Published:Updated:

கிணற்றுக்கு அபிஷேகம்... சித்தர் நிகழ்த்தும் அற்புதம்!

கிணற்றுக்கு அபிஷேகம்...  சித்தர் நிகழ்த்தும் அற்புதம்!
பிரீமியம் ஸ்டோரி
கிணற்றுக்கு அபிஷேகம்... சித்தர் நிகழ்த்தும் அற்புதம்!

க.பூபாலன்

கிணற்றுக்கு அபிஷேகம்... சித்தர் நிகழ்த்தும் அற்புதம்!

க.பூபாலன்

Published:Updated:
கிணற்றுக்கு அபிஷேகம்...  சித்தர் நிகழ்த்தும் அற்புதம்!
பிரீமியம் ஸ்டோரி
கிணற்றுக்கு அபிஷேகம்... சித்தர் நிகழ்த்தும் அற்புதம்!

புத்திரப் பாக்கியம் இல்லாதவர்கள், தமது சந்நிதிக்கு வந்து மனதார தன்னை வேண்டிக் கொண்டால், அவர்களுக்கு புத்திரப் பாக்கியம் தந்து அருள்பாலிக்கும் தெய்வமாக அருள்கிறார் அழகுமுத்தையனார். கடலூர் மாவட்டம், தென்னம்பாக்கத்தில் அமைந்திருக்கும்  இவரது திருக்கோயிலுக்கு, ‘சிலைக் கோயில்’ என்றும் ஒரு சிறப்புப் பெயருண்டு.  அழகர் சித்தரின் அருள் சாந்நித்தியம் நிறைந்த இந்த ஊருக்கு, தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் கூட்டம்கூட்டமாக வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். இந்தச் சிலைக்கோயிலின் மகிமை குறித்து சிலிர்ப்புடன் விவரிக்கிறார், கோயிலின் பூசாரி குமார்:

“பழங்காலத்தில் இப்பகுதியில் இலுப்பை மரங்களும், ஆலமரங்களும் நிறைந்து அடர்ந்திருந்தன.     ஆலமரம் ஒன்றின் அடியில் சிறிய கோயில்  கட்டி, அதில் உள்ளே கல் ஒன்று நட்டு அதை இஷ்ட தெய்வமாக வழிபட்டு வந்தனர் கிராம மக்கள். ஒரு நாள், வழிப்போக்காக வந்த சித்தர் ஒருவர் இந்த ஆலமரத்தின் பொந்தில் சிறிது நேரம் தங்கினார். அவருக்கு அந்த இடம் பிடித்துப் போனதால், அங்கேயே நிரந்தரமாக தங்கிவிட்டார். பின்னர், ஒவ்வொரு திங்கள்கிழமையும் விரதமிருந்து அந்தக் கோயிலுக்குப் பூஜை செய்துவந்த அந்தச் சித்தர், கோயிலுக்கு வரும் பக்தர்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்த்துவைத்தாராம். காலப்போக்கில், அப்பகுதி மக்கள் அழகர் சித்தர் என்றே அவரை அழைக்கத்தொடங்கினர்.

கிணற்றுக்கு அபிஷேகம்...  சித்தர் நிகழ்த்தும் அற்புதம்!
கிணற்றுக்கு அபிஷேகம்...  சித்தர் நிகழ்த்தும் அற்புதம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தினமும் கிராமத்துக்குள் சென்று மக்களிடம் யாசகம் எடுப்பது சித்தரின் வழக்கம். அந்த யாசகத்தில் கிடைத்த அரிசியைச் சேர்த்துவைத்து, ஒவ்வொரு திங்கள்கிழமையும் பொங்கி கோயிலில் படையலிட்டு, பக்தர்களுக்குப் பிரசாதமாகக் கொடுப்பார். அந்தப் பிரசாதத்தைச் சாப்பிட்ட மக்கள் நோய்நொடிகள் நீங்கி நலமுடன் வாழத் தொடங்கினர்; ஏவல், பில்லி சூனியம்  முதலான தீவினைகளால் பாதிப்படைந்தவர்களும் நலம் பெற்றனர். இதனால் அந்தப்பகுதி மக்கள் மத்தியில் சித்தருக்கு வரவேற்பு கூடியது.

சித்தர் பெருமான் அவதரித்தது, சித்திரை மாதம் முதல் திங்கள்கிழமை. ஒவ்வொரு சித்திரை மாதம்  திங்கள்கிழமையும் ஊர்மக்களை அழைத்து உபதேசம் செய்வார். நிறைவாக ஒரு திங்கள் அன்று, ‘நான் உங்கள் நலனுக்காக ஆண்டவனிடம் பிரார்த்திக்கப்போகிறேன்’ என்று கோயில் கிணற்றில் இறங்கினார். வெகுநேரமாகியும் அவர் கிணற்றைவிட்டு வெளியில் வரவில்லை. பதறிப்போன கிராம மக்களும், பக்தர்களும் கிணற்றுக்குள் இறங்கி தேடினார்கள். சித்தர் கிடைக்கவில்லை. பிறகுதான் தெரிந்தது, பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரில் தன் உடலை மறைத்துக்கொண்டு சித்தர் ஜோதியாகிவிட்டார்  என்ற உண்மை. அப்படி சித்தர் ஜலசமாதியான கிணற்றையே மக்கள் பால், பன்னீர் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்து தரிசிக் கின்றனர். பிற்காலத்தில், அபிஷேகிக்கும் திரவியங்கள் கிணற்றுக்குள் செல்லும்விதமாக மூன்று துளைகளோடு மேடை அமைத்தனர்.அந்தக் கிணறே மூலஸ்தனமாக திகழ்கிறது. அதன்பின்னரே அந்தக்கோயில் ‘ஸ்ரீஅழகு முத்தையனார் கோயில்’ என்று பெயர் பெற்றது” என தல வரலாறு சொல்கிறார் குமார்.

சரி! சிலைக்கோயில் என்ற பெயர் வந்தது எப்படியாம்?

கிணற்றுக்கு அபிஷேகம்...  சித்தர் நிகழ்த்தும் அற்புதம்!

“இந்தக் கோயிலின் சிறப்பே நேர்த்திக் கடனுக்காக பொம்மை செய்து வைப்பதுதான். இந்த அழகு முத்தையனார் குழந்தை வரம் அருள்பவராக விளங்குகிறார். குழந்தைப்பேறு இல்லாத தம்பதியர்கள் இங்கு வந்து வேண்டிக் கொண்டு சித்தர் ஆலயத்தின் பின்புறமுள்ள வேப்ப மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக் கொண்டால், அடுத்த வருடமே குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தை பிறந்தவுடன், ஆண் குழந்தையாக இருந்தால் ஆண் பொம்மை, பெண் குழந்தையாக இருந்தால் பெண் பொம்மை செய்துவைப்பார்கள். அதுமட்டுமில்லாமல், தங்கள் பிள்ளைகள் படித்து வக்கீல், இன்ஜினீயர், ஆசிரியர், போலீஸாக வேலை கிடைக்க வேண்டிக் கொண்டு பிரார்த்தனை நிறைவேறியவுடன் அவர்கள் போலவே அதே உடையில் பொம்மைகள் செய்துவைத்து நேர்த்திக்கடனைச் செலுத்து வார்கள். அதேபோல் வீடு, தொழில் சிறக்கவும் பொம்மைகள் செய்து வைக்கிறார்கள். இப்படி வைக்கப்பட்ட பொம்மைகள் தற்போது இரண்டு லட்சத்தை தாண்டிவிட்டன! அதுமட்டுமில்லாமல், தங்கள் குறைகளை காகிதத்தில் எழுதி அழகு முத்தையனார் கழுத்தில் கட்டினால் அது மூன்று மாதத்தில் நிவர்த்தியாகி விடும் என்பது நம்பிக்கை'' எனச் சிலிர்ப்போடு பகிர்ந்துகொண்டார் குமார்.

உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக வந்து அருள்பெற்றுச் செல்லும் இந்தக் கோயிலின் மேலும் பலச் சிறப்புகள் குறித்தும் விவரித்தார் பூசாரி குமார்: ``சித்தர் பெருமான்தான் மூலவராக அருள்பாலிக்கிறார். ஆலமரம் ஸ்தல விருட்சமாக உள்ளது. அழகு முத்தையனாரின் நேர் எதிரில் (கிழக்கு) தென்னந்தோப்பில் துர்க்கை அம்மன் சுயம்புவாகத் தோன்றி அருள்பாலிக் கிறாள்.

அழகர் சித்தர் ஜலசமாதியான கிணற்று மேடைக்கு தினந்தோறும் காலையில் ‘ஒரு கால பூஜை’ நடைபெறும். மேற்கூரை துவாரத்தின் வழியாக சூரிய ஒளி ஜலசமாதி மீது விழுவதும், பூஜையின் போது தெளிக்கப்படும் விபூதி மறுநாள் பூஜை வரை ஈரப்பதத்துடன் இருப்பதும் இக்கோயிலின் சிறப்புகள்.  அழகு  முத்தையனாருக்கு  உயிர்ப்பலிகள் எதுவும் கிடையாது. திங்கள் கிழமைதான் விசேஷமான நாள். சித்திரை திங்களில் திருவிழா எடுக்கப்படுகிறது. தற்போது இக்கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ளது” என்றார்.

கிணற்றுக்கு அபிஷேகம்...  சித்தர் நிகழ்த்தும் அற்புதம்!
கிணற்றுக்கு அபிஷேகம்...  சித்தர் நிகழ்த்தும் அற்புதம்!

கோயிலில் பொம்மை செய்துவைத்து நேர்த்திக் கடன் செலுத்திக்கொண்டிருந்த ரங்க நாதன் - ஜோதிலட்சுமி தம்பதியிடம் பேசினோம்: “எங்க ளுக்கு கல்யாணமாகி மூன்று வருடத்துக்கு மேல் குழந்தையே இல்லை. மருந்து, மாத்திரை என்று மருத்துவமனைகளில் ஏகப்பட்ட செலவு செய்து பார்த்துவிட்டோம். ஆனால், குழந்தை பாக்கியம் என்பது கேள்விகுறியாகவே இருந்தது.

இந்தக் கோயிலில் வந்து வேண்டிக் கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று சொன்னார்கள். அதேபோல் இந்தக் கோயிலுக்கு வந்து நாங்களும் வேண்டிக்கிட்டு வேப்பமரத்தில் தொட்டில் கட்டிவிட்டு போனோம். இப்போ, ஒரு பெண், ஒரு ஆண் என இரண்டு குழந்தைகளைக்  கொடுத்திருக்கிறார் இந்த அழகு முத்தையனார். அதற்காகத்தான் நேர்த்திக்கடனா பொம்மை செய்து வைக்கிறோம். உண்மையிலேயே சக்தி வாய்ந்த கோயில்தான்” என்றார்கள், அகமும் முகமும் மலர!

படங்கள்: எஸ்.தேவராஜன்

உங்கள் கவனத்துக்கு...

மூலவர்:
அழகு முத்தையனார்

தலச் சிறப்பு: கிணற்று மேடையே மூலஸ்தான மாகத் திகழும் ஆலயம் இது.

பிரார்த்தனைச் சிறப்பு: சித்தர் ஆலயத்தின் பின்புறமுள்ள வேப்ப மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொண்டால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும், பிள்ளைகளின் படிப்புக்காகவும், வேலைக்காகவும் இங்கு வந்து பிரார்த்திக்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் பொம்மைகள் செய்துவைத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

திறந்திருக்கும் நேரம் : காலை 6 முதல் இரவு 8 மணி வரை.

எப்படிச் செல்வது?:
கடலூர் பேருந்து நிலையத் திலிருந்து கன்னியக்கோவில், பாகூர் வழியாகச் செல்லலாம். புதுச்சேரியிலிருந்து தவளக்குப்பம் மார்க்கமாகச் சென்றால், ஏம்பலம் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து தெற்கே 1 கி.மீ. தொலைவில் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism