Published:Updated:

வினைகள் தீரும்... வாழ்க்கை செழிக்கும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வினைகள் தீரும்... வாழ்க்கை செழிக்கும்!
வினைகள் தீரும்... வாழ்க்கை செழிக்கும்!

அலகுமலையில் வேல்மாறல் பாராயணம்!கோவிந்த் பழனிச்சாமி

பிரீமியம் ஸ்டோரி
வினைகள் தீரும்... வாழ்க்கை செழிக்கும்!

திருப்பூர் மாவட்டம், பொங்கலூரைஅடுத்துள்ளது அலகுமலை கிராமம்.  இங்குள்ள மலையின் உச்சியில், அருள்மிகு முத்துக்குமார பாலதண்டாயுதபாணி என்னும் திருப்பெயருடன் அழகுறக் கோயில் கொண்டிருக்கிறார் முருகப்பெருமான்.

புராதனமும் புராணப் பெருமையும் மிகுந்த இந்தக் கோயிலில், கடந்த 5-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலையில் சக்தி விகடன், அலகுமலை காலைநேர கிருத்திகை வழிபாட்டுக்குழு மற்றும் குன்றுதோறாடல் வழிபாட்டுக்குழு இணைந்து நடத்திய வேல்மாறல் பாராயணம் பூஜை வெகுச் சிறப்பாக நடந்தேறியது.


விசேஷ அபிஷேக-ஆராதனைகளுடன் நடைபெற்ற இந்தப் பூஜைக்கு, உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் வந்து கலந்து கொண்டனர். அதிகாலை ஐந்து மணியளவிலேயே அபிஷேக ஆராதனைகளுடன் தொடங்கிய பூஜை, 10 மணி வரை நீடித்தது. நிறைவாக வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன், பவ்யா ஹரிசங்கர் ஆகியோர் வேல்மாறல் பாராயணத்தை வெகு சிறப்பாக நடத்திவைத்தனர். வினைகள் தீர்க்கும் வேல்மாறல் பாராயண வரிகளை இவர்கள் இருவரும் பாட, அவர்களோடு இணைந்து பக்தர்களும் மெய்ம்மறந்து பக்திப்பரவசத்துடன் பாடியபோது, முருகப்பெருமானின் அருள் சாந்நித்தியம் ஆன்மிக அதிர்வலைகளாய் ஆலய மெங்கும் நிறைந்ததை உணர்ந்து சிலிர்த்தோம்!

வினைகள் தீரும்... வாழ்க்கை செழிக்கும்!

முன்னதாக வேல்மாறல் பாராயணத்தின் சிறப்பை விரிவாக விளக்கினார் வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்...

‘‘அருணகிரிநாதர் முருகக் கடவுளைப் பற்றி 25 வகுப்புகள் பாடியுள்ளார். அதில் ஒன்று வேல்வகுப்பு. இது 16 அடிகள் கொண்டது. முருகப்பெருமானின் வழிபாட்டின்போது, இதைப் பாடி பாராயணம் செய்வார்கள். அப்படி பாடும்போது ஒவ்வொரு பாடலிலும் உள்ள ஒவ்வோர் அடி முடிவிலும் ‘எழுவாய்’ என்கிற பதம் சேர்க்கப்பட வேண்டும். 16 அடிகள் கொண்ட வேல்வகுப்புச் செய்யுளை 64 முறை, 48 நாட்கள் பாடி, முருகனின் அருளைப் பூரணமாகப் பெறமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் வள்ளிமலை சுவாமிகள்.

வினைகள் தீரும்... வாழ்க்கை செழிக்கும்!

அதன் அடிப்படையில்தான் அனைத்து முருகன் ஆலயங்களிலும் இந்த வேல்மாறல் பாராயணம் நிகழ்த்தப்பட்டு வருகிறது. வேல் வழிபாடு என்பதுதான் ஆரம்பம். அதன் பிறகுதான், முருக வழிபாடு ஏற்பட்டது. வேலுக்கு ஆற்றல் அதிகம். வேலவனுக்கு மூன்று சக்திகள் உள்ளன என்பார்கள். இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்றில், முதலாவதை வள்ளி என்றும், இரண்டாவதை தேவசேனா என்றும் கூறும் பெரியவர்கள், ஞான சக்தியாக வேலாயுதத்தைச் சொல்வார்கள். அந்த ஞானவேலின் பேரருளைப் பெறவேண்டித்தான் வேல்மாறல் பாராயணம் செய்யப்படுகிறது. வேலுக்கு வினைகள் தீர்க்கும் ஆற்றல் உண்டு. மனித மனங்களைப் பிடித்துள்ள அனைத்து தீவினை களும் தீர, இந்த வேல்மாறல் பாராயணத்தை தினம்தோறும் நிகழ்த்த வேண்டும். கூட்டுப் பிரார்த்தனைக்குப் பலன் அதிகம் உண்டு. அதிலும் குழுவாகச் சேர்ந்து இந்த வேல்மாறல் பாராயணத்தைச் செய்தால், நினைத்த காரியங்கள் அனைத்தும் நல்லபடி நிறைவேறும்.’’

வினைகள் தீரும்... வாழ்க்கை செழிக்கும்!

பூஜைக்கான ஏற்பாடுகளை அலகுமலை காலைநேர கிருத்திகை வழிபாட்டுக்குழுவினரும் குன்றுதோறாடல் வழிபாட்டுக்குழுவினரும் மிக அற்புதமாகச் செய்திருந்தார்கள். பூஜை நிறைவு பெற்றதும், வந்திருந்த அடியார்கள் அனைவருக்கும் அறுசுவை விருந்தும் அளிக்கப்பட்டது வெகு சிறப்பு.

பூஜை குறித்து, அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோயில் அறங்காவலர் குழுத்தலைவரான சின்னுக்கவுண்டரிடம் பேசினோம். ‘‘முற்காலத்தில் கொங்கு நாடு 24 நாடுகளை உள்ளடக்கியது. அதில் ஒன்றுதான் பொன்குலுக்கி நாடு. அதன் தலைநகரான பொங்கலூருக்கு அருகில், பறவையின் அலகு (மூக்கு) வடிவில் மலையின் உச்சி காட்சி அளிப்பதால், இந்த மலைக்கு ‘அலகுமலை’ என்று பெயர் வந்ததாகச் சொல்கிறார்கள். இந்த மலைக் கோயிலின் கிழக்கே சிவன்மலையும் சென்னி மலையும், வடக்கே கயித்தமலையும், தெற்கே வட்டமலையும், மேற்கே கொங்கண கிரியும் அமைந்துள்ளன. 300 படிகளைக் கொண்டுள்ள இந்த மலையில் தண்டாயுதபாணியாக அருளும் முருகனைத் தரிசிப்பதும், வழிபடுவதும் அவ்வளவு விசேஷம். தினம்தோறும் முருகப்பெருமானுக்கு வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இன்றைக்கு, சக்தி விகடனுடன் இணைந்து வேல்மாறல் பாராயணப் பூஜையை நடத்தியதில் எங்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சி!’’ என்றார்.

வினைகள் தீரும்... வாழ்க்கை செழிக்கும்!

மாதந்தோறும், மகிமை மிகுந்த ஒரு திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு என்று பயணித்து வருகிறது குன்றுதோறாடல் வழிபாட்டுக்குழு. இந்தக் குழுவின் தலைவரான திருப்பூரைச் சேர்ந்த ஆர்.கே.சண்முகம், ‘‘எங்கள் குழுவில் 200 பக்தர்கள் உறுப்பினராக இருக்கிறார்கள். முருகன் கோயில் இருக்கிற இடங்களுக்கெல்லாம் சென்று 16 வகை அபிஷேக, அலங்காரங்களுடன் சிறப்பு பூஜைகள் நடத்திவருகிறோம். கடந்த 47 வருடங்களாகத் தொடர்கிறது, எங்களது திருப்பணி. இதுவரை 1,250 முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளை நடத்தியுள்ளோம். கடந்த ஆண்டு மலேசியாவுக்குச் சென்று, புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோயி லில் அபிஷேக-ஆராதனைகள் நடத்திவிட்டு வந்தோம். அதேபோல் இலங்கை கதிர்காமம் கோயிலுக்கும் விரைவில் செல்ல இருக்கிறோம்’’ என்றார். அவரே தொடர்ந்து, ‘‘சக்தி விகடனுடன் இணைந்து நாங்கள் நடத்தும் மூன்றாவது வேல்மாறல் பூஜை இது. சக்தி விகடன் நடத்தும்  ஆன்மிகச் சேவைகளுக்கு எங்கள் வழிபாட்டுக் குழு எப்போதும் துணை நிற்கும்’’ என்றார் பெருமிதத்துடன்.

பூஜையில் கலந்துகொண்ட வேல்மதி என்ற வாசகி, ‘‘நான் தீவிரமான முருகப் பக்தை. இந்தக் கோயிலுக்கு அடிக்கடி வந்து முருகனை வழிபடுவது வழக்கம். எனினும், வேல்மாறல் பாராயண பூஜையில் கலந்துகொள்வது இதுதான் முதல் முறை; ஒருமுகப்பட்ட மனதுடன்  கூட்டுக்குழுவுடன் சேர்ந்து பாராயணம்  செய்தது, பக்திப் பரவசமான அனுபவத்தை அளித்தது. ஆன்மிக அமைப்பு களுக்கும் சக்திவிகடனுக்கும் மனமார்ந்த நன்றி!’’ என்றார் மகிழ்ச்சியுடன்.

அவரிடம் மட்டுமல்ல, அற்புதமான இந்த வைபவத்தில் கலந்துகொண்ட அன்பர்கள் அனைவருடைய முகங்களிலும் பூரண திருப்தியையும் மகிழ்ச்சியையும் காண முடிந்தது. அவர்களது இந்த மகிழ்ச்சி இன்னும் பன்மடங்காகப் பெருகவும், அவர்கள் வாழ்க்கைச் செழிக்கவும் அலகுமலை முருகன் அருள்பாலிப்பார்.

படங்கள்: ரமேஷ் கந்தசாமி    

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு