திருத்தலங்கள்
தொடர்கள்
Published:Updated:

உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்! - 4

உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்! - 4
பிரீமியம் ஸ்டோரி
News
உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்! - 4

டாக்டர் ஜெயம் கண்ணன்

உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்! - 4

மூன்று தலைமுறையாக ஸ்ரீசுத்த ரத்தினேஸ்வரருக்கும் ஸ்ரீபஞ்ச நதன நடராஜருக்கும் பூஜை செய்து வரும் புண்ணியத்தைப் பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர், கோயில் அர்ச்சகர் நடராஜ சிவாச்சார்யர் என்று சொன்னேன் இல்லையா?

இந்தக் கோயிலை இன்னும் சிறப்பாகப் பராமரித்து, பெருமானின் அருளை உலகறியச் செய்ய வேண்டும் எனும் பேராவலும் உள்ளக்கிடக்கையும், அவருடைய ஒவ்வொரு வார்த்தையிலும் தெறிக்கிறது. ‘‘இந்த பிரம்ம தீர்த்தம், உலகில் வேறு எந்தக் கோயிலிலும் பார்க்க முடியாத அதிசயம். எந்தக் கோடைக்கும் இது வற்றியதே இல்லை. கடுமையான வறட்சி வரும்போது, எங்க பெரம்பலூர் மாவட்டத்துக் கிணறுகள், நீர்நிலைகள் எல்லாமே சொட்டுத்தண்ணி இல்லாம வறண்டு போயிடும். ஆனா, இந்த பிரம்ம தீர்த்தம் மட்டும் வற்றியதேயில்லை!

உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்! - 4

எப்போதும், குடம்விட்டு எடுத்துக்கொள்ளும் அளவுக்கு தண்ணி நிறைந்திருக்கும். இதை இறைவனின் பெருங் கருணைன்னு சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்? இந்தத் தீர்த்தம், நோய்களைக் குணப்படுத்தும் வல்லமை கொண்டது’’ என்கிறார் நடராஜ சிவாச்சார்யர்.

சோழப் பேரரசன் ராஜராஜ சோழன் நோய்வாய்ப் பட்டிருந்தபோது, இங்கிருந்து தீர்த்தம் எடுத்துச் செல்லப்பட்டு,  அதை அவர் அருந்திய பின்னரே அந்த நோய் அகன்றதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. கோயிலில் பரவலாக பல இடங்களில் கல்வெட்டுகள் அமைந்துள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் கேன்களிலும், பாட்டில்களிலும் பக்தியோடு தீர்த்தத்தை வாங்கிச்செல்லும் காட்சியைப் பார்க்க முடிகிறது. இந்த ஊற்றால்தானே, ஊருக்கே ‘ஊற்றத்தூர்’ என்ற பெயர் வந்தது!

உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்! - 4

‘‘பிரம்மனுக்கே சாப விமோசனம் கொடுத்த தீர்த்தம் என்பதாலும் உலகின் அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் இங்கே கலக்கின்றன என்ற ஐதீகத்தாலும் நோய்கள் தீர்க்கும் என்ற நம்பிக்கையாலும் இங்கே வர்ற எல்லோருமே தீர்த்தத்தைக் கண்டிப்பா எடுத்துட்டுப் போவாங்க!’’ என்ற அர்ச்சகருடன், தீர்த்தத்தின் அருகே இருக்கும் நந்தியைத் தாண்டி, அடுத்த மண்டபத்துக்குள் நுழைகிறோம்.

‘பஞ்சமங்கலம்’ என்ற சிறப்புப் பெற்ற இவ்வூரின் சிறப்பான தீர்த்தங்களுள் ஒன்று பிரம்ம தீர்த்தம். மற்றொன்று, நந்தியாறு. `அந்த தீர்த்தத்தின் மகிமையையும் கேட்க வேண்டுமே’ என்று எண்ணியபடியே மகா மண்டபத்துக்குள் பிரவேசிக்க, அங்கே நமக்கு வலப்புற மூலையில் கண்களில் படுகிறது, கிழக்குப் பார்த்துப் படுத்திருக் கும் மூன்றாவது நந்தி (கொடி மரத்துக்கு அருகிலும், பிரம்ம தீர்த்தத்தின் அருகிலும் மற்ற இரு நந்திகள் மேற்கு திசை நோக்கி உள்ளன).

‘எல்லா கோயில்களிலும் சுவாமியைப் பார்த்து, மேற்கு முகமாகத்தானே நந்தி இருக்கும்.  ஆனால், இதென்ன வித்தியாசமாக..?'' என்று ஆச்சர்யமும்  ஆர்வமும் என்னை ஆட்கொண்டன.பொதுவாக மகாமண்டபத்தில் நந்திக்கு இடமளிப்பது வழக்கம் இல்லை. அந்த வகையிலும் வித்தியாசப்படுகிறார் இந்த நந்தியார்!

உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்! - 4

ஊட்டத்தூர் திருக்கோயிலுக்குரிய தீர்த்தங் களில் முக்கியமானது நந்தியாறு. அது உருவானதன் காரணகர்த்தாதான், கிழக்கு நோக்கி அமர்ந் திருக்கும் இந்த நந்தியார். தலபுராணத்தில், இந்த நந்திக்கான விளக்கம் சிறப்பாகக் கொடுக்கப் பட்டுள்ளது.

ஒருமுறை கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி, துங்கபத்திரா ஆகிய நதிகளுக்குள் எது மேன்மையானது என்ற போட்டி வந்தபோது சிவபெருமான், நந்தியை அழைத்து, ‘‘எல்லா நதிகளையும் விழுங்கிவிடு. எது முதன்மை வாய்ந்ததோ அதனை மட்டும் வெளியே விடு’’ என ஆணையிட்டார். அதன்படி நந்திதேவர் 7 நதிகளையும் விழுங்கிவிட்டு கிழக்கு நோக்கி படுத்து இருந்ததாகவும், அப்போது கங்கை மட்டும் வெளியே வந்ததாகவும் கர்ண பரம்பரை கதைகள் கூறுகின்றன. கங்கை நதியே மேன்மையானது என முடிவெடுத்த நந்தி, கங்கையை வாய் வழியே வெளியேற்றியதால், அது இங்கே ‘நந்தியாறு’ என பெயர் பெற்றது. கங்கைக்கு சமமானதாகக் கருதப் படும் இந்த ஆறு, கோயிலுக்கு அருகே ஓடுகிறது. இவ்வூரின் வடக்கு பகுதியில் இந்த நந்தியாறு கொள்ளிடத்தில் இணைந்து, பின் கடலுடன் கலக்கிறது. ஓர் ஆற்றையே விழுங்கி வெளியேற்றிய நந்தியாரை வணங்கிவிட்டு மூலவர் சந்நிதிக்கு வருகிறோம்.

அடடா... சுத்த மாணிக்கமாக ஜொலிக்கும் அந்த சுயம்புநாதரின் உருவத்தினுள், அர்ச்சகர் காட்டிய ஆரத்தி அப்படியே செஞ்சுடராகப் பிரதிபலிக்க... உணர்வுகள் அனைத்தும் உறைந்த நிலையில், உன்மத்தமாகி நின்றேன்.

(தரிசனம் தொடரும்)

தொகுப்பு: பிரேமா நாராயணன்

படங்கள்: ராபர்ட்

அவனருளாலே அவன் தாள் வணங்கி...

‘‘இரண்டு வருஷத்துக்கு முன்னால டி.வி. புரொகிராம் மூலமாகத்தான் இந்தக் கோயில் பத்தித் தெரியவந்தது. ராஜராஜ சோழன் தஞ்சைப் பெரிய கோயில் கட்றதுக்கு முன்னாடியே இந்தக் கோயிலைக் கட்டியதாகவும், அவருக்கு இருந்த சிறுநீரக நோய், ஊட்டத்தூர் பிரம்ம தீர்த்தத்தை அருந்தி குணமானதாகவும் கேள்விப்பட்டேன். 2015-ம் வருஷம் எனக்கு சிறுநீரகத்தில் சிறிய பாதிப்பு வந்தது. அந்தப் பாதிப்பை விடவும், அது தந்த பயத்தினால் விளைந்த மன அழுத்தமும் பக்கவிளைவு களும்தாம் அதிகம்! பசியே எடுக்கலை. சாப்பிட முடியாமல் எடை ரொம்பக் குறைஞ்சதுடன் ஹீமோகுளோபின் அளவும் சராசரியைவிடக் குறைஞ்சு போச்சு! அப்போதான் ஊட்டத்தூர் கோயிலுக்கு முதல்முறையாகப் போனேன்’’- என்று நெகிழ்ச்சியுடன் விவரிக்கும் பக்தர் ரவி, கோவையைச் சேர்ந்தவர்.

ஊட்டத்தூர் சென்றுவந்த பிறகு, சிவனருளால் தனது உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து, பெரும் வியப்புடன் பகிர்ந்துகொண்டார்.

‘‘ஊட்டத்தூர் பிரம்ம தீர்த்தம் உண்மையிலேயே பேராச்சர்யம்! சுத்துப்பட்டில் இருக்கும் கிணறுகள் எல்லாம் தண்ணியே இல்லாம வறண்டு போய்க் கிடக்கிறப்போ, இந்தக் கிணற்றில் மட்டும் எப்போதும் எட்டி எடுக்கற மாதிரி தண்ணி இருக்கு. அதன் சுவையும் அவ்வளவு உன்னதம்! ஸ்ரீபஞ்சநதன நடராஜருக்கு வெட்டிவேர் மாலை, பூமாலை எல்லாம் சார்த்தி, நம்பிக்கையோட பிரார்த்தனை செய்துட்டு கிளம்பினேன். கோயிலில் சொன்னதுபோல, உடல் சுத்தம், மன சுத்தத்துடன் 48 நாள்கள் வெட்டிவேர் ஊறவைத்த பிரம்ம தீர்த்தத்தைக் குடித்துவந்தேன். இறைவனிடம் சரணாகதி அடைஞ்சிட்டோம்னா அப்புறம் எல்லாத்தையும் அவரே பார்த்துக்குவார், இல்லையா?!

என் உடல்நிலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டது. சிறுநீரகப் பாதிப்பும் குறைஞ்சிருச்சு. இப்போ, உடல் எடை தேறி, ஹீமோகுளோபின் அளவும் 7 மி.கி. அளவிலிருந்து 14 மி.கி. என்ற அளவுக்கு வந்திருக்கு. திரும்பவும் ஒருமுறை ஊட்டத்தூர் போய்ட்டு வந்தேன். இப்போ என் அனுபவத்தைக் கேட்ட பிறகு, என் குடும்பத்தினர், நண்பர்கள் பலர் அங்கே போய் வழிபட்டு வந்தாங்க! அவசியம் ஒருமுறை அனைவரும் போக வேண்டிய ஸ்தலம்!’’