Published:Updated:

சித்திர ராமாயணம்

சித்திர ராமாயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
சித்திர ராமாயணம்

பி.ஸ்ரீ.

சித்திர ராமாயணம்

பரதன் செய்தி

ரதனைத் தழுவிய வண்ணம் அந்த அழகிய கண்களை - ராமன் கண்களைப் போல் மலர்ச்சி பெற்றுத் தன்னை நோக்கிய அக்கண்களை - நோக்குகிறான் வேடன்.

அந்த வலிமையும் அழகும் பொருந்திய தோள்களை ஆசையோடு பார்த்து, ‘‘நீ வந்த காரியம் என்ன?” என்று கேட்கிறான். குகன் தன்னுடைய கேள்விக்கு இப்படியொரு விடை கிடைக்குமென்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

“தந்தை தவறு செய்துவிட்டார். அதை நீக்கிக் கொள்ளாமலே போய்விட்டார். அந்தக் குறையை - அந்த வழுவைத் துடைத்துவிட வேண்டும். அதற்காக ராமனை அழைத்துக் கொண்டுபோக வந்தேன்; அழைத்துக் கொண்டு போய் முடிசூட்டப் போகிறேன்” என்ற பரதனின் விடை, எவ்வளவோ அதிசயத்தையும் ஆனந்தத்தையும் விளைவித்ததோடு, ‘மன்னனைக் கொணர்வான் வந்தேன்’ என்ற அந்த வசனம் அப்படியே உருக்கிவிடுகிறது குகன் உள்ளத்தை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பரதன் பதில் சொன்னானோ இல்லையோ, குகன் திடீரென்று பூமியில் விழுந்துவிட்டான். எதற்காக?

“மன்னனைக் கொணர்வான் வந்தேன்” என்று சொன்னவனுடைய கால்களைப் பிடித்துக் கட்டிக்கொள்வதற்காகத்தான்! “இவன் சாதாரண மனிதப் பிறவி அல்லன், தெய்வ சமானன்!” என்று பட்டது அந்தக் கள்ளங்கபடற்ற உள்ளத்திலே.

தங்கமும் உரைகல்லும்

ராமனை ராஜ்யத்திலிருந்து அநியாயமாகத் துரத்துவதற்கு உண்மையான காரணம் பரதன்தான் என்றே எண்ணிக் கொண்டிருந்தான் குகன். லட்சுமணன் சொன்ன வரலாற்றைக் கேட்டுக் குகன் செய்து கொண்ட ஊகம் அது. ராமனுடைய இந்த இரு சகோதரர்களும் ராம பாசத்தால், ராம பக்தியால் பரதனைத் தவறாக மதித்து விட்டார்கள்!

நெருங்கி உறவாடிப் பழகிய ரத்த - பாசத்துக்கே அந்தக் குணாதிசயம் புரிந்துவிடவில்லை. இந்த உரைகல்லுக்கு அந்தத் தங்கம் இப்போதுதானே வந்து சேர்ந்திருக்கிறது!

எதிரே வந்து முக முகமாய்ச் சந்தித்ததும், வணங்க வேண்டுமென்று உள்ளத்தில் பட்டதும், அப்படியே காலில் விழுந்து வணங்கினான் குகன். பரதனும் தன் காலில் விழுந்ததும்,  சக்கரவர்த்தியாகி விட்டதாகவே தான் நம்பிய அவனது பெரும் பணிவு உள்ளத்தை உருக்கிவிட்டது. நீண்ட காலம் பிரிந்து போய் மீண்டு வந்த அருமை மகனைக் கண்ணுற்ற தந்தைபோல் தழுவி உச்சி மோந்து முகம் பார்த்துப் பேருவகை அடைந்தான். அந்நிலையிலும் ‘இந்தப் பிள்ளை, பாவம்! ராஜ்யத் திலேயே சுகமாய் இருந்துவிடாமல், காட்டிலே அண்ணனைப் பார்த்துப் போகலாம், அன்பு தெரிவிக்கலாம், அனுதாபம் தெரிவிக்கலாம்’ என்று வந்திருப்பதாகவே எண்ணினான். ஆனால் பரதன் சொன்ன பதில் பெருந் திகைப்பை விளைவித்தது. ‘‘தந்தை முந்தையோர் முறை யினின்றும் வழுவினன், அதனை நீக்க மன்னனைக் கொணர்வான் வந்தேன்!” என்று பரதன் வந்த செய்தி தெரிவித்ததும், திகைப்பும் வியப்பும் மகிழ்ச்சியும் குகனை அப்படியே பரதன் காலில் விழச் செய்துவிட்டன.

சித்திர ராமாயணம்

ஆயிரம் ராமருக்கும் மேலானவன்!

“இப்படியும் ஒரு பிறவி உண்டா? மனிதன்தானே, தெய்வப் பிறவி இல்லையே!” என்ற உணர்ச்சிவேகத்தில் வார்த்தை புறப்படுகிறது. மெய்ம் மறந்த நிலையிலே:

தாயுரை கொண்டு, தாதை
உதவிய தரணிதன்னைத்,
  தீவினை என்ன நீத்துச்,
சிந்தனை முகத்தில் தேக்கிப்,
போயினை! என்ற போழ்து
புகழினோய்! தன்மை கண்டால்,
ஆயிரம் இராமர் நின்கேழ்
ஆவரோ, தெரியின், அம்மா?


`தாயாகிய கைகேயி கேட்டுக்கொண்டபடி, அவளுக்கு வாக்களித்த ராஜ்யத்தைத் தசரதர் கொடுத்ததில்தான் என்ன தவறு இருக்க முடியும்? அது தவறானாலும், இந்தப் பரதன் எப்படி அதற்குப் பொறுப்பாளி? தாயுரைக் கொண்டு தந்தை கொடுத்த ராஜ்யத்தை ஆளாமல், இந்தப் பிள்ளை இப்படி வந்துவிட்டதே! தீவினையைத் தொலைத்துத் தலைமுழுகுவது போல், கிடைத்த கிரீடத்தைத் தள்ளித் தொலைத்துவிட்டு, இவ்வளவு சிந்தனையையும் முகத்திலே, இப்படித் தேக்கிக்கொண்டு வந்துவிட்டாயே, அப்பா! இந்த உன் தன்மையைப் பார்த்தால், ஆலோசித்துப் பார்த்தால், நான் என்னதான் சொல்ல முடியும்?' என்றெல்லாம் சிந்தனை அலைகளும், உணர்ச்சிச் சுழிகளும் ஆகிவிட்டது குகனுள்ளம்.

‘எப்படியும் ராமன் தம்பிதானே, பிழை செய்வானா?' என்ற நிலை போய், ‘அந்த ராமன் தான் இந்தத் தம்பிக்குச் சமானமா?' என்று தோன்றிவிட்டது. அப்படிச் சொன்னாலும் போதாது என்று அலைபடுகிறது உள்ளம். உடனே ஓர் உணர்ச்சிப் பேரலை மீது ஒரு தூய வெண்மைக் கருத்துச் சிகரம் வெளிப்படுகிறது:

`ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ, தெரியின்? அம்மா!'

‘நமது தமையன்’

த்தகைய வியப்பிலே தன்னை முழுக்க இழந்து நின்ற குகனை நோக்கிப் பரதன் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறான். ‘இந்தக் காட்டிலே ராமன் எங்கே தங்கியிருக்கக் கூடும்? அதற்கு வசதி எங்கே? கட்டிலும் மெத்தையும் எப்படிக் கிடைத்திருக்கும்? இல்லாவிட்டால் எப்படித் தூங்கியிருப்பான்?’ என்ற கவலை தோன்றிவிட்டது உள்ளத்திலே. ஆனால் ‘தமையன் இரவில் எங்கே தங்கினான்?’ என்று கேட்க ஆரம்பித்தவன் குகனுடைய உள்ளத்தையும் தொட்டுப் பேசுவது போல் ‘`நம் தமையன் இரவில் எங்கே தங்கினான்?’' என்று கேட்டுவிடுகிறான்.

ராமன் குகனைச் சகோதரனாக அங்கீகரித்துக் கொண்டான். சீதையை வேடனுக்குக் கொழுந்தி யாகக் காட்டி, அருகேயிருந்த லட்சுமணத் தம்பியையும் வேடச் சகோதரனாக்கிவிட்டான். அது மட்டுமா? ‘‘அதோ அயோத்தியில் இருக் கிறான் உன்னுடைய வேறொரு தம்பி'’ என்று பரதனையும் ஏற்கெனவே தம்பியாக்கிவிட்டான். அந்த விவரமெல்லாம் பரதனுக்குத் தெரியாது. எனினும், சுமந்திரன் குகனை `ராமனுக்கு உயிர்த் துணைவன்’ என்று சுட்டிக்காட்டியதும், அந்த உயிரைத் துணைவன் அதிசயமாக அன்பு காட்டி யதும் பரதனுடைய உணர்வை உருக்கி உள்ளத்தை வசீகரித்துவிட்டன; இந்நிலையில் ராமன் அனுஷ்டித்த சகோதர தர்மத்தைப் பரதனுடைய மேதையும் உறுதிப்படுத்திவிடுகிறது.

‘நம் தமையன் இரவில் எங்கே தங்கினான்’ என்று ஒரு தம்பி வேறொரு தம்பியைக் கேட்பது போல் பரதன் கேட்டதும், குகன் ‘இதோ காட்டு கிறேன், வா’ என்று உடனே புறப்படுகிறான். குகன் நடையும் பரதன் ஓட்டமுமாய்ப் போகிறார்கள்.

என்ன மெத்தை, என்ன தலையணை!

ப்படி ஓடும் பரதன், தானே கண்டுபிடித்து விட்டானாம் ராமன் பள்ளி கொண்டிருந்த மெத்தையையும் தலையணைகளையும். எங்கே? எப்படி? நாமும் பரதனோடு ஓடிப் பார்க்கலாம்:

கார்எனக் கடிது சென்றான் கல்லிடைப் படுத்த புல்லில்
வார்சிலைத் தடக்கை வள்ளல் வைகிய பள்ளி கண்டான்
பார்மிசைப் பதைத்து வீழ்ந்தான், பருவரல்
                                 - பரவை புக்கான்,


வார்மணிப் புனலால் மண்ணை மண்ணுநீர்
ஆட்டும் கண்ணான்.


இரண்டு கற்களுக்கு இடையே பரப்பியிருந்த புல்லைக் கண்டதும் கவனித்தான். ஆள் படுத்திருந்த அடையாளம் தெரிந்ததும், ‘அண்ணன் படுத்த மெத்தை அது, தலையணைகள் அவை!’ என்று தெரிந்துவிட்டது.
கோதண்டபாணியான வள்ளல் படுத்திருந்த அந்தப் ‘புல்-மெத்தை’யைக் கண்டதும், பதைத்துக் கீழே விழுந்துவிட்டான் பரதன். அந்த நிலத்தின்மீதுதான் விழுந்தான்; எனினும் துன்பக் கடலிலேயே வீழ்ந்து மூழ்கிப் போனான் என்கிறான் கவிஞன்.

(28.9.47, 5.10.47 மற்றும் 12.10.47 ஆனந்த விகடன் இதழ்களில் இருந்து)

சித்திர ராமாயணம்

‘கோவிந்தனைத் தரிசிக்க யாசகியாகவே வருவேன்!’

அடியாா்கள் குழு ஒன்று பூாி-ஸ்ரீஜகந்நாதரைத் தாிசிக்க வந்தது. அக்குழுவில், குருவின் மனைவியும் தோழி ஒருத்தியுடன் இருந்தாா்.

அவா்கள் பலராமன் எனும் செல்வந்தாின் விடுதியில் தங்கியிருந்தாா்கள். பலராமனின் சகோதரா் அப்பகுதியில் மிகுந்த செல்வாக்கு உடையவா். அதன் காரணமாக, பூசாாிகளில் முக்கியஸ்தரான கோவிந்தசிங்காாி என்பவா், குருவின் மனைவியான அந்தப் பெண்மணியிடம் வந்து, ‘‘அம்மா! பல்லக்கு ஒன்றில் உங்களை அமரவைத்து, ஆலயத்துக்கு அழைத்துச் செல்கிறேன்” என வேண்டினாா். ஆனால் பெண்மணியோ, “ஐயா! கோவிந்தனைத் தாிசிக்க, நான் ஒரு யாசகியைப் போலவே வருவேன். தங்கள் சலுகையை ஏற்க மாட்டேன். மன்னியுங்கள்!”என்று கூறி மறுத்துவிட்டார்.

அந்தப் பெண்மணிதான்-அன்னை சாரதாதேவியாா்; ஸ்ரீராமகிருஷ்ணாின் துணைவியாா். தூய்மையான அன்பாலும் நடவடிக்கைகளாலும் உயா்ந்தவா்!

- ப.சந்திரமெளலி