Election bannerElection banner
Published:Updated:

தடைப்படும் மாடம்பாக்கம் சிவன் கோயில் கும்பாபிஷேகம்... என்ன சொல்கிறது அறநிலையத்துறை

தடைப்படும் மாடம்பாக்கம் சிவன் கோயில் கும்பாபிஷேகம்... என்ன சொல்கிறது அறநிலையத்துறை
தடைப்படும் மாடம்பாக்கம் சிவன் கோயில் கும்பாபிஷேகம்... என்ன சொல்கிறது அறநிலையத்துறை

பரிதாப நிலையில் பசு வழிபட்ட பரமன் கோயில்...

சென்னையின் புராதனமான திருக்கோயில் மாடம்பாக்கம் அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில். புராணச் சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும் கொண்டது. அருணகிரிநாதரால் பாடப்பெற்ற அற்புதத் திருத்தலம். கபில முனிவருக்குச் சாப விமோசனம் கொடுத்த தலம். இத்தனை மகிமைகளுக்கும் காரணமான அந்தக் கோயிலின் தற்போதைய நிலை எப்படியிருக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு முன்னர், திருக்கோயிலின் புராண வரலாற்றைத் தெரிந்துகொள்ளலாமே...


புராண காலத்தில் இந்தப் பகுதியில் வசித்து வந்த ஒருவனுடைய பசு, தினமும் மேய்ச்சலுக்குச் சென்று வரும். ஆனாலும், மடி வற்றியே திரும்பி வரும். அந்தப் பசு தரும் பாலைக் கொண்டுதான் அவனுடைய ஜீவனம் நடைபெறவேண்டும். ஒருநாள், இரண்டு நாள் பொறுத்துப் பார்த்த பசுவின் உரிமையாளன், அடுத்த நாளும் மடி வற்றிய நிலையில் பசு திரும்பி வந்ததால், கோபம் கொண்டு பசுவை அடித்தான். அடி தாங்கமுடியாத பசு மிரண்டு ஓடியது. அவனும் விடாமல் துரத்திச் சென்றான். ஓடிக்கொண்டிருந்த அதன் குளம்பு ஓரிடத்தில் பட்டு ரத்தம் பீறிட்டது. அந்தக் கணத்தில் அங்கே ஓர் அற்புதம் நிகழ்ந்தது. பசு, கபில முனிவராக மாற, ரத்தம் பீறிட்ட இடத்தில் பசுவின் மடியிலிருந்து வழிந்த பால் காய்ந்திருக்கும் தடம் தெரிந்தது. 

பசு தினமும் இங்குதான் பாலைச் சொரிந்து இறைவனை வழிபட்டது என்பதைப் புரிந்துகொண்ட உரிமையாளன் அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தான். அப்பொழுது, பசுவின் குளம்படிபட்ட தழும்போடு சிவலிங்கம் ஒன்று கிடைத்தது. லிங்கத்தை வணங்கிய கபில முனிவரும், பசுவின் உரிமையாளனும் மோட்சம் பெற்றார்கள். முன் பிறப்பில் செய்த சிவ நிந்தையின் பலனால் சாபம் பெற்று பசுவாகப் பிறந்த கபில முனிவருக்குச் சாப விமோசனம் அளித்ததால், சிவபெருமான் `தேனுபுரீஸ்வரர்' என்ற திருப்பெயருடன் அந்தத் தலத்தில் கோயில்கொண்டார்.

அந்தக் கோயில் இப்போது கவனிப்பாரின்றி சிதிலமடைந்திருக்கிறது என்று கேள்விப்பட்டு, கோயிலுக்குச் சென்றோம். புராதனமான இந்தக் கோயிலில் ஒரு காலத்தில் ராஜகோபுரம் இருந்தது என்பதற்குச் சாட்சியாகக் கற்களால் அமைக்கப்பட்ட வாயில் மண்டபம் எழிலுடன் காட்சிதருகிறது. அதன் மேல் செங்கற்களால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படும் கோபுரம் முழுவதும் இடிந்து விழுந்துவிட்டதைக் கண்டபோது மனம் பதறிவிட்டது. ஆயிரம் ஆண்டுகள் பழைமையான அந்தக் கோயிலுக்குள் சென்றபோது, சிவனடியார்கள் சிலர் கூடி நின்று மனதை உருக்கும் வண்ணம் திருவாசகம் பாடிக்கொண்டிருந்தார்கள்.

பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான் சிறியோமை
ஓவா துள்ளம் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால்...

மனதை வருடும் திருவாசகத்தைக் கேட்டபடியே கோயில் தூண்களில் அருள்புரிந்துகொண்டிருந்த சரபேஸ்வரர், ஆஞ்சநேயர், முருகப்பெருமான் ஆகியோரை பக்தியுடன் வணங்கிக்கொண்டிருந்தனர் பக்தர்கள். கோயிலுக்குள் சிவபெருமான், `தேனுபுரீஸ்வரர்’ எனும் பெயரிலும், அம்பாள் `தேனுகாம்பாள்’ எனும் பெயரிலும் அருள்புரிகிறார்கள். அவர்களை வணங்கும்போது மனதில் பரவசம் எழுகிறது. கோயிலில் காணப்படும் கல்வெட்டுகளில் இறைவனும் இறைவியும் `சிற்றேரி ஆளுடைய நாயனார்' என்றும் `நம்பிராட்டியார்' என்றும் கூறப்பட்டிருக்கிறார்கள்.

தேனுபுரீஸ்வரரையும், தேனுகாம்பாளையும் வணங்கினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. முருகன், பைரவர், சரபேஸ்வரர் ஆகியோர் வேண்டுதல் தெய்வமாக இருந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார்கள். 

கோயிலில் அர்த்த மண்டபம், முன் மண்டபம், தூண்கள் என்று எந்தப் பக்கம் திரும்பினாலும் நமது கலைப் பண்பாட்டையும், தெய்விகத் தன்மையையும் உணர்த்தும் சிற்பங்கள் நிறைந்திருக்கின்றன. சென்னையில் வழிபடப்படும் பழைமையான கோயில்களில் முக்கியமானது இந்த மாடம்பாக்கம், தேனுபுரீஸ்வரர் கோயில். சுந்தரச்சோழரின் காலத்தில் செங்கல் தளியாகக் கட்டப்பட்டு குலோத்துங்கன் காலத்தில் கற்றளியாக மாற்றப்பட்ட இந்தக் கோயில் இப்போது சிதிலமடைந்து திருப்பணிக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது.

வரலாற்றுப் பெருமையும், ஆன்மிகச் சிறப்பும் வாய்ந்த இந்தக் கோயில் இந்தியத் தொல்லியல் துறையால் உலகப் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகிறது. இந்தக் கோயிலுக்குத் திருப்பணிகள் செய்து, 2015-ம் ஆண்டிலேயே நடைபெற்றிருக்கவேண்டிய கும்பாபிஷேகத் திருவிழா இதுவரை நடைபெறவில்லை. 

``பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. கடைசியாக 2002-ம் ஆண்டு  கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன் பிறகு 2015-ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், இதுவரை அதற்காக எந்த நடவடிக்கையும் அறநிலையத் துறையால் மேற்கொள்ளப்படவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. கோயில் நிர்வாகம் தமிழக அறநிலையத்துறையின் கீழும், பராமரிப்பு இந்தியத் தொல்லியல் துறையின் கீழும் இருக்கிறது. இரண்டு துறைகளின் அலட்சியத்தால் இதுவரை கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடைபெறவில்லை. கோயில் வளாகச் சுவர்கள் சரியாகச் சுத்தம் செய்யப்படுவதில்லை. சுவர் முழுவதும் ஒட்டடை படர்ந்திருக்கிறது. கல்வெட்டுகளை வண்ணம் பூசி மறைத்திருக்கிறார்கள். இரண்டு துறையினரும் ஒருவரையொருவர் கைகாட்டிக்கொள்ளாமல் கும்பாபிஷேகப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும் எதிர்பார்ப்பும். ஆனால், இந்துசமய அறநிலையத்துறை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கவலையளிக்கிறது." என்கிறார் மாடம்பாக்கம்வாசி ஒருவர். 

இது குறித்து இந்துசமய அறநிலையத்துறையினரைத் தொடர்புகொண்டு பேசினோம்... ``கோயில் கருவறைக்கு அருகில் தூண் ஒன்று சேதமடைந்திருக்கிறது. சுவர்களில் விரிசல் விழுந்திருக்கிறது. சுற்றுச் சுவர் மற்றும் தெப்பக்குளப் படிக்கட்டுகள் சீர் செய்யப்பட வேண்டும். கோயில் மத்திய அரசின் தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருக்கிறது. அவர்கள் ஒத்துழைப்பு தந்தால் விரைவில் கும்பாபிஷேகம் செய்து முடிக்கப்படும்’’ என்று பட்டும்படாமல் பேசினார் நம்மிடம் பேசிய அதிகாரி.

இந்தியத் தொல்லியல் துறை அதிகாரி (Conservative assistant) சரவணன், ``கோயிலில் நடைபெறும் தினசரி பூஜை, திருவிழா, குடமுழுக்கு செய்தல் போன்ற வழிபாடு தொடர்பான அனைத்துப் பணிகளுக்கும் தமிழக அரசின் இந்துசமய அறநிலையத் துறைதான் பொறுப்பு. கோயிலின் பழைமை மாறாமல் பராமரித்தல், சீரமைப்புப் பணிகளைச் செய்வது மட்டும்தான் தொல்லியல் துறையின் வேலை. பழைமையின் காரணமாகக் கோயில் கருவறைக்கு அருகில் தூண் ஒன்று சேதமடைந்திருக்கிறது. சில இடங்களில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டிருக்கின்றன. கோயிலுக்கு எந்தச் சேதமும் ஏற்படாமல் பராமரிப்புப் பணிகளைச் செய்யவேண்டியது அவசியமாக இருக்கிறது. அதற்கான பணியைத் தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறோம். மேலும், குடமுழுக்குச் செய்வதற்கும், எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இது தொடர்பாக அறநிலையத் துறை அனுமதி வேண்டினால் தடையில்லாச் சான்றிதழ் வழங்கவேண்டியது மட்டுமே எங்கள் பணி. இதுவரை குடமுழுக்கு  நடத்த வேண்டும் என்று அறநிலையத் துறையிடமிருந்து எந்தக் கடிதமும் எங்களுக்கு வரவில்லை. அப்படிக் கோரிக்கை வைத்திருந்தால் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகளை எப்போதோ முடித்திருப்போம்’’ என்றார்.

கபில முனிவருக்குச் சாப விமோசனத்தை அளித்த தேனுபுரீஸ்வரர் கோயிலின் கும்பாபிஷேகத்தை நடத்துவதற்கான பணியை இந்துசமய அறநிலையத்துறை விரைந்து செய்ய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது.
 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு