மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமா?

கேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமா?

? எங்கு சென்றாலும் மூன்று பேராகச் செல்லக் கூடாது என்கிறார்களே... ஏன்?

- மு.குமரகுருபரன், திருவாரூர்

!ராமன், லட்சுமணன், சீதை - மூவரும் சேர்ந்து வனவாசம் சென்றனர். ராமன், லட்சுமணன், விஸ்வாமித்திரர் மூவரும் வேள்விக்காக சேர்ந்து சென்றனர். தேவகி, வசுதேவர், கம்சன் ஆகிய மூவரும் தேரில் ஏறி புக்ககம் சென்றனர். படைத்தல், காத்தல், அழித்தல்- இந்த மூன்று செயல்களையும் மும்மூர்த்திகள் சேர்ந்தே செய்கின்றனர். அகர- உகர- மகரங்கள் மூன்றும் சேர்ந்து, பிரணவமாகிறது. கணவன்- மனைவி அவர்களின் கைக் குழந்தை மூவரும் சேர்ந்து பயணம் மேற்கொள்வர். அவர்களுக்கு எந்த விபரீதமும் நிகழாது. இப்படி, மூன்றாக- மூவராகச் சேர்ந்து செயல்படுவதால், நன்மையே விளைகிறது.

ஆக, மனம்தான் எல்லாவற்றுக்கும் காரணம். நல்லதை எண்ணும்போதே மனமானது எதிர் வினையையும் நினைவுக்குக் கொண்டுவந்து விடும். படுவேகமாகப் பேருந்து பயணிப்பதைப் பார்ப்பவனுக்கு, ‘இந்த பஸ் குப்புற கவிழ்ந்துவிடுமோ’ என்ற எண்ணம் தோன்றும். இதுபோலவே மூன்றைப் பற்றிய நினைப்பும்! 

‘மூவராகச் சென்றால் ஏதேனும் விபரீதம் விளையுமோ!’ என்ற எண்ணம் எழுவது இயல்பு. இந்த எண்ணம் தோன்றாமல் இருக்க, மன நெருடலைத் தவிர்ப்பதற்காக வேண்டுமானால் மூன்று பேராகச் செல்வதைத் தவிர்க்கலாம். வேலையில் முழுக் கவனம் இருப்பவனும், கடமையில் ஈடுபட்டவனும் மூன்றைப் பற்றி நினைக்கவோ கவலைப்படவோ மாட்டான். மனம் திடமாக இருந்தால், மூவர் சேர்ந்து போகலாம். மற்றபடி ‘மூவராகச் செல்லக் கூடாது’ என்பதெல்லாம் ஆதாரமற்ற நம்பிக்கை.

கேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமா?

? சிவாலயத்தில், சண்டிகேஸ்வரரை, கைகளைத் தட்டி ஓசை எழுப்பி வணங்குவது தவறா?

- க.வேல்முருகன், நான்குநேரி


!வழக்கத்தை மாற்றவேண்டாம், தொடருங்கள். ஏழுமலையானுக்கு சுப்ரபாதம் பாடி, அவரது உறக்கத்தைக் கலைக்கிறோம். சம்பிரதாய பஜனையில், இறைவனை உறங்கவைத்து, பின்னர் உறக்கத்தைக் கலைப்பது உண்டு.

முற்காலத்தில்... துதி பாடகர்கள் பாடல்கள் பாடி அரசர்களை உறக்கத்திலிருந்து விழித்தெழச் செய்வர். உறக்கத்தைக் கலைப்பது என்பது அவர்களது வேலைகளில் ஒன்று. குறிப்பிட்ட ராகத்தில் ஒரு பாடலைப் பாடி இறைவனை உறங்கவைப்பதும், குறிப்பிட்ட ராகத்தில் பாடி உறக்கத்தைக் கலைப்பதும் பக்தர்களது பணிவிடைகளில் ஒன்று.

தவிர, சண்டிகேஸ்வரருக்கு ஏது உறக்கம்? அவர் தியானத்தில் அல்லவா ஆழ்ந்திருக்கிறார். ‘சண்டிகேஸ்வரரே! தாங்கள் பாக்கியம் செய்திருக் கிறீர்கள். ஈசனை மனத்தில் இருத்தி, தியானத்தில் மூழ்கி, மெய்ம்மறந்திருப்பவர் நீர்!’ என்று அவரைப் போற்றுவதுண்டு (சண்டிகேச மஹாபாக சிவ த்யான பராயண). அவரது கவனத்தை நம்மீது திருப்ப கை தட்டுகிறோம். அதை, அபசாரமாக எடுத்துக்கொள்ளாத மனமும் உண்டு.

‘பயணிகளின் பணிவான கவனத்துக்கு, வண்டி எண்...’ என்ற அறிவிப்பு, ஒருவரது உறக்கத்தைக் கலைப்பதாகக் கூற முடியுமா?

சங்கடத்தின்போது சாமியைக் கூப்பிடுவது பக்தனின் இயல்பு. அவர் உறங்கும் வேளையில் நமக்கு இன்னல் வராது என்று கூற முடியுமா? தவளையைப் பாம்பு விழுங்க முற்படுகிறது. தவளையைக் காப்பாற்ற முற்பட்டால், பாம்பின் உணவைப் பறித்த பாவம் வரும்; முற்படாமல் இருந்தால் காப்பாற்றத் தவறிய பாபம் வரும்!

அதுபோல கைகளைத் தட்டினால் சண்டிகேஸ் வரரது உறக்கம் கலையும். தட்டாமல் இருந்தால் அவரின் கவனம் நம் பக்கம் திரும்பாது. எனவே, நம் முன்னோர் கடைப்பிடித்த ‘கைதட்டலை’ செயல்படுத்தலாம்; தவறில்லை.

கேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமா?

? ஹோமம் - யாகம் இரண்டுக்கும் என்ன வேறுபாடு?

- ஈஸ்வரி சதாசிவம், விருத்தாசலம்


!அக்னி வாயிலாக தேவதைகளுக்குப் பணிவிடை செய்வது ஹோமம். சமித்து, அன்னம், நெய் - இவை போன்ற பொருட்களை, மந்திரம் ஓதி அக்னியில் சேர்ப்பது ஹோமம். தேவர்கள் அக்னி வழியாகப் பெற்றுக்கொள் கிறார்கள்.

தர்மசாஸ்திரம் சொல்லும் சடங்குகளில் ஹோமமும் உண்டு. ஸமிதாதானம், ஒளபாசனம், ஆயுஷ்ய ஹோமம், நவகிரக ஹோமம் போன்றவை ஹோமத்தை மையமாக வைத்து நடைமுறைப்படுத்தப்படுகின்றன. திருமணம் போன்றவற்றில் ஹோமம் ஒரு பகுதியாக இருக்கும். ரிஷிகள் பரிந்துரையில் இவை செயல்படும். வேதம் நேரடியாகச் சொன்னது யாகம். யாகத்தில் ஹோமத்துக்கு முன்னும் பின்னும் பலவித சடங்குகள் இருக்கும். யாகத்தில் ஹோமம் அடங்கும். ஹோமத்தில் யாகம் அடங்காது.

? திருமணமாகி கணவன் வீட்டுக்குச் செல்லும் பெண்கள், புகுந்த வீட்டின் குலதெய்வத்தையே  ஏற்கவேண்டுமா?

- சு. சரஸ்வதி, திருச்செந்தூர்


!சிறு வயதில் பெண் குழந்தைக்குக் காப்பாளன் அவளின் தந்தை. வயது வந்த பிறகு, கணவனே அவளுக்குக் காப்பாளன். முதுமையில், அவளின் பிள்ளையே காப்பாளன் என்கிறார் மனு.

பெண்ணினத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்து பாதுகாக்கும் பொறுப்பை ஆண்  இனத்திடம் சுமத்தியது தர்மசாஸ்திரம். தந்தையால், குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெண்ணின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயலாது. ஆகையால் அவளுக்கு மணமுடித்து, அவளது கணவனிடம் பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைக்கிறார் தந்தை. இப்போது, தந்தையை விட்டு கணவனுடன் சேர்ந்துவிட்டாள் அவள். அவனின் வீடே அவளது வீடு.

திருமணமாகாத நாள்வரை தன் பெயரோடு தந்தையின் பெயரை இணைத்துக்கொள்வது உண்டு. திருமணமான பிறகு அந்த இணைப்பில் கணவன் பெயர் ஒட்டிக்கொண்டுவிடும். தந்தையின் பெயர் விடுபடும். அவர் பெயரை அகற்றிய பிறகு, அவர் வணங்கும் குலதெய்வம் மட்டும் எப்படி ஒட்டிக்கொள்ளும்! ஆகவே, திருமணமான பெண்கள், கணவரின் குல தெய்வத்தையே வணங்க வேண்டும்!

? ‘ராஷ்ட்ர சூக்தம்’ என்றால் என்ன, அதுபற்றி எந்த வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது?

- க. வேணுகோபாலன், சேந்தமங்கலம்


!தேவதைகளின் இயல்புகளைப் போற்றிப் புகழ்வது சூக்தம். தேவதைகளது பெருமைகளை, செயல்பாடுகளை விவரிக்கும் சூக்தங்கள், எல்லா வேதங்களிலும் உண்டு. என்றாலும் ரிக் வேதத்தில் இது, சிறப்பாகவும் தனிப் பகுதியாகவும் விளங்குகிறது.

`ராஷ்ட்ர சூக்தம்' என்பது அரசன், அரசு, அரசுரிமை மற்றும் அதன் மாட்சி ஆகியன பற்றி விளக்குவது. ரிக், யஜூர், சாமம் மற்றும் அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களிலும் ராஷ்ட்ர சூக்தம் உள்ளது.

மறை ஓதுபவர்கள், தங்களது அன்றாட பணிகளை நாட்டுப் பாடலுடன் துவக்குவார்கள். அதில், ‘அரசு ஸ்திரமாக இருக்கவும் அரசன் திறமையோடு விளங்கவும் இந்திரனும் அக்னியும் அருளட்டும். இந்திரன் - வலிமையையும், அக்னி - அரசை இயக்கும் திறனையும் அளிக்கட்டும். இந்திரனும் அக்னியும் இணைந்து இந்த ராஷ்ட்ரத் தைத் தாங்கட்டும் (த்ருவம் த இந்திர ச அக்னி ச ராஷ்ட்ரம் தாரய தாம் த்ருவம்)’ என்று வேண்டுவர்.

‘ஆதிகாலத்தில், மலைகளுக்கு றெக்கைகள் இருந்தனவாம். எனவே, மலைகள் அங்குமிங்கும் பறந்து சென்று மக்களுக்குத் தொல்லைகள் கொடுத்தன. அவற்றின் றெக்கைகளை அழித்த இந்திரன், மலைகளை ஓரிடத்தில் நிலை பெறச் செய்தான்! ஓர் அரசனானவனும் இந்திரனைப் போல் செயல்பட்டு தமது அரசை நிலைநிறுத்த வேண்டும். தன்னைவிட பலம் கொண்ட எதிரிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டும்’ என்ற வேண்டுகோள், அந்த நாட்டுப் பாடலில் ஒலிக்கும்.

நாட்டின் வளமே மக்கள் வளத்துக்கு ஆதாரம். இதை ராஷ்ட்ர சூக்தத்தில் காணலாம்.

கேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமா?

?தர்ப்பையால் ஆன கூர்ச்சம் - பவித்ரம் ஆகியவற்றுக்கு அப்படியென்ன சிறப்பு?

 - என்.முருகன், ஆரணி


!தர்மசாஸ்திரத்தைச் செயல்படுத்தும்போது, கையில் தர்ப்பை (பவித்ரம்) அணிய வேண்டும். ‘பவித்ரம்’ என்றால் தூய்மை! இயல் பாகவே தர்ப்பை தூய்மையானது. ஆகவே, பவித்ரம் என்பதே தர்ப்பையின் பெயராக விளங்குகிறது என்கிறது வேதம்.

ஜபம் மற்றும் தானம் செய்யும்போது தர்ப்ப பாணியாக இருக்க வேண்டும். தாமரை இலையில் தண்ணீர் எப்படி ஒட்டாமல் இருக்கிறதோ, அதே போல் தர்ப்பை அணிந்திருப்பவனிடம் பாவம் ஒட்டாது என்கிறது தர்மசாஸ்திரம் (விப்யதெ நஸபாபேன பத்ம பத்ர மிவாம்பஸா). ஜபம் மற்றும் வேள்வியைச் செய்யவிடாமல் தடுக்கும் கண்ணுக்குப் புலப்படாத அரக்கர்கள், நம் கையில் உள்ள தர்ப்பையைப் பார்த்ததும் விலகி ஓடுவர். முன்னோர் ஆராதனையில்... அரக்கர்களை விரட்ட, விருந்து படைக்கும் இடத்தை தர்ப்பை யால் துடைப்பது உண்டு.

சங்கரனுக்கு சூலம், விஷ்ணுவுக்கு சக்கரம்... இதுபோல், சாஸ்திரம் பரிந்துரைக்கும் கடமைகளில் ஈடுபடுபவனுக்கான ஆயுதம் பவித்ரம்.

பூதம், பிசாசு, ப்ரம்மரஷஸ் ஆகியவை விரலில் தர்ப்பையைப் பார்த்ததும் மிரண்டு ஓடிவிடுமாம்! ஆகவே, தூய்மை வேண்டியும் இடையூறுகளை அகற்றவும் தர்ப்பை அணிய வேண்டும். தர்ப்பை அணியும் விரலை, ‘பவித்ர விரல்’ என்கிறோம்.

பூமியின் ஆகர்ஷண சக்தியைத் தடுக்க தர்ப்பையால் ஆன ஆசனத்தில் அமருவது உண்டு. ஆகாயத்தில் இருக்கும் இடையூறைத் தடுக்க விரலில் தர்ப்பை வேண்டும் (தர்பேசுஆசுன). கடமையைச் செய்வதற்கான பொருட்களைத் தூய்மைப்படுத்தவும் தர்ப்பையைப் பயன் படுத்துவர். அக்னி பரிசுத்தமானது என்றாலும் அதன் தூய்மையை வலுப்படுத்த தர்ப்பை உதவும்.

தேவதைகளின் இருக்கையான கும்பத்தில் கூர்ச்சம் இருக்கும். பித்ருக்களுக்கு அளிக்கும் அர்க்யமும் கூர்ச்சத்துடன் இணைந்திருக்கும். தர்ப்பையுடன் சேரும்போது பொருளின் தூய்மை மேம்படும். மின்சாரம் பாயாத பொருட்களில் தர்ப்பையும் ஒன்று. ஆனால், மின்சாரத்தைவிட பலமடங்கு செயல்திறன் கொண்டது தர்ப்பை.

ஸ்ரீராமன் வீசிய தர்ப்பை, காகாசுரனை ஓட ஓட விரட்டிய கதை நாம் அறிந்ததே! ‘தர்ப்பையில் சிந்திய நெய்யை நக்கியது பாம்பு. அதன் நாவை இரண்டாகப் பிளந்து தண்டனை அளித்தது தர்ப்பை...’ என்கிறது புராணம்.  ‘தர்ப்பை வளர்ந்த இடத்தில் நல்ல நீர் கிடைக்கும்; கிணறு தோண்ட தகுந்த இடமாக அமையும்’ என்கிறார் வராஹ மிஹிரர். மொத்தத்தில் தர்ப்பை இயற்கையின் அன்பளிப்பு! அதன் பெருமையை அறிய தர்மசாஸ்திர நூல்களைப் படியுங்கள்; அசந்துபோவீர்கள்!

- பதில்கள் தொடரும்...

கேள்வி பதில்: சுப காரியங்களுக்கு மூவராகச் செல்லலாமா?

தீபம் ஜோதி நமோஸ்துதே!

நம் இல்லங்களில் தீபமேற்றும் போது கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லி வணங்கினால் சகல சம்பத்துக்களும் உண்டாகும்.

சுபம் கரோதி கல்யாணம்
ஆரோக்யம் தன ஸம்பதாம்
மம புத்தி ப்ரகாசாய
தீபம் ஜோதி நமோஸ்துதே