Published:Updated:

கற்பகவிருட்சம்... காஞ்சியப்ப ஐயனார்!

கற்பகவிருட்சம்... காஞ்சியப்ப ஐயனார்!
பிரீமியம் ஸ்டோரி
News
கற்பகவிருட்சம்... காஞ்சியப்ப ஐயனார்!

த.கதிரவன்

கற்பகவிருட்சம்... காஞ்சியப்ப ஐயனார்!

மண் மணக்கும் மக்கள் இசை - நாட்டுப்புறப் பாடல்களை நாடெங்கும் பரப்பிய கணீர்க் குரலுக்குச் சொந்தக்காரர் புஷ்பவனம் குப்புசாமி. நம் மனம் கவர்ந்த இந்தக் கலைஞனின் உள்ளம் கவர்ந்த தெய்வம் எது என்ற கேள்வியோடு, ஒரு ஞாயிறன்று காலையில் அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

‘‘புஷ்பவனம் கிராமத்தின் கிழக்கு கடற்கரை ஓரத்தில் வீற்றிருக்கும் காஞ்சியப்ப ஐயனார்தான் எங்கள் குடும்பத்தில் அத்தனைபேருக்கும் இஷ்ட தெய்வம்-குலதெய்வம்! அதனால், ‘என் உள்ளம் கவர்ந்த தெய்வம்’ என்று பிரித்துச் சொல்ல முடியாது’’ என்று முன்னோட்டம் கொடுத்தவர், ஐயனார் வரலாற்றில் துவங்கிப் பேச ஆரம்பித்தார்.

கற்பகவிருட்சம்... காஞ்சியப்ப ஐயனார்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz‘‘இவருக்கு கஞ்சப்ப ஐயனார் என்றொரு பெயரும் உண்டு. ஐயனார் என்றதும் பெரிய மீசை, வெட்டுக்கத்தி என்ற பிம்பம்தான் நினைவுக்கு வரும். ஆனால், காஞ்சியப்ப ஐயனார் சாந்த சொரூபி. அவருக்கு பூரணை, புஷ்கலை என இரண்டு மனைவிகள்.

காஞ்சியப்ப ஐயனாரைத்தான் கேரள மலைவாழ் மக்களும், கேரள நம்பூதிரிகளும் வழிபட்டு வந்தார்கள். ஐயனார் என்ற பெயரே பிற்காலத்தில் ஐயப்பனாக மாறியது என்பார்கள். அவரது 18 வகையான ஆயுதங்களும், 18 படிகளாக உருப்பெற்றன. இங்கே இரு மனைவியரோடு சம்சாரியாக இருந்த ஐயனார், கேரளாவில் பிரம்மச்சாரியாகிப் போனார். ஆனால், அவரது சாந்தமும் சைவமும் மட்டும் மாறவேயில்லை.

ஐயனாரின் உதவியாளர் கருப்பண்ண சாமி. இவரைத்தான் 18-ம்படி கருப்பன், கருப்பண்ணசாமி, கோட்டைக் கருப்பன், சங்கிலிக்கருப்பன்.... என்றெல்லாம் அழைக்கிறோம். ஐயப்பன் புலி வாகனன் என்றால், கருப்பண்ணன் குதிரை வாகனன். இவருக்கு கத்தி, அரிவாள், சுருட்டு, சாராயம் என்று எல்லாமும் உண்டு. ஆனாலும், அவற்றின் வாடைகூட ஐயனார் கோயில் உள்ளே வராது. கருப்பண்ணசாமிக்கு 21 உடன்பிறப்புகள். அதனால், 21 படையல் போட்டுத்தான் வணங்குவார்கள்.

கற்பகவிருட்சம்... காஞ்சியப்ப ஐயனார்!

பண்டமாற்று பொருளாதாரம் ஓங்கியிருந்த அந்தக் காலங்களில், ஆடு-மாடு வைத்திருப்பவர்களே பெரும் தனக்காரர்கள். இப்படிச் செல்வமாக கருதிய ஆடு-மாடுகளை எதிரிகள் திருடிவிடக்கூடாது என்பதற்காக, ஆயுதத்தோடு ஊர் எல்லையில் காவல் காத்திருந்த கருப்பண்ணசாமியையே தங்களின் காவல் தெய்வமாக வழிபட் டார்கள் நம் மூதாதையர்கள். நாமும் அவர்களைப் பின்பற்றுகிறோம்’’ என்றவர், ஐயனாரின் சாந்நித்தியத்தை உணர்த்தும் சில சம்பவங்களை பகிர்ந்துகொண்டார்.

‘‘2004-ம் வருடம் டிசம்பர் மாத தொடக்கம். ஆனந்த விகடனில் ‘எங்கள் குலசாமி’ தொடர் வெளிவந்த நேரம். அந்தப் பகுதிக்காக எங்கச் சாமியைப் பற்றியும் கேட்டிருந்தார்கள். டிசம்பர் 26-ம் தேதி, எங்கள் ஊரில் உள்ள காஞ்சியப்ப ஐயனார் கோயிலில் நானும் குடும்பத்தோடு சாமி கும்பிட்டுவிட்டு, அப்படியே பேட்டி கொடுக்கவும் ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், மறந்துபோய் அதே நாளில் வேறொரு கச்சேரி நிகழ்ச்சிக்குச் செல்ல ஒப்புதல்   தெரிவித்துவிட்டேன்.  அதனால், பேட்டி கொடுக்கும் தேதியை அதற்கு அடுத்த நாளாக தள்ளிவைத்துக் கொண்டோம். ஆனால், சரியாக டிசம்பர் 26-ம் தேதி உலகையே புரட்டிப்போட்ட சுனாமி, கடற்கரை ஊரான எங்கள் புஷ்பவனத்தையும் புரட்டி எடுத்துவிட்டது.

கிராமத்தில் இருந்த எங்கள் அப்பாவும் சுனாமி அலையில் சிக்கி, கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். ஆனால், ஐயனாரின் கருணையால், பனை மரங்களுக்கு இடையே சிக்கி உயிர் பிழைத்தார். அன்று மட்டும் நான் சொன்ன தேதியில் எங்கள் ஊருக்குச் சென்றிருந்தால், ஊரே அங்கு கூடியிருக்கும். சுனாமி அலை மொத்தமாக எங்களையும் விழுங்கியிருக்கும். ஆனால், ஐயனாரின் அருள்தான், அன்றைய தேதியில் வேறொரு கச்சேரி வாய்ப்பு மூலம் எங்கள் குடும்பத்தையும் ஒட்டுமொத்த புஷ்பவனம் கிராமத்து உறவுகளையும் காப்பாற்றியது என்று சொல்லலாம். இன்றைக்கு நினைத்தாலும் மெய்சிலிர்க்கவைக்கும் சம்பவம் இது’’ என்று நெகிழ்ந்தவர், வேறொரு சம்பவத்தையும் விவரித்தார்.

‘‘ஒருநாள் திடீரென இரவு இரண்டு மணியளவில், தொலை பேசி ஒலித்தது. எடுத்து ‘ஹலோ’ சொன்னால், எதிர்முனையில் பதில் இல்லை. ரிசீவரை வைத்துவிட்டு நானும் படுத்துவிட்டேன். அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் போன். அப்போதும் எதிர்முனையில் பதில் இல்லை. இப்படியே தொடர்ந்து நான்கைந்து முறை போன் வந்ததால், எனக்குத் தூக்கம் கெட்டுவிட்டது. எரிச்சலோடு எழுந்தவன், தண்ணீர் குடிப்பதற்காக சமையல் அறைப்பக்கம் வந்தேன். அப்போது சமையல் எரிவாயு கசியும் வாசம். உஷாரான நான், சுவிட்ச் எதையும் ஆன் செய்யாமல், இருட்டில் தட்டுத்தடுமாறியபடியே சமையல் அறைக்குள் வந்து, திறந்த நிலையில் இருந்த எரிவாயு இணைப்பை மூடினேன். பின்னர், வீட்டில் இருந்த கதவு, ஜன்னல்களை அகலத் திறந்து, காற்றோட்டம் வர ஏற்பாடு செய்தேன். கால் மணி நேரம் கழித்து வாசனை முற்றிலுமாக நின்றுபோனதை உறுதி செய்த பிறகே மின்விளக்குகளை எரியவிட்டேன்.

கற்பகவிருட்சம்... காஞ்சியப்ப ஐயனார்!

அதன்பிறகு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த எல்லோரையும் எழுப்பி விஷயத்தைச் சொன்னேன். வீட்டு வேலைக்காரப் பெண்மணி, கவனக்குறைவாக எரிவாயு இணைப்பை மூடாமல் விட்டுவிட்டது அப்போதுதான் தெரியவந்தது.

இப்படி நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, மீண்டும் போன் அடித்தது. ரிஸீவரை எடுத்துக் காதில் வைத்தால், இப்போது ஒரு குழந்தை சிரிக்கும் சத்தம் மட்டும் கேட்டது. வேறு எந்தப் பதிலும் இல்லை. உடனடியாக அந்த போன் காலும் கட்டாகிவிட்டது. சரி... இந்த அழைப்பு எந்த எண்ணில் இருந்து வந்திருக்கிறது என்பதை அறிய, காலர் ஐடி-யில் பார்த்தால், ‘நோ நம்பர்’ என்றே காட்டியது.

இதெல்லாம் யதேச்சையாக நடந்ததோ, இல்லையோ தெரியவில்லை. ஆனால், நாங்கள் காப்பாற்றப்பட்டது ஐயனாரின் திருவருளால்தான் என்பதாகவே எனக்குப்பட்டது. ஆம்.... நடு இரவில் ஏன் போன் கால் வர வேண்டும், தூக்கக் கலக்கத்தில் நான் அப்படியே தூங்கியிருக்கலாம். ஆனால் தாகம் எடுக்கச் செய்து, தண்ணீர் குடிக்க சமையலறைக்குச் செல்ல தூண்டப்பட்டது ஏன்... இப்படி, எல்லாமே திட்டமிட்டு நடந்தாற் போன்று இருந்ததென்றால்... அது ஐயனாரின் திருவருள்தானே...’’ என்று சிலிர்ப்புமேலிட விவரித்தவர், சிறிது நேர ஆசுவாசத்துக்குப் பிறகு சகஜ நிலைக்கு வந்து பேசத் தொடங்கினார்.

‘‘இத்தனைக்கும் நான் எங்கள் ஐயனாரை தினமும் வழிபடுவதெல்லாம் கிடையாது. எப்போதாவது மனதுக்குள் நினைத்துக்கொள்வதும், ஊர் சென்றால் பொங்கல் வைப்பதுமாக மட்டும்தான் காஞ்சியப்ப ஐயனாரோடு எங்கள் குடும்பத்தினருக்கான தொடர்பு. ஆனாலும்கூட பெத்த தாய் போல எங்களைப் பொத்திப் பாது காப்பவர் ஐயனார். இதைச் சொல்லும்போது எங்கள் ஊர்ப்பக்கம் சொல்லும் உதாரணம்தான் ஞாபகத்துக்கு வருகிறது....

அதாவது, வாழை மரத்துக்கு தினமும் தண்ணி ஊத்தணும்; தென்னைக்கு மாதத்துக்கு ஒருமுறை... ஆனால், பனை மரத்துக்கு நாம ஒரு சொட்டுத் தண்ணீரைக்கூட ஊத்துறதில்ல. ஆனாலும் வெயில், மழைன்னு காலத்துக்கும் மனுஷப் பயலுக்குத் தேவையான பொருட்களைத் தந்து காத்து நிக்கும். அது, பூலோக கற்பக விருட்சம் அல்லவா?

அதேபோல்தான் எங்கள் ஐயனாரும். நொடிப் பொழுதுகூட நாம் நினைக்காவிட்டாலும் வாழ்க்கையின் எல்லாத் தருணங்களிலும் அன்னையாய் காத்து நின்று அரவணைத்துச் செல்லும் தாய் காஞ்சியப்ப ஐயனார்!’’ நெஞ்சில் கைவைத்து, கண்களில் நீர்மல்க பரவசமும் நெகிழ்ச்சியுமாக ஐயனரை மானசீகமாக வணங்கி, நமக்கு விடைகொடுத்தார் புஷ்பவனம் குப்புசாமி.

படங்கள்: க.சதீஷ்குமார்