Published:Updated:

சக்தி யாத்திரை - வள்ளியூர்!

அற்புதத் தலங்கள், விசேஷ வழிபாடுகள், ஆன்மிகப் பெரியோர்களுடன் சிலிர்ப்பூட்டும் பயணம்!

சக்தி யாத்திரை - வள்ளியூர்!
சக்தி யாத்திரை - வள்ளியூர்!

வ்வொரு திருத்தலமாக யாத்திரை மேற்கொண்டு இறைவனை வழிபடுவதில் நமக்குக் கிடைக்கும் ஆத்ம திருப்தியே தனிதான். அதனால் நமக்கு ஏற்படும் பரவச உணர்வை அனுபவத்தில்தான் உணரமுடியும். அந்தப் பரவச அனுபவத்தை, 'சக்தி விகடன்' வாசகர்களும் பெறும் வகையில், வாசகர்களுடனும் ஆன்மிகப் பெரியோர்களுடனும் புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வகையில் தொடங்கவுள்ளது 'சக்தி யாத்திரை!'. பிணிகள் தீர்க்கும் வேல்மாறல் பாராயணம்,  நினைத்ததை நிறைவேற்றும் திருப்புகழ் மகாமந்திர பூஜை மற்றும் ஆன்மிகப் பெரியோர்களின் வழிகாட்டுதலுடன் அமையப்போகிறது இந்த அற்புத யாத்திரை. முதல் யாத்திரையில் - ஆறுமுகன் அருள்பாலிக்கும் ஆறு திருத்தலங்கள் இடம்பெறுகின்றன. தலங்களை தரிசிப்பது மட்டுமின்றி, ஆன்மிக உரையாடல்கள், சிறப்பு சங்கல்பம், விசேஷ வழிபாடுகள் என களைகட்டப் போகிறது சக்தி யாத்திரை. யாத்திரையில் நாம் தரிசிக்கவிருக்கும் தலங்களைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு இது.

'திருமணம் என்பதே அடுத்த தலைமுறையை உருவாக்குவதுதான். அதுவே ஒரு பிறப்பின் நோக்கம்' என்று, வேதத்தின் அங்கமான 'தைத்ரிய சம்ஹிதை' தெரிவிக்கிறது. திருமணம் தள்ளிப்போகும் ஆணுக்கோ, பெண்ணுக்கோ அருள் செய்யவென்றே நெல்லைச் சீமைக்கு அருகே அருள்பாலிக்கிறார் வள்ளியூர்  ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி. ''இவரை வணங்கியவர்கள் திருமணத் தடைகள், உறவுச் சிக்கல்கள் நீங்கி வாழ்வார்கள்" என இங்கு வரும் பக்தர்கள்  தெரிவிக்கிறார்கள். அன்பர்களின் பக்திப் பிரவாகத்தில் திளைக்கும் வள்ளியூர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமியின் பேரருளைத் தரிசிப்போம் வாருங்கள். 

நெல்லை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், நெல்லையிலிருந்து 42 கி.மீ., தொலைவில் உள்ளது வள்ளியூர். இந்த ஊரின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ளது, வள்ளி, தெய்வானை சமேத வள்ளியூர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். திருத்தணியில் வள்ளியை மணம் முடித்த முருகப்பெருமான் மகேந்திரகிரி மலையின் கிழக்குப் பக்கத்தில் உள்ள இந்தக் குன்றில் குடியேறியதால் இவ்வூர் ’வள்ளியூர்’ என்றானது. சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்த வேளையில் கிரௌஞ்ச மலையையும் தகர்த்தெறிந்தார். அதன் துண்டுகள் விழுந்து உருவான மலையே வள்ளிமலை என்கிறார்கள். முருகனின் வேல் பட்டு ஒளிர்ந்த மலை என்பதால் இதைப் பூரணகிரி என்றும் அழைக்கிறார்கள். தென் பகுதிக்கு வந்த அகத்திய முனிவர், இந்த வள்ளி மலைக்கு வந்து வள்ளி பிராட்டியுடன் எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானை வழிபட்டார். முருகப்பெருமான் குரு ஸ்தானத்தில் கிழக்கு முகமாக நின்று உபதேசிக்க, அகத்திய முனிவர் சீடரின் நிலையிலிருந்து மேற்கு முகமாக நின்று உபதேசம் பெற்ற தலம். உபதேசம் பெற்ற பிறகு, அந்தக் குன்றை பிரதட்சிணமாகக் கிரிவலம் வந்து கந்தக் கடவுளை வழிபட்டார். 

கிரிவலம் வரும் வழியில், குகையின் தென் பகுதியில் சோகத்துடன் நின்ற தெய்வானை பிராட்டியை அணுகினார் அகத்தியர். முருகப்பெருமானைக் காண வந்த தன்னை, வள்ளி அனுமதிக்காததால், தான் வெளியில் நிற்பதாக மனவருத்தத்துடன் கூறினார் தெய்வானை பிராட்டி. அதைக் கேட்ட அகத்தியர், தெய்வானை பிராட்டியை சமாதானப்படுத்தி, முருகப்பெருமானிடம் அழைத்துச் சென்றார். வள்ளிக்கும் தெய்வானைக்கும் இடையில் சமாதானம் செய்து வைத்த முருகப்பெருமான், அவர்கள் இருவரும் திருமாலின் கண்களிலிருந்து தோன்றிய அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்னும் சகோதரிகள் என்பதை உணர்த்தினார். மேலும், அவர்களே தற்போது தெய்வானையாகவும் வள்ளியாகவும் தோன்றி தன்னைத் திருமணம் செய்துகொண்டார்கள் என்று தெரிவித்து, அவர்களுக்கு சடாட்சர மந்திரத்தை உபதேசித்தார். அதைத் தொடர்ந்து இருவரும் சமாதானமாகி முருகப்பெருமானுக்கு இரண்டு புறங்களிலும் நின்று அகத்தியருக்கு அருள்புரிந்தனர்.

அகத்தியருக்குப் 'பிரம்ம ஞான உபதேசம்' அருளிய காரணத்தினால் வள்ளியூர் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி, 'ஞானஸ்கந்தன்' என்றும் அழைக்கப்படுகிறார். அகத்தியர், இந்த அற்புதக் காட்சியை தரிசித்தது பங்குனி மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமை என்பது தலபுராணம் கூறும் செய்தி. நான்கு திருக்கரங்களில் வஜ்ஜிரம், சக்தி, மலரும் ஏந்தி, இடக் கரத்தை தொடையின் மீது வைத்த கோலத்தில் முருகப்பெருமான் அருள் தரும் காட்சி அலாதியானது. மேலும் வள்ளி, தெய்வானையும்கூட இந்தக் கோயிலில் அமிர்தவல்லி, சுந்தரவல்லியாகவே காட்சி தருகிறார்கள். அகத்தியர், இடைக்காடர், வண்ணச்சரபம் தண்டபாணி தேசிகர் உள்ளிட்ட பலரும் வணங்கிப் போற்றிய மகாமூர்த்தி இவர். கேட்ட வரங்களை அருளும் இந்த வள்ளியூருக்கு வந்து கந்தனை வணங்கி அருள்பெறலாம்தானே!

அற்புதமான இந்த யாத்திரையில் 

நீங்களும் கலந்துகொள்ள வேண்டுமா?

இங்கே க்ளிக் செய்யவும்...