Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

வி.ராம்ஜி

ஆலயம் தேடுவோம்!

வி.ராம்ஜி

Published:Updated:
ஆலயம் தேடுவோம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டதடவெனப் பாய்ந்தோடி வந்த காவிரி, திடீரென்று ஓடுவதை நிறுத்தியது. சட்டென்று பூமியைப் பிளந்துகொண்டு, பூமிக்குள் இறங்கியது. எங்கோ பிறந்து, எங்கெல்லாமோ அலைந்து, இந்த இடத்துக்கு வந்த தருணத்தில், அடுத்து எங்கும் தன்னை வியாபிப்பதை விட்டுவிட்டு, இப்படிச் செய்வது தகாதது என நினைத்து ஊர்மக்கள் அலறினார்கள்.

'ஓடிக்கொண்டே இருப்பதுதானே நதியின் இயல்பு! இப்படி, பூமிக்குள் கிணற்று நீர் போல் தன்னைச் சுருக்கிக்கொள்வது புண்ணிய நதியான காவிரிக்கு அழகல்லவே..!’ என அந்த நகரத்து மக்கள் கூடிக்கூடிப் பேசி, தங்களின் கவலைகளைப் பரிமாறிக் கொண்டார்கள்.

அந்த ஊரின் இன்னொரு பகுதியில், சிவனாரை நினைத்தபடி தவத்தில் ஆழ்ந்திருந்தார் ஆத்ரேய மகரிஷி. உலக உயிர்கள் யாவும் செழிப்பதற் காகவும் சிறப்பதற்காகவும் கடும் தவத்தில் மூழ்கியிருந்தவருக்கு, ஊர்மக்களின் கதறல் சத்தம் கேட்டது. இன்னும் சிவபாதங்களைக் கெட்டி யாகப் பிடித்துக் கொண்டார். 'இந்த மக்கள் உன் மக்கள் அல்லவா? உன் பிள்ளைகள்தானே? அவர்களின் கதறல் கேட்கவில்லையா? காவிரி நதியானது தன் இயல்பை மீறி, இப்படி பூமியின் அடிப்பகுதிக்குள் சென்று சுருங்கிக் கொள்வது சரியல்லவே! என் உயிரையே தருகிறேன். இந்த ஊரையும் ஊர்மக்களையும் நீதான் காத்தருள வேண்டும். அடுத்தடுத்த ஊர்களுக்கும், காவிரி பாய்ந்தோடிச் சென்றால்தான், எல்லா ஊர்களும் வளம் பெறும்; தானியங்களின் உற்பத்தி அதிகரிக்கும். மக்களின் பாவங்களைத் தீர்க்கிற புண்ணிய நதிகளில் ஒன்றான காவிரி ஆறு, இப்படி எவருக்கும் பயனின்றி, பூமிக்குள் புதைந்துகொண்டால், அந்தப் பாவத்தை எங்கே தொலைப்பது? எப்படிக் கழுவுவது? இதோ... என் உயிரைத் தருகிறேன், எடுத்துக் கொள்!’ என்று சிவபெருமானிடம் சொல்லிவிட்டு, சட்டென்று எழுந்தார்.

காவிரி புதையுண்ட இடம், பிளந்து கிடந்தது. 'நமசிவாய’ எனும் திருநாமத்தைச் சொல்லிக்கொண்டே, கரம் கூப்பிய நிலையில், கண்கள் மூடி, அந்தப் பிளவுக்குள் விழுந்தார். கூடி நின்ற ஊர் இதைக் கண்டு திகைத்தது. 'முனிவர் பெருமானே’ என்று அனைவரும் கதறினார்கள்; 'ஆத்ரேயா...’ என்று உறவுக்காரர்களும் நண்பர்களும் புலம்பினார்கள்.

அதேநேரம், பிளவுபட்ட அந்த இடம், இன்னும் இன்னும் அதிகமாகப் பிளந்தது. சட்டென்று பூமிக்குள் இருந்து, ஒரு சுழற்காற்று போல், வலமாகச் சுழன்று, பிறகு... பத்து ஆள் உயரத்துக்கு மேலெழும்பி, பூமியில் பொலபொலவெனப் பாய்ந்து, தன் இயல்புப்படி ஓடியது, காவிரி. பிறகு, ஆத்ரேய மகரிஷிக்கு சிவனார் திருக்காட்சி தந்தருளினார் என்கிறது திருவலஞ்சுழி ஸ்தல புராணம் (பூம்புகார் அருகில் உள்ள மேலப்பெரும்பள்ளம் மற்றும் கீழப்பெரும்பள்ளம் தலத்துக்கும் இந்தப் புராணத்தை தொடர்புபடுத்திச் சொல்வர்).

ஆலயம் தேடுவோம்!

கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது திருவலஞ்சுழி. அதேபோல், கும்பகோணத்துக்கு அருகில் உள்ள இன்னொரு ஊர், மேலக்காவிரி. மேற்குப் பார்த்தபடி அல்லது மேற்குப் பகுதியில் ஓடினால்தானே, காவிரிக்கு மேலக்காவிரி எனும் பெயர் சூட்டவேண்டும்? ஆனால், கும்பகோணத்தின் வடக்குப் பகுதியில், மேலெழும்பியபடி காவிரி பாய்ந்தோடிய இடமாதலால், இது மேலக்காவிரி என வழங்கலாயிற்று.

இத்தகு பெருமைமிகுந்த இடத்தில், பிற்காலத்தில், மேலக்காவிரிக்கு அருகில் அழகிய தெருக்கள் அமைக்கப்பட்டன. அவற்றின் ஒரு தெருவில், அந்தணர்கள் குடியமர்த்தப்பட்டனர். அது, சர்வமான்ய அக்ரஹாரம் என அழைக்கப்பட்டது. எந்நேரமும் சலசலத்து ஓடும் காவிரியுடன் அந்தணர்களின் வேத கோஷங்களும் கலக்கவேண்டும்; புண்ணிய நதிக்கு இன்னும் சாந்நித்தியம் பெருக வேண்டும் எனும் நோக்கில், கரைக்கும் அக்ரஹாரத்துக்கும் நடுவே, அழகிய கோயில் கட்டப்பட்டது. இந்தத் தலத்து இறைவனின் திருநாமம்- ஸ்ரீகாசிவிஸ்வநாதர். இறைவி- ஸ்ரீகாசி விசாலாட்சி.

ஸ்ரீகாசி விசாலாட்சியும் ஸ்ரீகாசி விஸ்வநாதரும் குடிகொண்டிருக்கும் அழகிய கோயில்; அருகில் காவிரி நதி. இது காசிக்கு நிகரான ஆலயம்; கங்கைக்கு இணையான புண்ணிய நதி எனும் நோக்கில் அமைந்த அற்புதத் திருவிடம் இது!

கும்பகோணம் மட்டுமின்றி சோழ தேசத்தின் பல ஊர்களில் இருந்தும் இங்கு வந்து, காவிரியில் நீராடிவிட்டு, காசிவிஸ்வநாதரை தரிசித்துச் சென்றனர். இந்த ஆலயத்தை அறிந்த ஆத்ரேய கோத்திரத்தைச் சேர்ந்த அன்பர்கள், உலகின் பல மூலைகளில் இருந்தெல்லாம், மேலக்காவிரி தலத் துக்கு வந்து வழிபடுகின்றனர்.

அருகில் கொட்டையூர் எனும் தலம் உள்ளது. இந்த இடத்தில்தான் ஆத்ரேய மகரிஷி தவம் செய்தார் என்கிறது புராணம். இங்கேயுள்ள ஸ்ரீகோடீஸ்வரர் கோயி லில், ஆத்ரேய மகரிஷிக்கு தனிச்சந்நிதியே உள்ளது! எனவே இங்கு சென்று அவரையும் தரிசித்துச் செல்வார்களாம், அன்பர்கள்!

பிறகு, கால வேகத்திலும் கடும் வெள்ளத்திலும் சிதிலமுற்றுப் போன காசிவிஸ்வநாதர் ஆலயத்தை, கோவிந்த தீட்சிதர் திருப்பணிகள் செய்து, புனரமைப்பு செய்தார் என்கின்றன கல்வெட்டுகள். கும்பகோணம் மகாமகக் குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சின்னஞ்சிறு கோயில்கள் என, பல திருப்பணிகளைச் செய்த கோவிந்த தீட்சிதரின் கருணைக் கடாட்சம் நிரம்பிய திருத்தலம் இது எனப் போற்றுகின்றனர், கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டத்து அன்பர்கள்.

ஆலயம் தேடுவோம்!

என்ன சொல்லி என்ன... இன்றைக்கு நித்திய வழிபாடுகளும் பூஜைகளும் இல்லாமல், சிதிலம் அடைந்து காட்சி தருகிறது ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயில். ஆலய வாசல், அடுத்து தீர்த்த மண்டபம், அதையடுத்து படித்துறை... அருகில் காவிரி என ரம்மியமாகக் காட்சி தந்த ஆலயம், ஆத்ரேய மகரிஷியின் தியாகத்தால் உருவான திருக்கோயில், இப்படியா சிதைந்தும் சிதிலமுற்றும் இருப்பது?! கோயிலின் ஒவ்வொரு அங்குலத்தையும் பார்க்கப் பார்க்கப் பதைபதைத் தோம்; நொறுங்கிப் போனோம்.

''ஆத்ரேய கோத்திரக்காரர்கள் இங்கு வந்து வழிபட்டால், வம்சம் தழைக்கும்; வாழ் வாங்கு வாழ்வார்கள் என்பது ஐதீகம். இங்கு ஸ்நானம் செய்து, இறைவனை வழிபட, காசி புண்ணியமும் கங்கையில் நீராடிய பலனும் கிடைக்கும் என்பார்கள். கும்பகோணத்தின் வடக்கில், மேலக்காவிரி எனும் பெயரில் ஓடுகிற இந்த இடத்தில், படித்துறைக்கு அருகில், காவிரித் தாய்க்கு சின்னதாக ஒரு சிலை வைக்கவேண்டும்; ஸ்ரீகாசிவிஸ்வநாதரும் ஸ்ரீகாசி விசாலாட்சியும் குடிகொண்டிருக்கும் கோயிலைப் புனரமைத்து, இங்கு நித்தியப்படி பூஜைகள் தங்கு தடையின்றி நடந்தேற வழிவகைகள் செய்யவேண்டும் எனப் பெருமுயற்சிகள் செய்து வருகிறோம்'' என்கின்றனர் ஜோதிமலை இறைப்பணி திருக் கூட்ட அமைப்பினர்.

காவிரிக் கரையில் கருணை ததும்ப அருளும் ஸ்ரீகாசிவிஸ்வநாதரின் திருக்கோயில், பழையபடி களையழகு ததும்பக் காட்சி தர வேண்டும். அன்பர்களும் சிவனடியார்களும், குறிப்பாக ஆத்ரேய கோத்திர அன்பர்களும் மனசு வைத்தால்,

எதுவும் சாத்தியம்! என்ன சரிதானே?!

  படங்கள்: இ.ராஜவிபீஷிகா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism