Published:Updated:

சக்தி யாத்திரை - குன்றக்குடி!

சக்தி யாத்திரை - குன்றக்குடி!
சக்தி யாத்திரை - குன்றக்குடி!

வ்வொரு திருத்தலமாக யாத்திரை மேற்கொண்டு இறைவனை வழிபடுவதில் நமக்குக் கிடைக்கும் ஆத்ம திருப்தியே தனிதான். அதனால் நமக்கு ஏற்படும் பரவச உணர்வை அனுபவத்தில்தான் உணரமுடியும். அந்தப் பரவச அனுபவத்தை, `சக்தி விகடன்' வாசகர்களும் பெறும் வகையில், வாசகர்களுடனும் ஆன்மிகப் பெரியோர்களுடனும் புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வகையில் தொடங்கவுள்ளது `சக்தி யாத்திரை!'. பிணிகள் தீர்க்கும் வேல்மாறல் பாராயணம்,  நினைத்ததை நிறைவேற்றும் திருப்புகழ் மகாமந்திர பூஜை மற்றும் ஆன்மிகப் பெரியோர்களின் வழிகாட்டுதலுடன் அமையப்போகிறது இந்த அற்புத யாத்திரை.


முதல் யாத்திரையில் - ஆறுமுகன் அருள்பாலிக்கும் ஆறு திருத்தலங்கள் இடம்பெறுகின்றன. தலங்களை தரிசிப்பது மட்டுமின்றி, ஆன்மிக உரையாடல்கள், சிறப்பு சங்கல்பம், விசேஷ வழிபாடுகள் என களைகட்டப் போகிறது சக்தி யாத்திரை. யாத்திரையில் நாம் தரிசிக்கவிருக்கும் தலங்களைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு இது.

ஒருமுறை சிவபெருமானை தரிசிக்க கயிலைக்கு வந்த பிரம்மாதி தேவர்கள் முருகப்பெருமானையும் வணங்கிப் பணிந்தனர். அப்படி வந்தவர்கள் வணங்கிவிட்டு மட்டும் சென்றிருக்கக் கூடாதா? ஒரு கலகத்தையும் ஏற்படுத்திவிட்டுச் சென்றுவிட்டனர். ஆம். அப்போது அங்கு உலவிக்கொண்டிருந்த அழகிய மயிலிடம்  ``முருகப்பெருமானின் வாகனமாக மாறவேண்டி சூரபதுமன் தனது தம்பியருடன் காஞ்சிபுரத்தில் கடும்தவம் மேற்கொண்டிருக்கிறான்’’ என்ற விஷயத்தை கூறிச் சென்றுவிட்டார்கள். எங்கே தனக்கு பதிலாக சூரர்கள் முருகப்பெருமானை சுமக்கும் பாக்கியத்தைப் பெற்றுவிடுவார்களோ என்று தேவமயில் வருந்தியது. இதனால் தனது மனவருத்தத்தைப் போக்கிட முருகப்பெருமானைத் தியானித்தது. மயிலின் பிரார்த்தனைக்கு இரங்கிய முருகப் பெருமான், மயிலின் மனவருத்தத்தைப் போக்கிடும்விதத்தில் சூரனையும் அவன் சகோதரர்களையும் கணங்களாக்கித் தம் அருகில் வைத்துக்கொண்டார்.


சூரனும் அவனுடைய சகோதரர்களும், முருகப்பெருமானின் வாகனமாக மாறும் பேற்றினைத் தாங்கள் அடையவிடாமல் மயில் மூலம் தடுத்துவிட்ட தேவர்கள் மீது சினம் மிகக் கொண்டனர். அவர்களைப் பழிதீர்க்கும் நாளை எதிர்நோக்கினர். அந்த நாளும் வந்தது. ஒருநாள் சூர சகோதரர்கள் மயிலிடம் சென்று, ``மயிலே! உன்னால் தங்களைவிட விரைவாகச் செல்ல முடியாது என்று திருமாலின் கருடனும், நான்முகனின் அன்னமும் இழிவாகப் பேசிக்கொண்டன” என்று ஏளனமாகப் பேசினர். இதனால் தேவமயில் கோபம்கொண்டு சிறிதும் யோசிக்காமல் கருடனையும் அன்னத்தையும் விழுங்கிவிட்டது. தங்களது வாகனங்கள் இல்லாத நிலையில் திருமாலும் நான்முகனும் முருகப்பெருமானிடம் முறையிட்டனர். நடந்ததை அறிந்த முருகப் பெருமான் மயில் விழுங்கிய கருடனையும் அன்னத்தையும் விடுவிக்குமாறு உத்தரவிட்டார். முருகனின் உத்தரவு கேட்டு கருடனையும் அன்னத்தையும் விடுவித்தது மயில்.


திருமாலையும் நான்முகனையும் வருத்தமுறச் செய்த மயிலின் மீது சினம்கொண்ட முருகப்பெருமான், மயிலை மலையாகும்படிச் சபித்தார். `கோபத்தால் அறிவிழந்தோமே..!’ என்று வருந்திய மயில், முருகப்பெருமானிடம் சாப விமோசனம் கேட்டது. மெய்யாகவே தவறு உணர்ந்து வருந்திய மயிலிடம் பரிவுகொண்ட முருகப்பெருமான், ``தென் பகுதியில் பாண்டிய நாட்டில் திருப்பத்தூருக்குக் கிழக்கே உள்ள அரசவனம் எனும் குன்றக்குடி தலமடைந்து மலையாக இருப்பாயாக. அங்கு நான் வந்து உனக்குச் சாப விமோசனம் தந்து ஆட்கொள்கிறேன்” என்று வரமருளினார். அதன்படியே, குன்றக்குடிக்கு வந்துசேர்ந்த மயில், முருகப்பெருமானை தியானித்து வணங்கியதால் மயிலுக்கு அருள்புரியச் சித்தம்கொண்டார் முருகன். குன்றக்குடிக்கு எழுந்தருளி, மலை வடிவில் இருந்த மயிலை இரு பகுதிகளாக மாற்றி, ஒன்றுக்கு சாரூப்ய பதவி அளித்தவர், மற்றொரு பாகத்தைத் தொடர்ந்து மலையாகவே இருக்குமாறு கூறினார். சாபம் நீங்கப் பெற்ற மயில், `முருகப் பெருமான் தொடர்ந்து அதே இடத்தில் எழுந்தருளி, வேண்டி வந்து வணங்குபவர்க்கு எல்லா வரமும் அருளவேண்டும்' என்று வரம் கேட்டது. அதன்படி, முருகப்பெருமான் வள்ளி - தேவசேனா சமேதராகக் குன்றக்குடி மலையின் மீது கோயில்கொண்டார் என்கிறது கோயில் வரலாறு. 


காரைக்குடி - திருப்பத்தூர் சாலையில் காரைக்குடியிலிருந்து மேற்கே 8 கி.மீ தொலைவிலிருக்கிறது குன்றக்குடி. ஊரின் நடுவே உயர்ந்து நிற்கும் மலையின் மேல், தெற்கு நோக்கி அமைந்திருக்கும் ராஜகோபுரம் நம் கண்ணையும் கருத்தையும் கவர்கிறது. இந்தத் திருக்கோயில் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒன்று, கீழ்க்கோயில். இங்கு தேனாற்றுநாதரும், அழகம்மையும் கிழக்கு நோக்கி அருளாசி தருகிறார்கள். மலைக்கோயிலில்தான் முருகப்பெருமான் அருள்கிறார். குடைவரைக் கோயிலான குன்றக்குடிப் பெருமான் ஆலயம் அழகானது.

மலைக்கோயில் கருவறையில், ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு, அழகிய மயில்மீது கம்பீரமாக அமர்ந்து, கிழக்கு நோக்கி அருளாசி தருகிறான் முருகப்பெருமான். ஆறுமுகன் அமர்ந்திருக்கும் மயில் வடக்குப் பார்த்திருக்கிறது. ஆறுமுகப் பெருமானின் வலமும் இடமுமாக முறையே தனித்தனி மயில் வாகனங்களில் வள்ளியும் தெய்வானையும் வீற்றிருக்கிறார்கள். இதுபோன்ற மூன்று மயில் வாகன தரிசனம் காண்பதற்கரியது என்கிறார்கள். முருகனின் மயில் வாகனமும், முருகப்பெருமானை சூழ்ந்திருக்கும் திருவாசியும், மூலமூர்த்தமும் ஒரே சிலையாக வடிக்கப்பட்டிருக்கிறது. 


அழகே வடிவான குன்றக்குடி பெருமான் அருளாசி வழங்குவதிலும் தாராளச் சிந்தனைகொண்டவர். ராஜப் பிளவை நோய் ஏற்பட்டு கடுமையாக பாதித்த பெரிய மருதுபாண்டியரை காத்து ரட்சித்தவர் இந்த முருகனே. சிதம்பரம் அருகேயுள்ள கீழ்ப்பரப்பை என்னும் ஊரைச் சேர்ந்த சுந்தரவேலு முதலியார் என்பவரின் மகன் செந்தில்வேலு என்பவருக்குப் பேசும் சக்தியை அளித்து அருள் செய்தவரும் இந்த முருகப்பெருமானே. இப்படி இன்றும் பல அற்புதங்களைச் செய்து, தன்னை நம்பி வரும் பக்தர்களை எந்நாளும் காத்து வருகிறான் முருகப்பெருமான்
 

அற்புதமான இந்த யாத்திரையில் 

நீங்களும் கலந்துகொள்ள வேண்டுமா?

இங்கே க்ளிக் செய்யவும்...