Published:Updated:

சித்திர ராமாயணம்

சித்திர ராமாயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
சித்திர ராமாயணம்

பி.ஸ்ரீ.

சித்திர ராமாயணம்

அமுத நாக்கும் அனல் நாக்கும்!

கைகேயி செய்த கொடுமை அறியாது செய்ததல்ல; ஆராய்ந்து பார்த்து அறிவோடு துணிந்து செய்தது என்பதை, ‘தன் மனத்தே நினைந்து செய்யும் கொடுமை’ என்று வற்புறுத்திய கவிஞனே வேறோரிடத்தில், ‘கைகேயி என் செய்வாள், பாவம்! அரக்கர் பாவமும், அல்லாதார் அறமும் சேர்ந்துகொண்டதால், கைகேயி இரக்கம் துறந்தாள். இந்த இரக்கமின்மைதானே ‘ராமன் புகழ்’ என்ற அமிர்தத்தை உலகம் அள்ளிப் பருகுவதற்குக் காரணம்?’ என்று பொருள்படத் தன் அமுத நாவால் பாடியிருக்கிறான்!

‘எத்தனையோ வளையங்களால் இயன்ற சங்கிலித் தொடரன்றோ விதி? இவ்விதிக்கு ஒரு கருவி, கைகேயி அம்மாளும்’ என்பது உட்பொருள்.

விதியின் இதிகாசத்தை அப்படி உணர்ந்திருக்கும் கவிஞனும் நிதானம் தவறிவிட்டதுபோல் கொதித்துப் பேசுகிறான், பரதன் உள்ளத்திலே கிடந்து வெளிப்படப்போகும் அந்த பெருங் கொதிப்புக்கு ஒரு பீடிகைபோல.

‘சுடு மயானத்திடை’ என்று தொடங்கும் அந்தப் பாட்டு, சுடுகின்ற தீயின் நாக்கைப் போலக் காண்கிறது. இது பரதன் உள்ளத் திலே ‘புகைந்து கழன்று’ பொங்கி, வாக்கிலே வெளிப்படப்போகும் ஆறாப் பெருங்கனலுக்கு ஓர் அறிகுறி.

ஹிருதய அலறல்!

சாந்த குண பூஷணமான பரதன் - நீதியின் நிலையமான பரதன் - தாயை, அந்நியனான குகனுக்கு எப்படி அறிமுகப்படுத்துகிறான்? தான் பிறந்த வயிற்றிலேயே துன்பமெல்லாம் பிறந்ததாம். தனக்கும் துன்பங்களுக்கும் பெற்ற தாயான கைகேயி, உலகம் தூற்றும் பழிக்கெல்லாம் வளர்ப்புத் தாயாம். ‘அந்த வயிற்றில் பத்து மாதங்கள் கிடந்தேன்!’ என்று அலறுகிறது பரத ஹிருதயம்.

இந்தப் பாட்டைப் பார்க்கலாம், அந்த ஹிருதய அலறலையும் அப்படியே கேட்கலாம்:

படர்எலாம் படைத்தாளைப்,
பழிவளர்க்கும் செவிலியைத்,
தன் பாழ்த்த பாவிக்
குடரிலே நெடுங்காலம் கிடந்தேற்கும்
உயிர்ப்பாரம்குறைந்து தேய
உடரெலாம் உயிரில்லா
எனத்தோன்றும் உலகத்தே ஒருத்தி அன்றே
இடரிலா முகத்தாளை
அரிந்திலையேல், இந்நின்றாள்
என்னை ஈன்றாள்.

சித்திர ராமாயணம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தாயைப் பழிக்கும் தரும நீதி

ராமனைக் காட்டுக்கும் தசரதரைச் சுடுகாட்டுக்கும் அனுப்பி, எல்லாருக்கும் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாகிவிட்டாள். ஆகவே, இவள்தான் துன்பங்களையெல்லாம் படைத்து விட்ட தாய் என்கிறான் பரதன்.

‘இக்கொடியாளுடைய கொடிய வயிற்றில் நெடுங் காலம் கிடந்த நானும் கொடியன்’ என்கிறான் பரதன். ‘தாயும் கொடியள், சேயும் கொடியன் - தாயைப் போலே பிள்ளை, நூலைப் போலே சேலை’ என்பது குறிப்பு.

இனி, நாம் அக்கரையிலுள்ள பரத்வாஜ முனிவரது ஆசிரமத்தை நோக்கிப் போக வேண்டும்.

பரத்தின் ஓங்கு
பரத்துவன் என்னும் அவ்
வரத்தன், மேதகு
மாதவன். வைகிடம்,
அருத்தி கூர
அணுகினன்; ஆண்(டு) அவன்
விருத்தி வேதிய -
ரோ(டு)எதிர் மேயினான்.


இந்த இல்வாழ்வில், தோலாடையும் தாடி சடைகளுமாய் ஏழைபோல் தோன்றினாலும், பரத்திலே - அதாவது உயர்தர ஞான வாழ்விலே - பரத்வாஜர் ஒரு பெருங்கோடீசுவரர் என்று சொல்ல வேண்டுமாம். தவம் முதலிய சாதனங்களால் அத்தகைய வரப்பிரசாதங்கள் பெற்றிருக்கிறார். இம்மகரிஷியைக் கவி ‘மேதகு மாதவன்' என்று அறிமுகப்படுத்துகிறான் - பரதனுக்கும் நமக்கும்தான்.

உயர்வு எதில்?

ம்மகரிஷியின் சிஷ்ய சம்பத்தையும் ‘விருத்தி வேதியர்' என்று அறிமுகப்படுத்துவது கவனிக்கத்தக்கது. தானம் வாங்க வந்த வேதியரை ‘அருத்தி வேதியர்' (ஆசையோடு கூடிய வேதியர்) என்று சுந்தரகாண்டத்தில் சுட்டிக்காட்டும் கவிஞன், பரத்வாஜ் ஆசிரமத்திலே குருகுலவாசம் செய்து, அறிவுச் செல்வத்தை விருத்தி செய்துகொண்டிருக்கும் வேதியரை ‘விருத்தி வேதியர்' என்று குறிப்பிடுவது எவ்வளவு பொருத்தமாயிருக்கிறது!

இப்படி, வேதியர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துப் பேசுவதிலிருந்தே கம்பனுடைய லட்சிய உயர்வை உணர்ந்துகொள்ளலாம்.

நீதியால் வந்ததொரு
  நெடுந்தரும நெறியல்லால்
சாதியால் வந்தசிறு
  நெறி அறியா(த)


கவிஞன் அல்லவா? ஒழுக்கமும், எப்போதும் விருத்தி செய்யப்படும் அறிவுமே கம்பன் போற்றும் உயர்குலம் என்பது இக்காவியத்தை ஒருவாறு பரிசீலனை செய்து பார்த்தவர்களும் நன்குணர்வர்.

இனி, தவ ஒழுக்கத்துக்கும் அறிவுச் செல்வத் துக்கும் விளைநிலம் போலிருக்கும் அந்த ஆசிரம எல்லையில் நடப்பதைத் தொடர்ந்து கவனிப்போம். சாந்தமயமாக விளங்கும் அக்காட்டுப் பகுதியில் மகாதேஜஸ்வியான அந்தத் தவசியை அப்படித் திடீரென்று கண்டதும், பரதன் பிரமித்துப் போகிறான். `இறந்துபோன தன் அருமைத் தந்தையே இப்போது வேறொரு திவ்விய ரூபத்தில் வருகிறாரோ' என்று தோன்றுகிறது. உடனே வெகு வினயத்தோடும் பக்தி விசுவாசங்களோடும் பரதன் தரையில் விழுந்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிறான்.

மகரிஷியும் பரதனுடைய தவ வேடத்தைக் கண்டு திகைத்துப்போகிறார். தன்னைப்போல் அவனும் மரவுரி தரித்துச் சடைமுடியுடன் காட்சியளிப்பானேன். ராமன் காட்டுக்கு வந்து விட்டதும், பரதனாவது முடி சூடி மக்களின் துயரத்தைப் போக்க முயல்வான் என்றுதான் அம்முனிவரும் எதிர்பார்த்திருக்க வேண்டும். அவர் எவ்வளவு இரக்கத்தோடு இவனை ஆசீர்வதிக்கிறார்!

பிறகு பரத்வாஜ முனிவர் பரதனுடைய ‘துரதிர்ஷ்ட’த்தைக் குறித்து எப்படி வருந்துகிறார்....

‘எடுத்த மாமுடி
  சூடி, நின் பால்இயைந்(து)
அடுத்த பேரர(சு)
  ஆண்டிலை; ஐய! நீ
முடித்த வார்சடை
  யோடு முனிவர்தூ(சு)
உடுத்து நண்ணுதற்(கு)
  உற்றுள(து) யா(து)?’ என்றான்.


“உன் தாயார் உனக்காக எடுத்து வைத்திருந் தாளே, அந்தப் பெரிய கிரீடத்தைச் சூடிக்கொள்ளும் பாக்கியம் உனக்குக் கிடைக்கவில்லையே; அப்பா, குழந்தாய்! கைக்கு எட்டியது இப்படி வாய்க்கு எட்டாமல் போயிற்றே!” என்று முனிவர் துக்கிக்கிறார். தானாக வந்த சீதேவியை வேண்டாமென்று தள்ளுவார் உண்டோ?

(16.11.47 மற்றும் 23.11.47 ஆனந்த விகடன் இதழ்களிலிருந்து...)