மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 32

சிவமகுடம் - 32
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - 32

ஆலவாய் ஆதிரையான் - ஓவியம்: ஸ்யாம்

சிவமகுடம் - 32

சர்ப்ப சரித்திரம்!

னிதர்கள் மிக விநோதமானவர்கள். எது சாத்தியமோ அதைக் கவனத்தில் கொள்ளாமல், தங்களது சாமர்த்தியத் தையே அதிகம் நம்புவார்கள். ஆனால், காலமோ அவர்களை விடவும் விநோதமானது. அது, மனிதர்கள் சாமர்த்தியத்துடன் போட்டுவைக்கும் மனக்கணக்குகளையெல்லாம், நொடிப்பொழுதில் தவிடு பொடியாக்கிவிடுவதுடன், அவற்றுக்கான தீர்வுகளையும் தனக்குச் சாதகமாக எழுதிக்கொள்ளும்.

காலத்தின் இந்த ரகசியத்தை சைவத் துறவியார் அறியாதவரல்ல;  ஆனாலும் அவரின் முன்வினை, அவரையும் சாமர்த்தியத்தை நம்பும் சாதாரணராகவே நம்பியின் மனைவியிடம் பேசச் செய்துவிட்டது. ஒரு சிறு மாறுதல் என்னவென்றால்... அவர், தன்னைக்காட்டிலும், மாமன்னன் கூன்பாண்டியரின் சாமர்த்தியத்தையே அதிகம் பாராட்டினார்.

பேராபத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக் கிறான் நம்பிதேவன் என்றும், உறையூரின் மீதான திடீர்ப் போருக்கு அவனே காரணம் என்றும் துறவியார் சொன்னதும், பெரிதும் பதற்றத்துக்கு ஆளானாள் நம்பியின் மனைவி. அதுகுறித்து மேலும் விளக்கும்விதமாக துறவியார் சொன்ன விஷயங்கள், அவருடைய மற்றொரு வேஷத்தையும் கலைத்துப்போட்டன!

ஆம்! சாதாரண போர் வீரனாக புரவியில் வந்து அவளை காப்பாற்றியவர், அவளுடன் உரையாடத் தொடங்கியபோது, போர் வீரன் என்ற வேஷம் கலைந்தது. தொடர்ந்து அவளிடம் அவர் அளித்த விளக்கங்கள்... இதுவரை, அவள் குடும்பத்துக்கு (ஏன் நமக்கும்கூட...) வெகு பரிச்சயமாகிவிட்டிருந்த `சைவத்துறவி’ எனும் வேஷத்தைக் கலைத்துப் போட்டது!

வெகு கம்பீரமாக பேசத் துவங்கினார் அவர். அவளுக்கு அவர் விளக்கவேண்டிய அவசியம் இல்லைதான் என்றாலும், அவளிடம் பதில்சொல்வதைச் சாக்கிட்டு, கூன்பாண்டியரின் வியூகக் கணக்கையும் தனது மனக்கணக்கையும் ஒருமுறை சரிப்பார்த்துக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.

 ‘‘பெண்ணே சொல்கிறேன் கேள்... எங்கள் மன்னவரின் இலக்கு சோழம் அல்ல. உங்கள் தேசத்தின் எல்லையையும் தாண்டி நீள்கிறது அவரது பார்வை. பல்லவர்களுக்கும் சாளுக்கியர் களுக்குமான பெரும்பகையும் அதனால் உண்டாகும் விளைவுகளும் இப்போதோ, எதிர் காலத்திலோ தென்னகத்தைச் சூறையாடிவிடக் கூடாது என்பதில் தீர்மானமாக இருக்கிறார் பாண்டியர்.

தற்போது, தங்களுக்குள் மோதிக்கொண்டிருக் கும் அந்த இருவரில் எவருக்கு வெற்றி கிடைத்தாலும்... அதனால் உண்டாகும் களிப்பு, ‘அடுத்து உறையூரை நசுக்கினால் என்ன, மதுரையைத் தாக்கினால் என்ன’ எனப்போன்ற பேராசைகளை விதைக்கும். அப்படியான ஆசைகள் - சிந்தனைகள் அவர்கள் மனதில் முளைவிடுமுன்பே தான் முந்திக்கொள்ள வேண்டும் என விரும்புகிறார் தென்னவன்.  ஆமாம், அவர்கள் எங்களது எல்லையைத் தொடும்வரையிலும் காத்திருக்க விரும்பவில்லை அவர்; இப்போதே தயாராகிவிடத் துடிக்கிறார். அத்துடன், அவ்வப்போது எழுந்து வாலாட்டிக் கொண்டிருக்கும் சேரனையும் தட்டிவைக்க வேண்டும். இவை எல்லாமும்தான் தாயே காரணம்... பாண்டியரின் பெரும் படை நகர்வுகளுக்கு!’’ - புறங்கை கட்டிக்கொண்டும், குடிசையின் முற்றத்தை அளவெடுப்பதுபோல் அங்கேயும் இங்கேயுமாக அலைந்தபடியும், விழிகள் விரிய பெருங்கனவோடு விவரித்துக் கொண்டிருந்தவர், சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டு, அந்தப் பெண்ணின் முகத்தை உற்றுநோக்கினார்.

சிவமகுடம் - 32

பாவம் அவள்! துறவி கூறியது எதுவும் அந்தப் பேதைப் பெண்ணுக்கு விளங்கவில்லை என்பதுடன், தன் கணவனின் நிலை என்னவாயிற்று என்பதை அறியும் ஆவலும் ஆதங்கமுமே அவள் முகத்தில் வெளிப்பட்டன. துறவியாரும் அதைக் கவனிக்கத் தவறவில்லை என்றாலும், அவளுக்கான பதிலை நேரடியாகச் சொல்ல முனையாததுடன், அவளை நோக்கி வேறொரு கேள்வியையும் வீசினார். ‘‘சோழம் இலக்கு இல்லையென்றால், பாண்டிய படைகள் இங்கே நிலைகொண்டிருப்பது ஏன் என்று உனக்குக் கேட்கத் தோணவில்லையா?’’

இந்தக் கேள்விக்கு, ஆம் என்றோ இல்லை என்றோ பதில் சொல்லத் தெரியாததால், ஏதோ ஒப்புக்கு... இடவலமாகவும், மேலும் கீழுமாகவும் தலையை ஆட்டிவைத்தாள் அந்தப் பெண்.

துறவி உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார். ‘தான் துறவியல்ல’ என்பதை அறிந்தவள் பேரதிர்ச்சிக்கு ஆளாகியிருப்பாள் என்பதை யும், அவளுடைய அந்த அதிர்ச்சியை, அவள் கணவன் குறித்து தான் கூறிய தகவல் இரட்டிப்பாக்கியிருக்கும் என்பதையும் அவர் அறியாமல் இல்லை. ஆனாலும் ஒரு காரணம்தொட்டே, அவளுடனான உரையாடலை மேலும் நீட்டித்தார்.

‘‘சரிதான்! சோழப் பெண்களுக்கு ராஜாங்க காரியங்களில் பரிச்சயம் இல்லைபோலும். ஆனால், உங்கள் இளவரசி மானியும், பொங்கி தேவியும் விதிவிலக்கு...’’ என்றவர் மேலும் தொடர்ந்தார். இப்போது அவரது பேச்சும் பாவனையும் நம்பியின் மனைவிக்கு மட்டுமல்ல, வேறு எவருக்கோ எதையோ உணர்த்துவதாகவும் அமைந்திருந்தன!

‘‘சோழதேசத்தை களமாக்கிக்கொள்ள பிரயத்தனப்படுகிறார் கூன்பாண்டியர். அதன் பொருட்டே சோழ வனங்களில் ரகசியப் பாசறை களை அமைத்தோம். தருணம் வாய்க்கும்போது படைகளை வெளிப்படுத்தத் திட்டமிட்டிருந் தோம். ஆனால், அதற்குள்ளாக பொங்கிதேவியும் நம்பிதேவனும் எங்களின் ரகசிய நடவடிக்கைகளை அறிந்துகொண்டார்கள்; உடனடியாக வெளிப்பட்டாக வேண்டிய அவசியத்தையும் உருவாக்கி விட்டார்கள். அவர்களை அங்கேயே சிறைப்பிடிக்கச் செய்தார் கூன்பாண்டியர். ஆனால், அங்கிருந்து இருவரும் தப்பித்துவிட்டார்கள். நாங்கள் நினைத்திருந்தால் மீண்டும் அவர்களை மடக்கியிருக்கலாம். ஆனால், கூன்பாண்டியர் வேறொரு திட்டம் வகுத்தார். அதன்படியே சகல விஷயங்களும் பிசகின்றி நடந்து கொண்டிருக்கின்றன’’ என்றவர், ஒருமுறை பெருமூச்செறிந்தபடி  குடிசையின் வாயிலை அணுகி, சட்டென்று தரையில் கால் நீட்டி  அமர்ந்துகொண்டார்.

பின்னர் குவளையில் மீதம் இருந்த நீரையும் முழுவதுமாகக் குடித்துமுடித்தவர், ஒருமுறைக்கு இருமுறையாகத் தொண்டையைச் செருமிக் கொண்டார். தொடர்ந்து, குடிசைக்கு உள்ளேயும் வெளியேயுமாக பார்வையைச் சுழலவிட்டதோடு, அடர்த்தியான தனது மீசையையும் ஒருமுறை முறுக்கிவிட்டுக்கொண்டு, சற்றே தாழ்ந்த குரலில் மீண்டும் ஒரு வினா தொடுத்தார்:  ‘‘குழந்தாய்! இப்போதுள்ள நிலைமை என்ன தெரியுமா?’’

வழக்கம்போல் இந்தக் கேள்விக்கும் அவள் பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கவே, அவரே தொடர்ந்தார்.

‘‘அஸ்திரங்களாகப் புறப்பட்ட படையணிகள் இரண்டும் வெவ்வேறு விதமாக, வெவ்வேறு இடங்களில் ஒன்றிணைந்து ‘வியான’ வியூகமாக மாறிவிட்டன. குழந்தாய்! வியான வியூகம் என்பது சர்ப்ப வியூகத்துக்குச் சமம்!’’

‘சர்ப்பம்’ என்பதை சற்று அழுத்தமாகவே சொன்னவர், வாயிற்புறத்தில் இருந்து எழுந்து நின்றுகொண்டார். சட்டென்று அவரின் முகபாவனை மாறியது. கண்களிலும் முகத்திலும் கடுமை அதிகரிக்க, வேகவேகமாக தனது புரவியை நாடி, அதன்மீது தாவி ஏறிக்கொண்டார். மெள்ள குதிரையை அவள் பக்கமாக நகர்த்தி வந்தவர், சட்டென்று குரலை உயர்த்திச் சொன்னார்...

‘‘பெண்ணே! நன்றாகக் கேட்டுக்கொள்... எங்கள் சர்ப்பம் பொங்கிதேவியைப் பின் தொடர்ந்து, சோழரின் ரகசியச் சுரங்கத்திலும் தலைநீட்டிவிட்டது! சொல்வதற்கில்லை... இந்நேரம், அது தனது கடும்விஷத்தையும் கக்கியிருக்கலாம்.’’

விழிகளை உருட்டியபடி ஒருவித மிரட்டல் தொனியுடன் இந்த விஷயத்தைச் சொல்லி முடித்தவர், பெரும் சிரிப்பொன்றையும் வெளிப்படுத்தினார். இடிமுழக்கமென ஒலித்த அவரின் நகைப்பொலி, அந்தப் பிராந்தியத்தையே அதிரச் செய்தது.

தொடர்ந்து, தனது புரவியை நகரச்செய்து சிறிது தூரம் சென்றவர், மீண்டும் அதைத் திருப்பிக் கொண்டு வந்தார். அதிர்ச்சியில் சிலையென நின்றிருந்த அந்தப் பெண்ணை அணுகியவர், ‘‘குழந்தாய்! உனக்குத் தேவையானதைச் சொல்லாமல் விட்டுவிட்டேனே... அதையும் கேட்டுக்கொள். உன் கணவன் நம்பிதேவனும் இந்நேரம் சர்ப்பத்தின் வாலில் மாட்டிக் கொண்டிருப்பான். ஆனாலும் பயப்படாதே. அவனுக்கு எவ்வித ஆபத்தும் இல்லாமல் நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என்றார்.

அதன் பிறகு, அவர் அங்கு தாமதிக்கவில்லை; அவரது புரவி புயலெனப் பாய்ந்து சடுதியில் புள்ளியாகி பார்வையில் இருந்து மறைந்தும் போனது.

மறுகணம், எந்தக் காரணம் தொட்டு துறவியார் உரக்கப் பேசி னாரோ, அதற்குக் காரணகர்த்தாவான உருவம் குடிசையில் இருந்து சீற்றத்துடன் வெளிப் பட்டது. நம்பியின் மனைவியைப் பரிவுடன் தோளோடு தோள் சேர்த்து அணைத்துக் கொண்டதோடு, பேசவும் செய்தது: ‘‘கவலைப் படாதே! சுரங்கத்தில் பாண்டியச் சர்ப்பத்தின் தலையை நசுக்க, சோழ சைன்னியம் தயாராகவே இருக்கிறது!’’

உருவம் சொன்னது மிகச்சரி என்பதுபோன்றே சுரங்கப்பாதையில், பொங்கிதேவி எதிர்கொண்ட சம்பவங்களும் நிகழ்ந்தன. ஓரிருவர் அல்ல, ஒரு பெரும்படையே தன்னைப் பின்தொடர்ந்து ரகசியச் சுரங்கத்துக்குள் நுழைந்துவிட்டதை அறிந்து, பொங்கிதேவி செய்வதறியாது திகைத்து நிற்க, அவளின் அந்தத் திகைப்பை அதிகரிக்கச் செய்யும்வண்ணம், எதிர் திசையிலிருந்து  பெரும் வெள்ளம் ஆர்ப்பரித்துவரும் பேரோசை
கேட்டது!

- மகுடம் சூடுவோம்...