Published:Updated:

உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்! - 5

உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்! - 5
பிரீமியம் ஸ்டோரி
News
உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்! - 5

டாக்டர் ஜெயம் கண்ணன்

உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்! - 5

றைவன் ஜோதி ஸ்வரூபம்! மெய்யடியார்கள் பலர் உணர்ந்த இந்த உண்மையை, இந்தக் கலியுகத்தில் மானிடர்களான நாமும் உணரவேண்டி பகவான் நமக்கு ஜோதியாகவே காட்சி தரும் இடங்கள் பல உள்ளன!

 சபரிமலையில் மகரஜோதி, வடலூரில் ஜோதி தரிசனம் ... இவையெல்லாமே அந்த உண்மையை இன்றும் மெய்ப்பிக்கும் சாட்சியங்கள்.

ட்டத்தூரிலும் சுத்த ரத்தினமாய் ஜொலிக்கும் இறைவனின் லிங்கரூபம், தனக்குள் ஆரத்தி சுடரை உள்வாங்கி, ஜோதியைப் பிரதிபலிக்கிறது. வெறெந்த தலத்திலும் காண்பதற்கரிய இந்த அற்புதக் காட்சியை, அனவரதமும் தரிசித்துக்கொண்டே இருக்கலாம்; அவ்வளவு அற்புதமானது!

உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்! - 5

பிரம்மதேவனுக்கு தோஷ நிவர்த்தி, மன்னர் ராஜராஜ சோழனுக்கு ஆயுள் நீடிப்பு, வேண்டுவோருக்கு வேண்டிய வரம் என வாரி வழங்கும் இந்த வள்ளலை, மாசி மாதத்தில் சூரிய பகவானும் விழுந்து வணங்கி, வழிபடுகிறார். ஆண்டுதோறும், மாசி மாதம் 12, 13, 14 தேதிகளில் (இந்த நாள்கள் ஒவ்வொரு வருடம் சிறிது மாறுபட லாம்) சூரியனின் கதிர்கள், கருவறைக்குள் வந்து மூலவர் லிங்கத்தின் மேல் விழுகின்றன. காலை நேரத்தில், 5 நிமிட நேரம் சூரியனார் சிவபூஜை செய்வது கண்கொள்ளாக் காட்சி!

நிதானமாக ஆரத்தியைக் காட்டி ஜோதி தரிசனம் செய்வித்த பின்னர், அர்ச்சகர், ‘‘வைகாசி பௌர்ணமி இங்கே ரொம்ப விசேஷம். குழந்தை இல்லாத தம்பதிகள், ஒரு வைகாசி பௌர்ணமி தினத்தில் இங்கே வந்து சுத்தரத்தினேஸ்வரருக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்யணும். அதற்கு பிறகு, தொடர்ந்து ஒவ்வொரு பௌர்ணமியிலும் இங்கே வந்து வழிபடுவதுடன், அடுத்த வைகாசி பௌர்ணமியில் வழிபாட்டை பூர்த்தி செய்யணும்.இந்த மாதிரி வழிபாடு செய்த பல தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைச்சிருக்கு!’’ என்றபடி விபூதி பிரசாதம் வழங்க, பயபக்தியோடு பூசிக் கொண்டோம்.

அந்த விபூதியில் அப்படி ஒரு மணம்! திரையுலக பிரபலம் ஒருவர், இந்தக் கோயிலுக்கு வரும்போது, தென்பகுதியில் இருக்கும் கோசாலை ஒன்றில், பாரம்பர்ய முறையில் ஆசாரத்துடன் தயாரிக்கப்படும் விபூதியைக் கொண்டுவந்து கோயிலுக்கு வழங்கியதாகக் கூறினார் அர்ச்சகர்.

உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்! - 5

‘‘பாக்கெட்டுகளில் விக்கிற, சென்ட் கலந்த, கலப்பட விபூதி எல்லாம் இங்கே உபயோகிக்கிற தில்லை’’ என்றும் சொன்னார்.

மூலவரை கண் நிறைய தரிசித்து, மனம் நிறைய வேண்டி வணங்கித் தொழுத பின், உள்பிராகாரம் வருகிறோம். அந்த மண்டபத்திலேயே வடக்கு திசையில், பிராகாரம் முடியும் இடத்தில், அதாவது மூலவர் சந்நிதிக்கு இடதுபுறத்தில் அமைந்திருக் கிறது, உலகப் பிரசித்திப்பெற்ற ஸ்ரீபஞ்சநதன நடராஜர் - ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மன் சந்நிதி.

கோயிலை வலம் வந்து ஒவ்வோர் இடத்தைக் கடக்கும்போதும், ஒவ்வொரு சந்நிதியில் தரிசிக்கும் போதும், அவற்றின் புராதன கீர்த்தியிலும் அழகிலும் மெய்ம்மறந்து நிற்கும் அதேநேரம், இந்தச் சிறப்புகளுக் கெல்லாம் முதன்மையானதாகத் திகழும் `பஞ்சநதன நடராஜரை எப்போது தரிசிக்கப் போகிறோம்?' என்ற பேராவல் நமக்குள் எழுவதையும் தவிர்க்க முடிய வில்லை.

இதோ... நமது பேரவாவினைப் பூர்த்திசெய்யும் சந்நிதிக்கு வந்துவிட்டோம். ஸ்ரீநடராஜருக்கும் சிவகாமி

உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்! - 5

அம்மனுக்கும் சேர்ந்தே, சற்றுப் பெரிதாக...  சிறு மண்டபம் போன்று அமைந்திருக்கிறது இந்தச் சந்நிதி. உயரமான பீடத்தில், வழக்கத்தை விடப் பெரிய வடிவில் இருக்கிறார் நடராஜர். எல்லா இடங்களிலும் ஐம்பொன் உலோகத்திலேயே நடராஜரைப் பார்த்த நம் கண்களுக்கு, கருங்கல் விக்கிரகமாகத் திகழும் இந்த ஆடல்வல்லானின் தரிசனம் வித்தியாசமாகவும் விசேஷமாகவும்  இருக்கிறது. பல்லாண்டு காலமாக அபிஷேகங்கள் கண்டு கண்டு, பளபளப்பு ஏறி மினுமினுக்கும் இந்த நடராஜ மூர்த்தத்தின் அழகை என்னவென்பது?! இமைக்கவும் மறந்து, அணு அணுவாக உள் வாங்கினோம்!

‘‘ஓ...  இவர்தான் அந்த மகா சக்தி வாய்ந்த பஞ்ச நதன நடராஜரா? இவர்முன் நின்று என்ன நினைத் தாலும் நடந்துவிடும் என்று படித்திருக்கிறேன்!’’ என்று நான் கூறியதை ஆமோதித்தார் நடராஜ குருக்கள்.

‘‘மிக அரிதான ‘பஞ்சநதனம்’ என்னும் கல்லால் ஆன மூர்த்தி இவர். ஆசியாவிலேயே இதுபோன்ற மூர்த்தி இவர் மட்டும்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பாறைகளின் மேல் படரும் `அந்தக நரிமணம்' என்கிற அபூர்வ மூலிகையின் வேர், குறிப்பிட்ட ஓரிரு பாறைகளைப் பிளக்கும். அப்படியான பாறையையே ‘பஞ்சநதனக் கல்’ என்று சொல்கிறார்கள்.சூரியனின் கதிர்களிலிருந்து, பன்மடங்கு ஆற்றலை ஈர்க்கும்  வல்லமை இந்தக் கல்லுக்கு உண்டு. அதியற்புதமான இந்தக் கல்லில் செதுக்கப்பட்ட சிலா வடிவம் என்பதால்தான், இங்கே இவருக்கு ‘பஞ்சநதன நடராஜர்’ என்ற திருநாமம்! கல்லிலே நடராஜரைப் பார்ப்பதே அபூர்வம்... அதிலும் பஞ்சநதனக் கல்லில் பார்ப்பது ரொம்ப ரொம்ப அபூர்வம்! சூரியனின் அதி சக்திவாய்ந்த நல்ல ரேகைகளை உள்வாங்கியிருப்பதால், பஞ்ச நதனக் கல் இருக்குமிடத்தைச் சுற்றிலும் அதன் அதிர்வலைகள் பரவி இருக்கும். அதனால்தான், இங்கே மனமொன்றி, தீவிரமாகப் பிரார்த்திக்கும் எந்தவொரு நல்ல வேண்டுதலும் நிறைவேறுகிறது!

தேவலோகத்து இந்திரனே, தான் பதவியிழந்த போது, பஞ்சநதன நடராஜரை வழிபட்ட பிறகுதான்

உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்! - 5

மீண்டும் பதவியைப் பெற்றதாகப் புராணம் சொல்லும். இப்போதும் பதவி வேண்டுவோர், பதவி உயர்வு வேண்டுவோர் இந்த பஞ்சநதன நடராஜரை வழிபட்டுச் செல்கிறார்கள். பதவி இழந்தோர், மீண்டும் அதை பெறுவதற்காக  இங்கு வந்து பிரார்த்தனை செய்வது வழக்கம். இந்தப் பஞ்சநதன நடராஜர் பக்தர்களின் வேலை வாய்ப்பு, வேலை உயர்வு, பிரமுகர்களின் பதவி மற்றும் பதவி உயர்வுக்கு மட்டுமில்லாமல், உடல் நலக் கோளாறுகளை... முக்கியமாக சிறுநீரகப் பிரச்னைகளையும் தீர்த்துவைக்கிறார்’’ என்றார் குருக்கள். ராஜராஜ சோழனுக்கு வந்த சிறுநீரக நோயைத் தீர்த்து, அவருடைய ஆயுளை நீட்டித்ததாகச் சொன்னேன் அல்லவா? அவரைப் போலவே இன்றைக்கும் பக்தர்கள் பலரும் ஊட்டத்தூருக்கு வந்து, பஞ்சநதன நடராஜருக்கு வெட்டிவேர் மாலை சார்த்தி, பிரம்ம தீர்த்தத்தால் அபிஷேகம் செய்து, தீர்த்தத்தையும் மாலையையும் வாங்கிச் செல்கிறார்கள். அந்த வெட்டிவேர் மாலையில் 48 கண்டுகள் இருக்கின்றன. இந்த மாலையிலிருந்து, ஒரு நாளைக்கு ஒரு வெட்டிவேர் துண்டை வெட்டி எடுத்து, இரவில் பிரம்ம தீர்த்தத்தில் ஊறவைக்க வேண்டும். ஒரு டம்ளரில் பிரம்ம தீர்த்தம் சிறிதளவு ஊற்றி, நம் வீட்டுத் தண்ணீரில் மீதியை ஊற்றியும் வைக்கலாம். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில், வெட்டிவேர் ஊறிய தண்ணீரை வடிகட்டி அருந்த வேண்டும். பெண்கள் வீட்டு விலக்காகும் நாளில் இதை அருந்துவதைத் தவிர்க்கவேண்டும். மேலும், இந்த 48 நாள்களில் சைவ உணவு மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தப் பிரார்த்தனை முடியும்போது, பக்தர்களின் சிறுநீரகப் பிரச்னை கண்டிப்பாகக் குறைந்து, பின்னர் மறைந்து, உடல்நலம் சீராவது, பல பக்தர்கள் கண்டு அனுபவித்த உண்மை.

‘‘சிறுநீரகப் பிரச்னை என்றில்லை... உடலுக்கு என்ன பிரச்னை என்றாலுமே, இந்த பஞ்சநதன நடராஜரை நம்பிக்கையோடு கும்பிட்டு வந்தால் போதும். நோய் அகன்றுவிடுகிறது!’’ என்று அழுத்த மாகச் சொல்கிறார் அங்கு வந்த பக்தர் ஒருவர்.

இயற்கையிலேயே வெட்டிவேருக்கு குளிர்ச்சியைக் கொடுக்கக்கூடிய தன்மையும் மருத்துவ குணங்களும் உள்ளன. அதை, சக்தி மிகுந்த பஞ்சநதனக் கல்லால் ஆன இறைவன் மீது சார்த்துக்கிறோம். அப்போது, இன்னும் சிறப்பு கூடுகிறது. அதன்பின்னர், பிரம்மனுக்கு தோஷம் தீர்த்த அற்புதமான பிரம்ம தீர்த்தத்தின் நீரில் அதை ஊறவைத்து அருந்தும்போது... அதோடு நம் பக்தியும் நம்பிக்கையும் இறைவன் அருளும் சேரும்போது... உடலில் என்ன பிரச்னை இருந் தாலும் ஓடிவிடும் என்பது உண்மைதானே!

உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்! - 5

இந்தத் தலத்தின் பெருமையையும் சக்தியையும் அறிந்து, எங்கிருந்தெல்லாமோ பிணியோடும் வேதனையோடும் வரும் அடியார்கள், இறைவன் திருமேனியில் சார்த்தப்பட்ட வெட்டிவேர் மாலையையும், அவன் திருத்தாளில் சமர்ப்பித்து அர்ச்சனை செய்யப்பட்ட பிரம்ம தீர்த்தத்தையும் பக்திப் பரவசத்தோடு பெற்றுச் செல்கிறார்கள்.

ஆடல் வல்லான் சந்நிதியின் இடதுபுறத்தில் ஸ்ரீசிவகாமசுந்தரி எழுந்தருளி இருக்கிறார். இந்த அன்னைக்கும் ஒரு சிறப்பு உண்டு. பொதுவாக கோயில்களில் தெய்வச் சிலைகளில், முகமும் கண்களும் பக்தர்களை நேரடியாகப் பார்ப்பது போல வடிக்கப்பட்டிருக்கும். ஆனால், இங்கே இருக்கும் சிவகாமி, தன் திருமுகத்தை லேசாகச் சாய்த்து, தனக்கு வலப்புறத்தே இருக்கும் இறை வனைப் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற அமைப்பு பேரழகு!  வருவோர்க்கெல்லாம் அருள் வழங்கி, அன்பாலே ஆட்கொள்ளும் ஆண்டவ னின் ஆளுமையை அவள் ரசித்துக் கொண்டிருப்பது போல நமக்குள் ஓடுகிறது கற்பனை! அவளது திருமுகத்தில் அப்படி ஒரு பெருமிதம், பேரின்பம்!

நடராஜருக்கும் சிவகாமிக்கும் அர்ச்சனை, ஆரத்தி வழிபாடுகள் நடக்க, அவர்களைத் தரிசிக்கும் பெரும்பேற்றை எனக்குத் தந்த இறைவனின் அருட்கொடைக்கு நன்றிகூறி, கண்கள் பனிக்க, நெஞ்சம் குளிரத் தரிசித்தேன்.

இங்கே ஸ்ரீபஞ்சநதன நடராஜரின் பக்கத்தி லேயே ஸ்ரீசிவகாமி அம்மன் இருக்க, ஸ்ரீசுத்த ரத்தினேஸ்வரரின் இறைவியான அருள்மிகு அகிலாண்டேஸ்வரி, கோயிலின் வெளிப் பிராகாரத்தில் தனிச் சந்நிதியில் ஆட்சிபுரிகிறாள். வாருங்கள்... கருணைநாயகியாகத் திகழும் அந்த அம்பிகையையும் தரிசித்து மகிழ்வோம்.

முன்னதாக, உங்களிடம் பகிர்ந்துகொள்ள... இங்குள்ள நந்தியாற்றின் மகிமையைச் சொல்லும் வேறொரு கதையும் இருக்கிறது!

(தொடரும்)

தொகுப்பு: பிரேமா நாராயணன்

படங்கள்: ராபர்ட்

உன்னத வாழ்வு தரும் ஊட்டத்தூர்! - 5

அரிதினும் அரிதான பஞ்சநதனக் கல்!

டவுள் திருவுருவங்களைச் செதுக்குவதற்கு, ஆலிங்கநதனம், பஞ்சநதனம், சிங்கநதனம், யானைநதனம், யாழி நதனம் என்று ஐந்து வகையான சிலாக்கற்கள் உள்ளன. இதில் `பஞ்ச நதனம்' என்ற பாறை தெய்விக வல்லமை மிக்கது என்பது சிற்பக்கலை வல்லுநர்களது கருத்து.

* நவரத்தின மோதிரம் எப்படி தனது ஒளியால் நமது கவனத்தை ஈர்க்குமோ, அதைப்போன்று பஞ்சநதனக் கல்லும் சக்தி வாய்ந்த கதிர்களைப் பரவச்செய்து நமக்குள் ஆற்றலை நிரப்புகிறது. இத்தகைய பஞ்சநதனக் கல்லாலான ஊட்டத்தூர் நடராஜர் சிலை, ஆசிய கண்டத்தின் ஆன்மிக அதிசயம்.

* பஞ்சநதனக் கல் என்பது, பார்ப்பதற்கு வழக்கமான கருங்கல்லைப் போன்ற தோற்றம் கொண்டதுதான். எனினும் சில தருணங்களில் கருநீலமாகவும், கரும்பச்சை வண்ணத்திலும்கூட காட்சியளிக்கும். `பல கோடி சூரியன்களின் சக்தியை உள்ளடக்கியது இந்தக் கல்' என்பது சித்தர்கள் வாக்கு.
 
அது எப்படி என்று கேட்கத் தோன்றும். கண்ணுக்குத் தெரியாத ஒரு நுண்ணிய அணுவுக்குள், எவ்வளவு மகத்தான அணுசக்தி புதைந்திருக்கிறது! அண்டத்தையே அழிக்க வல்ல ஆற்றல், ஓர் அணுவுக்குள் இருக்கிறது என்பதையே நாம் அரை நூற்றாண்டுக்கு முன்புதானே அறிந்தோம்? அதே போலத்தான், பஞ்சநதனப் பாறையின் சக்தியும்!

* இந்த வகைப் பாறைகள் அரிதினும் அரிதானவை. பத்து லட்சம் கோடி பாறைகள் உருவாகும்போது, அவற்றுள் ஒன்றே ஒன்றுதான் பஞ்சநதனப் பாறையாக மாறும் வாய்ப்பு உண்டு  என்றும் சித்தர்கள் விளக்கியுள்ளார்கள்.

* சூரியனிலிருந்து பூமிக்கு வரும் கிரணங்களில் பலவகை உண்டு. அவை ஒவ்வொன்றும் ஒருவித ஆற்றலுடன் திகழும்.  பூமியில் வாழும் உயிர்கள் அந்தக் கதிர்களை கிரகித்து, தமக்குத் தேவையான சக்தியை அதிலிருந்து பெற்று உயிர் வாழ்கின்றன. அவ்வகையில், சூரியனிலிருந்து வெளிப்படும் `சிற்சபேச' கதிர்களை தனக்குள் ஈர்க்கிறது பஞ்சநதனப் பாறை. பக்தியில் மூழ்கித் திளைத்து பரமாத்மாவைத் தரிசிப்பவருக்கு, இதை உணர முடியும்.

* பஞ்சநதனப் பாறைகளால் பஞ்ச ஸ்வரங்களையும் உருவாக்க முடியும். இந்தப் பாறையைத் தட்டினால், இசையின் அடிநாதமான சப்த ஸ்வரங்களில் ஐந்து ஸ்வரங்களை கேட்க முடியும்.

* பஞ்சநதனப் பாறையின் இன்னோர் அபூர்வமான சிறப்பு, மனிதக் கரங்களால் இதைச் செதுக்கி சிலைகள் செய்ய முடியாது. சித்தர்களின் ஆன்மிகச் சக்தியால், பஞ்சநதனப் பாறைகளில் இறைவனின் உருவங்கள் தானாகவே உருவாகும் என்று சொல்லப்படுகிறது.

அவ்வகையில் ஊட்டத்தூரில் அருள்பாலிக்கும் ஆடல் வல்லானின் விக்கிரகம், உளி இல்லாமல் செதுக்கப்பட்டது என்கிறார்கள். இதைப்போல பல கோயில்களில் அருள்பாலிக்கும் நந்தி உருவங்கள், தெய்விக சக்தியால் உருவாக்கப் பட்டிருக்கின்றன என்றாலும், பஞ்சநதனக் கல்லில் உருவான மூர்த்தி ஊட்டத்தூர் நடராஜர் மட்டுமே எனலாம்.

* `நவ லிங்க பூஜை' எனப்படும் ஒன்பதுவிதமான பூஜைகளை நிறைவுசெய்த பின்னரே, பாறையில் பஞ்சநதன நடராஜர் உருவம் தோன்றும் என்றும், அதன் பிறகுதான் மானிடர்கள் தரிசனம் செய்ய முடியும் என்றும் கூறுவர். ஆகவேதான், பஞ்சநதனப் பாறையும் அதில் உருவான நடராஜ மூர்த்தியின் தரிசனமும் சாந்நித்தியம் மிகுந்ததாகச் சொல்லப்படுகிறது.

இவ்வளவு மகத்துவங்கள் மிகுந்த ஊட்டத்தூர் ஆடல்வல்லானை, வாழ்வில் ஒருமுறையேனும் தரிசித்து, நமது பிரார்த்தனைகளையும் கோரிக்கை களையும் அவரின் திருவடியில் சமர்ப்பித்தால், அவை அத்தனையும் நிச்சயம் நிறைவேறும்.