Published:Updated:

உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்!

உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்!
பிரீமியம் ஸ்டோரி
உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்!

டாக்டர் ஜெயம் கண்ணன்

உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்!

டாக்டர் ஜெயம் கண்ணன்

Published:Updated:
உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்!
பிரீமியம் ஸ்டோரி
உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்!

நான் ஒரு மருத்துவர் என்றாலும், ‘அவன் அன்றி அணுவும் அசையாது’ என்பதைத் தலை வணங்கி ஏற்றுக்கொள்ளும் மானுடப் பிறவிதான். என்னைப் பொறுத்தவரை, மருத்துவர்கள் எல்லாம் கைவிட்ட நிலையில் இருக்கும் சிறுநீரகப் பிரச்னையுள்ள நோயாளிகள் கூட, இங்கே வந்து வணங்கி, தங்கள் பிரச்னை நீங்கி, ஆரோக்கியமுடன் வாழும்விதமாக அற்புதத்தை நிகழ்த்தும் ‘ஸ்பெஷாலிட்டி மருத்துவ மனை’ இந்தத் திருத்தலத்துத் திருக்கோயில். சென்ற இதழில் கண்ணுக்குளத்தைச் சேர்ந்த அன்பர் கிருஷ்ணனின் அனுபவத்தை வாசித்தவர்களுக்குப் புரிந்திருக்கும்.

உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்!

ஆனால்,  ‘சிறுநீரகப் பிரச்னை மட்டுமில்லை டாக்டர். உடலுக்கு எந்தப் பிரச்னை யாக இருந்தாலும் ஊட்டத்தூர் கோயிலுக்குச் சென்று, உள்ளன்போடு உருகி முறையிட்டால் போதும். கொஞ்சம் கொஞ்சமாக பிரச்னை மறைந்து, ஆரோக்கியம் திரும்புவதைக் கண்கூடாகப் பார்க்கலாம்’ என்கிறார், திருச்சியைச் சேர்ந்த அன்பர் கிருஷ்ணன் (பெட்டிச் செய்தி).

சரி... நாம் ஆலயத்துக்குத் திரும்புவோம் வாருங்கள்...

மிகப் பழைமையான இத் திருக்கோயிலுக்கு 96 ஆண்டுகள் கழித்து 2005-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. அடுத்த கும்பாபிஷேகத்தை இந்த ஆண்டில் நடத்த ஆண்டவன் திருவருள் செய்யவேண்டுமென்பது கோயில் சிவாச்சார்யர் முதல் ஊர் பொதுமக்கள் வரை அனைவரின் எதிர்ப்பார்ப்பாகவும் பிரார்த் தனையாகவும் இருக்கிறது.

உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்!

சிற்பங்கள் செதுக்கப்பட்ட கல் நடைபாதை இருப்பதுதான் மூன்றாம் பிராகாரம். அதைக் கடந்து சென்றால் வரும் மகா மண்டபமே இரண்டாம் பிராகாரம். அங்கேதான் நாம் கண்ட நெடிதுயர்ந்த துவஜஸ்தம்பம். அதன் அருகே, மேலே விதானத்தில் ஒரு தெய்விக அற்புதத்தைக் கண்டதாகச் சொன்னேன் அல்லவா?

மகா மண்டபத்தின் மேற்கூரையில் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 15 திதிகள் ஆகியவை சதுர வடிவில் கற்சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. அதற்கு அருகிலேயே நவகிரகங்களும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. இந்த இடத்தில் நின்று இவற்றைத் தரிசித்தபடி மனதார வேண்டிக்கொண்டால், நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.

அது மட்டுமல்ல... மண்டபத்தில் இந்த இடத்தில், சிறப்பான இந்த விதானத்தின் கீழ் யாகங்கள், ஹோமங்கள் நடத்தப்பட்டால், அதன் முழுப் பலன்களும் கிடைப்பதாகவும் நம்பிக்கை. 27 நட்சத்திரங்களும் இருப்பதால், எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் இங்கே வந்து பிரார்த்திக்கலாம். எனவே, திருமணம் செய்துகொள்வதற்கான சிறந்த ஸ்தலமாக இது விளங்குகிறது. நாமும் நட்சத்திரங்களையும், ராசிகளையும், நவகோள்களையும் கண்ணார தரிசித்து, நெஞ்சார வணங்கி, பிரார்த்தித்தோம். மகா மண்டபத் தின் வடக்கே நூற்றுக்கால் மண்டபம். கோயிலின் பழைமையும் புராதனமும் மண்டபத்தைப் பார்த்தாலே தெரிகிறது.

கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் கும்பிட்டுவிட்டு, அடுத்த மண்டபத்துக்குள் நுழை கிறோம். அதுதான், கருவறையைச் சுற்றி இருக்கும் முதல் பிராகாரம்.

உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்!

அங்கேதான் மூலவரின் கருவறைக்கு நேரே இருக்கிறது, பிரம்மனுக்கு சாபம் தீர்த்த, மகா மகிமை பெற்ற பிரம்ம தீர்த்தம்! இதுவும் ஓர் அதிசயம்தான். எந்த ஓர் ஆலயத்திலும் மூலவருக்கு நேர் எதிரே, இப்படி ஒரு வற்றாத தீர்த்தக் கிணறு அமைந்திருக்கவில்லை.

ராஜராஜனுக்கே நோய் நீக்கி ஆயுளை நீட்டித்த பிரம்ம தீர்த்தம் பற்றி சுவையான தகவல்களை விவரித்தார், கோயிலின் குருக்கள் நடராஜ சிவாச்சார்யர். மூன்று தலைமுறையாக இந்தக் கோயிலில் பூஜை செய்யும் புண்ணியத்தைப் பெற்ற குடும்பம் அவருடையது.அவர் சொன்ன ஆச்சர்யங்களை அடுத்த இதழில் பகிர்கிறேன்...!

(தரிசனம் தொடரும்)


தொகுப்பு: பிரேமா நாராயணன்  படங்கள்: ராபர்ட்

அவன் அருளாலே... அவன் தாள் வணங்கி...

பிரபல தனியார் நிறுவனத்தில் உதவிப் பொதுமேலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற வேளாண் பட்டதாரி, பா.கிருஷ்ணன். ஊட்டத்தூர் பஞ்சநதன நடராஜரைப் பற்றிப் பேசுகையிலேயே உணர்ச்சி மேலீட்டால் கண்கள் குளமாக, நாக்குழறி தேம்புகிறார்!

‘‘முதலில் போறப்போ, எல்லாக் கோயிலுக்கும் போவது போல சாதாரணமாகத்தான் போனேன். ஆனா, அந்தப் பஞ்சநதன நடராஜரைப் பார்த்ததும், ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு. எல்லா கோயில்களிலும் பஞ்ச லோகத்தில் செய்த நடராஜர் சிலையைப் பார்த்துட்டு, இங்கே கல்லால் ஆன நடராஜரைப் பார்த்ததும், என்னால கண்களை எடுக்கவே முடியல. அந்த இடத்தை விட்டு நகரவும் முடியல. அவ்வளவு ஆகர்ஷண சக்தி! பிரம்ம தீர்த்தத்தின் மகிமையைப் பற்றியும் வெட்டிவேர் மாலை பிரார்த்தனை பற்றியும் நடராஜ குருக்கள் சொன்னபோது வியந்துபோனேன்.

என் பெரிய அண்ணாவின் பேரன் சதீஷ், மூளை வளர்ச்சி பாதிக்கப்பட்டு நடக்கமுடியாமல் படுத்தபடுக்கையா இருந்தான். அவனுக்காக ஊட்டத்தூர் கோயிலில் தேவார, திருவாசக பாராயணமும் ருத்ர ஜபமும் பண்ணி, மனமுருகிப் பிரார்த்தனை செய்தேன். தீர்த்தமும் வெட்டிவேர் மாலையும் வாங்கி, விபூதி பிரசாதத்துடன் பெங்களூருக்கு அண்ணா பெண்ணுக்கு அனுப்பி, அர்ச்சகர் சொன்னது போல, வேர் ஊறவைத்த தீர்த்தத்தை 48 நாட்களுக்குக் கொடுக்கச் சொன்னேன்.

சொன்னா நீங்க நம்பமாட்டீங்க! 15 நாட்களிலேயே அவன்கிட்ட கொஞ்சம் மாற்றம் தெரிஞ்சது. அப்புறம் நல்லாவே எழுந்து கொஞ்சமா கொஞ்சமா நடக்க ஆரம்பிச்சான். இப்போ, அவனை ஊட்டத்தூருக்கும் கூட்டி வந்து இறைவனை தரிசிக்க வெச்சுட்டாங்க. இது நடக்கும்னு எங்க குடும்பத்தில் ஒருத்தர் கூட சத்தியமா எதிர்பார்க்கல...!

அதே மாதிரி, 77 வயதான எங்க அண்ணாவுக்கு கல்லீரல் பிரச்னை. கிட்டத்தட்ட கேன்சர் வர்ற அளவுக்கு பாதிப்பு அதிகமாயிட்டே போனதால், நான் ஊட்டத்தூர்லருந்து தீர்த்தமும் வெட்டிவேரும் வாங்கிட்டுப் போய், சாப்பிடும் முறையைச் சொல்லிட்டு வந்தேன். அவரும் தொடர்ந்து நம்பிக்கையோடு 48 நாட்கள் சாப்பிட்டார். இப்போ, கல்லீரல் பாதிப்பு வெகுவாக குறைஞ்சிடுச்சு. நல்லா எழுந்து சுறுசுறுப்பாக நடமாடறார். அவரை ரெகுலரா செக்கப் பண்ற டாக்டருக்கு பேராச்சர்யம்! அண்ணாவைப் பார்த்து அசந்தே போய்ட்டார்!

எல்லாம் அந்த ஊட்டத்தூர் பகவான் எங்க குடும்பத்துக்குப் போட்ட பிச்சைங்க. இந்தக் கோயிலுக்கு ஒரு முறை வந்து பாருங்க. உங்களுக்கே புரியும்!’’ என்று நெகிழ்ச்சியுடன் கரம் கூப்பி வணங்குகிறார் ஊட்டத்தூர் இருக்கும் திசை நோக்கி.