Published:Updated:

பிள்ளை வரம் அருளும் சிவ வடிவம்!

பிள்ளை வரம் அருளும் சிவ வடிவம்!
பிரீமியம் ஸ்டோரி
பிள்ளை வரம் அருளும் சிவ வடிவம்!

பூசை அருண வசந்தன்

பிள்ளை வரம் அருளும் சிவ வடிவம்!

பூசை அருண வசந்தன்

Published:Updated:
பிள்ளை வரம் அருளும் சிவ வடிவம்!
பிரீமியம் ஸ்டோரி
பிள்ளை வரம் அருளும் சிவ வடிவம்!

மையுடனும் முருகப்பெருமானுடனும் கூடியுள்ள சிவ திருவடிவம் - சோமாஸ்கந்தர். ஸக + உமா + ஸ்கந்தர் என பதம் பிரித்து விவரிக்கின்றன ஞானநூல்கள். இதில், ‘ஸக’ என்பதற்கு இணைந்துள்ள, சேர்ந்துள்ள என்று பொருள்.

கல்வெட்டு குறிப்புகள் இந்தத் திருவடிவை ‘உமாஸகந்த சகிதர்’ என்கின்றன. அற்புதமான இந்தச் சிவ வடிவை வழிபடுவதால், இம்மையில் சகல சுக போகங்களும், மறுமையில் சிவப்பேறும் கிடைக்கும் என்பது உமாதேவியின் திருவாக்கு!

பிள்ளை வரம் அருளும் சிவ வடிவம்!

64 சிவ வடிவங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு திருக் கதை உண்டு. அவ்வகையில் இந்தத் திருவடிவத்துக்குப் பல காரணக்கதைகள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் திருவாரூர் புராணம் கூறும் கதையை முதலில் காண்போம்.

பிள்ளை வரம் பெற விரும்பி நெடுந்தவம் இருந்தார் திருமால். அதனால் மகிழ்ந்து, உமையவள் மற்றும் குமரனுடன் இணைந்து  திருக்காட்சி தந்த சிவபெருமான், ‘‘அழகில் சிறந்த மகன் வேண்டும்’’ என்று திருமால் வேண்டிய வரத்தை அளித்தார். அப்போது சிவனாரைப் பலவாறு துதித்த திருமால், உமையும் குமரனும் அருகில் இருப்பதைக் கவனிக்கவில்லை. அதனால் கோபம் கொண்ட உமையவள், ‘மகன் பிறந்தாலும் விரைவில் அவன் மறைந்து போவான்’ என்று சபித்தாள்.

இதனால் மனம் வருந்திய திருமால், தமக்குச் சிவனார் எப்படி காட்சியளித்தாரோ, அதே வடிவை வழிபட முடிவு செய்தார். அப்படியொரு திருவடிவைச் செய்யும்படி தேவசிற்பியான விஸ்வகர்மாவுக்கு ஆணையிட்டார். அதன்படியே விஸ்வகர்மா செய்து தந்த திருவடிவைத் தொடர்ந்து வழிபட்டும் வந்தார். அதன் பலனாக அவருக்கு மீண்டும் சிவதரிசனமும், உமையின் அருளும் கிடைத்தன. ‘‘உன் மகன் மறைவான் என்றாலும் அவன் காதலின் தெய்வமாகத் திகழ்வான்’’ என்று அருள்பாலித்தாள் உமையவள்.

இங்ஙனம் திருமாலால் பல காலம் வழிபடப்பட்ட சோமாஸ்கந்த மூர்த்தம் இந்திரனுக்கு அளிக்கப்பட்டு, பிறகு அவனிடம் இருந்து முசுகுந்த சக்கரவர்த்தி மூலம் பூவுலகை அடைந்தது என்கிறது திருவாரூர் புராணம் (சோமாஸ்கந்த சருக்கம்).

கந்தபுராணத்திலும் சோமாஸ்கந்த திருக்கோலம் குறித்து கூறப்பட்டுள்ளது. சரவணப்பொய்கையில் ஆறு குழந்தைகளாகத் தவழ்ந்து கார்த்திகைப் பெண் களால் வளர்க்கப்பட்ட கந்தன், பிறகு உமையவள் அருளால் ஓருடலும் ஆறுமுகங்களும் கொண்டு அம்மைக்கும் அப்பனுக்கும் இடையில் அமர்ந்து அருள்பாலித்தார் என்கிறது கந்தபுராணம். அதேபோல், அமுதவல்லி-குமுதவல்லியை மணந்த கந்தபெருமான், கயிலைக்குச் சென்று அம்மையப்பனை வணங்கி அவர்களுக்கு நடுவில் அமர்ந்து அருள்பாலித்ததாகவும் ஒரு தகவலைக் கூறுகிறது இப்புராணம்.

இந்த சோமாஸ்கந்தத் திருவடிவை அனுதினமும் வழிபட்டால்  அழகிய குழந்தைப்பேறு வாய்க்கும், அஷ்டமா ஸித்திகளும் கைகூடும், விரும்பியவை யாவும் ஈடேறும். இது, உமாதேவியின் திருவாக்கு என்கிறது `கமலாலயச் சிறப்பு’ எனும் நூல். அதுமட்டுமா? ‘சிறையுடலைத் தீர்த்து சிவபுரத்து உறைந்து சிவனடியைச் சேர்வர் திண்ணம்’ என்றும் அறிவிக்கிறது அந்த ஞானநூல். அற்புதமான இந்தச் சிவ வடிவம் குறித்த சில அபூர்வத் தகவல்களை அறிவோமா?

பெரிய நாயகரும்... பாண்டி நாயகரும்

சிவாலயங்களில் திகழும் நடராஜ மூர்த்தியை `சபா நாயகர்' என்பார்கள் சிவனடியார்கள். அதேபோன்று, பிரதோஷ உற்ஸவரைப் `பிரதோஷ நாயகர்' என்றும், பள்ளியறைக்கு எழுந்தருளும் மூர்த்தியைப் `பள்ளியறை நாயகர்' என்றும் அழைப்பது வழக்கம். அப்படியே அளவில் பெரிய சோமாஸ்கந்த மூர்த்தியை ‘பெரிய நாயகர்’ எனப் போற்றுவர்.

திருவண்ணாமலையில் அருளும் சோமாஸ்கந்த மூர்த்திக்குப் `பெரிய நாயகர்' என்று திருப்பெயர்; சிறியளவிலும் ஒரு மூர்த்தி உண்டு. அவருக்குச் `சிறிய நாயகர்' என்று திருப்பெயர். அதேபோல், திருவிடை மருதூர் சோமாஸ்கந்தரை `ஏக நாயகர்’ என்றும், திருப்பூவனம் தலத்தில் அருளும் மூர்த்தியை `காந்தி நாயகர்’ என்றும், மதுரையில் அருளும் மூர்த்திக்கு `பாண்டி நாயகர்’ என்றும் அழைத்து வழிபடுகிறார்கள்.

போக யோக மூர்த்தி

காஞ்சி அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக் கோயிலில், கருவறைக்குப் பின்புறம் அமைந்துள்ள முற்றத்தில் பழைமையான மாமரம் ஒன்று உள்ளது. இதன் கீழுள்ள மேடையில் கல் திருமேனியராக அருளும் சோமாஸ்கந்தர் மிகப் பழைமையான மூர்த்தியாகப் போற்றப்படுகிறார். இந்த மூர்த்தத்தை `போக யோக மூர்த்தி' என்றும் சிறப்பிப்பர். திருமணத் தடையால் வருந்துவோரும், பிள்ளைப்பேறு இல்லாத வர்களும் இந்த மூர்த்தியை வழிபட்டு வணங்கினால், விரைவில் அவர்களது குறை தீரும் என்பது நம்பிக்கை. இவ்வாலயத்தில்  சோமாஸ்கந்த சந்நிதியும் தனியே உண்டு. கருவறையிலும் மூலவருக்குப் பின்னே சோமாஸ்கந்தக் கோலத்தைத் தரிசிக்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிள்ளை வரம் அருளும் சிவ வடிவம்!

சந்தன சோமாஸ்கந்தர்

திருநெல்வேலி - ஸ்ரீநெல்லையப்பர் கோயிலில், சிற்றாலயத்தில் எழுந்தருளியுள்ள உலாத் திருமேனி யரான சோமாஸ்கந்தர், கலையழகில் கீர்த்தியுடன் திகழ்கிறார். இந்தக் கோயிலின் பிராகாரத்தில் தென் மேற்கு மூலையில் பெரிய கட்டுமலை ஒன்று உள்ளது; ஸ்ரீகயிலாயம் என்று அழைப்பர். இதனருகே பெரிய மண்டபத்தை ஒட்டிய சந்நிதியில் ஒரு சோமாஸ்கந்தர் அருள்கிறார். இவருக்குச் சந்தனக்காப்பு அணிவிக்கப் பட்டுள்ளது. இவரை `சந்தன சோமாஸ்கந்தர்' என்று அழைக்கிறார்கள்.

தியாகராஜரும் சோமாஸ்கந்தரும்

திருவாரூர் முதலான சில திருத்தலங்களில் சோமாஸ்கந்த மூர்த்திக்கு, தியாகராஜர் என்ற திருப்பெயர் வழங்கப்படுகிறது. அடிப்படையில் தியாகராஜர் திருமேனியும் சோமாஸ்கந்த மூர்த்தியும் ஒன்றே என்றாலும், தியாகராஜ மூர்த்திக்கென்று தனி அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. தியாகராஜரின் திருமேனி ரகசியமாகப் போற்றப்படுகிறது என்பார்கள். இதனை சோமகுல ரகசியம் என்பார்கள். மேலும், சோமாஸ்கந்த மூர்த்தி வாகனங்களில் வலம்வருவது போன்று தியாகராஜர் வருவது இல்லை. திருவாரூரில் தியாகராஜர் ஆழித்தேரில் மட்டுமே வலம் வருவார்!

கழல் வாழ்த்தி வணங்குவோம்


சோமாஸ்கந்தம் பரந்தாமம் சோமார்த்த க்ருத சேகரம்
முசுகுந்த தபோவல்லீ மூலகந்தம் உபாஸ் மஹே


என்று தியானித்து வழிபடச் சொல்கிறது இந்த ஸ்லோகம். அதாவது, ‘வட்டமாகக் கட்டப்பட்ட சடையில் அர்த்தச் சந்திரனைச் சூடியுள்ள தலைவனும், முசுகுந்த சக்கரவர்த்தியின் தவமாகிய கொடியின் வேரும், தண்டும், கிழங்குமாக விளங்கும் சோமாஸ்கந்த மூர்த்தியைத் தியானிக்கிறேன்’ என்று இதற்குப் பொருள்.

இதுபோன்று தமிழிலும் அற்புதமான பாடல்கள் உள்ளன. பாம்பன் சுவாமிகள் `பரிபூரணானந்த போதம்' எனும் நூலில், `ஆனந்த வஸ்து' வணக்கம் எனும் துணைத்தலைப்பில் அருளியிருக்கும் பாடல் ஒன்று சோமாஸ்கந்த வணக்கமாகவே திகழ்கிறது.

அந்தப்பாடல்:


சத்தெனச் சொல்லும் தாவில் சிவத்திலும்
சித்தெனச் சொல்லும் தேவியிடத்திலும்
புத்திரப் பெயர் பூண்டி லகானந்த
வத்துவின் கழல் வாழ்த்தி வணங்குவாம்


திருநாவுக்கரசரும் அற்புதமான பதிகத்தைத் தந்துள்ளார். காஞ்சி மேற்றளி திருக்கோயில் இறை வனைப் பாடும் பாடல் அது.

செல்வியை பாகங் கொண்டார்
    சேந்தனை மகனாகக் கொண்டார்
மல்லிகைக் கண்ணியோடு மாமலர்க்
    கொன்றை சூடிக்
கல்வியைக் கரையிலாத
    காஞ்சி மாநகர் தன்னுள்ளான்
எல்லியை விளங்க நின்றார்
    இலங்கு மேற்றளியனாரே


இந்தப் பாடலைப் பாடி, கந்தனுடன்கூடிய அம்மையப்பனை அனுதினமும் வழிபட்டு வரம் பெறுவோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism