Published:Updated:

சித்திர ராமாயணம்

பி.ஸ்ரீ.

பிரீமியம் ஸ்டோரி
சித்திர ராமாயணம்

புதிய புத்திர ஸ்வீகாரம்

ராமனின் தாயைப் பரதன், குகனுக்கு அறிமுகப்படுத்துவது என்றால் சாதாரண வாய்ப் பேச்சோ, பாஷையோ, வாக்கு வன்மையோ, போதுமா? தன் இதயத்துடிப்பை, உள்ளுக்குள்ளே கிடந்த ஆத்திரத்தை, பொங்கிய உணர்ச்சி வெள்ளத்தை அப்படியே வெளியிட்டு விட்டானல்லவா?

அந்தப் பரதனையும், குகனையும், ராமனின் தாயையும் அப்படியே கவிதைப் படமாய்ப் பார்த்தோம். ஆனால், பரதனுடைய உணர்ச்சிகளைக் கவனிக்கக் குகனுக்கு அவகாசம் ஏது?

‘ராமனைப் பெற்ற தாய்’ என்று தெரிந்ததும், தன் உணர்ச்சிக்குள்ளே தன்னை இழந்துவிடும் குகன் சாஷ்டாங்கமாய்க் கோசலையின் காலில் விழுகிறான். அழுகிறான். ஒரு குழந்தையைப் போல் அழுகையைத் தவிர வேறு பாஷை தெரியவில்லை. “எனது துன்பத்தில் இவ்வளவு அனுதாபம் காட்டுகிறானே, பார்த்தால் காட்டு மனிதன்; இவன் யாரோ?” என்று உடனே கேட்கிறாள் கோசலை. உடனே பதில் வருகிறது பரதன் வாயிலிருந்து.

‘இன் துணைவன் இராகவனுக்(கு)’ என்று பதில் சொல்லுகிறான். ‘ராமனுக்கு இனிய துணைவன்; கோசலைக்கு அருமைப் புதல்வன்’ என்பதை வெளிப்படையாகச் சொல்லவில்லை. ‘‘ராமனுக்குத் தம்பியாகிய இவன் லட்சுமணனுக்கும் சத்துருக்னனுக்கும் எனக்கும் தமையன்” என்று மாத்திரம் சொல்லுகிறான்.

இவ்வுறவினால் கிடைத்துவிட்ட ராஜ குலத்தை யும், அக்குலப் பொருத்தம் குகனுக்கு உண்டு... அது, குகனுடைய தோற்றத்திலேயே காணக்கிடக்கிறது என்பதையும், ‘இவன் யார்?’ என்ற வினாவுக்கு நேர் விடையான பெயரையும் சொல்கிறான் பரதன்:

`குன்றனைய திருநெடுந்தோள் -
குகன் என்பான் இந்நின்ற குரிசில்' 
என்று தெரிவித்துத் தன் பேச்சை முடிக்கிறான்.

‘நம்மைப்போன்ற அரசன், நம்முடைய குலத்தோடு ஐக்கியப்பட்ட அரசன்’ என்று அறிமுகப்படுத்திய பரதனின்  குணாதிசயத்தை என்னென்பது? ராமன் குகனோடு கொண்டாடிய சகோதர உறவு இப்போது பரதனால் அங்கீகரிக்கப் படுகிறது.

சித்திர ராமாயணம்

ஸ்வீகாரம்

குகன், கோசலை காலில் விழுந்து அழுததும், பரதனுக்கும் கண்கள் கலங்கிவிட்டன. சத்துருக்னனும் கண்ணைத் துடைத்துக் கொண் டான். அம்மூவரையும் அந்நிலையில் பார்த்ததும் மூவரும் தன் மைந்தர்கள் என்றே தெரிந்துவிடுகிறது கோசலைக்கு.

‘‘என்ன பாக்கியம் பெற்றேன்! அங்கே, காட்டுக்குள்ளே இரு மைந்தர்; இங்கே மும்மைந்தர்” என்று தீர்மானிக்கிறாள். அப்படியே ஆசியும் கூறுகிறாள்:

`நீவீர் ஐவீரும் ஒருவீராய் அகலிடத்தை
நெடுங்காலம் அளித்திர்!’ என்று.


அம்மூவரின் கண்களும் கலங்கியது கண்டு இதயத்தெளிவும் ஆறுதலும் பெற்ற தாய், ‘‘என் அருமைப் பிள்ளைகளே! நீங்கள்  துயரத்தால் ஏன் வருந்த வேண்டும்?” என்றே கேட்க ஆரம்பித்து விட்டாள்.  ராம லட்சுமணர் நாடு நீங்கிக் காடு சேர்ந்ததும், தன் மக்கள் நால்வரில் இருவரை இழக்கும்படி வந்ததே கேடு என்று பரிதவித்தவள்தான். இப்போது ‘‘அது கேடன்று; நன்மைதான்!” என்று சொல்லத் தோன்றுகிறது.

ஆம், நால்வரை ஐவராக்கிய நன்மையாகி விட்டதாம். இருவர் காடு சென்றதும், அவர்கள் குகனைச் சகோதரனாகப் பெற்ற தனால், கோசலைக்கு ஐந்து பிள்ளைகள்! ‘‘இவனோடு சேர்ந்து நீங்கள் ஐவரும் ஒருவராகவே விசாலமான கோசல நாட்டை அரசாள வேண்டும்” என்று ஆசீர்வதிக்கிறாள்.

பிறகு குகன், கோசலையின் பக்கத்திலே நின்ற சுமித்திரையை நோக்குகிறான். ஒரு பெண்ணோ, ராணியோ நிற்பது போலவா தோன்றுகிறது? அறமே ஓர் உருவம்கொண்டு அப்படி நிற்கிறது என்று தோன்றுகிறது, கவிஞனுக்கு.

குகனுக்கோ, கோடையில் மாலை வேளையிலே நீர் நிறைந்த ஒரு பெரிய குளக்கரையை அடைந்தது போன்ற ஓர் உணர்ச்சி ஏற்படுகிறது. ஆம், அன்பு நிறைந்து ததும்பும் தடாகம் அந்த அறப்பெருஞ் செல்வி, இளையராணி. தென்றல் கொணர்ந்து தெளிக்கும் திவலைகள் போல் அன்புத் திவலைகள் குகனுள்ளத்தைக் குளிர்விக் கின்றன.

இளையராணியை அறிமுகப்படுத்துதல்

குகன், பரதனை நோக்கி, ‘‘ஐயா! இவர் யார்?’’ என்று கேட்கிறான். இந்தக் கேள்வியையும் பரதனது விடையையும் இதோ கேளுங்கள் சுமித்திரை நிற்கும் அந்த நிலையையும் பாருங்கள்:

`அறந்தானே என்கின்ற
அயல்நின்றாள் தனைநோக்கி,
‘ஐய! அன்பின்
நிறைந்தாளை உரை’என்ன,
‘நெறிதிறம்பாத் தன்மெய்யை
நிற்ப தாக்கி
இறந்தாந்தன் இளந்தேவி,
யாவர்க்கும் தொழுகுலமாம்
இராமன் பின்பு
பிறந்தானும் உளன்என்னப்
பிரியாதான் தனைப்பயந்த
பெரியாள்’ என்றான்.


அறமே உருவெடுத்து வந்து நிற்பது போல் கோசலாதேவிக்கு அருகே நின்ற சுமித்திராதேவியைக் குகன் நோக்கி, ‘‘பரதனே! அன்பு நிறைந்த இந்த அம்மாள் யார்? தெரிய வில்லையே, இன்னாரென்று சொல்ல வேணும்’’ என்று கேட்டதும், பரதன் பதில் சொல்லத் தொடங்கினான். சக்கரவர்த்தியின் முதல்தேவி என்று கோசலாதேவியைத் தெரிவித்தவன், உண்மைக்காக உயிரைக் கொடுத்த தியாகமூர்த்தியின் இளந்தேவி என்று சுமித்திரையை அறிமுகப்படுத்துகிறான்.

சித்திர ராமாயணம்

தசரதர் சக்கரவர்த்தியாகவும் பெரியவர்; மனிதராகவும் பெரியவர். சிற்றரசர்கள் தலைவாசலிலே வந்து காத்து நிற்கும் அவ்வளவு பெரிய சக்கரவர்த்தி, தனி மனிதராகப் பார்த்தால் இன்னும் பெரியவர்; சத்தியத்தைவிட்டு ஓர் அங்குலம் விலகத்தெரியாமல், அவ்வளவு நெருங்கித் தன் பிறவியோடு பிறவியாக ஒட்டிப்போன அந்தச் சத்தியம் இவ்வுலகில் நிலை நிற்பதற்காகத் தம் உயிரையே கொடுத்துவிட்டாராம்.

அத்தகைய சக்கரவர்த்திக்குத் தகுந்த பட்ட மகிஷி கோசலாதேவி என்றால், இத்தகைய தியாக வீரருக்கு இசைந்த தருமபத்தினி சுமித்திராதேவி என்கிறான் பரதன்.

‘வேந்தர் வைகும் முற்றத்தான்’ அதாவது - ‘சக்கரவர்த்தியாக வாழ்ந்தவனின் முதல்தேவி’ என்று கோசலையைக் குறிப்பிட்டவன், ‘இறந்தாந்தன் இளந்தேவி’ என்று சுமித்திரையைக் குறிப்பிடுகிறான். பரதனுடைய உண்மை நிறைந்த இதயம் பேசுகிறது எல்லையற்ற சோகத்துடன் இல்லையா?

பிறகு, புத்திர சம்பத்திலும் சுமித்திராதேவி, கோசலாதேவிக்குக் குறைந்தவள் இல்லை என்கிறான். ராமனைப் பெற்றுத் துறந்த பெருமை கோசலைக்கு உண்டென்றால், இளையவனைப் பெற்றுத் துறந்த பெருமை இளந்தேவிக்கு உண்டல்லவா? இப்பெருமைதான் கொஞ்சமோ? காட்டிலும் போய் ராமனுக்குப் பணி செய்து கொண்டிருக்கும் லட்சுமணனை நினைத்துப் பார்த்ததும், உணர்ச்சிப் பொங்குகிறது கங்கை வெள்ளம் போல. ‘அவன் ஒருவன்தானே `ராமனின் தம்பி’ என்ற பெயருக்கு உரியவன்? லட்சுமணன் இல்லையென்றால், ராமனுக்குத் தம்பியாக யாரும் பிறக்கவில்லை என்றுதானே கருதவேண்டி யிருக்கும்?’ - இது பரதன் நினைப்பு.

தானும் சத்ருக்னனும் தம்பியாக இல்லையாம்; ராமனுக்குப் பயன்படாததால், பணி செய்யாததால். ஆகவே, சுமத்திராதேவியை. ``ராமனுக்குப் பின்னே பிறந்த தம்பியும் ஒருவன் உண்டு என்பதை மெய்ப் பித்துப் பிரியாது பணிசெய்து கொண்டிருக்கும் லட்சுமணனைப் பெற்றுத் துறந்த பெரியாள் என்று அறிமுகப்படுத்துகிறான் குகனுக்கு.

கைகேயி நிலை

ந்தச் செய்யுள், சுமித்திரையைக் கோசலை யின் பக்கத்தில் நின்றதாகக் குறிப்பிடுவதால், கைகேயி சிறிது தூரத்தில் விலகி நிற்பதாய் ஊகித்துக்கொள்ள வேண்டும். இது அந்த இதயங்களுக்கு இடையே உள்ள தூரத்தை நினைப்பூட்டுகிறது. ராமன் தாய்க்கு அருகில் நிற்கவும் கூசுகிறது, பரதன் தாயின் உள்ளம். கைகேயிக்குப் பச்சாதாபம் ஏற்பட்டிருக் கிறதென்று கருதுவதும் தவறாகாது.

ராமனின் தாயையும், லட்சுமணனின் தாயையும் குகனுக்கு அறிமுகப்படுத்தியபின், பரதன் தன் தாயையும் அறிமுகப்படுத்துகிறான். இவன் அறிமுகப்படுத்தும் முறையே கைகேயியின் பச்சாதாபத்தைப் பூர்த்திசெய்து அவளை முற்றும் திருத்திவிடுகிறது என்று ஊகிக்கலாம்.

பரதன் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு கவிக்கூற்றே மிகவும் கடுமையாய் வந்து விழுகிறது. ‘‘சுமித்திராதேவியைச் சொன்ன வாயால் கைகேயி தேவியையும் சொல்ல வேண்டி யிருக்கிறதே’’ என்று கவிஞன் உள்ளம் திகைக்கிறது. ‘ஐயோ! கொடிய கைகேயியும் குகன் பார்வைக்கு இலக்காகிவிடுவாளே’ என்று திகைப்புடன் உள்ளக்கொதிப்பும் கவிக்கூற்றாக வெளிப்படப் போகிறது.

கோசலை, சுமித்திரா ஆகியோர் துறவிலே, அறத்திலே, அன்பிலே பெரியவர்கள் என்றால், கைகேயி கொடுமையில் பெரியவள் என்று குறிப்பிடுகிறான்.

சுடுமயா னத்திடைத்தன் துணைஏகத்
    தோன்றதுயர்க் கடலின் ஏகக்
கடுமையார் கானகத்துக் கருணைஆர் கலிஏகக்
    கழற்கால் மாயன்
நெடுமையால் அன்றளந்த உலகெல்லாம் தன்மனத்தே
    நினைத்து செய்யும்
கொடுமையால் அளந்தாளை ‘யார் இவர் என்று உரை’
    என்னக் குரிசில் கூறும்.


`அறியாது செய்த கொடுமையன்று கைகேயி செய்தது; ஆராய்ந்து பார்த்து அறிவோடு துணிந்து செய்தது' என்பதைத் ‘தன்மனத்தே நினைத்து செய்யும் கொடுமை’ என்று வற்புறுத்து கிறான் கவிஞன்!

(2.11.47, 9.11.47 மற்றும் 16.11.47 ஆனந்த விகடன் இதழ்களில் இருந்து)
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு