மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 30

சிவமகுடம் - 30
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - 30

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

டிவானில் விடிவெள்ளியாய் சுக்ர கிரகம் முளைத்தெழுந்து மின்னிய காட்சி, வைகறையை அகற்றிவிட்டு விநோதமான ஒரு விடியலை சிருஷ்டிக்கப்போகும் இயற்கையில் தானும் ஓர் அங்கம் என்பதுபோல் அது பெருமிதத்துடன் கண் சிமிட்டியதாகவே தோன்றியது பொங்கிதேவிக்கு. இரண்டொரு நாழிகைக்கு முன்பு வரையிலும் அந்தக் காட்டை செவ்வண்ணமாய் அடித்திருந்த காலைச் சூரியனும் தனது கிரணங்களை வெளுப்பாக்கி, தானும் மெள்ள நிறம் மாறிக்கொண்டிருந்தான்!

சிவமகுடம் - 30

பேராபத்தைக் கண்முன் காட்டிக் கழிந்திருந்த முற்பொழுதில், எதிரியின் அம்பினால் காயம் அடைந்து, நம்பிதேவன் குருதி சிந்திய அந்தச் சிற்றோடையின் நீரை அள்ளித் தெளித்து முகம் கழுவிக்கொண்ட பொங்கிதேவி, திரும்பி மரத்தடியை உற்று நோக்கினாள்.

கிழிக்கப்பட்ட அவளது இடைக் கச்சைத் துணியாலான கட்டுக்குள் பொதிந்து இருந்த நம்பிதேவனின் தோள்பட்டை காயம், இன்னமும் சிறிது குருதியை வெளிப் படுத்திக்கொண்டிருந்தது. ஆனாலும் பாதகம் இல்லை. பச்சிலையையும் சேர்த்துவைத்துக் கட்டியிருப்பதால், வலி துரிதகதியில் குறைந்துவிடும். மேலும், நம்பிதேவனின் முகத்தில் பயணத்தால் உண்டான களைப்பு தெரிகிறதே தவிர, காயத்தினால் ஏற்பட்ட வேதனை தெரியவில்லை. ஆதலால், உள்ளூற சற்றே ஆறுதல் அடைந்தாள் பொங்கிதேவி. 

நடந்த யாவற்றையும் வரிசைக்கிரம மாகக் கோத்துப்பார்த்தால், `இனி நடப்பவை யாவும் நல்லதாகவே நடக்கும்' என்றே அவள் மனதுக்குப்பட்டது. அவளின் அந்த எண்ணத்துக்கு வலுசேர்ப்பதுபோல், எங்கோ தூரத்தில் `டாண்... டாண்...' என்று ஒலி எழுப்பியது, காலை பூஜைக்கான ஆலய மணி. மிக நல்ல சகுனம்! இப்போது ஒலித்த இந்த ஆலய மணியோசை மட்டுமல்ல, வைகறைப் பொழுதில் நிகழ்ந்த களேபரங்களுக்கு மத்தியிலும் அவள் நல்ல பல சகுனங்களையே கண்டாள்!
 
நிலம் அதிர, விருட்சங்களின் கிளைகளை முறித்தபடி வனத்துக்குள் இருந்து வெளிப்பட்ட அந்த இரட்டை விருபாக்ஷங்கள்... ஆமாம் அவற்றை அப்படித்தான் சொல்ல வேண்டும்!

சிவமகுடம் - 30சிறு பிராயத்தில்  இளவரசி மானிக்கும் அவளின் தோழிக்கும் நிறையக் கதைகள் சொல்லியிருக்கிறார் பட்டர்பிரான். அவற்றில் ஒன்று பகீரதன் கதை. பகீரதனின் மூதாதையரான சகர மைந்தர்கள் பாதாள லோகத்துக்குச் சென்றபோது, விருபாக்ஷத்தைத் தரிசித்தார்களாம். அந்தப் பாதாள யானையே பூதளத்தைத் தாங்கிக்கொண்டிருக்கிறதாம். அது சிறிது அசைந்தாலும் பூமியின் பரப்பில் பெரும் பூகம்பம் எழுமாம்!

பெரும் குன்றுகள் இரண்டு உயிர்ப்பெற்று எழுந்து நகர்ந்தது போல் பெரிதான பிளிற லுடன் நகரும் இந்த யானைகளையும் அந்த விருபாக்ஷத்து ஒப்பாகச் சொல்லலாம். அவ்வளவு பிரமாண்டம்-பயங்கரம்.

சகுன சாஸ்திரப்படி, மக்களின் வணக்கத்துக் கும் வழிபாட்டுக்கும் உரிய மிருகங்கள் இரட்டையாக எதிரில் தோன்றினால், சுப சகுனம்; காரிய பலிதம் உண்டாகும் என்று சொல்வார்கள். ஆக, ஆபத்துக்கு நடுவிலும் விருபாக்ஷங்களாகத் தோன்றிய இரட்டை யானைகளையும் சுப சகுனமாகவே கருதினாள் பொங்கிதேவி.

அதேபோல், துவஜ தரிசனமும் நல்ல சகுனம் ஆகும். அதுவும் அவளுக்கு வாய்த்தது!

 மாடுகள் நிலைதடுமாறி வண்டி தடம்புரள, நம்பிதேவனின் தோளில் பாய்ந்த அம்பை எடுக்கவும் நேரம் இல்லாது, அவனது பெரும் வாளை  தான்  உருவிக்கொண்டு அம்புகள் வரும் திசைநோக்கிப் பாய யத்தனித்த பொங்கிதேவி, முதலில் கண்டது கயற் கொடியைத்தான். `பகைவருக்கு உரியது என்றாலும், துவஜம் *சுப சகுனம்' என்று சொல்லியிருக்கிறார் பட்டர்பிரான். ஆக, கயற்கொடி தரிசனமும் வெற்றிக்கான அறிகுறியாகவே தெரிந்தது அவளுக்கு.

அதை மெய்ப்பிப்பதுபோல் அடுத்து நடந் தது, ஒரு விநோதம்!

கயற்கொடியை ஏந்தியபடி வீரன் ஒருவன் வெண் புரவியில் பாய்ந்து வர, அவனைத் தொடர்ந்து பத்துப் பதினைந்து வில்லாளிகள் அடங்கிய சிறு புரவிப்படையே அவர்களை வந்து சூழ்ந்துகொண்டது.

அப்படி, எதிரிகள் இவர்கள் இருவரையும் மிக நெருக்கத்தில் அணுகிய நிலையில்தான், இவர்கள் இன்னார் என்று தெரிந்துகொண்டார்கள் போலும். அவ்வளவுதான்... சொல்லிவைத்தாற் போல்,   அந்த வீரர்களின் தனுசுகள் ஒருசேர வான் நோக்கி உயர்ந்தன. தொடர்ந்து ஆகாயத்தில் பறந்தன, அவர்களது கணைகள்!

அவர்களில் தலைவனாகப்பட்டவன் தனது புரவியில் இருந்து கீழே குதித்தான். அவன், இவர்களுக்குச் சிரப்பணிவு எதையும் காட்டவில்லை என்றாலும், அவனது பேச்சில் மரியாதை தொனித்தது.

‘‘மன்னிக்கவும்! தாங்கள் இன்னார் என்று அறியாமல் பின்தொடர்ந்துவிட்டோம்; அம்பும் தொடுத்துவிட்டோம். உறையூர் இளவரசியாரின் அணுக்கத் தோழியாருக்கும் சோழ தூதர் அவர்களுக்கும் எங்களால் எவ்விதக் கெடுதியும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பது பாண்டிய மாமன்னரின் திடமான உத்தரவு. எனினும், போருடைத் தரித்திருக்கும் உங்களின் கோலமும், எங்களது படை நகரும் வேளையில் திடுமென ஏற்பட்டுவிட்ட தங்களின் பிரவேசமும் எங்களுக்குப் பதற்றத்தை
ஏற்படுத்திவிட்டன. அதனால் விளைந்ததே இந்த விபரீதம்'' என்று நம்பிதேவனின் தோளில் தைத்த அம்பினைச் சுட்டிக்காட்டியவன், மேலும் தொடர்ந்தான்.

``இப்போதும் குறியை நோக்கிய அம்புகளுக்கு சோரம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே அவற்றை ஆகாயத்தில் செலுத்தினோம். தவறேதும் இருந்தால் அதன் பொருட்டும் மன்னிக்க வேண்டுகிறேன்''என்று பணிவுடன் மன்னிப்பு வேண்டியவன், ``தூதருக்கோ தங்களுக்கோ வேறு ஏதேனும் உதவி தேவையா?’’ எனக் கேட்கவும் செய்தான்.

மடைதிறந்த வெள்ளம்போல் மூச்சு விடா மல் அவன் பேசிய பேச்சு மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக அந்த பாண்டிய வீரர்கள் காட்டிய பணிவும், அவர்களை அப்படிச் செயல்படுத்திய கூன்பாண்டியரின் உத்தரவும் பெரும் வியப்பை அளித்தது பொங்கிதேவிக்கு. என்றாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், சீற்றமான பார்வையையே அவர்களுக்குப் பதிலாகத் தந்தாள் மானியின் தோழி.

தலைமை வீரன் சமர்த்தன்; சடுதியில் புரிந்துகொண்டான், தங்களின் உதவியை  பொங்கிதேவி ஏற்கத் தயாரில்லை என்பதை. ஆகவே மீண்டும் தனது புரவியில் ஏறிக் கொண்டவன், சக வீரர்கள் இருவரை நோக்கிக் கண்ணசைக்க, அந்த வீரர்கள் தத்தமது புரவியை அங்கேயே விட்டுவிட்டு,  ஓட்டமும் நடையுமாக தங்கள் தலைவனின் குதிரையைப் பின்தொடர்ந்தார்கள்!

அவர்கள் சென்றதும் நம்பிதேவனின் தோளில் தைத்த அம்பினைப் பிடுங்கி எறிந்துவிட்டு, பச்சிலைப் பறித்துவந்து சாறு பிழிந்து, காயத்துக்குக் கட்டும் போட்டு விட் டாள்! அத்துடன் சிறிதுநேரம் அவனை ஓய்வெடுக்கவும் பணித்தாள்.
 
அவன் ஓய்வெடுத்த அந்தச் சந்தர்ப்பத் தில்தான் நடந்தவற்றை ஒவ்வொன்றாய் அசைபோட்டாள் பொங்கிதேவி. அவை அனைத்துமே விசித்திரமாகப்பட்டது பொங்கிதேவிக்கு!

முகத்தின் ஈரத்தை மீதமிருந்த இடைக் கச்சைத் துணியால் துடைத்துக்கொண்டவள், நம்பியின் அருகில் வந்தாள்.

‘`நம்பிதேவரே! காயம் எப்படியிருக்கிறது?’’

‘`தங்களது மருத்துவம் நன்கு வேலை செய்கிறது. பச்சிலையின் உபயம் வலியைக் குறைத்திருக்கிறது.’’

‘`பயணப்படலாம் அல்லவா... சிரமம் இருக்காதே?’’

‘`நிச்சயமாக இருக்காது! நாம் புறப்படலாம்.’’

ரத்த இழப்பினால் ஏற்பட்ட சோர்வின் காரணமாக சற்றே தடுமாறி எழுந்தவன், சில கணப்பொழுது நேரம் கால்களை நன்றாக உதறிவிட்டுக்கொண்டும், ஓரிரு முறை இடதும் வலதுமாய் உடம்புக்குப் பயிற்சி கொடுத்த படியும், தலையைச் சிலுப்பியபடியும் தன்னை ஒருவாறு திடப்படுத்திக்கொண்டான்.

பின்னர், மாடுகளின் கதியை அனுமானிக்க எண்ணி, அவை இருக்கும் திசையை நோக்கினான். அந்த மாடுகள் மேய்ச்சலில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தன. அவனது பார்வை செல்லும் திசையைக் கவனித்தே, அவனது நோக்கத்தை அறிந்த பொங்கி தேவி, ‘`நம்பிதேவரே! மாடுகள் தெம்புடன் இருந்தாலும் வண்டி தேறாது. நாம் புரவிகளில் செல்வோம்’’ என்றாள்.

சிவமகுடம் - 30

அவன், அவளைத் தயக்கத்துடன் நோக்கி னான். அதற்கான காரணத்தைப் புரிந்து கொண்ட பொங்கிதேவி சொன்னாள்: ‘`பகைவர்கள் அளித்த குதிரைகள்தான். என்றாலும் பாதகமில்லை. இப்போது வேறு வழியும் இல்லை. தவிர, ஆரம்பம் முதல் நமக்குக் கரிசனம் காட்டுவதாகக் காட்டி ஏதோ காரியம் சாதிக்கப்பார்க்கிறார் கூன்பாண்டியர். நாமும் அவர் பாணியிலேயே அவருக்குப் பதில் கொடுப்போம்’’ என்றவள், பகை வீரர்கள் விட்டுச்சென்றிருந்த புரவி களில் ஒன்றின் மீது தாவி ஏறினாள்.

மறுகணம் முன்னங்கால்களை உயரத் தூக்கி பெரிதாகக் கனைத்தபடி பாய்வதற்குத் தயாரானது அந்தப் புரவி. நம்பிதேவனும் மற்றொரு குதிரையில் ஏறிக்கொள்ள, பொங்கி தேவி கட்டளையிட்டாள்.

‘`நம்பிதேவரே!  இந்த இடத்தில் இருந்து நாம் பிரிகிறோம். நீங்கள் பகைவர் சேனையின் போக்கைக் கண்காணித்து தகவல் அனுப்புங்கள். முடிந்தால் கடற்புறத்தை  காத்து நிற்கும் பரதவர்களை உறையூர்ப் பக்கம் திருப்புங்கள்; மானியாருக்குப் பேருதவியாக இருக்கும். நான் வேறொரு திசையில் செல் கிறேன்...’’ என்றவள், தான் செல்லும் இடம் குறித்து எதுவும்  பகிர்ந்துகொள்ளாமல், புரவியைத் தட்டிவிட்டாள்.

நான்கைந்து நாழிகை நேரப் பயணத்தில் ஏரிக்கரையை அடைந்தாள். வழிநெடுக வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் எதிரிப்படைகளின் நடமாட்டம் இருக்கவே செய்தது. எனினும், கூன்பாண்டியரின் உத்தரவின் காரணமாகவோ என்னவோ, எவரொருவரும் பொங்கிதேவியை தடை செய்தார்கள் இல்லை.

இன்னொரு காரணமும் இருந்தது. வீணான பிரச்னைகளைத் தவிர்க்க, வழியிலேயே தனது போருடையைக் களைந்து, வேறு உடைக்கு மாறியிருந்தாள். ஆக,  ஆபத்தின்றி ஏரிக்கரையை அடைந்தவள், அங்கே ஏரிக்கரையில் அமைந்திருந்த எல்லைக் கோயிலுக்குள் சென்றவள், அந்த ஆலயத்தின் மணியை ஒருமுறை அசைத்து ஒலியெழுப்பி விட்டு வெளியேறியவள், எதையோ எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.

சில நொடிகளில் அந்த அற்புதம் நிகழ்ந்தது. கோயிலுக்கு அருகில் சதுக்கமாகத் திகழ்ந்த நிலப்பரப்பின் ஒரு பகுதியில் திடுமென ஓர் அதிர்வு ஏற்பட்டது. தொடர்ந்து அந்தப் பகுதியின் மேற்பரப்பு, பெரும்பூதம் ஒன்று வாயைப் பிளப்பது போல் பிளந்து, பெரியதொரு சுரங்கப்பாதையை வெளிக் காட்டியது. புரவியை அழைத்துக்கொண்டு சுரங்கப்பாதையில் நுழைந்தாள், பொங்கி தேவி.  மற்றோர் உருவமும் அவளைப் பின் தொடர்ந்து, சுரங்கத்துக்குள் நுழைந்தது!

இங்கு இவ்வாறிருக்க, நம்பியின் மனைவியோ, முன்னோர் மாடத்தில் நெய்தீபம் ஏற்றி வணங்கி்க்கொண்டிருந்தாள்... எவ்வித பங்கமும் இல்லாமல் தன் கணவன் திரும்பவேண்டும் என்று!

ஆனால், அவனோ பெரும் பங்கம் விளைவிக்கும் பேராபத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.

- மகுடம் சூடுவாம்...

* பூஜிக்கத் தகுந்த பிராணிகளை இரட்டையாகக் காண்பதும், துவஜம், சங்கு, கண்ணாடி, நிறைகுடம், தீபம், முதலானவற்றைக் காண்பதும் சுப சகுனம் ஆகும் - சகுன சாஸ்திரம்.