திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

கயிலை... காலடி... காஞ்சி! - 21 - அபூர்வ தரிசனம்... ஆனந்த தட்சிணாமூர்த்தி!

கயிலை... காலடி... காஞ்சி! - 21 - அபூர்வ தரிசனம்... ஆனந்த தட்சிணாமூர்த்தி!
பிரீமியம் ஸ்டோரி
News
கயிலை... காலடி... காஞ்சி! - 21 - அபூர்வ தரிசனம்... ஆனந்த தட்சிணாமூர்த்தி!

நிவேதிதா

ஹஸ்ரம் வர்த்தந்தே ஜகதி விபுதா: க்ஷப்த்ர பலதா
நமன்யே ஸ்வப்னே வா ததனுசரணம் தத்க்ருத பலம்
ஹரி ப்ரஹ்மாதி மபி நிகடபாஜா மஸுலபம்
சிரம்யாசே சம்போ சிவ தவ பதாம் போஜ-பஜனம்


கருத்து: ஈசனே! இந்த உலக வாழ்வில் குறைவான பலன்களைத் தரக்கூடிய எண்ணற்ற தேவர்கள் இருக்கின்றனர். அவர்களை வழிபடவோ, பலன் பெறவோ நான் விரும்பமாட்டேன். உமக்கு அருகிலேயே இருக்கும் விஷ்ணு, பிரம்மா ஆகியோராலும் அடைவதற்கு அரிதான, உமது திருவடித் தாமரையில் என் மனம் எப்போதும் லயித்திருக்கவே விரும்பி பிரார்த்திக்கிறேன்.

- சிவானந்த லஹரி

கயிலை... காலடி... காஞ்சி! - 21 - அபூர்வ தரிசனம்... ஆனந்த தட்சிணாமூர்த்தி!

கா பெரியவா உத்தரவின்படி கடிதங்களை தெப்பக்குளத்துக்கு அருகில் இருந்த தபால் அலுவலகத்தில் இருந்த பெட்டியில் போட்டுவிட்டு திரும்பிய அந்த அன்பர், திரும்பி வந்து மகா பெரியவா
அமர்ந்திருந்த மேனாவை, பெரியவா அனுமதி இல்லாமல் திறந்தபோது, கண்ணில்பட்ட காட்சியைக் கண்டு பயத்தில் திடுக்கிட்டவராக திறந்த கதவை மூடாமலேயே தொலைவாக ஓடிப் போய்விட்டார்.

`தாம்தான் மகா பெரியவாளின் அணுக்கத் தொண்டராயிற்றே' என்ற நினைப்புடன் மேனாவை மெள்ளத் திறந்த அந்த அன்பர் அங்கே பார்த்தது, அனகோன்டா போல் இருந்த பாம்பு!

வாலை உள்பக்கமாக வைத்து, மேனாவின் கதவுப் பக்கமாக தலையை வைத்து தன் நெருப்புக் கண்களால் அந்த அன்பரை முறைத்துப் பார்த்ததுடன், பயங்கரமாக சீறியது, அந்தப் பாம்பு.

இப்படி ஒரு காட்சியைப் பார்த்த பின்பு அந்த அன்பர் மேனாவுக்கு அருகிலேயே இருப்பாரா என்ன? தூரமாக ஓடிவந்தவர், மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமலும், அங்கிருந்து போக முடியாமலும் திகைப்படைந்து நின்றுவிட்டார்.

திகைப்புடனே மேனாவையே பார்த்துக் கொண்டு நின்றவர், அவர் திறந்துவிட்டு வந்த மேனாவின் கதவு மெள்ள மெள்ள மூடுவதையும் கண்டார். மங்கலான அந்த வெளிச்சத்தில் மேனாவின் கதவு மெள்ள மெள்ள மூடுவதைக் கண்ட அந்த அன்பர் மேலும் அச்சத்துக்கு உள்ளானார்.

ஓர் அமானுஷ்யமான சூழ்நிலையில் தான் சிக்கிக்கொண்டு இருப்பதைப் போல், தவியாக தவித்தார். ஆனாலும், ஏனோ அவருக்கு அந்த இடத்தில் இருந்து உடனே போய்விட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் வரவில்லை. அப்போது மேனாவின் கதவு மெள்ள திறக்க ஆரம்பித்தது. கூடவே, மகா பெரியவாளின் அமுதம் போன்ற வார்த்தைகளும் கேட்டன.

கயிலை... காலடி... காஞ்சி! - 21 - அபூர்வ தரிசனம்... ஆனந்த தட்சிணாமூர்த்தி!

‘‘என்ன நீ, வேதமெல்லாம் படிச்சதா பெருமையா சொல்லிண்டிருக்கியே... வேதம் படிச்சதோட லட்சணம் இதானா? மேனாவின் கதவை மெள்ள தட்டி அனுமதி கேட்கணும்னு நோக்கு தோணலையோ?’’ என்று கேட்டபடியே மகா பெரியவா மேனாவில் இருந்து வெளியில் வந்தார்.

அப்போதுதான் அந்த அன்பருக்கு தாம் எவ்வளவு பெரிய பிழை செய்துவிட்டோம் என்பது தெரியவந்தது.

சாதாரணமாக... சக மனிதர்களைப் பார்க்கப் போகும்போதே, அவர்களுடைய அறைக் கதவைத் தட்டி அனுமதி கேட்ட பிறகே, உள்ளே நுழைய வேண்டும் எனும்போது, பெரிய மகான் ஒருவரை தரிசிக்கச் செல்லும் போது பக்தியுடனும் விநயத்துடனும் அனுமதி பெறவேண்டியது மிகவும் அவசியம் அல்லவா?

என்னதான், தான் மகா பெரியவாளுக்கு அணுக்கமாக இருப்பதாக நினைத்துக் கொண்டாலும், தான் செய்தது பெரும் பிழைதான் என்பதை அந்த அன்பர் உணர்ந்து தெளிவு பெற்றார்.

நாம் சென்ற இதழில் பார்த்தது, பி.என்.பரசுராமனின் அனுபவம் என்றால், இப்போது குறிப்பிட்டு இருப்பது, அவரின் தகப்பனார் அமரபாரதி நடராஜ சர்மாவின் அனுபவம்தான்!

தம்மை தரிசிக்க வந்த எண்ணற்ற பக்தர்களுக்கு உபதேசங்கள் மூலமாகவும், அருளாடல்கள் மூலமாகவும் அருள்புரிந்த மகா பெரியவா நீண்ட நெடிய தவம் மேற்கொண்டிருந்த தேனம் பாக்கம் திருத்தலத்துக்கே மறுபடியும் வருவோம்.

காஞ்சி முனிவர் தவமியற்றிய அந்த புண்ணியத் தலத்துக்கென்றே சில விசேஷ சிறப்புகள் இருக்கின்றன.

தேனம்பாக்கம் திருத்தலத்துக்கு வரும் பக்தர்களின் வாழ்க்கையில் ஆனந்தமே நிலவ வேண்டும் என்பதற்காக, அங்கே அருள்புரியும் தென்முகக் கடவுள், `ஆனந்த தட்சிணாமூர்த்தி' என்றே திருப்பெயர் கொண்டிருக்கிறார்.

பொதுவாக தட்சிணாமூர்த்தி சனகாதி முனிவர்களுடன் அருள்பாலிப்பார். ஆனால், தேனம்பாக்கம் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில், சப்தரிஷிகளுடனும் நந்திதேவருட னும் ஆனந்தமாகச் சிரித்த திருமுகத்துடன் திருக்காட்சி தருகிறார், தட்சிணாமூர்த்தி.

மகா பெரியவா வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்தி சந்நிதியில் அமர்ந்து தியானம் செய்வது வழக்கம். மேலும் சாதுர்மாஸ்ய விரதத்தின்போது, தட்சிணாமூர்த்தி சந்நிதிக்கு முன்பாக அமர்ந்து பாஷ்ய பாடங்கள் நடத்துவதும் உண்டு.

‘ஆனந்த தட்சிணாமூர்த்தியை தரிசித்து வழிபடும் பக்தர்களின் வாழ்க்கையில் சந்தோ ஷமே நிலைத்திருக்கும்’ என்பது மகா பெரியவா அருள்வாக்கு. குறிப்பாக வியாழக்கிழமைகளில் தரிசிப்பது மிகவும் விசேஷம்.

பிரம்மதேவரின் யாகத்தின் பலனாக ஈசன் சுயம்புவாகத் தோன்றிய மகிமை பெற்றது தேனம்பாக்கம் திருத்தலம். மேலும் இந்தத் தலம் தீர்த்த விசேஷமும் கொண்ட தலமாகும்.

பிரம்மதேவரால் ஏற்படுத்தப்பட்டதால், `பிரம்ம தீர்த்தம்' என்றே திருப்பெயர் பெற்றுவிட்ட இந்தத் திருத்தலத்தின் தீர்த்தத்துக்கு அப்படியென்ன விசேஷம்..?

- திருவருள் தொடரும்...