Published:Updated:

சக்தி யாத்திரை -தோரணமலை!

அற்புதத் தலங்கள், விசேஷ வழிபாடுகள், ஆன்மிகப் பெரியோர்களுடன் சிலிர்ப்பூட்டும் பயணம்!

சக்தி யாத்திரை -தோரணமலை!
சக்தி யாத்திரை -தோரணமலை!

ஒவ்வொரு திருத்தலமாக யாத்திரை மேற்கொண்டு இறைவனை வழிபடுவதில் நமக்குக் கிடைக்கும் ஆத்ம திருப்தியே தனிதான். அதனால் நமக்கு ஏற்படும் பரவச உணர்வை அனுபவத்தில்தான் உணரமுடியும். அந்தப் பரவச அனுபவத்தை, 'சக்தி விகடன்' வாசகர்களும் பெறும் வகையில், வாசகர்களுடனும் ஆன்மிகப் பெரியோர்களுடனும் புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வகையில் தொடங்கவுள்ளது 'சக்தி யாத்திரை!'. பிணிகள் தீர்க்கும் வேல்மாறல் பாராயணம்,  நினைத்ததை நிறைவேற்றும் திருப்புகழ் மகாமந்திர பூஜை மற்றும் ஆன்மிகப் பெரியோர்களின் வழிகாட்டுதலுடன் அமையப்போகிறது இந்த அற்புத யாத்திரை.
முதல் யாத்திரையில் - ஆறுமுகன் அருள்பாலிக்கும் ஆறு திருத்தலங்கள் இடம்பெறுகின்றன. தலங்களை தரிசிப்பது மட்டுமின்றி, ஆன்மிக உரையாடல்கள், சிறப்பு சங்கல்பம், விசேஷ வழிபாடுகள் என களைகட்டப் போகிறது சக்தி யாத்திரை. யாத்திரையில் நாம் தரிசிக்கவிருக்கும் தலங்களைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு இது.

தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது தோரணமலை. இந்த மலை யானையைப் போன்று காட்சியளிப்பதால், 'வாரண மலை' என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் தோரணமலை என்று மாறியது. இந்த மலையில் அருளாட்சி செய்கிறார் அழகு முருகன். மேலும், அகத்தியர் தங்கியிருந்து மருத்துவப் பணி செய்த மலை இது என்பதால், இந்த மலையில் பல்வேறு அபூர்வ மூலிகைகள் இருந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.


மலையின் கீழிருந்து  926 படிகள் ஏறிச் சென்றால், உச்சியில் உள்ள குகைக்கோயிலை அடையலாம்.  சிவனாரின் கட்டளைப்படி தென்பாரதம் வந்த அகத்தியர், பொதிகை மலைக்குச் செல்லும்வழியில், இந்த மலையின் அழகில் லயித்து, சில காலம் இங்கே தங்கியிருந்தார். சுமார் 4,000 மூலிகைகள் வரை இங்கிருந்த காரணத்தினால், அகத்தியர் இங்கே தங்கியிருந்து மருத்துவச்சாலை ஏற்படுத்தி பலருக்கும் வைத்தியம் செய்ததாகச் சான்றுகள் உள்ளன என்கிறார்கள். இங்கு தங்கியிருந்த அகத்தியரும் அவருடைய சீடரான தேரையரும் பல மருத்துவ நூல்களை இயற்றியதாகவும் சொல்லப்படுகிறது. தோரணமலையெங்கும் பல குழிகள் காணப்படுவதை இன்றும் காணலாம். அவை சித்தர்கள் இங்கு மருந்துகள் தயாரிக்க உதவிய குழிகள்தான் என்கிறார்கள். அகத்தியர் பொதிகை மலைக்குச் சென்ற பிறகும்கூட இந்த மலை பல சித்தர்களின் ஆராய்ச்சி மையமாகவும் செயல்பட்டதாகவும் சொல்கிறார்கள். 
சித்தர்கள் வாழ்ந்த பகுதியானதால் சில காலம் வரை இந்த மலைக்கோயிலில் வழிபாடு இல்லாமலிருந்தது. பின்னர் காலம் கனிந்ததும் மீண்டும் முருகப்பெருமான் வெளிப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கத் தொடங்கினார். தேரையர் ஜீவ சமாதி அடைந்ததும் தோரணமலையில்தான் என்று நூல்குறிப்புகள் பலவும் கூறுகின்றன.  இன்றைக்கும் சித்தர்கள் பலர் அருவமாக வந்திருந்து வழிபடும் தெய்வ மலை இது. 


தோரணமலையில் மொத்தம் 64 தெய்வச்சுனைகள்  உள்ளன. இவை யாவும் பல நோய்களைத் தீர்க்க வல்லவை. மலையின் தொடக்கத்திலேயே ஸ்ரீபாலமுருகன் சந்நிதி அமைந்துள்ளது. இவரை வணங்கிவிட்டு மலையேறத்  தொடங்கலாம்.  திருச்செந்தூர் முருகப்பெருமானை பார்த்தபடியே அருளும் தோரணமலை முருகப்பெருமான் சகல நோய்களையும் தீர்க்கவல்ல சித்தராகவே பக்தர்களுக்கு அருள் செய்கிறார். திருச்செந்தூர் செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து நேர்த்திக்கடன் செய்யலாம் என்ற ஒரு நம்பிக்கையும் இங்குள்ளது. மாலை போட்டுக்கொண்டு விரதமிருந்து இங்கு வந்து முருகப்பெருமானைத் தரிசிக்கிறார்கள். இயற்கையான குகையில் கம்பீரமாக முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். மலையின் சுற்றுப்பகுதியில் ஸ்ரீராமர் பாதம், பத்ரகாளி அம்மன் சந்நிதி, சாஸ்தா சந்நிதி, சப்த கன்னியர்கள் சந்நிதி ஆகியவையும் அமைந்திருக்கின்றன.


ராமாநதி, ஜம்புநதி என்ற இரு நதிகளுக்கிடையே இந்த தோரணமலை அமைந்துள்ளது என்பது கூடுதல் விசேஷம். இங்குள்ள சுனைத்தீர்த்தம் சரும நோய்களைத் தீர்க்கும் என்கிறார்கள். ராமபிரான் இங்கு வந்து முருகப்பெருமானை வணங்கிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. மகாகவி பாரதி ‘குகைக்குள் வாழும் குகனே’ என்று போற்றிப் பரவியதும் இந்தத் தோரணமலை முருகனைத்தான். தோரணமலை முருகனை வணங்கினால், தடைப்பட்ட திருமணங்கள் நடக்கும்; புத்திர பாக்கியம், வேலை வாய்ப்பு, மன நிம்மதி ஆகியன கிடைக்கும் என்பது பல பக்தர்கள் தங்கள் வாழ்வில் அனுபவித்துள்ள பிரத்யட்சமான உண்மை என்கிறார்கள். இங்கு வந்து தியானித்து வழிபட்டால் முருகப்பெருமான் மற்றும் சித்தர் பெருமக்களின் ஆசிகள் ஒருசேர கிடைக்கும். மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையில் இந்த ஆலயத்தில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. தைப்பூசம் இங்கு விமர்சையான திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. 


எத்தகைய வேண்டுதல் இருந்தாலும் இங்குள்ள முருகப்பெருமான் உடனே வரமளிக்கிறார் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஒவ்வொருமுறை இந்த மலைக்குச் செல்ல படிகள் ஏறும்போதெல்லாம்,  தங்களை வாழ்க்கையிலும் உயர்த்தி விடுகிறார் முருகப்பெருமான் என்று பக்தர்கள் மெய்சிலிர்க்க கூறுகிறார்கள். 'வேண்டுதல்கள் எதுவானாலும் இந்தத் தோரணமலை முருகனை வணங்கிப் பாருங்கள்; தாமதம் இல்லாமல் அருள் செய்ய வருவான்! அவன்தான் எங்கள் முதற்கடவுள்' என்று இந்த வட்டாரமே பெருமை பொங்க இந்த அழகனை ஆராதிக்கிறது. நாமும் சென்று தரிசித்து வரலாமே!

அற்புதமான இந்த யாத்திரையில் 

நீங்களும் கலந்துகொள்ள வேண்டுமா?

இங்கே க்ளிக் செய்யவும்...