மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமா?

கேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமா?

?‘ஒவ்வொரு நாளும் பூஜைக்குப் பயன்படுத்த, அன்று மலர்ந்த மலர்களையே பயன்படுத்த வேண்டும்’ என்று புத்தகம் ஒன்றில் படித்தேன். பெரும்பாலும் இதற்கு சாத்தியம் இல்லாத இன்றைய சூழலில், பூக்கள்  கிடைக்கவில்லை என்பதற்காக, பூஜையைத் தவிர்க்க முடியுமா? தாங்கள்தான் வழிகாட்ட வேண்டும். 

- சுந்தரி திருஞானம், மதுரை-2

!அன்றாடம் பூஜையில் மணம் கமழும் பூக்களைப் பயன்படுத்தலாம். மல்லிகை, செண்பகம், தாமரை, செம்பருத்தி, அரளி, தாழம்பூ, நந்தியாவட்டை, பாரிஜாதம், கோளாம்பி, சங்கு புஷ்பம், தும்பை ஆகிய பூக்களாலும், துளசி, வில்வம், பிச்சகம், மருக்கொழுந்து போன்றவற்றையும் கொண்டு பூஜிக்கலாம்.

முகர்ந்து மகிழும் பொருள்களில் ஒன்று புஷ்பம். இறைவன் முகர்ந்து மகிழ்வதற்காக அவருக்குப் புஷ்பத்தைச் சமர்ப்பிக்கிறோம். பூக்கள் கிடைக்காத சூழலில், குங்குமம் மற்றும் அட்சதை ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

தினசரி பூஜைக்கு, அன்று பறித்த பூக்களைப் பயன்படுத்துவது சிறப்பு. சேமித்து வைக்கப்படும் பூக்கள் பூஜைக்குச் சிறப்பானவை அல்ல. ஓர் இரவைத் தாண்டிவிட்டால், அவற்றின் தரம் குறைந்துவிடும்.

குளிர்சாதனப் பெட்டி, மலர்ச்சி குறையாத வகையில் பூக்களைப் பாதுகாக்கும் என்பது உண்மைதான். ஆனால், காலம் கடந்த தன்மையைக் குளிர்சாதனப் பெட்டியால் மாற்றிவிட முடியாது. காலம் முக்கியமானது.

நெருக்கடியான சூழலில்... குளிர்சாதனப் பெட்டியில் பூக்களை வைத்திருந்து பயன் படுத்துங்கள். பூஜைதான் முக்கியம். அன்றலர்ந்த மலர்கள் இல்லையே என்பதற்காக பூஜையைத் தவிர்க்கக்கூடாது.

எனினும், தங்களது சிந்தனைக்கு ஒரு வார்த்தை... தினமும் பூக்களைப் பறித்து பூஜைக்குப் பயன்படுத்தும்படியான சூழல் இருந்தும் அப்படிச் செய்யாமல் இருப்பது தவறு.

இன்னொரு விஷயம்... பல நாள்கள் வைத்திருந்து பயன்படுத்தும் சிறப்பு பெற்ற பூக்களும் உண்டு. தாமரையை மொட்டாகச் சேமித்து வைத்து இரண்டு மூன்று தினங்கள் வரை பயன்படுத்தலாம். துளசி, வில்வம் போன்றவற்றை பல நாள்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம். இவை இரண்டும் காய்ந்து போனாலும் பயன்படுத்தக் கூடியவை.

? நவகிரகத்தை வாரத்தின் எல்லா நாள்களிலும் வலம் வந்து வழிபடலாமா?

- வி.வேல்முருகன், மானாமதுரை

கேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமா?!சாமி கும்பிட கிழமை கிடையாது. நமக்கு சௌகரியப்படும்போ தெல்லாம் வழிபடலாம். வேறு வேலை இல்லை; காலையில் இருந்து மாலை வரை கோயிலிலேயே இருக்க முடியும் என்றால்... நாள் முழுக்க நமஸ்காரம் பண்ணுங்கள்.  காலை வேளைகளில் பிரதட்சணம் பண்ணுங்கள். பகவானுக்கு சண்டே மற்றும் கவர்ன்மென்ட் ஹாலிடேஸ் எல்லாம் கிடையாது. அதனால் நாள், கிழமை எதுவும் பார்க்காதீர்கள். எப்போது வேண்டுமானாலும் ஆராதனம் செய்யலாம்.

? சுப காரியங்களின்போது மாவிலைத் தோரணம் கட்டுவது ஏன்?


- க.சங்கரன், சென்னை-88

!தோரணத்தில் மாவிலை மட்டுமே இடம் பெறும் என்று சொல்ல முடியாது. தென்னங்கீற்று கொண்டும் தோரணம் கட்டுவார்கள்.  அதன் இடையிடையே மாவிலையைச் சேர்ப்பார்கள். வசந்த காலத்தில் மாம்பூ பூத்துக்குலுங்கும். அதன் இளந்தளிர், பூக்கள், அதிலிருந்து பெருகும் மது ஆகியவற்றை பறவைகள் உண்டு மகிழும். குறிப்பாக, குயிலினம் அதை உட்கொண்டு தனது குரல்வளத்தைப் பெருக்கிக்கொள்ளும் என்று கவிகள் கூறுவார்கள்.

அதன் நறுமணம், சுற்றுச்சூழலை ரம்மியமாக் கும். இறைவனைக் குடியிருத்தும் கும்பத்தில் மாவிலைக் கொத்து இருக்க வேண்டும். அதற்கு, மரங்களின் அரசன் என்ற பெயர் உண்டு (விருஷ ராஜஸமுத் பூதசாகாயா:...). வேள்வியின்போது, நெய்யை அக்னியில் சேர்க்க மாவிலையைப் பயன்படுத்துவார்கள். மந்திரத்தில், புனிதமான நீரை மாவிலையால் தெளிப்பதுண்டு. கும்பாபிஷேகத்தின்போதும், பந்தல்கால் நாட்டும் விழாவிலும்... கோபுரக் கலசம் மற்றும் பந்தல்காலில் மாவிலைக் கொத்தைக் கட்டுவார்கள். திருமணத்தில் நுகத்தடியிலும் மாவிலை இருக்கும். பெண்களின் சௌளத்தில் மாவிலைக் கொத்தைப் பயன்படுத்துவார்கள்.

பண்டைய நாளில் பல் துலக்குவதற்கு மாவிலை பயன்படுத்தப்பட்டது. பெரிய அண்டாவில் நீரைப்பிடித்து, வெயிலில் சுட வைத்து, அதில் மாவிலையைக் கிள்ளிப்போட்டு, அந்த வெந்நீரில், பிணி அகன்ற ரோகிகள் நீராட வேண்டும் என்கிறது ஆயுர்வேதம்.

வாடிப்போன மாவிலைகள் பயிரினங்களுக்கு உரமாக மாறுவதுண்டு. வனஸ்பதியில் சிறந்தது மா. முக்கனிகளில் ஒன்று மாம்பழம். ஜீவராசி களுக்கு இருப்பிடம் அளித்து உதவும்; வெப்பத் தைத் தாங்கி நமக்கு நிழல் தந்து உதவும்; இயற்கை வளமான மாவிலை, மனித வாழ்க்கைக்குப் பயன்படும் பொருளாகத் திகழ்கிறது.

இத்தனையும் தெரிந்த பிறகும், பிளாஸ்டிக் மாவிலைத் தோரணம் கட்டும் பண்பாடு வளர்வதுதான் அதிசயமாக இருக்கிறது.

கேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமா?

?மந்திரங்களை மனதுக்குள் சொல்ல வேண்டுமா அல்லது சத்தமாக ஜபிக்க வேண்டுமா? அதேபோல், குறிப்பிட்ட மந்திரங்களால் பகைவரை   அழிக்கலாம் என்கிறார்களே... அது உண்மையா?

- சு.செல்லத்துரை, சென்னை-44


!மந்திரங்களை மனதுக்குள்ளும் சொல்ல லாம். உதடுகள் மட்டும் அசைய... பிறர் காதில் விழாதபடியும் சொல்லலாம் அல்லது மற்றவர்கள் காதில் விழும்படி உரக்கவும் சொல்லலாம்.

வேதம், மந்திரங்களின் தரம் மற்றும் அவற்றின் பயன் ஆகியவற்றையொட்டி வரையறுக்கப்பட்ட பாகுபாடு உச்சரிப்பில் உண்டு. ‘ரிக்குகளை உரக்கச் சொல்; யஜுரை உதட்டு அசைவுடன் பிறர் காதில் விழாமல் சொல்; சாமத்தைப் பலர் காதில் விழும்படி சொல்!’ என்ற பாகுபாடு வேதத்தில் உண்டு.

உரக்கச் சொல்லும்போது, மனமும் புலன் களும் ஈடுபாட்டைத் தக்கவைக்க முடியாமல் போக வாய்ப்பு உண்டு. மனதில் மட்டுமே அசைபோடும்போது மனம் வேறொன்றை நினைக்காது; ஈடுபாடு சிதறாது. நடைமுறையில் எப்படி இருந்தாலும், மந்திரங்களை மனதில் அசைபோடுவதே, மந்திரங்களின் முழுப் பயனுக் கும் உத்தரவாதம் தருகிறது. அதையே பின்பற்றுங் கள்; வெற்றி நிச்சயம். 

மந்திர உச்சாடனத்தின்போது கேட்பவர்களை யும் ஈடுபடுத்த வேண்டுமெனில், உரக்கச் சொல்வதே சிறப்பு. இதனால் கேட்பவர்களும் பயன்பெறுவர்.

தாங்கள் கேட்ட அடுத்தகேள்விக்கு வருகிறேன்... மந்திரங்கள் தீமை செய்யாது. மந்திரத்தை மனதில் அசைபோடுபவனுக்கு, மந்திரம் பாதுகாப்புக் கவசம். நம்மைப் பாதுகாக்கும் மந்திரத்தைத் தீமை அளிப்பதாக எப்படிக் கூற இயலும்? வேலி, பயிரை விழுங்காது. ‘தீமைகளை அகற்ற மந்திரம் சொல்’ என்கிறது தர்மசாஸ்திரம்.

மனம் சுத்தமாக இருப்பதற்காகச் செய்யப்படும் வேண்டுகோள் எப்படித் தீமையாகும்? நன்மைகளை நல்ல முறையில் நிறைவேற்ற உள்ளத்தில் தெளிவு தேவை. அதை அளிப்பதே மந்திரம்.

கண்ணனைப் பகைவனாக நினைத்தான் கம்சன். அவனது நினைவே கம்சனைத் திக்கு முக்காட வைத்தது! ‘ஹயக்ரீவன் என்ற அரக்கன் விஜய யாத்திரைக்குக் கிளம்பி விட்டான்’ என்ற தகவல் வந்ததும், அமராவதி நகரத்தின் கோட்டை வாசலைச் சாத்தித் தாழிட்டு உள்ளே ஒளிந்து கொண்டான் இந்திரன். அன்றாட அலுவல்களை கவனிக்க அவனது மனம் இடம் கொடுக்கவில்லை என்பது புராணத் தகவல். குரங்கு உருவம் ஏதும் பவனி வருவதைப் பார்த்தால், ‘அது வாலியாக இருக்குமோ’ என்று எண்ணி சுக்ரீவன் நடுங்குவான் எனும் தகவலும் உண்டு.

பயத்தில் இருந்து மனம் விடுபட மந்திரமே அருமருந்து. மருந்து தீங்கிழைக்குமா?

கேள்வி - பதில்: சுவாதியில் சுபகாரியங்கள் செய்யலாமா?

?    என் பெண்ணுக்கு சுவாதி நட்சத்திரத்தன்று திருமணத்துக்கு நாள் குறித்திருக்கிறோம். சுவாதியில் திருமணம் நடத்தலாமா?

 - மேகலா கண்ணன், கூந்தலூர்

!சுப காரியங்களைத் துவங்கும் நேரம் சுப வேளையாக, அதாவது நல்ல நேரமாக இருப்பது அவசியம். அந்த சுப வேளை, நமது எண்ணம் சிறப்பாக நிறைவேற ஒத்துழைக்கும்.

வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்தும் இணைந்து சுப வேளையை முடிவு செய்யும். இதில் நட்சத்திரத்தின் பங்கும் சிறப்பானது. நாம் செய்யப்போகும் காரியத்துக்கு ஏற்ற, அதற்கு இணையான இயல்புகொண்ட நட்சத்திரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வேதத்தின்மூலம் நட்சத்திரங்களின் இயல்புகளை அறியலாம்.

திருமணம், ஆண்-பெண் இணைதல், படிப்பு, வேலை, வியாபாரம், புதுமனை புகுதல், எதிரியைச் சந்தித்தல், பயணம், சண்டை- சச்சரவு, விவாதம், போர், விளையாட்டு போன்ற காரியங்களைத் துவங்கும்போது, நமது மனதுக்கு உகந்த நிலையில் செயல்படும் நட்சத்திரங்களை ஏற்கலாம்; அதற்குக் குந்தகமான நட்சத்திரங்களைத் தவிர்த்துவிட வேண்டும். நட்சத்திரங்களின் இயல்புகளை வரையறுக்கும் நூல்கள் ஏராளம் இருக்கின்றன.

உதாரணமாக... வரனிடம் பெண்ணை ஒப்படைக்கும் வேளையில், சுவாதி நட்சத்திரத் தின் சேர்க்கை இருந்தால், அவளது வருங்காலம் செழிக்கும். எனவே, சுவாதி நட்சத்திரத்தன்று நீங்கள் தாராளமாக உங்கள் பெண்ணின் திருமணத்தை நடத்தலாம் . அதேபோல் போர்த் தளவாடங்கள் செய்யத் துவங்கும் வேளையில், விசாக நட்சத்திரம் இணைவது சிறப்பு. இப்படி ஒவ்வொரு நட்சத்திரத்தையும், அதன் சேர்க்கை யால் சிறப்படையும் காரியங்களையும் அறிந்து செயல் படுவது நல்லது.

ஜோதிடத்தில் பலன் சொல்லும் பகுதி, நம்முடைய முன்னோர்களால் படைக்கப்பட்டது. சுப வேளையை வரையறுக்கும் பகுதி, இயற்கையின் அன்பளிப்பு. அதை, வான சாஸ்திரம் என்று பாகுபடுத்திச் சொல்லலாம். வேளையை வரையறுக்கும் பகுதியை முகூர்த்த சாஸ்திரம் என்றும் சொல்வதுண்டு.

நாம் ஈடுபடும் செயல் வெற்றி பெற, நமது தகுதியும் முக்கியம். எனினும், அதன் நிறைவுக்குக் காலத்தின் ஒத்துழைப்பும் அவசியம்.

- பதில்கள் தொடரும்...