திருத்தலங்கள்
தொடர்கள்
விழாக்கள் / விசேஷங்கள்
Published:Updated:

கயிலை... காலடி... காஞ்சி! - 19 - ‘வேண்டினேன்... கிடைத்தது!'

கயிலை... காலடி... காஞ்சி! - 19 - ‘வேண்டினேன்... கிடைத்தது!'
பிரீமியம் ஸ்டோரி
News
கயிலை... காலடி... காஞ்சி! - 19 - ‘வேண்டினேன்... கிடைத்தது!'

நிவேதிதா

த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண - ஜநிதானாம்தவ சிவே
பவேத் பூஜா பூஜா தவ சரணயோர்-யா விரசிதா
ததா ஹி த்வத் பாதோத்வஹன-மணிபீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே சச்வன் - முகுலித - கரோத்தம்ஸ-மகுடம்


கருத்து: சிவ பத்தினியே! உன்னுடைய திருவடிகளில் எந்த பூஜை செய்யப் பட்டாலும், அந்த பூஜையானது, உன்னுடைய மூன்று குணங்களின் அடிப்படையில் தோன்றியவர்களும், உன்னுடைய திருவடிகளைத் தாங்கும் ரத்தின பீடத்தின் சமீபத்தில், தங்களுடைய கைககளைக் குவித்து தலைக்குமேல் வைத்தபடி எப்போதும் நின்று கொண்டிருக்கும் மும்மூர்த்திகளுக்கும் பொருந்தக்கூடியதே.

- சௌந்தர்ய லஹரி

கயிலை... காலடி... காஞ்சி! - 19 - ‘வேண்டினேன்... கிடைத்தது!'

தேனம்பாக்கம் தலத்துக்கு வந்து பிரம்மபுரீஸ்வரரையும், தாம் நீண்ட நெடியகாலம் உலக நன்மைக்காக தவம் இயற்றிய குடிலையும் தரிசித்துச் செல்பவர்களின் குறைகள் எல்லாம் நீங்கி, அவர்களின் வாழ்க்கையில் அனைத்து நன்மைகளும் ஏற்பட வேண்டும் என்பதுதானே மகா பெரியவா திருவுள்ளம்?!

அதேபோல், அங்கே சென்று வேண்டிக்கொண்டு வருபவர்களுக்கு அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேறி வருவதை பக்தர்கள் பலரும் அனுபவப்பூர்வமாக உணர்ந்துகொண்டு வருகிறார்கள்.

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த உஷா என்பவர், தன்னுடைய அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

‘‘என்னுடைய பெண் படித்துவிட்டு வேலைக்குக் காத்திருந்தாள். வங்கித் தேர்வும் எழுதி முடித்துவிட்டாள். தேர்வு முடிவு வருவதற்கு முன்பு அவளுக்கு உள்ளுக்குள் ஒரு கவலை. தேர்வுகளில் தேர்ச்சி பெற்றாலும்கூட, தேசியமயமான வங்கி என்பதால் எங்கே வேண்டுமானாலும் பணி நியமனம் செய்வார்கள். குடும்பத்தை விட்டுத் தனியாக இருந்து அவளுக்கு பழக்கம் இல்லை என்பதாலும், போகும் இடம் எப்படி இருக்குமோ என்ற அச்சத்தினாலும் கலக்கமாகவே இருந்தாள். அப்போதுதான் தேனம்பாக்கம் தலத்தைப் பற்றித் தெரிந்து கொண்டு, அங்கே சென்று இரண்டு தேங்காய்களை வைத்து வேண்டிக்கொண்டோம். என்ன ஆச்சர்யம்?!  வேண்டிக்கொண்டு வந்த சில நாள்களிலேயே தேர்வு முடிவுகள் வந்ததுடன், சென்னைக்கு அருகிலேயே வேலைக்கான உத்தரவும் வந்துவிட்டது’’ என்று நெகிழ்ச்சியுடன் நம்மிடம் தெரிவித்தார்.

நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்த காஞ்சிமுனிவரின் அனுக்கிரஹம் அளவில்லாதது என்பதற்கு மற்றுமொரு சான்று அந்தத் தொழிலாளி. கடும் உழைப்பாளியான அவருக்கு, காஞ்சி மகா பெரியவாளிடம் இருந்த பக்திக்கு அளவே இல்லை.

கயிலை... காலடி... காஞ்சி! - 19 - ‘வேண்டினேன்... கிடைத்தது!'அவருக்கு ஷிப்ட் முறையில் வேலை. மதிய ஷிப்ட் வரும் வாரங்களில் எல்லாம், காலையில் 6 மணிக்கெல்லாம் புறப்பட்டு, காஞ்சிபுரம் சென்றுவிடுவார். மனம் குளிரக் குளிர மகா ஸ்வாமிகளை தரிசிப்பார். பிறகு, பகல் 1 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு 3 மணிக்கெல்லாம் வேலைக்கு வந்துவிடுவார்.

காலை நேர ஷிப்ட் இருக்கும் நாள்களில் ஷிப்ட் முடிந்த பிறகு காஞ்சிபுரம் சென்று திரும்புவது சிரமம் என்பதால், வாரக் கடைசியில் சென்று வருவார். அப்படிப் போகமுடியாத நிலை ஏற்பட்டால், விடுமுறை விண்ணப்பம் எழுதிக் கொடுத்துவிட்டு போவார். விடுமுறை எடுக்கவேண்டும் என்றால், சரியான காரணம் சொல்லவேண்டுமே!

அவருக்கு பிரபலமான ஓர் ஆங்கில மாத  இதழை வாங்கும் வழக்கம் இருந்தது. அந்த இதழில் ஆங்கில மொழியறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில் புதுப்புது வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும்.

அவற்றை தினமும் படித்தறிவதுடன், அப்படியான வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர் எழுதும் கடிதத்தைப் படிக்கும் எவரும் விடுமுறைக்கான காரணத்தை நிராகரிக்க முடியாது. அதன் காரணமாக தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள், தங்களுக்கு விடுமுறை வேண்டும் என்றால், அவருடைய உதவியைத்தான் கேட்பார்கள்.

அவருடைய ஆங்கிலப் புலமையைக் கண்ட நிர்வாகத்தினர், அவரை அழைத்து அலுவலகப் பணியில் சேர்த்துக்கொள்வதாகச் சொன் னார்கள். ஆனால், தான் பள்ளி இறுதி வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாக அவர் தெரிவித்தார். நிர்வாகத்தினரோ `தபால் மூலம் மேற்படிப்பு படிக்கலாமே' என்று அறிவுறுத்தினார்கள்.

அவருக்கும் அதில் உடன்பாடுதான் என்றாலும், மகா பெரியவாளிடம் உத்தரவும் அனுக்கிரகமும் பெற்றுக்கொள்வதற்காகச் சென்றார். காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் இறங்கி, அங்கிருந்து தேனம் பாக்கத்துக்கு நடந்து சென்றார். வழியில் எதிரில் வந்தவர்கள் எல்லோரும் அவரைப் பார்த்து ஏதோ சைகை காட்டிக்கொண்டு போனார்கள். ஒன்றும் புரியாமலேயே தேனம்பாக்கத்துக்கு போய்விட்டார். அங்கே வெளியில் இருந்தவர்கள் பேசிக்கொண்டதில் இருந்து, மகா பெரியவா அன்றைக்கு காஷ்ட மௌனம் அனுஷ்டிப்பதாகத் தெரிந்து கொண்டார். தரிசனம் கிடைப்பதுகூட கஷ்டம்தான் என்றும் புரிந்துகொண்டார்.

செய்வதறியாமல் திகைத்து நின்றவருக்கு அருகில், அப்போதுதான் அபிஷேகமும் அலங்காரமும் முடிந்து அர்ச்சனைக்குக் காத்திருக்கும் அம்பிகையைப் போன்ற தோற்றத்தில், பச்சைப் பாவாடை மஞ்சள் ரவிக்கை அணிந்த சிறுமி ஒருத்தி வந்து, ‘என்ன அசமந்தமாட்டம் நின்னுட்டிருக்கே? பெரியவா உன்னைக் கூப்பிடறா’ என்று சொல்லியபடியே கருவறையை நோக்கி ஓடினாள்.

அவளைத் தொடர்ந்து ஸ்வாமி சந்நிதி அர்த்த மண்டபத்துக்குச் சென்றவர் திகைத்துப்போனார். அந்தச் சிறுமி அங்கே இல்லை. `என்ன இது அதிசயம்' என்ற சிலிர்ப்போடு பிரம்மபுரீஸ்வரரை தரிசித்து விட்டு வெளியில் வந்தவரிடம் ஒருவர் வந்து, ‘உங்களை பெரியவா கூப்பிடறா’ என்று சொன்னார். அவ்வளவுதான் ஓடோடிச் சென்றவர், மகா பெரியவாளை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தார். அன்ற லர்ந்த தாமரையாய் அந்தப் பரபிரம்மத்தின் திருமுகத்தில் அப்படியொரு புன்னகை!

உடல்மொழியும் வாய்மொழியும் தவிர்த்து, அமைதியில் திளைப்பதே காஷ்டமெளனம். மகாபெரியவா உடல்மொழி மெளனம் கலைத்து, இவரைப் பார்த்துப் புன்னகைத்து, `என்ன வேணும்?' என்று சைகையால் கேட்டார். அந்தத் தொழிலாளி, விஷயத்தை சொல்லி மேற்கொண்டு படிக்க விரும்புவதாகத் தெரிவித்து, பெரியவாளின் அனுக்கிரகம் வேண்டும் என்றும் பிரார்த்தித்தார்.

மகா பெரியவா ஒன்றுமே சொல்லவில்லை. அந்தத் தொழிலாளியைச் சற்றுநேரம் கனிவு ததும்ப பார்த்தவர், அந்தத் தொழிலாளி தமக்கு முன்பாக வைத்திருந்த மேல்படிப்புக்கான விண்ணப்பத்தை அவர் பக்கமாக நகர்த்திவிட்டு, அவருக்கு தம் திருக்கரங்களால் பிரசாதம் கொடுத்து அனுப்பிவிட்டார்.

அதற்குப் பிறகு என்ன நடந்தது தெரியுமா?

-திருவருள் தொடரும்...