Published:Updated:

வள்ளி ஆற்றின் கரையில் மகாதேவர் தரிசனம்!

வள்ளி ஆற்றின் கரையில் மகாதேவர் தரிசனம்!
பிரீமியம் ஸ்டோரி
News
வள்ளி ஆற்றின் கரையில் மகாதேவர் தரிசனம்!

த.ராம்

வள்ளி ஆற்றின் கரையில் மகாதேவர் தரிசனம்!

குமரி மாவட்டம், வள்ளி ஆற்றின் கரையில், திருநயினார்குறிச்சி என்ற கிராமத்தில், பச்சைப் பசேல் என்று ரம்மியமாகக் காட்சி அளிக்கும் வயல்கள் சூழ்ந்த பின்னணியில், கம்பீரமாகக் காட்சி தருகிறது அருள்மிகு கரைகண்டேஸ்வரம் மகாதேவர் திருக்கோயில்.

பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமல், புதர்கள் மண்டிக்கிடந்த இந்தக் கோயிலை ஊர்மக்கள் கடந்த 2013-ம் ஆண்டு பராமரிப்பு பணிகள் செய்து மஹாகும்பாபிஷேகம் நடத்தி, கோயிலுக்குப் புதுப்பொலிவு தந்திருக்கிறார்கள்.

வள்ளி ஆற்றின் கரையில் மகாதேவர் தரிசனம்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இங்குள்ள மூலவர் கரைகண்டேஸ்வரர் என்றும் கறைகண்டேஸ்வரர் என்றும் அழைக்கப் பெறுகிறார். தேவர்கள் அமிர்தம் வேண்டி பாற் கடலைக் கடைந்தபோது தோன்றிய விஷத்தை சிவபெருமான் உண்டார். உடனே, பார்வதிதேவி சிவபெருமானின் தொண்டைப் பகுதியில் கை வைத்து அழுத்தினார். விஷம் சிவபெருமானுடைய கண்டத்திலேயே -  கழுத்திலேயே தங்கியது. அதன் காரணமாக ஈசன் கறைகண்டேஸ்வரர் என்னும் திருப்பெயர் ஏற்றதாக தல வரலாறு சொல்கிறது.

வள்ளி ஆற்றின் கரையில் மகாதேவர் தரிசனம்!

இந்தக் கோயிலில் பத்து கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் ஒன்று இங்குள்ள இறைவனை, `ராஜராஜ தென்னாட்டு குறுநாட்டு கடிகை பட்டினத்து கரைகண்டேஸ்வரம் உடையார்-நாயனார்-கூத்தாடும் தேவர் என்ற அருள்மிகு கரைகண்டேஸ்வரம்  மகாதேவர்' என்றும், இந்த ஊரை ‘கடிகைப்பட்டினம் திருநயினார்குறிச்சி’ என்றும் குறிப்பிடுகிறது. கடிகைப்பட்டினம் என்பது திருநயினார்குறிச்சியை அடுத்திருக்கும் கடற்கரை கிராமம் ஆகும். மற்றொரு கல்வெட்டில், கருவறையை அகநாழிகை என்ற சொல்லால் குறிக்கப்பட்டிருப்பதில் இருந்து, இந்தக் கோயில் 13-ம் நூற்றாண்டுக்கு முந்தையது என்று அறிய முடிகிறது. ஏனெனில், கருவறையை அகநாழிகை என்று அழைக்கும் வழக்கம், 13-ம் நூற்றாண்டுக்கு முன்பு வழக்கில் இருந்தது என்கிறார்கள்.

வள்ளி ஆற்றின் கரையில் மகாதேவர் தரிசனம்!

மேலும், இந்தக் கோயிலில் நிரந்தரமாகவும் தற்காலிகமாகவும் பல பணியாளர்கள் இருந்துள் ளனர். மேலும் கோயிலின் நிர்வாகம் சரியாக நடக்கிறதா என கவனிக்க அரசின் பிரதிநிதி ஒருவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். கோயிலின் முன்பகுதியில் உள்ள ஷோபன மண்டபத்தை, பெரும்பற்றப்புலியூர் சிவனுக்கடியான் என்பவன் சிறந்த சிற்பிகளைக் கொண்டு 1432-ம் ஆண்டு கட்டி உள்ளான். இந்தத் தகவல்கள் யாவற்றையும் இக்கோயில் கல்வெட்டுகளின் மூலம் தெளிவாக அறிய முடிகிறது. சிவனுக்கினியார், உய்யவந்த தேவர், பெற்றான் எனும் தூய சைவப் பெயர்கள் கல்வெட்டுகளில் வருகின்றன.

வள்ளி ஆற்றின் கரையில் மகாதேவர் தரிசனம்!

மிகவும் புராதனமான முறையில் நிர்மாணிக்கப் பட்டிருக்கும் இக்கோயிலுக்குள் விருட்சங்களும் அதிகம் உள்ளன. மூன்று பிராகாரங்களைக் கொண்ட இந்தக் கோயிலின் ஷோபனப்படியின் வழியாக ஏறிச்சென்றால், சோழர் பாணியில் அமைந்த முகப்பு மண்டபத்தை அடையலாம். முகப்பு மண்டபத்தில் குழல் ஊதும் கண்ணன், அர்ஜுனன் தபசு போன்ற சிற்பங்கள் நம் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து! இதைக் கடந்து அர்த்த மண்டபத்தை அடைந்தால், அங்கே வலம்புரி விநாயகர், நந்தீஸ்வரர் ஆகியோரைத் தரிசிக்கலாம்.  ஈசனின் சந்நிதி கருவறை, அந்தராளம் என்ற இரண்டு பகுதிகளை உடையதாக அமைந்திருக்கிறது.

16-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகச் சொல்லப்படும் கோயிலின் ஏகதள விமானம் சுதையால் ஆனது. தற்போது பழைய கட்டுமானப் பணிகள் சீர் செய்யப்பட்டுள்ளன.

மூலவரான மகாதேவர், நவகிரகங்களை தன்னுள் அடக்கி லிங்கோற்பவராக காட்சித் தருவ தாக ஐதீகம். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர், வள்ளி ஆற்றில் நீராடிவிட்டு, இந்த மகாதேவரை மனதார வழிபட்டுச் சென்றால், விரைவில் குழந்தைப்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை. குழந்தை வரம் வேண்டி, வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பெருமளவு வருகின்றனர். ஸ்வாமி சந்நிதிக்கு அருகிலேயே அம்பாளும், வலம்புரி விநாயகரும் அருள்கிறார்கள். கோயில் பிராகாரத்தில், திண்டு போன்ற மேடையில் விளக்கேற்றி வைத்து, கர மஹரிஷியை வழிபடுகின்றனர். மேலும் ஆல், அரசு, வேம்பு ஆகிய மூன்று விருட்சங்கள் சூழ்ந்த இடத்தில் ஆதிசேஷன், வன தர்மசாஸ்தா, மகா கால பைரவர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.

வள்ளி ஆற்றின் கரையில் மகாதேவர் தரிசனம்!

மார்கழி மாதம் இக்கோயிலில் மூன்று நாட்கள் திருவிழா நடக்கிறது. இந்தத் திருவிழாவின்போது பால்குடம் எடுத்தல், சந்தனக்குடம் எடுத்தல் போன்ற வைபவங்கள் நடைபெறுகின்றன. யானை பவனியும் உண்டு. மேலும் சித்திரை விஷு, திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி ஆகிய விழாக்களும் நடைபெறுகின்றன.

நதி தீரங்களில் அமைந்த தலங்களில் முன்னோரை ஆராதிப்பது விசேஷம் என்பார்கள். நதியில் இறங்கி நீராடி முன்னோரை மனதில் நினைத்து அவர்களுக்காக நீர் வார்க்க, நம் சந்ததியின் எதிர்காலம் சிறக்கும்; குடும்பம் செழிக்கும். வரும் தை அமாவாசை நன்னாளை ஒட்டி, குமரிக்குச் செல்லும் அன்பர்கள், அப்படியே இந்தத் தலத்துக்கும் வந்து வள்ளி 0ஆற்றில் நீராடி முன்னோரை வழிபடுவதுடன், மகாதேவரையும் தரிசித்து மனம் மகிழ வரம் பெற்றுச் செல்லுங்கள்.

படங்கள்: ரா.ராம்குமார்

உங்கள் கவனத்துக்கு...

தலம்: திருநயினார்குறிச்சி

ஸ்வாமி: அருள்மிகு கரைகண்டேஸ்வரர்

பிரார்த்தனைச் சிறப்பு: இங்கு வந்து வள்ளி ஆற்றில் நீராடி, மகாதேவரைத் தரிசித்து வழிபட்டால், குழந்தைப் பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை.

சிறப்பு வழிபாடுகள்: நித்ய பூஜைகளுடன் ஆயில்ய பூஜை, மாத பெளர்ணமி மற்றும் அமாவாசை பூஜைகள், கால பைரவ பூஜை, சர்ப்பதோஷ பூஜை, சுயம்வர பூஜை, மிருத்யுஞ்ஜய ஹோமம் ஆகியனவும் இக்கோயிலில் நடைபெறுகின்றன.

நடை திறந்திருக்கும் நேரம்: காலை 5 முதல் 11:30 மணி வரை; மாலை 4:45 முதல் இரவு 8  மணி வரை.

எப்படிச் செல்வது?: கேரளாவில் இருந்து வரும் பக்தர்கள்  குளச்சல், அம்மாண்டிவிளை வழியாக திருநயினார்குறிச்சிக்கு வரலாம். திங்கள்சந்தை மார்க்கமும் உண்டு. கன்னியாகுமரி யில் இருந்து வருபவர்கள், ஆசாரிபள்ளம், வெள்ளி சந்தை வழியாகத் திருநயினார்குறிச்சிக்கு வந்து மகாதேவரை தரிசிக்கலாம்.