Published:Updated:

சக்தி யாத்திரை - சுவாமிமலை!

அற்புதத் தலங்கள், விசேஷ வழிபாடுகள், ஆன்மிகப் பெரியோர்களுடன் சிலிர்ப்பூட்டும் பயணம்!

சக்தி யாத்திரை - சுவாமிமலை!
சக்தி யாத்திரை - சுவாமிமலை!

வ்வொரு திருத்தலமாக யாத்திரை மேற்கொண்டு இறைவனை வழிபடுவதில் நமக்குக் கிடைக்கும் ஆத்ம திருப்தியே தனிதான். அதனால் நமக்கு ஏற்படும் பரவச உணர்வை அனுபவத்தில்தான் உணரமுடியும். அந்தப் பரவச அனுபவத்தை, `சக்தி விகடன்' வாசகர்களும் பெறும் வகையில், வாசகர்களுடனும் ஆன்மிகப் பெரியோர்களுடனும் புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வகையில் தொடங்கவுள்ளது `சக்தி யாத்திரை!'. பிணிகள் தீர்க்கும் வேல்மாறல் பாராயணம், நினைத்ததை நிறைவேற்றும் திருப்புகழ் மகாமந்திர பூஜை மற்றும் ஆன்மிகப் பெரியோர்களின் வழிகாட்டுதலுடன் அமையப்போகிறது இந்த அற்புத யாத்திரை.

முதல் யாத்திரையில் - ஆறுமுகன் அருள்பாலிக்கும் ஆறு திருத்தலங்கள் இடம்பெறுகின்றன. தலங்களை தரிசிப்பது மட்டுமன்றி, ஆன்மிக உரையாடல்கள், சிறப்புச் சங்கல்பம், விசேஷ வழிபாடுகள் எனக் களைகட்டப் போகிறது சக்தி யாத்திரை. யாத்திரையில் நாம் தரிசிக்கவிருக்கும் தலங்களைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு இது.

சுவாமிமலை:

`முருகா எனவோர் தரமோதடியார்
 முடிமேல் இணைதாள் அருள்வோனே...’ 

என்று அருணகிரிநாதர் அனவரதமும் உச்சரித்த மந்திரம் `முருகா.’ `முருகா... என்போருக்கு ஒருநாளும் துன்பமில்லை’ என்கின்றன புராணங்கள். முருகனின் ஆறுபடை வீடுகளுள் சுவாமிமலை தனிச்சிறப்பானது. இங்குதான் அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையனாக, நல்லாசிரியனாக முருகப்பெருமான் அமர்ந்திருக்கிறான். அழகு தமிழில் இந்த ஊர், `திருவேரகம்’ என்று அழைக்கப்பட்டு வந்தது. ஏர் + அகம் அதாவது வேளாண்மைக்குப் பயன்படும் ஏர்களை அதிகம் பயன்படுத்தும் வகையில் விவசாயம் செழித்திருந்த இடம் என்பதால், இந்தப் பெயர் உண்டானதாகச் சொல்வார்கள். நெல்லிமரக்காடாக இந்த ஊர் இருந்தமையால் `தாத்ரிகிரி' (தாத்ரி - நெல்லி) என்றும் அழைக்கப்பட்டது. அதுமட்டுமா? ஒவ்வொரு தேவரும் இங்கு வந்து முருகப்பெருமானை வணங்கியதால் பல பெயர்களால் இந்த ஊர் அழைக்கப்பட்டது. சிவகிரி, குருவெற்பு, ஞானஸ்கந்தகிரி, குருமலை, சுவாமி சைலம்... இப்படிப் பல பெயர்கள். இங்குள்ள முருகப்பெருமானும் ஸ்வாமிநாதன், பரமகுரு, தகப்பன் சுவாமி, பிரணவ மூர்த்தி என்று பல பெயர்களில் வணங்கப்படுகிறார். 


`பிரம்மனுக்குத் தெரியாத பிரணவத்தின் பொருளை நீ அறிவாயோ?' என்று ஈசன் கேட்க, அவருக்கே குருவாகி முருகப்பெருமான் உபதேசித்த அற்புதத் தலம் இது என்பதால், இங்கு குருவருள் நாடி வரும் பக்தர்கள் கூட்டமே அதிகம். மாடக்கோயில் வகையில் கோயில் அமைந்திருக்கிறது. மூன்று பிராகாரங்களைக் கொண்டது இந்த ஆலயம். மூன்றாவது பிராகாரம் மலையடிவாரத்திலும்,  இரண்டாம் பிராகாரம் கட்டுமலையின் நடுப்பாகத்திலும், முதல் பிராகாரம் உச்சியில் கருவறையைச் சுற்றியும் அமைந்திருக்கின்றன. 
ஐந்து நிலைகள் கொண்ட தெற்கு நோக்கிய ராஜகோபுரத்தைக் கடந்து சென்றால் வல்லப கணபதியைத் தரிசிக்கலாம். பின்னர் கீழேயுள்ள மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், ராஜகணபதி, சோமாஸ்கந்தர், ஸ்ரீவிசுவநாதர், விசாலாட்சி அம்மை, தட்சிணாமூர்த்தி ஆகிய தெய்வங்களின் சந்நிதிகளை தரிசிக்கலாம். 


மேலே செல்ல 60 ஆண்டுகளைக் குறிப்பிடும் 60 படிகளைக் கடந்து முருகனைத் தரிசிக்கச் செல்ல வேண்டும். மேலே சென்றதும் அருள்பவர் `கண்கொடுத்த கணபதி.' `இவரை வணங்கினால் கண் தொடர்பான சகல நோய்களும் நீங்கிவிடும்’ என்கிறார்கள். கருவறையில் தகப்பன் ஸ்வாமியாகக் கம்பீரமான வடிவில் நான்கரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள்காட்சி  தருகிறார். வலது கரத்தில் தண்டாயுதம் தாங்கி, இடது கரத்தை இடுப்பில் வைத்து, சிரசின் மீது ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் ருத்திராட்ச மாலையும் விளங்கக் கருணாசாகரமாகக் காட்சிதருகிறார் ஸ்வாமிநாதர். ஜொலிக்கும் ஞானமும், சிரிக்கும் சாந்தமும் கலந்த அந்த திவ்ய முக அழகை நாளெல்லாம் தரிசித்துக்கொண்டே இருக்கலாம். 

`காலம் சொல்ல முடியாத ஆலயங்களுள் இதுவும் ஒன்று’ என்று சொல்கிறார்கள். ஆலய மகாமண்டபத்தில் முருகப்பெருமானின் வாகனமாக மயிலுக்கு பதிலாக இந்திரனின் ஐராவத யானை நிற்கிறது. கிழக்கு நோக்கி அருளும் முருகப்பெருமானுக்கு விழா நாள்களில் தங்கக் கவசம், வைர வேல், தங்க சகஸ்ரநாம மாலை, ரத்தின கிரீடம் சூட்டிய அருள்கோலத்தை தரிசிப்பது விசேஷமானது. முருகப்பெருமானை இங்கு தங்கத் தேரில் தரிசிப்பது கண்கொள்ளாக் காட்சி. பாரதம் எங்கும் முருகப்பெருமானைத் தேடி தேடி தரிசித்து வந்த அருணகிரிநாதர், இந்தத் தலத்துக்கு வந்ததும், சுவாமிநாதனின் திருவடிவழகில் மயங்கியே போனார் என்பார்கள். 38 திருப்புகழ்ப் பாடல்களைப் பாடியும் திருப்தியடையாமல், போகுமிடமெங்கும் ஸ்வாமிநாதனையே நினைத்துக்கொண்டாராம் அருணகிரியார். 

சங்கீத பிரம்மம் ஸ்ரீமுத்துசுவாமி தீட்சிதர், கடுக்கண் தியாகராஜ தேசிகர் போன்ற மகாமேதைகள் பலரும் இந்த முருகப்பெருமானைப் பாடித் தொழுதிருக்கிறார்கள். சஷ்டி, கார்த்திகை, விசாகம் என முருகப்பெருமானின் அருளைச் சொல்லும் எல்லா விழாக்களும் இங்கு சிறப்பானவை. முருகப்பெருமானின் ஆலயங்களிலேயே இங்குதான் அலங்காரச் சிறப்புடையவராக முருகன் இருக்கிறார் என்று ஆன்றோர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக, முருகப்பெருமானுக்குச் செய்யப்படும் ஒவ்வோர் அபிஷேகத்திலும் ஒவ்வோர் அருள் வடிவில் முருகப்பெருமான் காட்சி தருவதாக ஆலய வரலாறு கூறுகிறது. விபூதி அபிஷேகத்தில் ஞானியாக, சந்தன அபிஷேகத்தில்  பாலசுப்ரமணியனாக, பஞ்சாமிர்த அபிஷேகத்தில் ராஜகோலத்தில் கம்பீரமாகக் காட்சி தருவார். மேலும், கருவறையைச் சற்றுத் தள்ளி நின்று உற்று நோக்கினால், ஸ்வாமிநாதன் நின்றிருக்கும் பீடம் ஆவுடையைப் போலவும், ஸ்வாமிநாதனே லிங்க பாணமாகவும் இருப்பதைப்போல உணரலாம். அந்த அற்புத நொடியில் உடல் சிலிர்த்து, வியர்த்துவிடும் என்பது உண்மை. ஆம், இங்கு முருகப்பெருமானே சிவவடிவிலும் காட்சி தருகிறார் என்பது ஒரு வியப்பான செய்தி. 

`ஏடணி குழைச்சித் தூர்த்த வாடகி குறத்திக்கு ஏற்ற ஏரக
பொருப்பில் பூத்த பெருமாளே'... 

என்று அருணகிரிநாதர் பாடிப் பணிந்ததைப்போல நாங்களும் பணிகின்றோம். எங்கள் ஏழேழ் தலைமுறைக்கும் அருள் புரிய வேண்டும் ஏடகப் பெருமாளே!

அற்புதமான இந்த யாத்திரையில் 

நீங்களும் கலந்துகொள்ள வேண்டுமா?

இங்கே க்ளிக் செய்யவும்...