Published:Updated:

காவிரிக் கரையில்... காஞ்சி மாமுனி ஆசிரமம்!

காவிரிக் கரையில்... காஞ்சி மாமுனி ஆசிரமம்!
பிரீமியம் ஸ்டோரி
காவிரிக் கரையில்... காஞ்சி மாமுனி ஆசிரமம்!

எஸ்.கதிரேசன்

காவிரிக் கரையில்... காஞ்சி மாமுனி ஆசிரமம்!

எஸ்.கதிரேசன்

Published:Updated:
காவிரிக் கரையில்... காஞ்சி மாமுனி ஆசிரமம்!
பிரீமியம் ஸ்டோரி
காவிரிக் கரையில்... காஞ்சி மாமுனி ஆசிரமம்!
காவிரிக் கரையில்... காஞ்சி மாமுனி ஆசிரமம்!

காஞ்சி மஹா பெரியவா அருளால், திருச்சி கொள்ளிடம் வடக்குக் கரையில், நொச்சியம் என்ற ஊரில் அமைதியான சூழலில் அமைந்திருக்கிறது ஸ்ரீமஹா பெரியவா சாந்தி ஆசிரமம். ஆசிரமத்துடன் ஸ்ரீலலிதாம்பிகையும் பரிவார தெய்வங்களுடன் எழுந்தருளி இருக்கிறாள்.

மஹா பெரியவா, ஒரு பக்தையை கருவியாகக் கொண்டு இந்த ஆசிரமத்தையும் ஆலயத்தையும் நிர்மாணித்திருக்கிறார். விட்டல் ராஜலட்சுமி என்ற அந்த பக்தை மஹா பெரியவாளிடம் அளவற்ற அன்பும் பக்தியும் கொண்டவர். அவருக்கு இப்படி ஓர் எண்ணம் ஏற்பட்டது எப்படி என்று கேட்டோம்.

‘‘சுமார் 60 வருடங்களுக்கு முன்பு நடந்தது இது. எனக்கு அப்போது 25 வயது இருக்கும். உலக அனுபவம் மட்டுமில்லை, பொறுமையும் புத்திசாலித் தனமும்கூட எனக்கு இல்லை. அப்போது சென்னை நகரத்துக்கு விஜயம் செய்த மஹா பெரியவாளை தரிசிக்கச் சென்றார் என் தந்தை. என்னையும் வருமாறு அழைத்தார். அவரை தரிசித்து என் மனக்குறைகளை எல்லாம் சொல்லவேண்டும் என்று நினைத்து, நானும் உடன் சென்றேன். ஒரு சிறிய கீற்றுப் பந்தலில் பெரியவா அமர்ந்து கொண்டிருந்தார்கள். நான் பெரியவாளை தரிசனம் பண்ணிவிட்டு, சற்றுத் தொலைவில் இருந்த பந்தல் கம்பத்தைப் பிடித்துக்கொண்டு மணிக்கணக்காக நின்றுகொண்டிருந்தேன். பெரியவாளிடம் எவ்வளவோ பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், அவருக்கு முன்பாக என்னால் எதுவுமே பேசமுடியவில்லை.

நீண்டநேரத்துக்குப் பிறகு யாரோ ஒருவர் பெரியவாளிடம் வந்து ஏதோ சொன்னார். உடனே வேகமாக எழுந்த பெரியவா அதே வேகத் தில் எங்கோ புறப்பட்டுவிட்டார். என் அருகில் வந்தவர், என்னை ஒரு கணம் உற்றுப் பார்த்துவிட்டு, ‘‘நீ அமோகமா  இருப்பே’’ என்று சொல்லிக் கொண்டே வேகமாகச் சென்றுவிட்டார். அந்த ஒருகணப் பார்வையும் அவருடைய கனிவான ஆசியும் என்னைப் பரவசப்படுத்தின.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காவிரிக் கரையில்... காஞ்சி மாமுனி ஆசிரமம்!

பின்னர் எனக்குத் திருமணம் ஆனபிறகும்கூட நானும் என் எஜமானரும் (கணவரை எஜமானர் என்றே குறிப்பிடுகிறார்) நினைத்தபோதெல்லாம் சென்று பெரியவாளை தரிசித்து வந்தோம். பெரியவா மகா சமாதிக்குப் பிறகு அவருக்கு வருடந்தோறும் ஜயந்தி விழா கொண்டாட வேண்டும்  என்று நான் விரும்பினேன். 94-ம் வருஷத்தில் இருந்தே பெரியவா ஜயந்தி விழாவை நடத்தி வந்தோம். முதல் 5 வருஷம் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி சந்நிதியில் நடத்தினோம். அங்கே நடத்துவதில் சில சிரமங்கள் இருந்தன. எனவே, கோயிலுக்கு எதிரிலேயே எங்கள் வீடு இருந்ததால், வாசலில் பந்தல் போட்டு நடத்தி னோம். அங்கேயும் சில சிரமங்கள் இருந்ததால், நமக்கென்று சொந்த இடம் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்.

அப்போது என் கையில் 10 லட்சம் ரூபாய் இருந்தது. அந்தப் பணத்தைக் கொண்டு சின்னதா ஒரு வேதபாடசாலை ஏற்படுத்தவேண்டும் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், என் கணவர் அந்தப் பணத்தை தர்ம ஸ்தாபனத்துக்குக் கொடுத்துவிடலாம் என்று கூறினார். எனக்கு அதில் விருப்பம் இல்லை. அதேநேரம் அந்த பணத் தைக் கொண்டு ஒரு சின்ன இடம்கூட என்னால் வாங்கமுடியவில்லை.

ஒருநாள் பம்பாயில் இருந்து ஒரு பக்தர் எனக்கு போன் செய்து, வேதபாடசாலை தொடங்கி விட்டீர்களா என்று கேட்டார். நான் என்னுடைய நிலைமையை அவரிடம் சொன்னேன். அவர் ஒருவருடைய போன் நெம்பரைக் கொடுத்து பேசச் சொன்னார். நானும் பேசினேன். உடனே அண்ணன், தம்பி என்று இரண்டுபேர் வந்தார்கள். அவர்கள் ஏற்கெனவே எனக்கு மிகவும் பரிச்சய மானவர்கள். தற்போது உள்ள ஆசிரமம் இருக்கும்  இடத்தைக் காண்பித்தார்கள். என்ன ஆச்சர்யம்! ஒரு ஏக்கர் 18 சென்ட். விலை மிக மிகக் குறைவு. பெரிய பால் பண்ணை, நிறைய பசுமாடுகள் இருந்த இடம். நிறைய தென்னை மரங்களும் இருந்தன. இரண்டு பக்கமும் நீர் நிலை. ஒரு பக்கம் உபயகாவிரி. மறுபக்கம் கொள்ளிடம். தெய்விக லட்சணத்துடன் இருப்பது தெரிந்தது. மாட்டுத் தொழுவத்தில் ஸ்ரீபெரியவா தபஸ் பண்ணுகிற மாதிரி நினைவு. எனது எஜமானரும் கூட இருந்தார். அட்வான்ஸ் கொடுத்துவிடலாம் என்றேன். ‘’இந்த வயதில் உனக்கு ஏன் இந்த பைத்தியக்கார யோசனை. விலை கம்மியா கொடுக்கிறாங்கன்னு யானையை வாங்கலாமா? நம்மால ஆகுமா?’’ என்றார். ‘‘இல்லை, இல்லை... இது யானையும் இல்ல, பூனையும் இல்ல. இது பெரியவாளுடையது. எல்லாம் பெரியவா பார்த்துப்பா’’ என்றேன். 

காவிரிக் கரையில்... காஞ்சி மாமுனி ஆசிரமம்!

‘‘உலகம் பூராவும் ஸ்ரீபெரியவாளின் பக்தர்கள் இருக்கிறார்கள். நாம் குத்துவிளக்கு மட்டும்தான் ஏற்றி வைக்கப்போறோம்’’ என்றேன். அட்வான்ஸ் கொடுத்த இரண்டு நாட்களில் ‘நவ சண்டி ஹோமம்’ நடத்தப்பட்டது. அதன் பிறகு  பெரியவா கிருபையால, என்னிடம் இருந்த பணத்துக்குள் எல்லா வேலைகளும் முடிந்துவிட்டன. இங்கே மஹா பெரியவா ஆசிரமத்துடன், ஸ்ரீலலிதா பரமேஸ்வரி ஆலயமும் அமைத்துவிட்டோம். ஆலயத்தில் ஸ்ரீபால கணபதி, ஸ்ரீபால முருகன், ஸ்ரீமஹா பெரியவா, ஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீவேத வியாசர் என்று பிரதிஷ்டையும் செய்துவிட்டோம். இந்த ஆசிரமமும் சரி, ஆலயமும் சரி... மஹா பெரியவா அனுக்கிரகத்தால ஏற்பட்டதுதான்’’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டவர் தொடர்ந்து, ‘‘இன்னும் சின்னச் சின்ன வேலைகள்தான் பாக்கி இருக்கிறது. மஹா பெரியவா அருளால சீக்கிரம் முடிந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’’ என்றார்.

அவர் மேலும் ''’பல வருஷங்களுக்கு முன்பு ‘நீ அமோகமா இருப்பே; உன்னால் சத் காரியமெல்லாம் நடக்கப் போகுது’ன்னு மஹா பெரியவா ஆசீர்வாதம் பண்ண நேரம், எனக்கு எல்லாமே அமோகமா நடந்துகொண்டிருக்கிறது. மஹா பெரியவாளோட பூரண அனுக்கிரஹம் இருந்ததால்தான், அவருடைய பெயரிலேயே ஓர் ஆசிரமமும் கோயிலும் இங்கே அமைந்திருக்கின்றன. அதனால, இங்கே வர்றவா எல்லோருக்கும் மஹா பெரியவா கடாட்சம் நிச்சயம் கிடைக்கும்’’ என்றார்.

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

உங்கள் கவனத்துக்கு

தலம்:
ஸ்ரீமஹா பெரியவா சாந்தி ஆசிரமம்.  நொச்சியம்

அம்பாள்: ஸ்ரீலலிதாம்பிகை

நித்திய பூஜைகள்:
கோ பூஜை, கணபதி ஹோமம், அம்பாளுக்கு 4 கால பூஜைகளுடன் நவாவரண பூஜையும், வேதபாராயணமும் நடந்து வருகின்றன.

எப்படிச் செல்வது?:
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது. குணசீலம், மண்ணச்சநல்லூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் நொச்சியம் ஸ்டாப்பில் நிற்கும். பஸ் நிறுத்தத்துக்கு அருகிலேயே ஸ்ரீலலிதாம்பிகை கோயில் அமைந்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism