Published:Updated:

தனியார் நிறுவனத்தின் கைகளுக்குப் போகிறதா மாமல்லபுர வரலாற்றுப் பொக்கிஷங்கள்? - உண்மை நிலவரம் என்ன? #AdoptAHeritage

சிற்பக் கலைநகரமான மாமல்லபுரத்தை இதுவரை தொல்லியல் துறை பராமரித்து வந்தது. தற்போது, தனியார் கையில் தரவிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியிருக்கிறது. 

தனியார் நிறுவனத்தின் கைகளுக்குப் போகிறதா மாமல்லபுர வரலாற்றுப் பொக்கிஷங்கள்? - உண்மை நிலவரம் என்ன? #AdoptAHeritage
தனியார் நிறுவனத்தின் கைகளுக்குப் போகிறதா மாமல்லபுர வரலாற்றுப் பொக்கிஷங்கள்? - உண்மை நிலவரம் என்ன? #AdoptAHeritage

ங்கெல்லாம் பாறைகள் தென்படுகின்றனவோ, அங்கெல்லாம் சிற்பங்களையும், குடைவரைக் கோயில்களையும் மாமல்லபுரம் பகுதியில் செதுக்கிவிட்டுச் சென்றிருக்கிறார்கள் பல்லவ மன்னர்கள். மாமல்லபுரத்தில் நின்றுகொண்டு எந்தத் திசையை நோக்கினாலும் அங்கு ஒரு குடைவரைக் கோயிலோ அல்லது அழகிய சிற்பமோ இருக்கிறது. 1,000 வருடங்களுக்கும் மேலாக நம் தொன்மை, பாரம்பர்யம், பண்பாட்டை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றன மாமல்லபுரச் சிற்பங்கள். அர்ச்சுனன் தவம் செய்யும் காட்சி, கடற்கரைக் கோயில், அதிரணசண்ட மண்டபம், கிருஷ்ணன் கோவர்த்தன மலையைத் தூக்கும் காட்சி, பஞ்சரதச் சிற்பக் கோயில்கள், கொற்றவையின் சிற்பம் ஆகியவற்றை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்புத் தட்டாது. ஒவ்வொரு பார்வையிலும் புதிய புதிய காட்சிகள் தோன்றும்.  

இந்தியாவின் வரலாற்றுத் தொன்மைக்குச் சான்றாக இருக்கும் மாமல்லபுரத்தை இதுவரை தொல்லியல் துறை பராமரித்து வந்தது. தற்போது,  அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் சிற்பக் கலைநகரமான மாமல்லபுரத்தைத் தனியார் கையில் தரவிருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகியிருக்கிறது. முதற்கட்டமாக, அறிவிப்புப் பலகைகள், பயணச் சீட்டு விநியோகம், நிழற்குடைகள், கழிப்பறை நிர்வாகம் ஆகியவற்றை ஐந்து ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் ஒரு தனியார் நிறுவனம் கையில் எடுத்திருக்கிறது.  

`அடாப்ட் எ ஹெரிடேஜ்’ (Adopt A Heritage) என்னும் திட்டத்தின் மூலம்,  டெல்லி செங்கோட்டை, தாஜ்மகால் உள்பட பல நினைவுச்சின்னங்கள் தனியாரிடம் தத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தியா முழுவதுமுள்ள 93-க்கும் மேற்பட்ட சுற்றுலாத்தலங்கள், 462 பாரம்பர்யச் சின்னங்களை பெருநிறுவனங்களுக்குத் தர திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. மாமல்லபுரம் தவிர,  செஞ்சிக்கோட்டை, சித்தன்னவாசல் சமணப்படுகை மற்றும் கற்கோயில்கள், கொடும்பாளூர் மூவர் கோயில், திருமயம் கோட்டை, திருமயம் அருங்காட்சியகம், திண்டுக்கல் கோட்டை ஆகியவற்றையும் தனியாருக்குத் தரும் பட்டியலில் வைத்திருக்கிறார்கள். 

மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சகம், மத்திய கலாசாரத் துறை அமைச்சகம், இந்தியத் தொல்லியல் துறை ஆகியவற்றுடன் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் பெருநிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் இணைந்து ஒப்பந்தம் செய்துகொண்டு நினைவுச் சின்னங்களைத் தத்தெடுக்கலாம். அப்படித் தத்தெடுக்கும் நினைவுச் சின்னங்களில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதே இந்த நிறுவனங்களின் பணி. ‘

`சுற்றுலாப் பயணிகளின் நலனுக்காகக் குடிநீர், தங்குமிடம், கழிப்பறை உள்ளிட்ட சுகாதார வசதிகள், பாதைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், அறிவிப்புப் பலகைகள் வைத்தல், கண்காணிப்புக் கருவிகள் பொருத்துதல், நினைவிடங்களைச் சீரமைத்தல், இரவு நேரத்திலும் சுற்றிப் பார்க்கும் வசதிகளை ஏற்படுத்தித் தருதல் போன்ற வசதிகளை மேம்படுத்தவே தனியார் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கிறோம். இந்தத் திட்டம், பெரு நிறுவனங்கள் வழங்கும் சமூகப் பொறுப்பு நிதி (Corporate Social Responsible Fund) மூலம் செயல்படுத்தப்படும். எனவே, அவர்கள் செய்துதரும் வசதிகளுக்காகக் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்படாது" என்று விளக்கமளித்திருக்கிறது மத்திய அரசு. 

இது குறித்து வரலாற்று ஆர்வலரும், தமிழ் மரபுசார் மின்னிதழின் ஆசிரியருமான ராஜசேகர் பாண்டுரங்கனிடம் பேசினோம்.. 

``இதேமாதிரி திட்டம்  ஐரோப்பிய நாடுகளில் நடைமுறையில் இருக்கிறது. அங்குள்ள மரபுச் சின்னங்களை உணவகங்கள், தங்கும் விடுதிகள், கைவினைக் கலைஞர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இணைந்து ஓர் உள்ளூர்க் குழுவை நியமித்துப் பாதுகாக்கிறார்கள். இது முற்றிலும் சுயசார்பு முறை என்பதால், அந்த ஊரில் உள்ள தொழில்கள் வளர்வதோடு, மரபுச் சின்னங்களும் பாதுகாக்கப்படுகின்றன. சோழர் காலத்தில், கோயிலைச் சார்ந்த சிறுதொழில் நடத்துவோர் அரசுடன் சேர்ந்து குழு அமைத்துப் பராமரிப்பு பணிகளைச் செய்து பாதுகாத்தனர். இந்தத் திட்டம் மூலம் அடிப்படைக் கட்டமைப்புகள் மேம்படும் என்பதில் ஐயமில்லை. 

ஆனால், இங்கு மரபுச் சின்னங்களுக்குத் தொடர்பே இல்லாத நிறுவனங்களிடம் அவை ஒப்படைக்கப்படுவதுதான் வருத்தமளிக்கிறது. அந்த நிறுவனங்களே முன்னின்று பணிகளை நிறைவேற்றுமா அல்லது ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைப்பார்களா என்று தெரியவில்லை. பாரம்பர்ய நினைவுச் சின்னங்களுக்குத் தொடர்பே இல்லாத கார்ப்பரேட் நிறுவனங்களிடம்  அவற்றை ஒப்படைப்பது என்பது கலாசாரத் தாக்குதலைப் போன்றது. அந்நிய நிறுவனங்களின் கைகளுக்கு மரபுச் சின்னங்கள் முழுவதுமாகச் சென்றால் உள்ளூர் மக்களின் தொடர்பு இல்லாமல் போகும். அவர்களின் வருவாயும் பாதிக்கப்படும். சிசிடிவி (CCTV) மூலம் கோயில்களை கண்காணிப்பது, காவலர்களை நியமித்துப் பாதுகாப்பு தருவது போன்ற முக்கிய அம்சங்களைத் தனியார் நிறுவனங்கள் செயல்படுத்தும். மக்கள் தேவையில்லாமல் பதற்றமடைய நேரிடும். தொடர்ந்து தனியார் வசம் வரலாற்றுச் சின்னங்கள் இருந்தால் அவற்றின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். 

மரபுச் சின்னங்களைத் தத்தெடுக்கும் தனியார் நிறுவனங்கள் அதுகுறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தத் தகவல் மையங்களை நிறுவவுள்ளன. இந்த மையங்களில் வரலாறு படித்த உள்ளூர் மாணவர்களைப் பணியில் அமர்த்த வேண்டும். மரபுச் சின்னங்களை வெறும் விளம்பரம் செய்யும் இடமாகத் தனியார் நிறுவனங்கள் கருதாமல், அவை தேசத்தின் பல்லாயிரம் ஆண்டு பண்பாட்டின் அடையாளச் சின்னம் என்ற பொறுப்புஉணர்வோடு செயல்படவேண்டும்" என்கிறார் அவர்.

இதுகுறித்துப் பேச தொல்லியல் துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டோம். பெயர் வெளியிட வேண்டாம் என்ற வேண்டுகோளோடு நம்மிடம் பேசிய ஒரு அதிகாரி, " 'அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்துகிறோம்'  என்றுதான்  தனியார் நிறுவனங்கள் நுழைகிறார்கள். காலப்போக்கில் ஒட்டுமொத்த நிர்வாகமும் அவர்களின் கைகளுக்குச் சென்றுவிடும் வாய்ப்புள்ளது. பாரம்பரிய சின்னங்களை நிர்வகிப்பதில் தலையீடுகள் அதிகமாகிவிடும். தனியார் மயமாக்குவதன் முன்னோடித் திட்டம் தான் இது"  என்றார்.  

மாமல்லபுரத்தைத் தத்தெடுத்திருக்கும் ‘இந்தியன் அசோசியேஷன் ஆஃப் டூர் ஆபரேட்டர்ஸ்’ (Indian Association of Tour Operators)அமைப்பின் தமிழ்நாடு பகுதித் தலைவர் பாண்டியனைத் தொடர்பு கொண்டோம். ‘‘நம் பாரம்பரிய சுற்றுலாத்தலங்களைப் பார்வையிட வரும் வெளிநாட்டவர்கள் முகம் சுளிக்கும் அளவுக்குத்தான், நம் ஊரில் கழிப்பறை வசதி மற்றும் சுகாதாரம் போன்றவை உள்ளன. அடிப்படைச் சுகாதாரத்தை சர்வதேசத் தரத்துக்கு மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மாமல்லபுரத்தைத் தத்தெடுத்திருக்கிறோம். அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள் என்ற நல்ல நோக்கத்தில்தான் இந்தப் பணியைச் செய்கிறோம்." என்றார் அவர்.  

இதுகுறித்து கருத்தறிய தமிழகச் சுற்றுலாத்துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோது, “மாமல்லபுரத்தைத் தனியாருக்குத் தருவது பற்றி இதுவரை எங்களுக்குத் தகவல் இல்லை.." என்று முடித்துக் கொண்டார்கள். 

பாரம்பரியச் சின்னங்களையும் கோயில்களையும் சீரமைக்கிறோம் என்ற பெயரில் பல வரலாற்று ஆதாரங்களையும், கல்வெட்டுகளையும், ஓவியங்களையும் சிதைத்த ‘பெருமை’ நமக்கு உண்டு. வரலாறே தெரியாத நிறுவனங்களின் கைகளில் இந்த நினைவுச் சின்னங்கள் சிக்கினால், என்ன ஆகுமோ என்ற பயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.