Published:Updated:

ஆலயம் தேடுவோம் - கயிலையான் திருவருளால் கற்கோயில் எழும்பட்டும்!

ஆலயம் தேடுவோம் - கயிலையான் திருவருளால் கற்கோயில் எழும்பட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
ஆலயம் தேடுவோம் - கயிலையான் திருவருளால் கற்கோயில் எழும்பட்டும்!

எஸ்.கண்ணன்கோபாலன்

ஆலயம் தேடுவோம் - கயிலையான் திருவருளால் கற்கோயில் எழும்பட்டும்!

எஸ்.கண்ணன்கோபாலன்

Published:Updated:
ஆலயம் தேடுவோம் - கயிலையான் திருவருளால் கற்கோயில் எழும்பட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
ஆலயம் தேடுவோம் - கயிலையான் திருவருளால் கற்கோயில் எழும்பட்டும்!

‘தென்னாடுடையவர்’ என்ற புகழுக்கு உரியவராக ஆகவேண்டும் என்று நம் ஐயன் கயிலைநாயகன் திருவுள்ளம் கொண்டுவிட்டார் போலும். அப்படி என்ன தென்னாட்டுக்கு தனிச் சிறப்பு? லட்சோப லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, கடற்கோளால் பிளவுபடாமல் இருந்த பிரபஞ்சத்தில், உயிரினங்களின் தோற்றம் ஏற்பட்டது பிரபஞ்சத்தின் தென் பகுதியில்தான். மொழி, கலை, கலாசாரம் அனைத்தின் பிறப்பிடமும் தென் பகுதிதான். எந்த புண்ணிய பூமியில் அனைத்தும் தம்மால் தோற்றுவிக்கப்பட்டதோ, அந்தப் புண்ணிய பூமியில் காணும் இடமெங்கும் கோயில் கொள்ள திருவுள்ளம் கொண்டுவிட்டார் ஐயன்.

ஆலயம் தேடுவோம் - கயிலையான் திருவருளால் கற்கோயில் எழும்பட்டும்!

தாம் கொண்ட திருவுள்ளம் நிறைவேறுவதற்கான வாய்ப்புக் காகக் காத்திருந்தார் ஐயன். பரமன் பார்வதிதேவியை மணம் புரியக்கூடிய பொன்னான தருணத்தை, வாய்ப்பாக மாற்றிக்கொண்டார். ஈசனின் திருமணம் காண அனைவரும் கயிலைக்கு வந்துவிட்டபடியால், பூமியின் வடதிசை தாழ்ந்து, தென்திசை உயர்ந்தது; இதனால் பூமியின் சமநிலை தவறியது. பொறுமைக்கு இலக்கணமான பூமியே சமநிலை தவறினால்? இது சிவபெருமானின் திருவுள்ளம் என்பதை அறியாத அனைவருமே கதிகலங்கி நின்றிருந்தனர்; ஐயனின் திருவடி பணிந்து நின்றனர்.

மென்முறுவல் பூத்த மகேஸ்வரன், தன் திருமணக் கோலம் காண கயிலைக்கு வந்திருந்த குறுமுனி அகத்தியரை அர்த்தபுஷ்டியுடன் நோக்கினார். அவரை தென் திசைக்குச் சென்று உலகை சமநிலைப்படுத்துமாறு கூறினார். அதற்குப் பிரதியாக அவர் எங்கெல்லாம் தம்மை தரிசிக்க விரும்புகிறாரோ அங்கெல்லாம் அவருக்கு தரிசனம் அருள்வதுடன், அங்கெல்லாம் ஆலயம் கொண்டு வழிபடும் அன்பர்களுக்கு அருள்வதாக உறுதியும் கொடுத்தார்.

ஆலயம் தேடுவோம் - கயிலையான் திருவருளால் கற்கோயில் எழும்பட்டும்!

ஐயனைப் போலவே அகத்தியருக்கும் நம்மிடமெல்லாம் தனி பிரியம் போலும்! அவர், நாமெல்லாம் ஐயனின் அருள் பெறவேண்டும் என்று சித்தம் கொண்டவராக, தென் திசைக்கு வந்த பிறகு, எண்ணற்ற பல திருத்தலங்களில் ஐயனின் திருமணக் கோலம் தரிசிக்க விரும்பினார். மேலும் ஐயனை தாம் தரிசித்த தலங்களில் எல்லாம், ஐயனை பிரதிஷ்டை செய்து, காலம் காலமாக மக்கள் வழிபட்டு அருள்பெறும்படி செய்தார். அப்படி அகத்தியர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட ஆலயங்களில் அருளும் ஐயன் பெரும்பாலும் ஸ்ரீஅகத்தீஸ்வரர் என்ற திருப்பெயருடனே காட்சி தருகிறார். அப்படி அகத்தியரால் வழிபடப் பெற்றதும், அவர் பெயரையே தம்முடைய திருப்பெயராகக் கொண்டு ஐயன் ஸ்ரீஅகத்தீஸ்வரர், ஸ்ரீசொர்ணாம்பிகை சமேதராகக் கோயில் கொண்டிருக்கும் ஒரு தலம்தான், சென்னை, திருநின்றவூரை அடுத்துள்ள பாக்கம் ராமநாதபுரம் கிராமம்.

ஆலயம் தேடுவோம் - கயிலையான் திருவருளால் கற்கோயில் எழும்பட்டும்!

ஆனால், ஒருகாலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றுத் திகழ்ந்த  ஐயன் அகத்தீஸ்வரரின் திருக்கோயில், காலப்போக்கில் சிதிலம் அடைந்து, முறையான வழிபாடுகளும் இல்லாமல் போய் விட்டதுதான் வேதனை. முற்றாகச் சிதைந்துவிட்ட ஐயனின் திருக் கோயிலைப் புதுப்பிக்கும் திருப்பணிகள் தொடங்கி இருப்பதுதான் ஓர் ஆறுதலான விஷயம். திருப்பணிக் கமிட்டியைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரிடம் பேசினோம்.

‘‘இந்தக் கோயில் ரொம்ப புராதனமான கோயில். பிற்கால மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டதா சொல்றாங்க. பக்கத்துல இருக்கற திருநின்றவூர்லதான் இதயத்துலயே கோயில் கட்டின பூசலார் நாயனார் வாழ்ந்திருக்கார். திருநின்றவூரில் உள்ள இருதயாலீஸ்வரர் கோயிலுக்கும் முற்பட்ட காலத்தைச் சேர்ந்ததா இந்தக் கோயிலைச் சொல்றாங்க. புராணகாலத்துல இந்த ஊர்லதான் அகத்தியர் சிவலிங்க பிரதிஷ்டை பண்ணி வழிபட்டதாவும், ராவணனை சம்ஹாரம் செய்ய ராமர் இந்தப் பக்கம் வந்தப்போ அகத்தியர் ராமருக்கு ஆதித்ய ஹ்ருதய மந்திர உபதேசம் செய்ததாகவும், அதனால்தான் இந்த ஊருக்கு ராமநாதபுரம் என்று பேர் வந்ததாவும் சொல்றாங்க’’ என்றவர் தொடர்ந்து,

ஆலயம் தேடுவோம் - கயிலையான் திருவருளால் கற்கோயில் எழும்பட்டும்!

‘‘கோயில் கருவறை தரைமட்டமா இருந்ததால பக்தர்களும் ஊர்மக்களும் சேர்ந்து அஸ்திவாரத்தைத் தோண்டினாங்க. அப்ப சுமார் ஒன்றரை அடி நீளமும் சுமார் முக்கால் அடி அகலமும் உள்ள சுண்ணாம்புக் கற்கள் கிடைத்தன. இந்த மாதிரியான கற்கள் சுமார் 2300 வருஷத்துக்கு முந்தியதுன்னு சொல்றாங்க.  அதனாலயும், ராமருக்கு அகத்தியர் மந்திரோபதேசம் செய்த கோயில்ன்னு சொல்றதாலயும் இந்தக் கோயில் நிச்சயம் ரொம்ப புராதனமான கோயில்ன்னுதான் சொல்றாங்க. ரொம்பப் பழைமையான இந்தக் கோயிலை எப்படியாவது ஓரளவுக்காவது புதுப்பிச்சு கட்டணும்னு நெனைச்சு ஊர்மக்களோட ஒத்துழைப்போட கமிட்டியும் பேங்க் கணக்கும் ஆரம்பிச்சு திருப்பணிகளைத் தொடங்கி இருக்கோம். திருப்பணிகள் சீக்கிரம் முடிஞ்சு கும்பாபிஷேகம் நடைபெற சிவபெருமான்தான் அருள்புரியணும்’’ என்றவரிடம், இக்கோயிலின் வழிபாட்டுச் சிறப்புகள் குறித்தும் கேட்டோம்.

‘‘இந்தத் தலத்துல அகத்தியர், ராமருக்கு குருவாக இருந்து மந்திரோபதேசம் செய்தார் என்பதால், குரு தோஷம் உள்ளவர்களும், திருமணத் தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை போன்ற பிரச்னைகளால கஷ்டப்படறவங்க இங்க வந்து அகத்தீஸ்வரருக்கு வில்வமாலை சாத்தி வேண்டிக்கிட்டா, அவங்களோட குறைகளை ஈசன் நிவர்த்தி செய்யறதா பக்தர்கள் நம்பிக்கையோடு சொல்கிறார்கள்’’ என்றார் நெகிழ்ச்சியுடன்.

ஆலயம் தேடுவோம் - கயிலையான் திருவருளால் கற்கோயில் எழும்பட்டும்!

மிகவும் புராதனமான இந்தக் கோயிலை முழுவதுமாக புதுப்பிக்க உள்ளார்கள். முழுக்க கருங்கற்களால் கட்டப்பட இருப்பதாகவும், ஈசனின் கருவறை விமானத்தை கஜபிருஷ்ட வடிவத்தில் நிர்மாணிக்க இருப்பதாகவும் ஊர்மக்கள் நம்மிடம் தெரிவித்தார்கள்.

அவர்கள் சொல்வதைப் பார்த்தால், மிக பிரமாண்டமான திருப்பணியாகத் தெரிகிறது. ஆனாலும், பிரமாண்டமான அந்தத் திருப்பணியை சிவனாரின் அருளால் எளிதாக முடித்துவிடலாம் என்ற நம்பிக்கை அவர்களின் முகங்களில் பளிச்சிட்டதையும் நம்மால் காணமுடிந்தது.

விரைவிலேயே அவர்களுடைய விருப்பப்படி, ஈசனின் திருக் கோயில் பிரமாண்ட கற்றளியாக எழும்பட்டும்; நித்திய பூஜைகளும் திருவிழாக்களும் கோலாகலமாக நடைபெறட்டும்; அதன் பலனாக திருக்கோயில் நாடி வந்து வழிபடுவோரின் வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறட்டும். இவை எல்லாம் நிறைவேறவேண்டும் என்றால், நாம் அனைவருமே நம்மால் இயன்ற அளவு நிதியுதவியும், பொருளுதவியும் செய்தால்தானே சாத்தியமாகும்? ராமபிரான் உபதேசம் பெற்ற திருத்தலத்தில் அமைந்திருக்கும் ஐயனின் திருக்கோயில் திருப்பணிக்கு, ராம சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட அணில்களைப் போல் நாமும் சிறிய அளவிலாவது நிதியுதவி செய்வோம். அதன் பயனாக, ‘மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டமும், மறை நான்கின் அடியும் முடியுமாக’ காணும் இடமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவபெருமானின் பேரருள் பெற்று, நாமும் நம் சந்ததியினரும் சிறப்புற வாழ்வோம்.

படங்கள்: தி.குமரகுருபரன்

உங்கள் கவனத்துக்கு...

சுவாமி: ஸ்ரீஅகத்தீஸ்வரர்

அம்பாள்: ஸ்ரீசொர்ணாம்பிகை

தலம்: பாக்கம் ராமநாதபுரம்

வழிபட்டோர்: அகத்தியர், ராமபிரான்

எப்படிச் செல்வது?:
சென்னையை அடுத்துள்ள திருநின்றவூரில் இருந்து பெரியபாளையம் செல்லும் சாலையில் சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. ஆவடி, திருநின்றவூரில் இருந்து பஸ் வசதி உண்டு. ஷேர் ஆட்டோ வசதியும் உண்டு.

வங்கிக் கணக்கு விவரம்:
Agatheeshwarar Trust, Canara Bank, Thiruninravur Branch, A/C No. 6161101002984 IFSC Code: CNRB 0006161 தொடர்புக்கு: டி.கஜேந்திரன், 09789053053