மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாரதர் உலா - ‘குறைகளும் கும்பாபிஷேகமும்’

நாரதர் உலா - ‘குறைகளும் கும்பாபிஷேகமும்’
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா - ‘குறைகளும் கும்பாபிஷேகமும்’

நாரதர் உலா - ‘குறைகளும் கும்பாபிஷேகமும்’

நாரதர் உலா - ‘குறைகளும் கும்பாபிஷேகமும்’

ள்ளே வரும்போதே, ‘‘அப்பப்பா... என்ன கூட்டம், என்ன கூட்டம்!’’ என்று படபடத்துக்கொண்டே நம் அறைக்குள் பிரவேசித்தார் நாரதர்.

‘‘கூவத்தூர் பக்கம்தான் கடுமையான கூட்டம் என்று கேள்விப் பட்டோம். ஒருவேளை நீங்களும் அங்கே போய் மாட்டிக்கொண்டீரோ?’’


‘‘ஐயய்யோ, நமக்குத்தான் அரசியல் வாடையே பிடிக்காது என்று உங்களுக்குத் தெரியுமே. நான் ஏன் அங்கே போகப்போகிறேன்?’’ என்ற நாரதரிடம்...

‘‘ஓகோ, அப்படியானால் திருவண்ணாமலை கோயில் கும்பாபிஷேகத் துக்குப் போய் வந்தீரோ?’’ என்று கேட்டோம்.

‘‘ஊஹூம், நான் சொல்ல வந்தது, பழநி தைப்பூசத்துக்கு வந்திருந்த பக்தர்களின் கூட்டத்தைப்பற்றி.’’

‘‘போனமுறை வந்தபோது ஏதோ ஒரு தகவல் வாட்ஸ் அப்பில் வந்ததாகச் சொன்னீரே, அதுபற்றி விசாரிக்கச் சென்றீரோ?’’

‘‘பரவாயில்லையே, நான் மறந்தாலும் நீங்கள் மறக்கமாட்டீர்கள் போலிருக்கிறதே’’ என்ற நாரதர் தொடர்ந்து கூறினார்...

நாரதர் உலா - ‘குறைகளும் கும்பாபிஷேகமும்’

‘‘அன்பர்கள் பலரும் ஸ்வாமிக்கு வேண்டிக்கொண்டு, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னம், பதார்த்தங்கள், பட்சணங்களை விநியோகிப்பது உண்டு. அப்படி எவரேனும் பிரசாதம் விநியோகம் செய்தால், கோயில் வளாகத்தில் பிரசாதக்கடைக்கு டெண்டர் எடுத்திருக்கும் கான்ட்ராக்டர்கள், அந்த அன்பர்களை  வலுக்கட்டாயமாக வெளியேற்றுகிறார்களாம். இதுகுறித்து, கோயில் நிர்வாகத்தில் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பக்தர்கள் குறைப்பட்டுக்கொள்கிறார்கள்.’’

‘‘நீர், அதுபற்றி கோயில் நிர்வாகத்திடம் விசாரித்தீரா?’’

‘‘விசாரிக்கத்தான் போனேன். ஆனால், நிர்வாகத்தினர் கும்பாபிஷேகப் பணிகளில் மும்முரமாக இருந்ததால் யாரையும் பார்க்க முடியவில்லை. சரி, வந்ததுதான் வந்தோம் கும்பாபிஷேகத்தைத் தரிசித்துவிட்டுப் போகலாமே என்று நினைத்து அங்கேயே முகாம் போட்டுவிட்டேன்’’ என்றார் நாரதர்.

‘‘சரி சரி, கும்பாபிஷேகம் எப்படி நடந்தது? ஏற்பாடுகள் எல்லாம் சிறப்பாகச் செய்யப்பட்டு இருந்தனவா?’’ என்று நாரதரிடம் கேட்டோம்.

‘‘கடந்த 2002-ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் கும்பாபிஷேகம் நடை பெற்றுள்ளது. ஆகமப்படி இரண்டு வருடங் களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டும்’’ என்றவரிடம், ‘‘இப்போதாவது நடந்ததே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்'' என்றபடியே, நண்பர் ஒருவர் கொண்டுவந்து கொடுத்திருந்த  கோயில் பிரசாதத்தை நீட்டினோம். பய பக்தியுடன் வாங்கி, பிரசாதத்தைச் சாப் பிட்டு முடித்தவர், அடுத்து திருவண்ணா மலை கும்பாபிஷேகத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.

‘‘கடந்த பிப்ரவரி 6-ம் தேதி காலை 9.15 மணிக்கு, ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று பக்தர்களின் பரவசக் குரல் எங்கும் எதிரொலிக்க, கோயில் கோபுரங்களுக்குக் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 10.05 மணிக்கு சுவாமி, அம்பாள் உள்ளிட்ட கருவறை விமானங்களுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. மேலும் உண்ணாமுலை அம்மன் சந்நிதிக்கு எதிரில் நிறுவப்பட்ட கொடி மரத்துக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது’’ என்றவர் தொடர்ந்து, ‘‘கும்பாபிஷேகம் முடிந்ததும், நவீன மின் மோட்டார்கள் மூலம் வந்திருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது’’ என்றார்.

‘‘வேறு ஏதேனும் சிறப்பான செய்திகள் உண்டா?’’ என்ற நம் கேள்விக்கு, ``உண்டு... உண்டு'' என்று தலையாட்டியபடி பதில் சொன்னவர் அதுபற்றியும் பகிர்ந்து கொண்டார்.

நாரதர் உலா - ‘குறைகளும் கும்பாபிஷேகமும்’

``கோயில் நிர்வாகம் சார்பில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் உறையை அமைச்சர் வெளியிட, ஆட்சியர் பெற்றுக் கொண்டார். கோயில் கும்பாபிஷேகத்தைப் பக்தர்கள் தரிசிக்க வசதியாக 16 இடங்களில் அகன்ற திரையில் நேரடி ஒளி பரப்பும் செய்யப்பட்டது.’’

‘‘பரவாயில்லையே. சிறப்பாகத்தான் ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள் போலும்...’’  என்று சொல்லிமுடிப்பதற்குள் இடைமறித்தார் நாரதர்...

‘‘குறைகள் இல்லாமல் கும்பாபிஷேகமா? போலீஸாரின் கெடுபிடி அதிகம் என்று புலம்பித் தீர்த்துவிட்டார்கள் பக்தர்கள். அதுமட்டுமா?  கோயிலுக்குள் செல்ல வி.ஐ.பி-களுக்கும், வி.வி.ஐ.பி-களுக்கும்தான் ‘சிறப்பு’ ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மற்றபடி பொதுமக்களுக்கும், சிவனடியார்களுக்கும் இப்படி தனிப்பட்ட ஏற்பாடுகள் எதுவும்  செய்யப்படவில்லை’’ என்று அலுத்துக் கொண்டார்.

‘‘அடப்பாவமே, மற்ற வசதிகளாவது செய்யப்பட்டு இருந்தனவா?’’ என்று நாம் கேட்க, ‘‘மற்ற வசதிகள் என்றால்?’’ என்று குழப்பத்துடன் பதில் கேள்வி கேட்டார் நாரதர். அவரிடம், ‘‘அதுதான் கழிப்பறை, போக்குவரத்து போன்ற வசதிகளைத்தான் கேட்டோம்’’ என்று விளக்கினோம்.

‘‘பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் வெளி இடங்களில் ‘மொபைல் டாய்லெட்’கள் வைக்கப் பட்டு இருந்தன. ஆனால், பயன்படுத்தமுடியாத நிலையில் இருந்ததால் பக்தர்கள்... குறிப்பாக பெண்களும், முதியவர்களும் ரொம்பவே சிரமப்பட்டுப் போனார்கள்’’ என்றார்.

‘‘போக்குவரத்து வசதிகள் எப்படி?’’

‘‘அந்தக் கொடுமையை ஏன் கேட்கிறீர்? பக்தர்கள் வந்த வாகனங்களை கோயிலில் இருந்து அதிக தூரத் திலேயே நிறுத்திவிட்டதால், பக்தர்கள் மிகுந்த சிரமத் துடன்தான் கோயிலுக்கு வரவேண்டி இருந்தது’’ என்ற நாரதரிடம், ‘‘ஆலய விழாக்கள் அரசு விழாவாக மாறியதால் வந்த குளறுபடிகள் இவை'' என்று அங்கலாய்த்துவிட்டு, ``வேறு ஏதேனும் குறைகள் உம் கண்ணில்பட்டனவா?’’ என்று கேட்டோம்.

‘‘கும்பாபிஷேகத்துக்கு முந்தின தினம், ஸ்வாமிக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடக்கும். அதற்கு முன்னதாக பக்தர்கள் ஸ்வாமியின் திருமேனியைத் தொட்டு வணங்க அனுமதித்ததோடு, அதற்காக பண வசூலும் நடந்ததாகவும், பணம் தந்தவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.''

நாரதர் உலா - ‘குறைகளும் கும்பாபிஷேகமும்’

‘‘அடக்கடவுளே! இந்தத் தகவல் உண்மைதானா?'' என்று நாம் அதிர்ச்சியோடு கேட்க, ‘‘அண்ணா மலையாருக்கே வெளிச்சம்’’ என்று பதில் சொன்னவரை, பழநி திருக்கோயில் விஷயத்துக்குள் இழுத்தோம்.
‘‘என்னவோ பழநியில் கூட்டம் அதிகம் என்று அலுத்துக்கொண்டீரே..?’’ என்று கேட்டோம்.

‘‘ஆமாம்! தைப்பூசம் முருகனுக்கு உகந்த விழா என்பது உமக்குத் தெரியாதா? முருகப்பெருமானின் கோயில்களில் விமர்சையாகக் கொண்டாடப்படுமே! குறிப்பாக தைப்பூசத் திருவிழாவின்போது பழநியில் நடைபெறும் தேரோட்டம் உலகப் பிரசித்திப் பெற்றது; பெருங்கூட்டம் கூடும் இந்த விழாவுக்கு. அந்தக் கூட்டத்தில்தான் வசமாகச் சிக்கிக்கொண்டேன்'' என்றார் நாரதர்.

``நாரதர் ஓரிடத்துக்குச் செல்கிறார் என்றால், அது தரிசனத்துக்காக மட்டும்தான் என்ற வழக்கம் கிடையாதே. சொல்லும்... அங்கேயும் ஏதேனும் பிரச்னைகள் கண்ணில்பட்டிருக்குமே'' என்று நாம் கேட்க, ``என்னை துல்லியமாகக் கணித்து வைத்திருக்கிறீர்'' என்று சிரித்தபடியே விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

‘‘கடந்த 9-ம் தேதி தைப்பூசத் திருவிழாவின் முக்கிய வைபவமான தேரோட்டம் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோயிலில் இருந்து தேரோட்டம் தொடங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர்வடம் பிடித்தனர்’’ என்று ஆரம்பித்தவரை இடைமறித்து, ‘‘பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் கூட்டமும் அதிகரித்து வருவதாகக் கேள்விப்பட்டோமே’’ என்றோம்.

‘‘ஆமாம், வருடந்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாத யாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த வருடம் சுமார் ஐந்து லட்சம் பக்தர்கள் தைப்பூசத் தரிசனத்துக்காக வந்திருந்தார்களாம். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தவும் 3000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். எனக்கும் நிறைவான தரிசனம் கிடைத்தது. ஆனால்...” என்று இழுத்த நாரதரிடம்,

‘‘என்ன நாரதரே, ஆனால் என்று இழுக்கிறீரே... தெளிவாகச் சொல்லுங்களேன்’’ என்று பரபரத்தோம்.

‘‘ஸ்வாமி நகைகள் முதல் கோயில் டெண்டர் வரை ஏகப்பட்ட குளறுபடிகள்’’ என்று நாரதர் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே, அவருடைய மொபைலுக்கு ஒரு கால் வந்தது. எடுத்துப் பேசியவர்,

‘‘சரிதான்! என்ன விஷயம் கூற வந்தேனோ, அது சம்பந்தமான தகவல்தான். அதுபற்றியும் தீர விசாரித்துவிட்டு, அனைத்து விவரங்களையும் முழுமையாக உம்மிடம் பகிர்ந்துகொள்கிறேன்’’ என்று கூறிவிட்டு, நமது பதிலை எதிர்பார்க்காமல் புறப்பட்டேவிட்டார்!