சித்திர ராமாயணம்

லட்சுமணன் எங்கே உறங்கினான்?

இந்த வேடத்தமையனிடம், அந்தத் தம்பியைக் குறித்தும் விசாரிக்க வேண்டுமென்று தோன்றுகிறது பரதனுக்கு. ‘`ராமனுடன் இருப்பானே, அவன் இரவுப்பொழுது கழித்தது எவ்விடத்திலே?” என்று மெள்ளக் கேட்கிறான் பரதன்.

சித்திர ராமாயணம்

பரதன் கேட்ட கேள்விக்கு, வேடர்களின் தலைவன் என்ன பதில் சொன்னான்? “லட்சுமணன் எங்கே உறங்கினான்?” என்ற கேள்விக்கு, “லட்சுமணன் உறங்கவே இல்லை” என்கிறான்.

‘அல்லைஆண்(டு) அமைந்த மேனி
அழகனும், அவளும் துஞ்ச,
வில்லைஊன் றியகை யோடும்
வெய்துயிர்ப் போடும் வீரன்,
கல்லைஆண்(டு) உயர்ந்த தோளாய்!
கண்கள்நீர் சொரியக், கங்குல்
எல்லைகாண் பளவும் நின்றான்,
இமைப்பிலன் நயனம்’ என்றான்.


‘`அந்த அழகனும், அந்த அழகனுக்கு ஏற்ற அழகியும் களைப்பினால் உறங்கிப்போனார்கள், அந்தக் கரடுமுரடான படுக்கையிலே. ஆனால் அவர்களுடைய அந்தப் பரிதாப நிலையை நோக்கிக் கண்ணீர் சொரிந்து கொண்டிருந்தான் லட்சுமணன். அவனுக்கு எப்படி உறக்கம் வந்திருக்கும்?” என்று சொல்ல வந்த குகன், வில்லை ஊன்றிய அந்தக் கையையும், அந்த வீரனுடைய உஷ்ணமான பெருமூச்சையும்கூடப் பிரத்தியட்சமாக்கி விடுகிறான் பரதனுக்கு.

‘`பரதா! கேட்பாயாக’’ என்று சொல்லி, ‘`கண்ணீர் சொரிந்துகொண்டே இரவின் எல்லை கண்டான் லட்சுமணன்; விடியற்காலம் வரை அப்படியே நின்றுகொண்டிருந்தான். கண் மூடவில்லை ஒரு கணமும்” என்கிறான். அப்படியே தானும் கண்விழித்துப் பார்த்துக்கொண்டிருந்த சாட்சி அல்லவா?

அவனும் தம்பி, நானும் தம்பியா?

லட்சுமணனுடைய அந்த நிலையைக் குகன் வாயிலாகப் பார்த்துவிட்ட பரதன், ‘அதுதான் சகோதர வாஞ்சை’ என்று வியந்து வியந்து பெருந்துயரமும் பேரவமானமும் அடைந்தான்.

“ராமனுக்குத் தம்பிகளாய்ப் பிறந்தோம் நானும் லட்சுமணனும். தம்பி என்ற முறையில் நானும் லட்சுமணனை ஒத்திருப்பவன்தானே? எனினும் ராமனது முடிவில்லாத துன்பத்துக்குக் காரணம் நான்” என்று தன்னைத்தானே நொந்து கொள்கிறான்.
‘`அவனோ ராமனுக்கு என்னால் ஏற்பட்ட துன்பத்தைக் குறைப்பதற்காக எப்படிப் பட்ட தியாகங்களைச் செய்கிறான்!” என்று தன்னை நொந்துகொண்டே லட்சுமணனுடைய அளவில்லாத அன்பையும் தியாகத்தையும் எண்ணி வியந்தான்.

பரதனுடைய துயரமும், அவமான உணர்ச்சியும், வியப்பும், அந்தத் தங்கமான பெருங்குணமும் நம்மையும் தொத்திக்கொள்ளுமோ என்று தோன்றுகிறது.
 
பரதனும் பாராட்டாத தியாகம்

சரி: லட்சுமணத்தம்பியின் தியாக புத்தியை, அன்புப்பாசத்தை வியந்த பரதன், அத்தகைய உறவில்லாத  குகனும்  அப்படிக் கண்விழித்துக் காவல் செய்து, அன்பைக் கண்ணீராய்ப் பொழிந்ததைக் பாராட்டினானா?

இல்லை, குகன் தியாகத்தைப் பாராட்டுவோர் இல்லை. லட்சுமணனாவது வில்லும் கையுமாக நின்றான்; அவனைக் காட்டிலும் ஜாக்கிரதையாக அம்பு தொடுத்த வில்லும் கையுமாக உருகிநின்ற குகனும் விடியற்காலம் வரையில் கண்மூடாமல் இருந்துதானே லட்சுமணனுடைய நிலையைக் கண்டு சொல்லுகிறான்?

ஆனால், தான் அப்படி விழித்துக் காவல் செய்வதைக் குகன் பரதனிடம் சொல்லவே இல்லை என்பது கவனிக்கத்தக்கது. தான் ராமனுக்குச் செய்த தியாகம் அவ்வளவு இயற்கையாகத் தோன்றியது; மூச்சுவிடுவது போலவே. லட்சுமணனுடைய தியாகம்தான் பிரமாதப்படுத்துகிறது குகனுள்ளத்திலே.

பரதனும் கேட்கவில்லை. குகனும் சொல்லவில்லை. இத்தகைய சகோதர சம்பத்துக்குப் பாராட்டும் வேண்டுமோ?

பரதன், ராமன் படுத்திருந்த இடத்தைப் பார்த்துவிட்டான்; லட்சுமணன் இரவெல்லாம் ஒரே விழிப்பாய் அருகே காத்து நின்ற அந்த இடத்தையும் பார்த்துவிட்டான். துன்பம் முதலான உணர்ச்சி அலைகளுக்கு இடையே முங்கி முழுகிக் கரையேறிய பரதன் அன்றிரவில் அந்தப் புல்லிலும் புழுதியிலும் படுத்திருந்தான்.

தோணியில் நடந்தது

பொழுது புலர்ந்தபின், பரதன் கங்கையாற்றைக் கடந்து ராமன் இருக்குமிடம் செல்ல விரும்பினான். குகனுடையக் கட்டளையால் பல தோணிகள் வந்தன.

அந்தத் தோணிகளில் ஏறிச் சேனைகளும் மற்ற அயோத்தி மக்களும் கங்கையைக் கடந்துவிட்டார்கள். ஒரு தோணியில் பரதன் ஏறிக்கொண்டான்; தன்னுடன் தம்பி சத்துருக்னனையும் தாய்மாரையும் சுமந்திரனையும் ஏற்றிக்கொண்டான். குகனையும் தன்னுடன் தோணியில் ஏறச்செய்தான்.

தோணி நகர்கிறது; துடுப்புகள் தள்ளுகின்றன.

அருகே வேறு தோணிகளில் சுற்றத்தாரும் முனிவர் முதலான பெரியவர்களும் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களெல்லாம் வயது முதிர்ந்த ஒரு பெண்மணியை அடிக்கடி பக்தியுடன் தொழுகிறார்களாம்.

அந்தக் கம்பீரமான - தொழத்தக்க - தோற்றத்தைக் கண்டு குகனும் அம்மாளைத் தொழுது நின்று பரதனை நோக்கி, ‘`அந்தத் தேவி யாரோ?” என்று கேட்கிறான்.

குகன் கண்களில் அந்த அம்மணி, முனிவர்கள் மட்டுமல்ல, தேவர்களும் தொழத்தக்க பெரியாளாகத் தோன்றுகிறாள்.

`சுற்றத்தார் தேவரொடும்
தொழநின்ற கோசலையைத்
தொழுது நோக்கி,
‘வெற்றித்தார்க் குரிசில்! இவர்
யார்?’ என்று குகன்வினவ,
‘வேந்தர் வைகும்
முற்றத்தான் முதல்தேவி
மூன்றுலகும் ஈன்றானை
முன்ஈன் றானைப்
பெற்றத்தால் பெருஞ்செல்வம்
யான்பிறந்த லால்துறத்த
பெரியாள்’ என்றான்.


பரதனைக் குகன் ‘வெற்றித்தார்க் குரிசில்’ என்று அழைப்பதே நம்மைச் சிந்திக்கவைக்கிறது. பரதனைப் படையோடு கண்டதும் குகன் சீறிச் சினந்து போராடி அதம் செய்துவிட வேண்டுமென்று வீரவாதம் செய்தானல்லவா? அந்த ‘நடைபெறாத’ போரில் ஒரு துளி ரத்தம் சிந்தாமல் பரதன் வெற்றி பெற்றுவிட்டான் என்பது குறிப்பு. அந்த வெற்றி மாலையை இப்போது சொல்மாலையாகக் குகன், பரதனுக்கு அணிவதாய் ஊகிப்பது மிகையாகாது.

இப்படிப் பரதனுடைய குணாதிசயத்துக்குத் தோற்ற குகன், கோசலையின் தொழத்தக்க முக காம்பீர்யத்தையும் பயபக்தியுடன் நோக்குகிறான்.

சித்திர ராமாயணம்

சாமானியர் அல்லாத, உயர்வுபெற்ற பெரியார் ஒருவரைத் தெரிந்துகொள்ள விரும்புவோர் பளிச்சென்று அவரைக் கைநீட்டிச் சுட்டிக்காட்டி ‘`இவர் யார்?” அல்லது “நீர் யார்?” என்று கேட்பது சரியன்று, லௌகிக சம்பிரதாயமும் அன்று. அத்தகாத முறையை இக்காட்டு மனிதனுடைய மனப்பண்பும் கைவிடுகிறது. கோசலையைக் கை நீட்டிச் சுட்டிக்காட்டாது, கைகூப்பி நோக்குதலால் சுட்டிக்காட்டிப் பிறகு பரதனை நோக்கி, ‘`இவர் யார்?” என்று கேட்கத் துணிகிறான் குகன்.

பரதன் குகனுக்குக் கோசலையை அறிமுகப் படுத்துகையில்,  `‘இவள் தசரதர் தேவி - சக்கரவர்த்தியின் பட்டமகிஷி'’ என்று முதலில் கூறுகிறான். இந்தப் பெருமையைக் காட்டிலும் அதிகமான பெருமையாக, ‘`ராமனின் தாய்’’ என்கிறான்.

“படைப்புக் கடவுளையும் ஈன்றெடுத்த ரட்சக மூர்த்தியின் அவதாரமான லோகரட்சகன்’’ என்று ராமனைக் குறிப்பிட்டு, அந்த ‘`உலக ரட்சகனை உலகத்துக்கு அளித்த பெரியாள்” என்று மேலும் மேம்படுத்த விரும்புகிறான் கோசலையின் பெருஞ்சிறப்பை.

ஆனால், பரதனுடைய உணர்ச்சி  வெள்ளம் அதற்கும் அப்பால் பொங்கிவிடுகிறது. ராமனைப் பெற்ற பெருஞ் செல்வமாகிய உடைமைக்கு ‘முதலாளி’யாக மட்டும் இல்லையாம் கோசலை. அந்த உடைமையைக்காட்டிலும் அப்பெருஞ்செல்வத்தைத் துறந்த பெருமை அவளுக்கு உரியது என்கிறான் பரதன். ‘பெருகிய செல்வ’ரைக் காட்டிலும் ‘துறந்த செல்வ’ரைப் போற்றுவது இந்நாட்டின் மேதையல்லவா?

இப்படிக் கோசலையின் துறவுப் பெருமையை, தியாகப் பெருமையை வெளியிட எண்ணிய பரதன், ராமனைப் பெற்ற “பெருஞ்செல்வம் யான் பிறத்தலால் துறந்த பெரியாள்” என்றே சொல்லிவிடுகிறான்.

பட்ட மகிஷியென்ற பெருமைக்கும் மேலாக ராமனைப் பெற்ற புத்திரச் சம்பத்தைக் குறிப்பிட்டு, அதற்கும் மேலாக அப்பேர்ப்பட்ட புத்திரச் சம்பத்தைத் தியாகம் செய்த பெருமையை வற்புறுத்தி, அவற்றுக்கெல்லாம் சிகரமாக,  `‘இப்பெரியவளுக்கு இவ்விதமான பெருமையும் கிடைத்து விட்டது பாவியாகிய நான் பிறந்ததால்!” என்கிறான்.

கோசலாதேவிக்கு முன் இருந்த இன்ப நிலையும் இப்போதுள்ள துன்ப நிலையும் ஆகிய முரண்பாடு புண் செய்துவிட்டது பொன்னான நெஞ்சை. அந்த நெஞ்சின் புலம்பல் இது.

(12.10.47, மற்றும் 19.10.47 ஆனந்த விகடன் இதழ்களில் இருந்து)