Published:Updated:

கௌதமர் சொன்ன திருக்கதை!

சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்ஓவியம்: ரவி

பிரீமியம் ஸ்டோரி
கௌதமர் சொன்ன திருக்கதை!

சூரிய குலத்து மன்னர்; அயோத்தியின் அரசரான கன்மாடபாதன் என்பவருக்கு அருளுரை வழங்கிக்கொண்டிருந்தார் கெளதம மகரிஷி. அப்போது அவர், ‘‘மன்னா! சிவராத்திரியன்று கோகர்ணத்தில் இருந்தேன். அது சிவலோகம் போல் திகழ்ந்தது. அங்கே சிவராத்திரி வழிபாட்டை முடித்துக்கொண்டு, ஜனக மன்னன் நடத்தும் யாகத்தில் பங்கேற்பதற்காகப் புறப்பட்டேன். போகும் வழியில் ஓர் அதிசயத்தைக் கண்டேன்’’ என்றார்.

“அதை விரிவாகச்சொல்லுங்கள் ஸ்வாமி!” என ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டார் கன்மாட பாதன். அதை ஏற்று, தான் கண்ட அதிசயத்தை விரிவாக எடுத்துரைத்தார் கெளதமர்.

முனிவர் சொன்ன அந்தக் கதை, சிவராத்திரியில் அனைவரும் அவசியம் படித்தறிய வேண்டியது. கோடி புண்ணியம் தரும் அந்தத் திருக்கதையை, நாமும் தெரிந்துகொள்வோமா?

னக மன்னரின் யாகத்தில் பங்கேற்பதற்காக போய்க்கொண்டிருந்த கௌதமர், வழியில் ஒரு குளத்தில் நீரருந்திவிட்டு, குளக்கரையில் இருந்த ஓர் ஆலமரத்தின் அடியில் தங்கியிருந்தார்.

அப்போது, அருவருக்கத்தக்க - விகாரமான உருவத்துடன்கூடிய கிழவி ஒருத்தி அங்கே வந்தாள். ஏற்கெனவே தள்ளாடியபடி வந்த அவள், வெயிலின் கொடுமை தாங்காமல் அப்படியே சுருண்டுவிழுந்து இறந்தாள்.

கெளதமர் பதைபதைத்துப் போனார். அதே நேரம், ஆகாயத்தில் இருந்து தங்க விமானம் ஒன்று கீழே இறங்கியது. அதிலிருந்து சிவ கணங்கள் சிலர் வெளிப்பட்டனர். அவர்கள் அங்கு வந்ததற்கான காரணத்தை விசாரித்தார் கெளதமர்.

அதற்கு அவர்கள், “சிவபெருமானின் கட்டளைப்படி இந்தப் பெண்மணியை அழைத்துச் செல்ல வந்தோம்'' என்று பதில் சொன்னார்கள்.கௌதமர் விடவில்லை: ‘‘இவளைப் பார்த்தால், அதற்கு எந்த விதத்திலும் தகுதி படைத்தவளாகத் தொியவில்லையே! அப்படியிருக்க, இவளைப் போய் சிவலோகத்துக்குக் அழைத்துச் செல்ல வந்திருப்பதாகச் சொல்கிறீர்களே..?’’ என்று வியப்புடன் கேட்டார்.

சிவ கணங்கள் அமைதியாகப் பதிலுரைத்தனர்: ‘‘முனிவரே! இந்தப் பெண்மணியின் சரித்திரம் ஆச்சர்யமானது. சொல்கிறோம் கேளுங்கள்...’’ என்று கூறிவிட்டு, அந்தப் பெண்மணியின் கதையை விவரித்தார்கள்.

செல்வச் செழிப்புற்ற தேசம் கேகயம். மக்கள் வாழ்விலும் குறைவில்லை. காரணம்... அந்தத் தேசத்தின் மக்கள் தங்களின் கடமையையும் தர்மத்தையும் தவறாமல் கடைப்பிடித்து வந்தது தான். ஆனாலும், என்னதான் ஒளிவீசும் விளக்காக இருந்தாலும், அதன் அடியில் கொஞ்சம் இருள் இருக்கிறதல்லவா? அதுபோல், தர்மம் நிறைந்த கேகய தேசத்திலும் சௌமினி என்ற பெண் இருந்தாள்.

செல்வ வசதியில் திளைத்த செளமினி, பேரழகியாகவும் திகழ்ந்தாள். அவளுக்கு நல்லபடியாகத் திருமணமும் நடந்துமுடிந்தது. கணவனும் மனைவியுமாக இல்லறத்தை நல்லறமாக நடத்திவந்தார்கள்.

திடீரென்று ஒருநாள்... எதிர்பாராதவிதமாக சௌமினியின் கணவன் இறந்துபோய்விட்டான். சௌமினியும் சில நாட்கள் வருத்தத்தில் ஆழ்ந்திருந் தாள். ஆனால், நாட்கள் செல்லச்செல்ல, சௌமினியின் இளமை அவளை ஆட்டிப் படைத்தது; செல்வ வசதிவேறு! கேட்க வேண்டுமா? மனம்போன போக்கில் முறைகேடான வாழ்வு வாழத்தொடங்கினாள் அவள்.

கேட்பாரில்லாமல் போனதால், சௌமினியும் எல்லை மீறிப் போனாள். ஊரார் சும்மா இருப்பார்களா? அனைவருமாகக் கூடி, ‘‘இந்தக் கேடுகெட்டவள் இனிமேல் இந்த ஊரிலேயே இருக்கக் கூடாது. இவளை ஊரைவிட்டே விரட்டி விட வேண்டும்” என்று முடிவு செய்தார்கள்.

அதன்படி, சௌமினி ஊரைவிட்டு விரட்டப் பட்டாள். அதர்ம வழியில் நடந்தால், விளைவில் இருந்து தப்ப முடியுமா? கண்ணீர் வழியக் காட்டுக்குள் நுழைந்தாள்.

அங்கே வழியில் எதிர்ப்பட்ட ஒருவன், சௌமினியின் அழுகையைப் பாா்த்ததும், என்ன ஏதென்று விசாரித்தான். ஆதரவு இல்லாத நிலையில், எவராவது பேசத் தொடங்கினாலே போதும்;  ‘படபட’வென எல்லாவற்றையும் கொட்டிவிடுவோம் அல்லவா? இங்கே, நடுக்காட்டில் ஆதரவு கிடைத்ததும், சௌமினி எல்லாவற்றையும் விரிவாகவே கூறி அழுதாள்.

வந்தவன் இன்னும் சற்று நெருங்கி, ‘‘ஊரார் விரட்டினால் என்ன? நான் இருக்கிறேன் உனக்கு. கவலைப்படாதே’’ என்று ஆறுதல் கூறினான்.

அடித்து விரட்டப்பட்டவள், ஆறுதலாக ஒரு தோள் கிடைத்ததும்,  அப்படியே சாய்ந்துவிட்டாள். கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று, மனம்போன போக்கில் வாழ்க்கையை நடத்தத் தீா்மானித்தவா்களுக்கு, காலமாவது நேரமாவது? ஆதரவுக்கரம் நீட்டியவனை அப்போதே கரம் பிடித்தாள் சௌமினி.

தவறுகள் செய்து ருசி கண்ட மனம், அல்லலில் சிக்கித் தவிக்கும்போது, அடைக்கலம் எதிர்பார்க் கும். அப்படியோர் அடைக்கலம் கிடைத்து, அல்லலில் இருந்து விடுபட்டுவிட்டாலோ, பழையபடி தவறுகள் செய்யத் துணியும்.

ஆதரவு கிடைத்த புதிய வாழ்க்கையில் சௌமினி சந்தோஷமாக இருந்தாலும், அவள் மனது ஒருவனுக்குக் கட்டுப்பட்டு இருக்க விரும்ப வில்லை; பாடிய வாயும் ஓடிய கால்களும் சும்மா இருக்காது என்பதை அனுசரித்து, சௌமினியும் சந்தா்ப்பத்தை எதிா்நோக்கியிருந்தாள்.

அதற்கு ஏற்றாற்போல், சௌமினியின் புதுக் கணவன் வெளியூருக்குச் சென்றான். காட்டில் தனித்து விடப்பட்ட சௌமினி தறிகெட்ட பழைய வாழ்க்கையை நாடினாள். இந்த முறை அவள் மனம், மதுவை நாடியது.

“கணவனும் ஊரிலில்லை. இதைவிட்டால் வேறு சந்தா்ப்பம் வாய்க்குமோ வாய்க்காதோ? உடனடியாகக் குடித்துப் பாா்த்துவிட வேண்டியது தான்” எனத் தீா்மானித்த சௌமினி, மது மயக்கத்தில் மிதக்கத் தொடங்கினாள்.

இது ஏதோ கதைப்போக்காகப் பாா்க்க வேண்டிய விஷயம் அல்ல! புதை மணலில் சிக்கியிருப்பவர்கள், அதிலிருந்து வெளியே வர முயற்சி செய்ய வேண்டும். அதை விடுத்து மேலும் மேலும் புதைந்துகொண்டிருந்தால் நிலைமை என்னவாகும்?! அதுபோலத்தான், தவறுகளில் சிறிது தூரம் போகும்போதே, அதை உணர்ந்து திரும்பிவிட வேண்டும். இல்லையெனில், திரும்பி வரவே முடியாத அளவுக்குப் போய்விடுவோம்.

அப்படியான தவற்றையே செளமினியும் செய்தாள். மது போதையில் மனம் அழிந்த செளமினி மாமிசம் உண்ண விரும்பினாள்.

புத்தி தடுமாறியது. பசுவின் கன்றும் அவளுக்கு உணவானது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். தவறுகளுக்குப் பக்குவப்பட்ட மனம், பழி பாவங்களுக்கு அஞ்சாது அல்லவா?

பசுங்கன்றைக் கொன்று ஜீரணம் செய்த சௌமினி, சற்று புத்திதெளிந்து விவரம் தெரியத் தொடங்கியதும், அதிா்ச்சி அடைந்தாள். இருந்தாலும் அதைச் சமாளிப்பதற்கான முயற்சியில் இறங்கினாள். பசுங்கன்றின் எலும்புகளை எல்லாம் எடுத்து, எவரும் பாா்க்காத வேளையில் வீட்டுக்கு வெளியே கொட்டிவிட்டாள். வீடு திரும்பிய கணவனிடம், புலி வந்து பசுங் கன்றைத் தின்றுவிட்டது என்று பொய் சொன்னாள். கணவனும் அதை நம்பிவிட்டான்.

சில நாள்கள் கடந்தன. திடீரென சௌமினி இறந்தாள். யம தூதா்கள் சௌமினியின் உயிரைக் கொண்டுபோய், யமனின் எதிரில் நிறுத்தினாா்கள். அவளை மேலும்கீழுமாகப் பாா்த்த யமன், ‘‘அழகியென்ற ஆணவத்தால், உடம்பை வைத்துக் கொண்டு இவள் எத்தனை பாவங்களைச் செய்திருக்கிறாள்! அந்த உடம்பின் மூலமே இவள் தனது பாவங்களுக்கு உண்டான பலன்களை அனுபவிக்க வேண்டும். ஆகவே, இவள் வறுமை தாண்டவமாடும் குடும்பத்தில் போய்ப் பிறக்கட்டும்’’ என்றார்.

அதன்படியே வறுமை நிறைந்த குடும்பத்தில் பிறந்தாள் செளமினி. அந்த வீட்டில் அன்றன்று வயிற்றுக்குக் கிடைப்பதே கடினமாக இருந்தது. அது போதாது என்று, சௌமினியின் பெற்றோரும் இறந்து போனாா்கள். ஆதரவற்ற நிலையில், சௌமினி வீதிவீதியாக அலைந்து பிச்சையெடுத்து, வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தாள்.

யமன் வாக்கு பொய்க்குமா? நாளாக நாளாக சௌமினியின் உடம்பில், வியாதிகள் வெளிப் பட்டுத் தங்கள் இருப்பைக் காட்டின. உடம்பில் தள்ளாமையும் தளா்ச்சியும் தடையில்லாமல் அரங்கேறின; பாா்வை மங்கியது; ஆனால் பசி மட்டும் சற்றுகூடக் குறையவில்லை; மேலும் மேலும் அதிகரித்தது.

போகும் இடங்களிலெல்லாம், கண்ணில் பட்டவர்களிடம் எல்லாம் கையேந்தி, கிடைத்ததை வாங்கி உண்ட செளமினி,  சிவராத்திரிக்காகக் கோகா்ணம் போய்க் கொண்டிருந்த அடியாா் கூட்டத்துடன் சோ்ந்து, தானும் கோகர்ணம் போய்ச் சேர்ந்தாள்.

அங்கேயும் கோயில் வாசலில் நின்றபடி, பிச்சை கேட்டாள். அப்போது ஒருவன், ‘‘இந்தா! இதைச் சாப்பிடு!” என ஏளனத்துடன் சில வில்வ இலைகளை செளமினியின் கைகளில் போட்டுச் சென்றான். அது என்னவென்று பாா்த்த சௌமினி, அது உணவல்ல என்பது தெரிந்ததும், அதை அப்படியே தூக்கி தூர எறிந்தாள். அவளால் வீசப்பட்ட வில்வ இலைகள், அங்கிருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்தன.

அன்றைய நாள் சிவராத்திரி புண்ணிய தினம். சௌமினி வில்வ இலைகளை வீசியெறிந்தது, சிவபெருமானுக்கு அா்ச்சனை செய்ததுபோல ஆயிற்று. அந்தக் காரணத்தினால், சிவபெருமான் தங்கவிமானத்தை அனுப்பி, சௌமினியைக் கயிலாயத்துக்கு அழைத்து வரச்சொன்னாா்.

இவ்வளவு நேரமும் நாம் பாா்த்த இந்தக் கதையை, சிவ கணங்கள் சொல்லக் கௌதமா் கேட்டாா். அந்தக் கதையையே பிறகு, அயோத்தி யின் அரசரான கன்மாடபாதனுக்குச் சொன்னாா்.

`அறியாமல் செய்த சிவராத்திரி வழிபாடும் கூட, நற்பலனைத் தரும்' என்ற சௌமினியின் இந்தக் கதை, வரத பண்டிதம் மற்றும் பிரம்மோத்திர காண்டம் ஆகிய ஞானநூல்களில் விரிவாகவே கூறப்பட்டிருக்கிறது.

அறியாமல் செய்த பூஜைக்கே பலன் உண்டு எனும் போது, அறிந்தே செய்யும் சிவராத்திரி பூஜையின் பலனைக் கூறவா வேண்டும்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு