
ஆலவாய் ஆதிரையான் - ஓவியம்: ஸ்யாம்

துறவியின் ரகசியம்!
வேனிற்காலத்தின் அந்தக் காலைப் பொழுது, இன்னும் என்னென்ன விசித்திரத்தையெல்லாம் படைக்குமோ?!
சோழர் உப தளபதி கோச்செங்கணை, உறையூர் அகழிக் காவிரிக்குள் பெரும் போராட்டத்தில் தள்ளியும், பூமி அதிர பகைவர் படையை புகச் செய்து, பரமேசுவரப் பட்டரை அதீத பதற்றத்துக்கு ஆளாக்கியும், நம்பியை பேராபத்துக்குள்ளும், பொங்கிதேவியை சுரங்கப் பாதையிலும் புகச்செய்துவிட்ட அந்தக் காலைப்பொழுது, இதோ இந்தப் புரவி வீரனுக்குள்ளும் பல விசித்திரக் கணக்குகளை எழச் செய்திருந்தது!
வயல்வெளிகளை ஊடறுத்து திகழ்ந்த ஒற்றையடிப் பாதையில், தளர்நடை போட்டுக் கொண்டிருந்த புரவியின்மீது ஆரோகணித்திருந்த அந்த வீரனின் நடவடிக்கை, பெரும் விநோதமாகவே இருந்தது.
ஆகாயத்தை வெறித்தபடியும், கிழக்கும் மேற்குமாக திசைகளை நோட்டமிட்டபடியும் வந்தவன், அவ்வப்போது, தன் கைவிரல்களை விரித்து மடக்கியபடி தனக்குத்தானே ஏதேதோ கணக்கும் போட்டுக் கொண்டான். அதில் விடையும் கிடைத்திருக்கவேண்டும். அதன் விளைவாக அவன் இதழ்களில் புன்னகை யும் மலர்ந்தது.
இப்படி, பலவித சேஷ்டைகளோடு அவன் பயணப்பட்டுக்கொண்டிருந்த வேளையில்தான் அந்த அலறல் சத்தம் பெரிதாகக் கேட்டது.
சட்டென்று கடிவாளத்தை இறுக்கி குதிரையை நிறுத்தியவன், சத்தம் வந்த திசையை நோக்கினான். அவன் எங்கு செல்ல வேண்டும் என்று உத்தேசித்து வந்திருந்தானோ, அதே திசையில் இருந்துதான் பெண்ணொருத்தி அலறும் சத்தம் கேட்டது.
தாமதிக்காமல் புரவியை முடுக்கிவிட்டவன், அடுத்தசில நொடிப்பொழுதுகளில் எல்லாம் சம்பந்தப்பட்ட இடத்தை அடைந்திருந்தான். அங்கே, குடிசை வாயிலில் நின்றிருந்த பெண்ணை நோக்கி, வாளை ஓங்கியபடி மிரட்டிக் கொண்டிருந் தான் முரடன் ஒருவன். அவ்வளவுதான் புரவி வீரனின் வலக்கை அனிச்சையாக இடைக் கச்சையில் இருந்த சாட்டையை உருவி சொடுக் கியது. மறுகணம் அந்த முரடனின் பெரும் வாள் ஆகாயத்தில் பறந்தது!
பெரும் அதிர்ச்சியோடு திரும்பி புரவி வீரனை உற்றுக்கவனித்த முரடன், நொடிப் பொழுதில் புரவி வீரன் இன்னாரென்பதை கணித்துவிட்டான். மறுகணம், சாட்டையின் பிடியில் இருந்து பலமாகப் போராடி விடுதலை பெற்றவன், சட்டென்று குனிந்து சிறிது மண்ணை அள்ளி புரவி வீரனின் முகத்தில் வீசவும் செய்தான். இதை சற்றும் எதிர்பார்க்காத புரவி வீரன் சிறிது நிலைகுலைந்துபோகவே, அந்த அவகாசத்தைப் பயன்படுத்திக்கொண்டு தப்பியோடினான்!
அந்தப் பெண்ணுக்கு இன்னமும் பதற்றம் தணியவில்லை ஆயினும், நிலைமையை உள்ளபடி புரிந்துகொண்டவள், குடிசைக்குள் சென்று ஒரு கலசத்தில் தண்ணீர் கொண்டுவந்து, புரவி வீரனின் கரங்களில் சேர்த்தாள். அதைக் கொண்டு புரவி வீரன் முகம் அலம்பிக்கொண்டிருக்கையில், அந்தப் பெண் கலக்கத்துடன் கேட்டாள்: ‘‘அவன் தப்பித்துவிட்டானே...’’ என்று.
அதற்குப் புன்னகையோடு பதில் சொன்னான் வீரன்: ‘‘விடு! அவன் தப்பித்தாலும் அவன் கரத்தில் இருந்த நாக கங்கணம், அவன் யாரென்பதை காட்டிக்கொடுத்துவிட்டது. இங்கிருந்து தப்பினா லும் சோழத்தின் எல்லையை அவன் தாண்ட முடியாது’’
- புரவி வீரனின் குரலைக்கேட்டதும்தான் தாமதம், வியப்பின் உச்சத்துக்கே சென்றுவிட்ட அந்தக் குடிசைப் பெண், ‘‘சுவாமி! தாங்களா?’’ என்று கேட்கவும் செய்தாள்.
இப்போது வீரனின் புன்னகை பெரும் சிரிப்பாக பரிணமித்திருந்தது. அப்படி, திசையதிரச் சிரித்த படியே, தனது வேஷத்தைக் கலைக்கவும் செய்தான். மறுகணம், அந்தப் பெண் அவரது திருவடிகளில் விழுந்து தொழுதாள்.
‘‘எழுந்திரு பெண்ணே! உன்னை மனையாளாகப் பெற்ற, மாவீரன் நம்பி கொடுத்துவைத்தவன்'' என்றதுடன், எழுந்து நின்ற அவளது சிரத்தைத் தொட்டு ஆசியும் கூறினார், சைவத் துறவி!
ஆமாம்... அவள் நம்பியின் மனைவிதான். அந்த வீரனும் சைவத் துறவியாரே!
களம் புகுந்துவிட்ட கணவன் நம்பிதேவன், எவ்வித பங்கமும் இல்லாமல் இல்லம் திரும்ப வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் வயல்புரத்து குடிசைக்கு வந்து, குலதெய்வத்துக்கு அவள் தீபம் ஏற்றிக்கொண்டிருக்கும்போதுதான் அந்த முரடன் வந்துசேர்ந்தான்.
யார், என்னவென்று அவள் விசாரிப்பதற்குச் சந்தர்ப்பம் அளிக்காமல் குடிசைக்குள் நுழைந்து விட்டவன், உள்ளே எவரும் இல்லாததை அறிந்து, மிகுந்த கோபத்துடன் அங்கிருந்த பொருட் களையெல்லாம் காலால் உதைத்து, அலங்கோலப் படுத்தியதோடு, வெளியே வந்து அவளைப் பிடித்துக்கொண்டான். ‘நம்பி எங்கே... அந்த வீணன் எங்கே?’ என்ற கேள்வி மட்டுமே அவன் வாயிலிருந்து வெளிவந்ததே தவிர, வேறெதுவும் அவன் பேசினான் இல்லை. மாறாக தனது பெரும் வாளை உருவியதோடு நிற்காமல், அவள் கழுத்தையும் பிடிக்கவந்தான். நல்லவேளையாக... அப்போதுதான் புரவி வீரனாக வந்து சேர்ந்தார் சைவத் துறவியார்!
‘‘என்ன ஸ்வாமி இது விபரீதம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விபரீதம்! சோழ தேசத்தவர் தூக்கம் தொலைத்து வெகுநாட்களாகி விட்டன!’’ என்று ஆற்றாமையுடன், துறவியிடம் இருந்து ஏதோ பதிலை எதிர்பார்ப்பவளாகப் பேசினாள் நம்பியின் மனைவி.
‘‘நாளை இதேவேளையில் இதற்கெல்லாம் ஒரு முடிவு தெரிந்துவிடும் தாயே’’ என்ற சைவத் துறவி, மேற்கொண்டு ஏதோ பேச வாயெடுப்பதற்குள், நம்பியின் மனைவி கேட்டாள்.
‘‘நாளை முடிவு தெரிந்துவிடும் என்கிறீர்களே... அது உங்களின் யூகமா, ஆரூடமா?’’
‘‘யூகம், ஆரூடம்... எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்! காலம் தீர்மானித்து விட்டது பெரும்போரை. வரும்போதே, எனக்குள் சில கணக்குகளையும் போட்டுப் பார்த்தேன். போரின் போக்கு எப்படியிருக்கும் எனக் காட்டு கிறது வான் மண்டலம். அதை மெய்ப்பிப்பதுபோல், சோழத்தை சுற்றி இறுக்கிவிட்டன, பாண்டிய படைகள். முதலில் அஸ்திரமாக வந்த பாண்டிய படைகள், இப்போது, *வியான வியூகமாக சுற்றி வளைத்துவிட்டன சோழத்தை! ஆகையால், நாம் நினைத்தாலும் போரைத் தவிர்க்க முடியாது’’ - என்றவரை இடைமறித்துக் கேட்டாள் நம்பியின் மனைவி.
‘‘என்னவர், இப்போதைக்கு போர் இருக்காது என்றாரே!’’
‘‘யார் நம்பிதேவனா?’’ என்று கேட்டுவிட்டு, மீண்டும் பெரியதொரு சிரிப்பை வெளிப்படுத்தி யவர், ‘‘உடனடிப் போருக்கு அவன்தானம்மா முழுக்காரணம்’’ என்று கூறிவிட்டு, இன்னும் அதிகமாகச் சிரிப்பைத் தொடர்ந்தார் துறவியார்.
‘‘என்ன சொல்கிறீர்கள், சுவாமி’’
‘‘ஆமாம்! அவன் மட்டும் பொங்கிதேவியைத் தேடி வராமல் இருந்திருந்தால், வனத்துக்குள் இருந்த பாண்டியரின் பாசறைக் குடிசைகளைக் கவனிக்காமல் இருந்திருந்தால், அங்கு சிறைப் பட்டவன் பொங்கியுடன் தப்பியோடாமல் இருந் திருந்தால், போர் இப்போதைக்கு இருந்திருக்காது...’’
துறவியார் பேசிக்கொண்டே போக, அவர் சொன்ன ஓவ்வொரு வார்த்தையும் கூரம்பாகத் தைத்தது, அந்தப் பெண்ணின் நெஞ்சத்தை. பதைபதைப்போடு கேட்டாள்: ‘‘என்ன... அவர் சிறைப்பட்டரா?! என்ன சுவாமி சொல்கிறீர்கள்... இப்போது, அவர் எங்கிருக்கிறார்?’’
அவளது இந்தக் கேள்விக்கு சைவத் துறவியார் பதில் சொல்லாமேலேயே இருந்திருக்கலாம். ஆம்! இதுவரையிலும், அவரை வெறும் சைவத் துறவி என்றே நினைத்திருந்த நம்பிதேவனின் மனைவிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த சோழதேசத்தின் மீதும் பேரிடியை இறக்குவதாகத் திகழ்ந்தது, சைவத் துறவியார் சொன்ன அந்தப் பதில்!
அதை மெய்ப்பிப்பதுபோல், அங்கே எல்லைக் கோயிலின் அருகில், பொங்கிதேவி புகுந்துவிட்ட சுரங்கப்பாதைக்குள்ளும் அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்தேறின!
- மகுடம் சூடுவோம்..
* சூசி வியூகம், கோன வியூகம், சகட வியூகம் என போர் சாஸ்திரங்கள் சொல்லும் வியூகங்களில் ஒன்று வியான வியூகம். இது, சர்ப்ப வடிவமாக அமைக்கப்படுவது.