக்கத்தையும் குலைத்துவிடுவாராம் பெரமைய்யா சாமி!

வேண்டிய வரம் தரும் செறைக்கன்னிமார்

மண் மணக்கும் கோயில்கள்... குறை தீர்க்கும் சாமிகள்!

ஈரோடு மாவட்டம், ஈரோடு - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது செங்கப்பள்ளி. இங்கிருந்து வலப் புறமாக பிரிந்து செல்லும் கிராமத்துச் சாலையில், சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது கவுண்டனூர் கிராமம். இக்கிராமத்தில் அமைந்துள்ளது செறைக்கன்னியம்மன் ஆலயம்.

பொள்ளாச்சி அருகே உள்ளது வேட்டைக்காரன்புதூர். முற்காலத்தில், இந்த ஊரைச் சார்ந்த கொத்து வேலை செய்யும் தொழிலாளர்கள், ஏழு கன்னிமார் தெய்வங்களை குலதெய்வமாக வழிபட்டு வந்தனர். இவர்கள், அன்றாடக் காய்ச்சிகள் ஆதலால், திருவிழா காலங்கள் தவிர மற்ற நாட்களில் கன்னிமாரைக் கண்டுகொள்ளவே இல்லை. இந்நிலையில், ஊர் மக்கள் நோய்நொடிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அப்போது, இந்தப் பகுதிக்கு குறி சொல்ல வந்த மலைக்குறவப் பெண் ஒருத்தி மூலம், கன்னிமார் தெய்வங்களுக்கு முறைப்படி தொடர்ந்து வழிபாடு செய்தால் பாதிப்புகள் நீங்கும் என்பதை அறிந்தனர். ஆனாலும், தின வழிபாடு நடத்துவது இயலாத காரியம்... ஆதலால், கன்னிமார் தெய்வங்களை காவிரியில் விட்டுவிடலாம் என்ற முடிவுடன், தெய்வங்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர். வழியில் ஓரிடத்தில் மண்ணில் சிக்கிக்கொண்ட வண்டி, அங்கிருந்து நகரவேயில்லை. கிராம மக்களும் கன்னிமார் தெய்வங்களுடன் அந்த வண்டியை அங்கேயே விட்டுச் சென்றனர். காலம் உருண்டது. வண்டி மண்ணில் சிக்கிய இடம் வனமானது. காலப்போக்கில் இந்த வனத்துக்கு வடக்கில், ‘கவுண்டனூர்’ எனும் சிறிய கிராமம் ஒன்று உருவானது. இந்த கிராமத்தைச் சேர்ந்த கவுண்டர் ஒருவர் மூலம் மீண்டும் வெளிப்பட்ட கன்னிமார் தெய்வங்களுக்கு, இங்கே ஆலயம் உருவானது என்கிறார்கள்.வனப்பகுதியை ‘செறை’ என்பார்கள். எனவே, வனத்துக்குள் அதாவது செறைக்குள் இருந்து கண்டெடுத்த கன்னிமார் தெய்வங்களுக்கு, ‘செறைக் கன்னியம்மன்’ என்று பெயர் சூட்டி வழிபடத் துவங்கினர். அதனால் அவர்கள் ஊரும் செழித்தது.

இன்னதுதான் என்றில்லாமல், அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றி வைக்கும் தலமாகத் திகழ்கிறது, செறைக்கன்னியம்மன் திருக்கோயில்.

 பயம் நீக்கும் பாடிகாட் முனீஸ்வரர்

மண் மணக்கும் கோயில்கள்... குறை தீர்க்கும் சாமிகள்!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் அமைந்திருக்கிறது பாடிகாட் முனீஸ்வரர் ஆலயம். சாலையை ஒட்டிய சிறிய கோயில்தான் என்றாலும், காலையிலும் மாலையிலும் புதிதாக வாங்கிய வாகனங்களுக்குப் பூஜை செய்ய அலைமோதுகிறது கூட்டம்.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன், அடர்ந்த வனமாகத் திகழ்ந்ததாம் இந்தப் பகுதி. ஆங்கிலேயர்களின் நாட்குறிப்புகளில் இடம்பெற்ற தகவலின்படி, கிழக்கிந்திய கம்பெனியினர் வியாபாரத்தின் பொருட்டு சென்னையில் குடியேறும்போது, சுயம்புவாக இருந்த இந்த காவல்தெய்வத்தை, `காட்டு முனீஸ்வரர்' என்ற திருநாமம் சூட்டி வழிபட்டு வந்துள்ளனர், இப்பகுதி மக்கள். சில ஆண்டுகளுக்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் சென்னையில் தங்கி படை பலத்தை திடப்படுத்திக்கொள்ள எண்ணியபோது, புதிதாக கோட்டை கொத்தளங்களை நிர்மாணித்தனர்.  எனவே, கோயிலைச்சுற்றி கோட்டை மதில்கள் பளிச்சிட்டன. இறைவனின் பெயரும் மக்களிடையே `கோட்டை முனீஸ்வரர்' என்ற வழங்க ஆரம்பித்தது.
சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தப் பகுதியில், வாகனங்களுக்கு பாடி கட்டும் தொழில் அதிகளவில் நடந்ததாம். ஆகவே ஆலயம் அமைந்திருக்கும் பகுதியை `பாடி கட்டுற ரோடு' என்றே அழைப்பார்களாம். அதையொட்டி இந்த ஸ்வாமியும், `பாடி கட்டுற ரோடு - முனீஸ்வரர்' என அழைக்கப்பட்டார். அப்பெயரே பின்னர் `பாடிகாட் முனீஸ்வரர்' என்றானது எனச் சொல்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

விபத்துகளில் சிக்குபவர்களுக்காக இங்கு வந்து வேண்டிக்கொண்டால், அவர்களின் மரண பயத்தை நீக்கி காத்தருள்வாராம் இந்த முனீஸ்வரர். தவிர, காலை மாலை என இரண்டு வேளைகளிலும் இங்கு நடக்கும் வாகன பூஜைகளில் கலந்துகொண்டு வழிபட்டால், வழித்துணையாக வந்து அருள் செய்வாராம் இந்த ஸ்வாமி.மேலும், காவல் துறை மற்றும் ராணுவத்தில் சேர விரும்புபவர்களும் இங்கு வந்து வேண்டிச்சென்றால் வெற்றி கிட்டும்; இங்கு அருளும் அம்பாள் காட்டேரியை வழிபட்டால் திருமண வரம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் கூறுகின்றனர் பக்தர்கள்.

- ம.மாரிமுத்து
 படம் - அ. சரண்குமார்

மண் மணக்கும் கோயில்கள்... குறை தீர்க்கும் சாமிகள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism