மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமா?

கேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமா?

? நமது ஞானநூல்கள் அதிகாலை நீராடலை அவசியப்படுத்துவதன் தாத்பர்யம் என்ன?
 
- எம்.லட்சுமண பெருமாள், தேனி


!ஊண்-உறக்கம் இல்லாத இறைவனும் பொழுது புலர்ந்ததும் நீராடுகிறார். ஈசனின் தலையிலேயே கங்கை உண்டு. ஆனாலும், கருவறையைத் திறந்ததும் அவருக்கு நீராடல் உண்டு. அவர் நித்ய சுத்தன். அவரும் காலைப் பொழுதில் நீராட வேண்டும் என்று ஆகமம் சொல்லும்.

உண்டு உறங்குபவர்கள் நாம். காலையில் நம் உடலில் இருக்கும் ஒன்பது துவாரங்களில் இருந்தும்

கேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமா?

கழிவுகள் வெளியேறும். அப்போது நீராடினால், உடல் சுத்தமாகும். நித்ய சுத்தனை, சுத்தமாக இருந்து வணங்க வேண்டும் அல்லவா? தவிர, கோயிலுக்குச் செல்வதற்காக மட்டுமல்ல... நமது சுகாதாரத்தை எண்ணியும் நீராட வேண்டும்.

வெறுமனே வாயை மட்டும் கொப்பளித்து விட்டு, காபி அருந்தக் கூடாது. நீராடிய பிறகே எதையும் உட்கொள்ள வேண்டும். தவறான நடைமுறைகளைப் பின்பற்றிப் பழக்கப் பட்டவர்களுக்குச் சிரமமாக இருக்கும். எனினும், மூக்கிலும், காதிலும், ரோமக் கால்களிலும் கழிவுகளை வைத்துக்கொண்டு எப்படி காபி அருந்துவது? சிந்தித்துப் பாருங்கள்!

அன்றாடம் எழுந்தவுடன் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்று நீராடல். கோயிலுக்குப் போனாலும் போகாவிட்டாலும் கட்டாயம் நீராட வேண்டும். கோயிலுக்குப் போகும் முன் நீராடிச் செல்லுங்கள். உடல் சுத்தமாகும்; கோயிலில் அவனைத் தரிசிப்பதால் உள்ளமும் சுத்தமாகும்.

? தென்னகத்தில் சில திருத்தலங்களைக் காசிக்குச் சமமானவை என்கிறார்கள். இந்தத் தலங்களுக்குச் சென்று வழிபட்டால், காசிக்குச் சென்ற புண்ணியம் கிடைக்குமா?

- எஸ்.பரமேஸ்வரன், செங்கோட்டை


!சிரார்த்தம் செய்யும்போது, ‘எனது வீடே கயை. சாப்பிடுபவர் கதாதரன்’ என்று சொல்வோம். நமது வீடு கயை ஆகுமா?

சாப்பிடுபவர் கதாதரன் ஆக முடியுமா? அந்த அளவுக்கு உசத்தி என்பதற்காக அப்படிச் சொல்கிறோம். சமம் என்றால் சமமல்ல. காவியங்களில் நாயகியின் முகம், சந்திரனுக்குச் சமம் என்பார்கள். ஒரு பெண்ணுக்கு நிலா முகம் இருந்தால், எப்படி இருக்கும்?! அந்த அளவுக்கு இதில் கௌரவம் இருக்கிறது என்பதற்காக அப்படிச் சொல்வது வழக்கம். அதனால் உங்கள் ஊர் காசி ஆகாது. காசி, காசிதான்; செங்கோட்டை, செங்கோட்டைதான்!

கிரகணம் விடும்போது எங்கோ குளித்தால்கூட கங்கா ஸ்நானம் செய்த பலன் என்பார்கள். நாம் குளிக்கும் இடம் எல்லாம் உண்மையான கங்கை ஆகுமா? நமக்கு ஈடுபாடு வருவதற்காக, உயர்வைக் காட்டுவதற்காகச் `சமம்’ என்று சொல்வதுண்டு.

கேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமா?

? பிரார்த்தனையின் பொருட்டு, கோயில்களில் பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமா?

- வீ.உஷா, தூத்துக்குடி

!செய்யலாம். உருவ மாறுபாடுகளைத் தவிர, மற்றவற்றில் ஆண் - பெண் என்ற பாகுபாடு கிடையாது.

ஜோதிடம், பலன் சொல்ல ஆரம்பித்தது. முதலில் ஆண்களுக்குப் பலன் சொன்ன ஜோதிடம், முடிவில்... ‘இதுவரை ஆண்களுக்குச் சொன்ன பலன்கள், பெண்களுக்கும் பொருந்தும்!’ என்று விளக்கியது. அடுத்து... ‘இனி, பெண்களுக்கு மட்டும் பொருந்தும் பலன்களைக் கூறுகிறேன்’ என்று ஆரம்பித்தது.

உலகவியல் செயல்பாடுகளைப் பொறுத்தவரை, ஆண் - பெண் பாகுபாடு தர்ம சாஸ்திரத்தில் இல்லை. பக்தி செலுத்துவதில் பிரகலாதனும் உண்டு; மீராவும் உண்டு. யானை, பாம்பு போன்ற (ஆறறிவு அற்ற) உயிர்களும் ஆண்டவனை நெருங்க இயலும் என்கின்றன புராணங்கள். பக்தியின் செயல்பாட்டை வரையறுப்பது மனம். சபரியும், கண்ணப்ப நாயனாரும் தாங்கள் ருசி பார்த்தப் பொருளை ஆண்டவனுக்கு அளித்து மகிழ்ந்தனர் என்ற தகவல் உண்டு. ஆகவே, பக்தி மேலிடும்போது பாகுபாடு மறைந்துவிடும்.

எனினும், பெண்மையின் இயல்பு மென்மை. ஆதலால், கடினமான செயல்பாடுகளில் அவர்களைச் சேர்க்க அன்றைய சமுதாயம் தயங்கியது. பயணத்தின்போது கனமான பொருள்களை கணவன் சுமப்பான். மனைவி, தண்ணீர் கூஜா போன்ற பளுவற்றப் பொருள்களைச் சுமப்பாள்.

ஏர் பிடித்து உழுதல், விறகு வெட்டுதல், கிணறு தோண்டுவது மற்றும் மரம் ஏறுதல் உள்ளிட்ட கடினமான வேலைகள் ஆண்களிடம் இருக்கும். நாற்று நடுதல், செங்கல் மற்றும் கலவை சுமப்பது போன்ற இலகுவான வேலைகளைப் பெண்களுக்கு ஒதுக்குவர். இந்தப் பாகுபாடு நல்லெண்ணத்தின் வெளிப்பாடே!

பிரார்த்தனைகளிலும் அப்படியே. மக்களது விருப்பத்தையொட்டி, பிரார்த்தனைகள் பல வடிவங்களில் தென்படலாம். ஆனால், அவற்றின் பலன்களில் மாறுபாடு இருக்காது.

கேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமா?

? ஆலயங்களுக்குச் செல்லும்போது பிராகார வலம் வந்துவிட்டு, மூலவரைத் தரிசிக்கச் செல்ல வேண்டுமா அல்லது மூலவரைத் தரிசித்த பிறகு ஆலயத்தை வலம் வர வேண்டுமா?

- பா.ராஜேந்திரன், சென்னை-44

! பக்தி மேலிட்டவனுக்கு இந்த இரண்டு முறைகளும் ஒன்றுதான். அவன் மனதில் பாகுபாடே தென்படாது. எல்லாம் ஒன்றாகவேபடும். நீங்கள் சொல்கிறபடி எதற்கும் ஒரு நடைமுறை வேண்டும். பிராகாரம் வலம் வருவது மூலவருக்குச் செய்யும் பணிவிடைகளில் ஒன்று. அவரை வலம் வருகிறோம் என்று பொருள். 16 வகைப் பணிவிடைகளில், வலம் வருதல் கடைசியில் வரும். ஆகையால், மூலவரை முதலில் தரிசனம் செய்து, நமது பக்தியை அர்ப்பணித்து வலம் வருதல் பொருத்தமாகும்.

பிராகாரத்தில் இருக்கும் தெய்வங்களை வலம் வரும் வேளையிலேயே வணங்கி, நமது பக்தியைச் செலுத்திவிடலாம். பிராகாரத்தில் தேவதைகளே இல்லாத கோயில்களும் உள்ளன. பிராகாரமே இல்லாத ஆலயங்களும் உள்ளன. அங்கெல்லாம் மூலவரைத் தரிசித்த பிறகு வலம் வருவோம்.

மூலவரை நேரடியாகப் போய் தரிசிப்பதைவிட, அவரை வலமாக வந்து ஆலயம் நுழைவது சிறப்புதான். ஆனால், வலம் வரும் வேளையில் பிராகாரத் தெய்வங்களை வணங்காது வலம் வருவது சரியல்ல. அப்படி அவர்களை வணங்கினால், மூலவரைப் பார்ப்பதற்காக வந்த நாம், முதல் வணக்கத்தை பிராகாரத் தேவதைகளுக்கு அளிக்கிறோமே என்று நெருடல் ஏற்படலாம். ஆகவே, முதலில் மூலவரை வணங்கி, பிறகு பிராகாரத் தெய்வங்களை வணங்கும்போது நெருடல் இருக்காது. அதைப் பின்பற்றுவது சிறப்பு.

ஆலயத்தில் முதல் பிரதிஷ்டை மூலவர். பிற்பாடு பிரதிஷ்டை செய்யப்பட்டவர்கள், பரிவாரத் தேவதைகள். ஆகையால், மூலவருக்கு முதல் வணக்கம் என்ற நடைமுறை சிறந்தது. சில ஆலயங்களில் ஒரு தெய்வத்தை வணங்கி, அவரது அனுமதியோடு மூலவரைத் தரிசிக்க வேண்டும் என்கிற நியதி இருக்கும். வாவரைப் பார்த்து வணங்கிய பிறகு, சபரிகிரீசரை வணங்க வேண்டும் என்பார்கள். லட்சுமணனைத் தரிசித்தப் பிறகு, ராமரை வணங்க வேண்டும் என்று திருவில்வாமலை ஆலயத்தில் சொல்லுவார்கள்.

இப்படி சிறப்பான விதிமுறைகள் இல்லாத ஆலயங்களில் மூலவருக்கு முதல் வணக்கமளித்து விடுங்கள். மனம் யாரை வணங்க வேண்டும் என்று சங்கல்பம் செய்ததோ, அதை முதலில் செய்துவிட்டு மற்றவர்களுக்குப் பிற்பாடு செய்வது தவறாகாது.

கேள்வி - பதில்: பெண்கள் அங்கப் பிரதட்சணம் செய்யலாமா?

? குங்குமம் மற்றும் விபூதி ஆகியவற்றை நெற்றியில் இடும்போது, முதலில் விபூதியைப் பூசி விட்டு அதன் கீழ் குங்குமம் தரிக்க வேண்டுமா அல்லது குங்குமத் திலகம் இட்டுக்கொண்ட பிறகு விபூதியைப் பூச வேண்டுமா?

- தி.கணபதி, வந்தவாசி

!நெற்றியில் விபூதி பூசும்போது, சுட்டு விரல், நடு விரல் மற்றும் மோதிரவிரல் ஆகிய மூன்று விரல்களால்... மூன்று கோடுகளாக இடமிருந்து வலமாகப் பூச வேண்டும். குங்குமத்தை இரு புருவங்களின் மத்தியில் வைத்துக்கொள்ளலாம்.

சம்பிரதாயத்தை ஒட்டி... முதலில் எதை வைப்பது என்பதை முடிவு செய்யலாம். நெற்றியில் திலகம் வேண்டும். விபூதி, திருமண், கோபி போன்றவற்றை நெற்றியில் இடுவது குறித்து சிறந்த நடைமுறைகள் உள்ளன. அதைப் பின்பற்ற வேண்டும். கோயிலில் வழங்கப்படும் சந்தனம், குங்குமம் போன்ற பிரசாதங்களைப் புருவ மத்தியில் மட்டும் வைத்தால் போதுமானது. 

விருப்பப்படி நெற்றியில் இட்டுக்கொள்வதை சாஸ்திரம் எதிர்க்காது. எனினும், உரிய நியதிகளைப் பின்பற்றுவது சிறப்பு.

? எங்கள் ஊர்ப்பக்கம் சில கோயில்களில், ஸ்வாமிக்குச் சமர்ப்பிக்கும் தேங்காயை, குடுமியை அகற்றிவிட்டு வைக்கிறார்கள். இது சரியா? தேங்காயை, குடுமி அகற்றாமல் படைக்க வேண்டும் என்று எங்கள் வீட்டுப் பெரியவர்கள் சொல்கிறார்கள். இதுகுறித்து தங்களது விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்!


- எல்.மீனாட்சி, திண்டுக்கல்

! பண்டைய காலத்தில் அரசர்கள், வணிகர்கள் மற்றும் மறை ஓதுபவர்கள் ஆகியோர் பரம்பரை பரம்பரையாகக் குடுமி வைத்துக்கொண்டிருந்தனர். குடுமியை உடலின் ஓர் உறுப்பாக சொல்லும் வேதம். அதை அவர்கள் பின்பற்றினார்கள்.

தேங்காயின் ஓர் உறுப்பாகத் திகழ்வது அதன் குடுமி. அதை அகற்றிவிட்டால், தேங்காய் பின்னம் அடைந்துவிடும். இறைவனுக்குப் படைக்கப்படும் பொருள் பின்னம் அற்றதாக இருக்க வேண்டும்.

எனவே, உடைக்கும்போது, தேங்காய், குடுமியுடன் இருக்க வேண்டும். உடைத்தப் பிறகு அதை அகற்றலாம். உடைப்பதற்கு முன் தேங்காயில் உயிரோட்டம் உண்டு. அது பிரிந்த பிறகு, குடுமியை அகற்ற வேண்டும்.
தென்னையில் இருந்து கிடைக்கும் முக்கண் கொண்ட தேங்காய், முக்கண்ணனான ஈசனுக்குச் சமம். ‘உனது குடுமி எனது துயரத்தைத் துடைக்கட்டும்!’ என்ற வேண்டுதலை முன்வைத்து, தேங்காயைப் போற்றும் செய்யுள் ஒன்றுண்டு.

நாம் வழிபடுவதற்கு வசதியாக உருவமற்ற தெய்வத்துக்கு உருவம் அமைப்போம். கும்பம் வைத்து, அதில் இறைவனை குடியிருத்துவோம். குடம், இறைவனின் திருமேனி. குடத்தின் மேல் வைக்கப்படும் தேங்காய், இறைவனின் சிரம்; அது, சிகையுடன் அதாவது குடுமியுடன் திகழ வேண்டும். எனவே, குடுமியுடன் கூடிய தேங்காயைக் கும்பத்தில் வைப்பார்கள்.

ஊனம் இல்லாத உடலில் தேவதை தங்கியிருக்கும். நாருடன்கூடிய மட்டைத் தேங்காய் பல நாள்கள் கெடாமல் இருக்கும். தேங்காய் நார் அதற்குப் பாதுகாப்பு. ‘மூளையைப் பாதுகாக்க குடுமி இருக்க வேண்டும்!’ என்பது ஆயுர்வேதத்தின் அறிவுரை.

ஆனால், நாம் குடுமியை என்றோ இழந்து விட்டோம். தேங்காய்க்காவது இருந்துவிட்டுப் போகட்டும். உடைக்கும் வரை பொறுமையாக இருங்கள். உடைத்தப் பிறகு எடுத்துவிடலாம்.

- பதில்கள் தொடரும்...