மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்கு?

கேள்வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்கு?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்கு?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

?வீட்டில் காமாட்சி விளக்கை எப்படி வைத்து வழிபட வேண்டும்?

- வி.சங்கரி, திருமங்கலம்

!தரையில் மெழுகிக் கோலம் இட்டு, விளக்கை அதில் வைத்து தீபமேற்றி வழிபடுவது சிறப்பு. குத்துவிளக்குக்குப் பாதம் உண்டு. அதற்கு மேல் தண்டு; அதற்கும் மேல் இலை. அதில் எண்ணெய் மற்றும் திரி போட்டு தீபம் ஏற்றுவோம்.

இப்படியிருக்க, விளக்கை எதில் இருத்துவது என்பது குறித்துப் பலவாறு சித்திரித்துக் குழப்புவதும் குழம்புவதும் வேண்டாமே! இன்றைய நாள்களில், மனம் போனபடி பரிந்துரை அளிப்பவர்கள் ஏராளம். அவர்கள் சொல்வதையெல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.

எனவே, வழிபாட்டில் கவனம் செலுத்துங்கள். விளக்கு வைக்கும் விதத்தில் சிந்தனையைத் திருப்பிவிடாதீர்கள். கோலத்தில் விளக்கை வைத்து வழிபடுங்கள்.

?மகா சிவராத்திரி வரவுள்ளது. அந்தப் புண்ணிய தினத்தில் லிங்க மூர்த்தத்தின் தத்துவம் மற்றும் மகத்துவங்களை அறிந்து வழிபட விரும்புகிறேன். சிவலிங்கத் தத்துவத்தை விளக்குங்களேன்.

- தி.காசிவிசுவநாதன், தூத்துக்குடி

!‘சிவம்’ என்றால் மங்கலம். ‘லிங்கம்’ என்றால் அடையாளம். மங்கல வடிவம் அது. மங்கலம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையைச் சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது. ‘நான் உன்னை வணங்குகிறேன் என்று சித்தத்தில் சிவனை இருத்திவிடு; உனது தேவைகள் அத்தனையும் உன்னை வந்தடையும்’ என்கிறது உபநிடதம் (தன்னம இத்யுபாசீத நம்யந்தேஸ்மைகாமா:).

சிவத்தின் இணைப்பால், உமா தேவிக்கு ‘ஸர்வமங்கலா’ என்ற பெயர் கிடைத்தது. இயற்கை தெய்வம் அவன். பனி படர்ந்த மலையில் அமர்ந்து பனி வடிவாக வும் காட்சியளிப்பான். பாண லிங்கம் இயற்கையில் விளைந்தது.

கேள்வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்கு?

தாருகாவனத்தில்... ஈச்வரரின் அம்சம் பூமியில் விழுந்து லிங்க வடிவமாகக் காட்சியளித்ததாகப் புராணம் கூறும். மார்க்கண்டேயனை சிரஞ்ஜீவியாக்கியதும், கண்ணப்பனை மெய்யப்பனாக்கி யதும் சிவலிங்கம்தான்.

கிடைத்த பொருளை, பிறருக்கு ஆதரவுடன் வாரி வாரி வழங்க, பொருளில் இருக்கும் பற்று படிப்படியாகக்

கேள்வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்கு?

குறைந்து, பற்றற்ற நிலை தோன்றிவிடும். அதற்குத் தியாகம் என்று பொருள். தியாகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டுகிறது சிவலிங்கம். பிறக்கும்போது எந்தப் பொருளும் நம்முடன் ஒட்டிக்கொண்டு வருவது இல்லை; இறக்கும்போதும் நம்முடன் சேர்ந்து வருவதில்லை. வாழ்நாளில் ஒட்டாத பொருளை ஒட்டிக்கொண்டு கவலைப் படுகிறோம்!

‘பொருளை உன்னோடு ஒட்டிக்கொள்ளாதே. விட்டுவிடு. என்னைப் பார்... என்னில், எந்தப் பொருளும் ஒட்டுவதில்லை’ என்று சொல்லாமல் சொல்கிறது சிவ லிங்கம். ‘வாழ்க்கையின் முழுமை தியாகத்தில் விளையும்’ என்கிறது உபநிடதம் (த்யாகே நைகே அமிருதத் வமானசு:).

லிங்கத்தில் எதை அர்ப்பணித் தாலும் ஒட்டிக்கொள்ளாது. அபிஷேகத் தண்ணீர் தங்காது; அணிகலன்கள் அணிய இயலாது; வஸ்திரம் உடுத்த இயலாது. அங்க அடையாளங்கள் தென்படாததால், அவன் உருவமற்றவன் என்பதை உணர்த்தும்.

சிலைக்கு தட்பவெட்பத்தின் தாக்கம் தெரியாது; அதாவது, அது உணராது. சுக - துக்கங்கள் தெரியாது. சொல்லப்போனால் சுகமும் துக்கமும் அதற்கு ஒன்றுதான். பனிப்பொழிவு என்றாலும் சரி, வெயில் கொளுத்தினாலும் சரி... அது அசையாது. சுக - துக்கங்களை சமமாகப் பார்க்கச் சொல்கிறது சிவலிங்கம். கண்ணனும் சுக - துக்கங்களைச் சமமாகப் பார் என்றே சொல்கிறான்.

சிவலிங்கம், மௌனமாக மனிதனுக்கு வழிகாட்டுகிறது. அசையாத சிவலிங்கம், உலகை அசையவைத்து இயக்குகிறது. அவன் அசையாமலே உலகம் அசையும்.

`உடல், உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு - அத்தனையும் இன்றி, எங்கும் நிறைந்து உலகை இயக்கும் உலகநாதனான பரம்பொருள் நான்தான்' என்று அடையாளம் காட்டுகிறது சிவலிங்கம். உடல் உறுப்புகள் இருந்தால்... அவற்றின் மூலம் ஆசாபாசங்களில் சிக்கித் தவித்து, வெளிவர முடியாமல் திண்டாடி, கிடைத்த பிறவியை பயனற்றதாக்கும் நிலை ஏற்படும். ஆசைகளை அறுத்தெறிந்தால், நம் உடலுறுப்புகள் சிவத்தோடு இணைந்துவிடும்; பிறவிப் பயன் கிடைக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது சிவலிங்கம். வாயால் உபதேசிக்காமல், செயல் முறையில் விளக்கம் தருகிறது சிவலிங்கம்.

நடைமுறையில், நிகழ்வின் நிறைவில் மங்களம் பாடுவோம். மங்கள ஆரத்தி எடுப்போம். கச்சேரியின் முடிவு மங்களம். சுப்ரபாதம் மங்களத்தில் நிறைவுபெறும். பஜனையில் அத்தனை பேருக்கும் மங்களம் பாடுவோம். ஏன்... வெண்திரையில், திரைப்படத்தின் முடிவிலும்கூட, ‘சுபம்’ என்று போடுவார்கள். மங்களம், சுபம், சிவம் அத்தனையும் சிவலிங்கத்தின் நிறைவு.

எங்கும் எதிலிலும் இருப்பது சிவம். அதுதான் சிவலிங்கம். உருவமற்ற பொருள் நமக்காக இறங்கிவந்து சிவலிங்க உருவத் தோடு விளங்குகிறது; அந்தக் கல்லிலும் கருணை தேங்கி இருக்கிறது!

கேள்வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்கு?

?வாழும் மகான்களின் திருவுருவப் படங்களுக்கு வழிபாடு நடத்தலாமா?

- எம்.வேல்முருகன், செஞ்சி

!ஸ்ரீராமன் இல்லாத நிலையில், தசரதரின் ஈமச்சடங்கை நிறைவேற்ற, மாமன் வீட்டுக்குச் சென்றிருந்த பரதனை வரவழைத்தார்கள். அவன் வரும் வழியில், நகர எல்லையில் இருந்த ஒரு மண்டபத்தில் தங்க வேண்டியிருந்தது.

புறப்படுவதற்குத் தாமதமாகும் என்று அறிந்ததால், மண்டபத்தைச் சுற்றிப் பார்க்க உள்ளே நுழைந்தான் பரதன். அங்கு அவனது முன்னோரான அரச பரம்பரையினரின் சிலைகள் இருந்தன. பார்த்துக்கொண்டே வந்தவன், கடைசியில் தசரதரின் பதுமையைப் பார்த்தான். அவன் மனம் திக்கென்றது. அருகில் இருந்த காவலாளியிடம், ‘இங்கிருக்கும் சிலைகள், இறந்தவர்களுக்கு மட்டும்தானா? உயிரோடு இருப்பவருக்கும் உண்டா?’ என்று விசாரித்தான்.

‘இளவரசே! இறந்தவர்களுக்கு மட்டும்தான் சிலை எழுப்பப்படும்’ என்று பதில் வந்தது. ஆகையால், பண்டைய மரபில்... வாழ்ந்து கொண்டிருப்பவருக்குப் படங்கள் இருக்காது!

சிறு வயதில் வீட்டைவிட்டு வெளியேறிய வன், வளர்ந்து பெரியவனான பிறகு, வீட்டுக் குத் திரும்புகிறான். வீட்டில் நுழைந்ததும், மாலையால் அலங்கரிக்கப்பட்டு சுவரில் தொங்கவிடப்பட்டிருக்கும் தந்தை யின் படத்தைப் பார்த்ததும், அவர் இறந்து விட்டதாகவே அவன் மனம் எண்ணும். இப்படிப்பட்ட காட்சியை இன்றைய சின்னத்திரையும் காட்டுவதுண்டு.

வாழ்ந்து கொண்டிருப்பவரைப் படம் எடுத்து மாலை அணிவித்து வழிபடும் முறை, புது நாகரிகத்தின் வெளிப்பாடு. கடவுளின் அவதார வடிவங்களை வழிபட்ட னர், நம் முன்னோர். பிற்காலத்தில், வாழ்ந்துகொண்டிருக்கும் மகான்களையும் இறைவடிவமாகப் பாவித்து வழிபடுகிறார்கள். மாறுபட்ட மனித சிந்தனை, மரபை மீறி எதையும் செய்யும். அதற்கு வரம்பு கிடையாது.

கேள்வி - பதில்: சிவனாருக்கு லிங்க உருவம் எதற்கு?

?குங்கிலியக் கலய நாயனார் கதையைப் படித் திருக்கிறேன். குங்கிலியம் என்றால் என்ன? வீட்டில் பூஜை செய்யும்போது  தூபத்துக்கு குங்கிலியத்தைப் பயன்படுத்தலாமா?

- சி.அழகம்மாள், தென்காசி

!தூபத்துக்குச் சாம்பிராணியும் பயன்படுத் தலாம் குங்குலியமும் பயன்படுத்தலாம்.

‘அக்னி தேவனுக்கு மூன்று அண்ணன்மார் இருந்தார்கள். அவர்கள், வேள்வியில் இடப்படும் உணவை அந்தந்த தேவர்களுக்கு அளிக்கும் பொறுப்பை ஏற்று சேவை செய்தார்கள். காலப்போக்கில், உயிர்வாழத் தேவைப்படும் உணவுத் தட்டுப்பாட்டால் உயிரிழந்தார்கள். பிறகு அவர்கள் ‘பூதத்ரு’ எனும் மரமாக உருவெடுத்தார்கள்.

அந்த மரத்திலிருந்து கிடைக்கும் கொழுப்புப் பொருள் குங்கிலியம். இறந்துபோன சகோதரர்களின் மாமிசம் குங்குலிய வடிவில் தென்பட்டது. அது நெருப்போடு இணைந் ததும் உருகி புகையை வெளியிட்டது; அக்னி பகவான், தன்னுடைய சகோதரர் களின் சேர்க்கையில் மகிழ்வதாக எடுத்துக் கொள்ளப்பட்டது’ என்ற தகவல் வேதத்தில் உண்டு.

ஆகையால் தூபத்துக்கு குங்குலியம் பயன் படுத்துவது சரிதான். கடவுள் வழிபாட்டில், 16 உபசாரங்களில் ‘தூப’ உபசாரமும் ஒன்று.

?பல்லி சொல்லும் பலன்கள் எப்படி வந்தன? அதனால் பலன் உண்டா?

- எஸ்.பிரியதர்ஷினி, முசிறி

!பல்லி சொல்லும் பலன்கள் மட்டுமல்ல... பஞ்சாங்கங்களில் ராமர் மற்றும் சீதா சக்கரங்களும் உண்டு. இந்த சக்கரங்களும் பலன் சொல்லும். இவை தவிர, கருட தரிசனம் மற்றும் பட்சி சகுனம் ஆகியவையும் உண்டு. பஞ்ச பட்சி சாஸ்திரம் தவிர, ‘சகுன சாஸ்திரம்’ என்றொரு பகுதியும் ஜோதிடத்தில் உண்டு.

வாயச ருதிகம், கோமாயு ருதிகம் போன்றன சகுன சாஸ்திரத்தில் அடங்கும். காகம், குள்ள நரி, கழுதை போன்றவற்றின் செயல்பாடு களை வைத்து பலன் சொல்வதும் உண்டு.

நல்ல விஷயங்களைப் பேசும்போது, கோயில் மணி ஒலித்தால் சுப சகுனம்; தும்மல் வெளிப்பட்டால் அப சகுனம். ‘நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம்!’ என்று பேசிக் கொண்டிருக்கும்போது, எங்கிருந்தோ ஒரு குரல்... ‘நடக்காது’ என்று காதில் விழுந்தால், அதை அபசகுனமாக நினைத்துக் கவலைப்படுவோம். சிந்தனையை திசை திருப்பும் விஷயங்களை நம் மனம் எளிதில் ஏற்றுக்கொண்டுவிடும். நாம் ஒன்றை நினைக்கும்போது, அதற்கு எதிரிடையான எண்ணங்களும் அடிமனதில் ஒளிந்திருக்கும்.

சகுனங்கள் தென்படும்போது, எதிரிடை யான எண்ணங்கள் தூண்டப்பட்டு, நம் நினைவுக்கு வரும். சகுனம் என்பது மனம் சார்ந்த விஷயம். இதில், பல்லி என்றில்லை... எல்லா சகுனங்களும் ஒன்றுதான்!

- பதில்கள் தொடரும்...