Published:Updated:

கயிலை... காலடி... காஞ்சி! - 22 - இங்கு வந்தால்... இறப்பும் இல்லை பிறப்பும் இல்லை

கயிலை... காலடி... காஞ்சி! - 22 - இங்கு வந்தால்... இறப்பும் இல்லை பிறப்பும் இல்லை
பிரீமியம் ஸ்டோரி
News
கயிலை... காலடி... காஞ்சி! - 22 - இங்கு வந்தால்... இறப்பும் இல்லை பிறப்பும் இல்லை

நிவேதிதா

கயிலை... காலடி... காஞ்சி! - 22 - இங்கு வந்தால்... இறப்பும் இல்லை பிறப்பும் இல்லை

ர்மோ மே சதுரங்க்ரிகஸ் ஸுசரித: பாபம் விநாசம் கதம்
காமக்ரோத மதாதயோ விகலிதா: காலா: ஸுகாவிஷ்க்ருதா:
ஜ்ஞானானந்த மஹௌஷதி: ஸுப லிதா கைவல்யநாதே ஸதாமான்யே
மானஸ புண்டரீக நகரே ராஜா வதம்ஸே ஸ்த்திதே


கருத்து: தாமரையாகிய மனதில் ஏக சக்கரவர்த்தியும் எல்லோராலும் வணங்கப்பெறுபவருமாகிய சிவபெருமான் வீற்றிருப்பதால், தவம், தயை, தூய்மை,  சத்தியம் ஆகிய நான்கு பாதங்களை உடைய தர்மம் கடைப்பிடிக்கப் படுகிறது. காமம், கோபம், கர்வம் நீங்கி பாவங்கள் நசித்துவிட்டன. எப்போதும் எல்லா காலங்களிலும் பேரின்பமே வெளிப்பட்டு ஞானானந்தம் என்னும் பயிர் தழைக்கச் செய்கிறது.

- சிவானந்த லஹரி

கயிலை... காலடி... காஞ்சி! - 22 - இங்கு வந்தால்... இறப்பும் இல்லை பிறப்பும் இல்லைஹா பெரியவா உலக நன்மைக்காக நீண்டநெடிய தவம் மேற் கொண்ட தேனம்பாக்கம், தலம், மூர்த்தி, தீர்த்தம் என்னும் மூன்று விசேஷங்களைக்கொண்ட புனிதத்தலமாகும்.

இங்குள்ள தீர்த்தம் பிரம்மதேவரால் ஏற்படுத்தப்பட்ட காரணத்தினால் பிரம்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.

இந்தத் தலத்தில்தான் பிரம்மதேவர் தம்முடைய படைப்புத் தொழிலை மேற்கொள்வதற்காக சிவபெருமானைத் தியானித்து யாகம் செய்தார். இப்படி, பிரம்மன் சிவ வழிபாடு செய்த தலம் என்பதால் `பிரம்ம காஞ்சி’ என்றும், சிவபெருமானுக்கு உரிய ஆஸ்தான தலம் என்பதால் `சிவா ஸ்தானம்’ என்றும் தலச் சிறப்புடன் திகழ்கிறது, தேனம்பாக்கம்.

இங்ஙனம் தீர்த்தச் சிறப்புடனும், தலச் சிறப்புடனும் திகழும் தேனம்பாக்கத்துக்கு, மூர்த்தியால் கீர்த்தி கிடைத்தது எப்படி?

இந்தத் தலத்தில்,  ஐயன் பிரம்மபுரீஸ்வரரின் கருவறையில் அம்மையப்பர் கணபதியுடன்

கயிலை... காலடி... காஞ்சி! - 22 - இங்கு வந்தால்... இறப்பும் இல்லை பிறப்பும் இல்லை

சோமகணபதியாக திருக்காட்சி தருவதாகப் பார்த்தோம் அல்லவா? அந்தவகையில், `மூர்த்தி விசேஷம்’ கொண்டதாகவும் திகழ்கிறது, இந்தத் தலம்.

தேனம்பாக்கத்தில் பிரம்ம தீர்த்தத்தில் இருந்து எடுக்கப்படும் நீர்தான் ஐயன் பிரம்மபுரீஸ்வரரின் அபிஷேகத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, புனிதமான இந்தத் தீர்த்தத்தில் பக்தர்கள் ஸ்நானம் செய்ய அனுமதி கிடையாது. பாதங்களைக்கூட நனைக்கக்கூடாது. கைகளினால் தீர்த்தத்தை எடுத்து ப்ரோட்சணம் செய்துகொண்டாலே, பிரம்ம தீர்த்தத்தில் ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைத்துவிடும் என்கிறார்கள்.

இப்படி, மகிமைகள் பல கொண்ட தேனம்பாக்கத்தில்தான் ஜகத்குரு ஆதிசங்கரர் தம்முடைய இறுதிக்காலத்தில் வந்து தங்கி இருந்ததாகச் சொல்கிறார்கள்.

அப்படி, ஆதி ஆசார்யர் விஜயம் செய்த இந்தப் புண்ணியம்பதியில், உலக நன்மைக்காக ஏகாந்தமாகத் தவம் மேற்கொள்ள திருவுள்ளம் கொண்டார்  மஹா பெரியவா. தாம் அங்கே தவம் மேற்கொள்ள ஒரு சிறு குடிலே போதும் என்றும் சொல்லிவிட்டார்.

தேனம்பாக்கத்தில் அவர் தங்கியிருந்த காலத்தில், தினமும் தம் திருக்கரங்களால் ஒரு கட்டு தர்ப்பையை எடுத்து, தம்முடைய குடிலை தாமே சுத்தம் செய்துகொள்வாராம். அத்துடன்,  தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமம் ஜபித்தபடியே விஷ்ணு காஞ்சி வரை சென்று வருவாராம். ஷண்மத ஸ்தாபனம் செய்த ஆசார்யரின் வழித்தோன்றல் அல்லவா மஹா பெரியவா?!

தேனம்பாக்கத்தில் நாளும் வேத கோஷம் ஒலிக்க வேண்டும் என்பது மஹா பெரியவா திருவுள்ளம். அதன் காரணமாகவே மஹா பெரியவா பெயரில் இங்கே ஒரு வேத பாடசாலை யும் நடைபெற்று வருகிறது. சதா காலமும் வேத கோஷம் ஒலிப்பதன் காரணமாக இந்தத் தலம் புனித அதிர்வலைகள் நிறைந்த தலமாகவும், அதன் பயனாக தரிசிப்பவர்களின் மனதில் அளவற்ற மன நிம்மதியைத் தருவதாகவும் திகழ்கிறது.

தேனம்பாக்கம் பிரம்மபுரீஸ்வரருக்கு `இறவா ஸ்தானேஸ்வரர்’ என்றும் ஒரு திருப்பெயர் உண்டு. ‘தேவ தேவ மமாஸ்தானம் சிவாஸ்தானம் மிதம் க்ருதம்; சிவாஸ்தானேஸ்வரம் நாம ஸ்தானமேதத் பிரசித்தமத்’  என்று சிறப்பித்துச் சொல்வார்கள். இந்த இறவாஸ்தானேஸ்வரரைத் தரிசித்து வணங்கினால், பிறப்பும் இறப்பும் இல்லா பேரின்பப் பெருநிலையை அடையலாம் என்று பெரியோர்கள் சொல்வார்கள்.

கயிலை... காலடி... காஞ்சி! - 22 - இங்கு வந்தால்... இறப்பும் இல்லை பிறப்பும் இல்லை

மற்ற தலங்களைவிடவும் இந்தத் தேனம்பாக்கம் திருத்தலத்துக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஆமாம், இந்தத் திருத்தலத்தால் இன்னும் சில திருத்தலங்கள் தோன்றினவாம்.

பிரம்மா யாகம் பண்ணின இடம் தேனம்பாக்கம் என்று நாம் முன்பே பார்த்தோம். ஆனால், யாகத்துக்கு அவர் சரஸ்வதியைக் கூப்பிடவில்லை. அதனால் சரஸ்வதிக்குக் கோபம். நதியாக உருவெடுத்து வேகமாக வந்தாள். ஊரையே மூழ்கடிக்கும் வேகம். அதனால், அந்த நதிக்கு வேகவதி என்றும் பெயர் உண்டு.

பிரம்மனின் யாகத்தைக் காக்க வேண்டும் என்றால், வேகவதியின் வேகத்தைத் தணித்தாக வேண்டுமே! அவளின் வேகத்தைத் தணிக்கும் பொருட்டு, சிவனாரின் ஆணைப்படி,  வேகவதி வரும் வழியின் குறுக்கே மகா விஷ்ணு சயனம் கொண்டுவிட்டார். சரஸ்வதி(வேகவதி)யால் அவரைக் கடந்துவர முடியவில்லை. அதனால் யாகமும் நிறைவேறியது. சிவனார் சொன்னபடி மகா விஷ்ணு செய்த காரணத்தால், அவருக்குச் `சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ என்ற திருப்பெயர் ஏற்பட்டது. `யதோத்தகாரி’ என்றும் அவருக்குப் பெயர் உண்டு. இந்தப் பெருமாள் கோயிலை இன்றும் காஞ்சியில் தரிசிக்கலாம்.

அதேபோல், பிரம்மாவின் யாகத்தில் தோன்றியவர்தான் வரதராஜ பெருமாள். இன்றைக்கும் அந்த உற்ஸவ மூர்த்தத்தில் அக்னி பட்ட வடுவைக் காணலாம். மேலும், சரஸ்வதி நதியாகப் பெருக்கெடுத்து வந்தபோது, உலகமே இருண்டுவிட்டதால், யாகம் நல்லபடி நிறைவேற பெருமாள் ஜோதிமயமாகத் தோன்றினார். அவர்தான் தூப்புல் பகுதியில் தீபப்பிரகாசர் என்றும் விளக்கொளி பெருமாள் என்றும் திருப்பெயருடன் கோயில் கொண்டுள்ளார். இப்படி சொன்னவண்ணம் செய்த பெருமாள், வரதராஜ பெருமாள், விளக்கொளி பெருமாள் என்று மூன்று திருத்தலங்கள் தோன்றுவதற்கு, தேனம்பாக்கம் தலமும், அங்கே பிரம்மன் நிகழ்த்திய யாகமுமே காரணம் என்கின்றன ஞானநூல்கள்.

துர்கையின் சாந்நித்தியமும் மிகுந்த திருத்தலம் தேனம்பாக்கம். காரணம் என்ன தெரியுமா?

- திருவருள் தொடரும்