மற்ற எபிசோடுகள்
Published:Updated:

குறையின்றி நடக்குமா கும்பாபிஷேகம்?

குறையின்றி நடக்குமா கும்பாபிஷேகம்?
பிரீமியம் ஸ்டோரி
News
குறையின்றி நடக்குமா கும்பாபிஷேகம்?

குறையின்றி நடக்குமா கும்பாபிஷேகம்?

‘வர்தா புயலுக்குப் பிறகு நாரதரை காணோமே... ஒருவேளை வைகுண்ட ஏகாதசி, திருவாதிரை தரிசனத்துக்காக ஸ்தல யாத்திரை கிளம்பிவிட்டாரோ? அப்படியே சென்றாலும் தொலைபேசியிலாவது தகவலைப் பகிர்ந்துகொள்வாரே, அதையும் காணோமே’ என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே நாரதரிடம் இருந்து வாட்ஸ்அப் தகவல் வந்து விழுந்தது.

குறையின்றி நடக்குமா கும்பாபிஷேகம்?

சென்றமுறை அவர் பதிவு செய்திருந்த பந்தநல்லூர் பசுபதீஸ் வரர் கோயில் கட்டுரைக்கான ஃபாலோஅப் தகவல்தான் அது. சம்பந்தப்பட்ட கோயிலின் நிலைகுறித்து அறநிலையத் துறை ஆணையரிடமே தான் பேசியதாகவும், ‘கோயிலைப் புனரமைப்ப துடன் நிர்வாகத்திலும் உடனடியாகச் சீர்திருத்தம் செய்யப்படும்’ என்று அவர் உறுதியளித்ததாகவும் தகவல் அனுப்பியிருந்தார் நாரதர்.

தகவல் வந்துசேர்ந்த சிறிது நேரத்திலெல்லாம் நாரதரும் விஜயம் செய்து, நம்மை ஆச்சர்யப்படுத்தினார். மார்கழிக் குளிரில் நடுங்கியபடி அறைக்குள் நுழைந்தவருக்கு, சூடாக தேநீர் தந்து உபசரித்தபின், ‘‘நேரில் வருகிறீர் எனும்போது வாட்ஸ்அப் மெஸேஜ் எதற்கு?’’ என நாம் செல்லமாகக் கடிந்து கொள்ள, தேநீரை உறிஞ்சி சுவைத்தபடி பதில் சொன்னார் நாரதர்:

குறையின்றி நடக்குமா கும்பாபிஷேகம்?

‘‘இன்றைக்கு நேரில் வருவதாக திட்டமில்லை. வெளியூர் செல்வதாகத்தான் இருந்தேன். ஆனால், கடைசி நேரத்தில் பயணம் ரத்தாகிவிட்டதால், இந்த திடீர் விஜயம்’’ என்றவர், “வரும் பிப்ரவரி 6-ம் தேதி திருவண்ணாமலையில் மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது, தெரியுமோ?’’ என்று கேட்டவர், நமது பதிலை எதிர்பாராமல் அவரே தொடர்ந்து கூறினார்:

‘‘வர்தா புயலால் தீபத் திருவிழாவில் கலந்து கொள்ள முடியாத பக்தர்களுக்கு, கும்பாபிஷேக அறிவிப்பு நிச்சயம் வரப்பிரசாதம்தான்...’’ என்று பேச முற்பட்டவரை இடைமறித்துக் கேட்டோம்.

‘‘தீபத் திருவிழா என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. அந்த விழாவில் தரிசன டிக்கெட் விநியோகம் முறைப்படி நடக்கவில்லை என்று நமக்குத் தெரிந்த சிவனடியார்கள் குறைபட்டுக் கொண்டார்களே... அதுபற்றி உமக்கு ஏதாவது தெரியுமா?’’

குறையின்றி நடக்குமா கும்பாபிஷேகம்?

‘‘தொடர்ந்து அதைத்தான் பேச வந்தேன். நீரே கேட்டுவிட்டீர். மஹா தீபம், பரணி தீபம் தரிசனத்துக்காக 1,600 டிக்கெட்டுகள் கோயில் சார்பில் அச்சடிக்கப்பட்டனவாம். ஆனால், இவற்றில் பெருவாரியான டிக்கெட்டுகள் முக்கிய வி.ஐ.பி.களுக்கும், ஆளுங்கட்சி பிரமுகர்களுக்குமே தரப்பட்டதாம். கவுன்ட்டர் விநியோகமாகப் பெயருக்கு சொற்ப அளவிலேயே டிக்கெட் வழங்கப்பட்டதாகவும்,  இந்த விஷயத்தில் இடைத் தரகர்கள் மூலம் முறைகேடுகள் நடந் துள்ளதாகவும் புலம்புகிறார்கள் பக்தர்கள். ஆலய நிர்வாகத் தரப்பிலோ, அப்படியேதும் இல்லை; டிக்கெட் விநியோகம் முறைப்படியே வழங்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்’’ என்றவரிடம், ‘‘திருப்பணிகள் எல்லாம் முழுமையாக முடிந்துவிட்டதா?’’ என்று கேட்டோம்.

“அருணாசலேஸ்வரர் கோயிலில் இதற்குமுன் 2002-ல் கும்பாபிஷேகம் நடந்தது. அதையடுத்து, வரும் பிப், 6-ல் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக, 27 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திருப்பணிகள் நடந்து முடிந்துள்ளனவாம். 2015 ஜனவரி 26-ம்தேதி பாலாலயத்துடன் துவங்கிய திருப்பணிகள், கடந்த ஆண்டு இறுதியிலேயே முழுமையடையும் என எதிர்பார்க்கப்பட்டதாம். ஆனால், பல்வேறு காரணங்களால் தாமதமாகிவிட்டது என்கிறார்கள். பிறகு, பக்தர்களின் கோரிக்கையை அடுத்து, பணிகள் விரைவுபடுத்தப்பட்டனவாம். தொல்லியல் துறையின் வழிகாட்டுதலோடு திருப்பணிகள் நடப்பதாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

குறையின்றி நடக்குமா கும்பாபிஷேகம்?

பிரதான கோபுரங்கள், பிராகாரங்கள், கோயிலுக்குள் அமைந்துள்ள சந்நிதிகளில் திருப்பணிகள் முடிந்து, வண்ணம் தீட்டும் பணியும் நிறைவடைந்துவிட, கும்பாபிஷேகத்துக்கு பிப்ரவரி 3-ம் தேதி பொருத்தமாக உள்ளதாக, சிவாச்சார்யர்கள் நாள்குறித்து  தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார்களாம். அதைத்தொடர்ந்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி ஆலோசனையின் பேரில், பிப்ரவரி 6-ம்தேதி கும்பாபிஷேகம் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டதாம்.’’

‘‘அதுசரி! விழாவுக்கான ஏற்பாடுகள் எந்தளவில் உள்ளன?’’

‘‘யாகசாலை பூஜைகள் நடைபெறும் அம்மணி அம்மன் கோபுரத்தையொட்டி அமைந்துள்ள 5-ம் பிராகாரத்தில், பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. எளிதில் தீப்பற்றாத வகையில், இரும்புத் தகடுகளை பயன்படுத்தி பந்தல் அமைக்கப்படுகிறது. யாகசாலை மற்றும் பந்தல் அமைக்கும் பணிக்காக திருப்பணி நன்கொடையாளர்கள் மூலம் சுமார் ரூ.2 கோடி செலவிடப்படுகிறதாம். அதேபோல், கும்பாபிஷேகத்தையொட்டி சுவாமிக்கு, 32 யாக குண்டங்களும், அம்பாளுக்கு 25 யாக குண்டங்களும் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.’’

‘‘அப்படியென்றால், அண்ணாமலையார் கோயில் எந்தக் குறையுமில்லாமல் திருப்பணிக்குத் தயாராகிவிட்டது என்று சொல்லும்’’ என்று நாம் சொல்ல, சட்டென்று இடைமறித்த நாரதர், ``அப்படியெல்லாம் நடக்க விட்டுவிடுவார்களா என்ன?’’ என்று குரலில் கேலி தொனிக்கக் கூறியவர், பக்தக் குழுக்கள் சில தம்மிடம் பகிர்ந்துகொண்ட குறைபாட்டைச் சொன்னார்.

‘‘கோயிலில் எப்போது கும்பாபிஷேகம் நடத்தினாலும், கோயில் வளாகத்தில் உள்ள சிவகங்கை தீர்த்த குளம், பிரம்ம தீர்த்த குளம் தூர்வாரப்படுவது வழக்கம். ஆனால், தற்போது குளங்களைத் தூர்வாராமலேயே பணிகள் முடிவடைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். எனவே, குளங்களை தூர்வார கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்’’ என்ற தகவலை பகிர்ந்துகொண்டிருக்கும்போதே, நாரதருக்கு வாட்ஸ்ப்பில் ஒரு தகவல் வந்து விழுந்தது.

‘‘இதுவும் திருவண்ணாமலை கோயில் பற்றியதுதான்... கோயிலின் உள்ளே பக்தர்கள் யாராவது நேர்த்திக்கடனாக பிரசாதம் விநியோகம் செய்தால், அவர்களைக் கோயில் வளாகத்தில் பிரசாதக்கடை நடத்தி வரும் கான்ட்ராக்டர்கள், வலுக்கட்டாயமாக  வெளியேற்றுகிறார்களாம். கோயில் நிர்வாகத்தில் பல முறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை எனப் புலம்புகிறது வாட்ஸ்அப் தகவல்’’ என்றவர், ‘‘சரிதான்! அண்ணாமலைக்கு மீண்டும் ஒரு டிரிப் அடிக்க வேண்டியதுதான். இந்த விஷயத்தை நேரில் சென்று விசாரிப்பதுடன், கும்பாபிஷேக விழாவுக்கு டிக்கெட் விநியோகம் எப்படி என்பதையும் தெரிந்து வருகிறேன்’’  என்று கூறி விடைபெற்றார்.

(உலா வருவோம்)