மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கயிலை... காலடி... காஞ்சி! - 23 - ‘ஒரு தார்ல 1008 பழம் இருக்கறதை பார்த்திருக்கியோ?’

கயிலை... காலடி... காஞ்சி! - 23 - ‘ஒரு தார்ல 1008 பழம் இருக்கறதை பார்த்திருக்கியோ?’
பிரீமியம் ஸ்டோரி
News
கயிலை... காலடி... காஞ்சி! - 23 - ‘ஒரு தார்ல 1008 பழம் இருக்கறதை பார்த்திருக்கியோ?’

நிவேதிதா

தே த்யான யோகானுகதா பச்யன் த்வாமேவ தேவீம்
    ஸ்வகுணைர் நிகூடாம்
த்வமேவ சக்தி: பரமேச்வரஸ்ய மாம் பாஹி
    ஸர்வேச்வரி மோக்ஷதாத்ரி


கருத்து: நீதான் ஒரே கடவுள் என்று ஆழ்ந்து சிந்தனை செய்பவர் களுக்குத் தெரிகிறது. நீதான் இந்த உலகத்துக்கே காரணம். பக்தர்களுக்கு மோக்ஷம் தருகின்ற நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்.

- துர்கா பஞ்சரத்னம் (காஞ்சி மகா பெரியவர் அருளியது)

கயிலை... காலடி... காஞ்சி! - 23 - ‘ஒரு தார்ல 1008 பழம் இருக்கறதை பார்த்திருக்கியோ?’

கா பெரியவா சதாரா யாத்திரை மேற்கொண்டபோது, வழியில் `அக்ரி' என்ற கிராமத்தில் தங்கியிருந்தார். அன்றைக்கு அதிருத்ர ஜபம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அங்கிருந்த ஒரு கொட்டகையில் மோன மூர்த்தியாக அமர்ந்திருந்த மகா பெரியவா, தம்முடைய தெய்விகக் குரலில், ஒரு பஞ்சரத்ன ஸ்தோத்திரம் அருளினார். மகா பெரியவா உலக நலனுக்காக நீண்டகாலம் தவம் இயற்றிய தவபூமியான தேனம்பாக்கத்தில் அருளும் துர்கையைப் போற்றும் ஸ்லோகம் அது.

அந்த ஸ்லோகத்தை மகா பெரியவா முடிக்கவும், பலத்த காற்றுடன் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டியது. மகா பெரியவா படுத்திருந்த கொட்டகை எங்கே அவர் மேல் சாய்ந்துவிடுமோ என்று அனைவரும் நடுங்கிக்கொண்டிருந்தனர். ஆனால், மகா பெரியவா எந்த ஒரு சலனமும் இல்லாமல், அப்படியே படுத்திருந்தார். அவருக்கு ஒன்றுமே ஆகவில்லை. மகா பெரியவா தேனம்பாக்கம் துர்கையைப் போற்றி அருளிய பஞ்சரத்ன ஸ்லோகத்தைப் பக்திபூர்வமாக பாராயணம் செய்தால், எத்தகைய ஆபத்துகளில் இருந்தும் நம்மை அம்பிகை காப்பாற்றிவிடுவாள். அந்த அளவுக்கு புனிதத்துவம் வாய்ந்த தலம் தேனம்பாக்கம் திருத்தலம்.

உன்னதமான தேனம்பாக்கம் தலத்தில் மகா பெரியவா எழுந்தருளிய காலங்களில் அவர் எத்தனையோ பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார்.

கயிலை... காலடி... காஞ்சி! - 23 - ‘ஒரு தார்ல 1008 பழம் இருக்கறதை பார்த்திருக்கியோ?’

ஒருமுறை சென்னையில் இருந்து முக்கியப் பிரமுகர் ஒருவர் மகா பெரியவாளைத் தரிசிக்க வந்தார். மகானுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதற்காக, தன் தோட்டத்தில் விளைந்த இரண்டு வாழைப்பழத் தார்களைக் கொண்டு வந்தார். வாழைத்தார்களை பெரியவாளுக்குச் சமர்ப்பித்துவிட்டு, பிரசாதம் பெற்றுக் கொண்டு சென்றுவிட்டார்.

அவர் சென்றதும், மடத்தில் இருந்த கிருஷ்ணமூர்த்தியை அழைத்த பெரியவா, ‘`இந்த ஒவ்வொரு  தார்லயும் எத்தனை பழம் இருக்குன்னு எண்ணிச் சொல்லு'’ என்றார். வாழைத்தாரில் இருந்த பழங்களை எண்ணி முடித்த கிருஷ்ணமூர்த்தி, ‘‘எண்ணிட்டேன் பெரியவா, ஒரு தார்ல 275 பழமும் இன்னொரு தார்ல 375 பழமும் இருக்கு பெரியவா’’ என்றார்.

‘‘பேஷ், பேஷ்’’ என்று சற்றே நிறுத்திய பெரியவா, ‘‘ஒரு தார்ல 1008 பழம் இருக்கறதை நீ

கயிலை... காலடி... காஞ்சி! - 23 - ‘ஒரு தார்ல 1008 பழம் இருக்கறதை பார்த்திருக்கியோ?’

பார்த்திருக்கியோ?’’ என்று கேட்டார்.

சற்றே தயங்கியவர், ‘‘பார்த்ததில்லே பெரியவா. கேள்விப்பட்டதும்கூட இல்லே. பெரியவா உத்தரவு கொடுத்தா எங்கிருந்தாலும் எடுத்துண்டு வந்துடறேன் பெரியவா’’ என்றார்.

‘‘ஓஹோ, நானே அப்பிடி ஒரு வாழைத்தார் எங்கிருக் குன்னு சொல்லிடுவேன்னு நெனைக்கறியோ?’’ என்று கேட்டு சற்றே நிறுத்தியவர், தொடர்ந்து, ‘‘இதுக்கு நா பதில் சொல்ல வேண்டாம். நேரா இளையாத்தங்குடில இருக்கற மாரியம்மன் கோயிலுக்குப் போ. அந்த அம்மனை தரிசனம் பண்ணு. உனக்கு எல்லா விவரமும் தன்னாலே கிடைக்கும்’’ என்றார் மகா பெரியவா.

மகா பெரியவா சொன்னபடி அடுத்தநாளே இளையாற்றங்குடிக்குப் புறப்பட்டார் கிருஷ்ணமூர்த்தி. பெரியவா திருவாக்கின்படி மாரியம்மனைத் தரிசித்தார். அப்போது கோயிலில் இருந்த யாரோ இருவர்  வாழைத்தார்களைப் பற்றி திடீரென பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் வாழைத் தாரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கவே, அவர்களிடம் சென்று, ‘‘ஐயா, 1008 பழம் இருக்கற மாதிரி பெரிய வாழைத்தார் இந்த ஊர்ல எங்கே கிடைக்கும்?’’ என்று கேட்டார்.

கயிலை... காலடி... காஞ்சி! - 23 - ‘ஒரு தார்ல 1008 பழம் இருக்கறதை பார்த்திருக்கியோ?’

பேசிக்கொண்டிருந்த ஒரு நபர், ‘‘இப்பிடியே தெற்கால போங்க. ஒரு பெரிய கிணறு வரும். அதுக்கப்புறமா பெரிய வாழைத் தோட்டம் இருக்கும். அங்கே இருக்கறவங்களை கேட்டுப் பாருங்க’’ என்றார். அந்த நபர் சொன்னபடியே வாழைத்தோட்டத்துக்குப் போன கிருஷ்ணமூர்த்தி, ‘‘1008 பழங்கள் இருக்கற ஒரு தார் வேண்டும்’’ என்று அங்கிருந்தவரிடம் கேட்டார்.

உடனே அந்த நபர் வாழைமரத்தில் இருந்து இறக்கி வைக்கப்பட்ட வாழைத்தார்களில் இருந்து ஒரு பெரிய வாழைத்தாரை தூக்கமுடியாமல் தூக்கி வந்து, ‘‘இதான் சாமி, நீங்க கேட்ட 1008 பழத்தாரு’’ என்று கிருஷ்ணமூர்த்திக்கு முன்பாக வைத்தார். மகா பெரியவாளின் ஞானதிருஷ்டியை நினைத்து சிலிர்ப்பும் பரவசமும் அடைந்த கிருஷ்ணமூர்த்தி, அந்த நபர் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டு, ஒரு கூலியாளை வைத்துக் கொண்டு அந்த வாழைத்தாரை எடுத்துக்கொண்டு மகா பெரியவா திருமுன்பு வைத்தார்.

பெரிதாகச் சிரித்த மகா பெரியவா, ‘‘ஒருவழியா 1008 பழம் இருக்கற தாரை புடிச்சுண்டு வந்துட்டே போலிருக்கு’’ என்றார்.

‘‘நேத்து பாக்கறச்சே காயா இருந்துச்சு. பெரியவா சந்நிதிக்கு வந்தவுடனே மஞ்சள் நெறத்துல பழுக்க ஆரம்பிச்சிடுச்சு பெரியவா’’ என்று நெகிழ்ச்சி யுடன் கூறினார் கிருஷ்ணமூர்த்தி. 

“விஷு (மலையாளப் புத்தாண்டு) வரப்போறது. இந்தத் தாரை ரொம்பக் கவனமா குருவாயூருக்கு அனுப்பிவிடு” என்றார் பெரியவா தடாலென்று. அப்போது பெரியவா கைங்கர்யத்தில் இருந்த சீடர்கள், “விஷுவுக்கு இன்னும் பதினாலு நாள் இருக்கே... அதுக்குள்ள இந்தத் தாரை இங்கே வெச்சிருந்தா அழுகி வீணாப் போயிடுமே” என்று கிருஷ்ண மூர்த்தியிடம் கிசுகிசுத்தனர்.

அதைக் கேட்ட கிருஷ்ணமூர்த்தி, ‘‘இது குருவாயூருக்குப் போகணும்னு பெரியவா உத்தரவு போட்டுட்டாருன்னா, பதினாலு நாள் இல்லே, பதினாலு வருஷமானாலும் பழம் கெட்டுப் போகாது. அப்பத்தான் பழுத்த பழம்போல் பளிச் சுன்னு இருக்கும். பெரியவா வாக்கு என்னிக்குமே பொய்க்காது’’ என்றார். வாழைத்தாரை பத்திரப் படுத்துமாறு ஒரு சிப்பந்தியிடம் கூறினார்.

மகா பெரியவா கூறியபடியே அந்த வாழைத்தார் குருவாயூரப்பனுக்குச் சமர்ப்பிக்கப்படும்வரை ஒரு பழம்கூட தாரில் இருந்து கீழே விழவும் இல்லை; அழுகி, கறுத்துப் போகவும் இல்லை.

அதுதான் மகா பெரியவா வாக்கின் மகிமை!

கயிலை... காலடி... காஞ்சி! - 23 - ‘ஒரு தார்ல 1008 பழம் இருக்கறதை பார்த்திருக்கியோ?’

இதே வாழைப்பழத்தாரை சாதனமாகக் கொண்டு மகா பெரியவா, ஓர் அருளாடலை தேனம்பாக்கத்தில் நிகழ்த்தி இருக்கிறார். மதுவின் போதைக்கு அடிமையானவர்களின் மனதை மாற்றிய அந்த அருளாடல்...

தேனம்பாக்கத்தில் மகா பெரியவா தங்கி இருந்தபோது, காட்டுப்புத்தூரில் இருந்து ஒரு பெரிய பணக்காரர் தரிசனத்துக்கு வந்தார். வந்தவர் இரண்டு பெரிய ரஸ்தாளி வாழைப் பழத்தாரை கொண்டு வந்து சமர்ப்பித்தார். அன்புடன் தம்மை தரிசிக்க வந்த பக்தரின் வாழைப்பழத்தார்களை ஸ்வீகரித்துக்கொண்ட மகான், அந்தப் பக்தருக்குப் பிரசாதம் கொடுத்து அனுப்பினார்.

மொழுமொழுவென்று நன்றாக இருந்த வாழைப்பழத்தார்களைக் மடத்து சிப்பந்திகள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந் தனர். பெரியவா தங்களுக்கே அந்த வாழைப் பழத்தார்களைக் கொடுத்துவிடுவார் என்று அவர்கள் உள்ளுக்குள் நினைத்துக்கொண்டனர். ஆனால், மகா பெரியவா ஒரு சிப்பந்தியை அழைத்து, “இந்தா.... இந்த ரெண்டு தாரையும் தூக்கிண்டு போய், வாசல்ல ஒரு பெரிய புளியமரம் இருக்கோல்லியோ... அதோட கெளைல கைக்கு எட்டறாப்ல கட்டி தொங்கவிடுங்கோ!” என்று சொன்னார்.

அதற்கான காரணம் அவர்களுக்குப் புரிய வில்லை. ஆனால், மகா பெரியவா அப்படி உத்தரவு இட்டதற்குக் காரணம் இருக்கவே செய்தது.

தேனம்பாக்கத்தைச் சேர்ந்த ஒரு பகுதியில் வசித்த மக்கள் வறுமைக்கோட்டுக்கும் கீழே வாடுபவர்கள். அவர்களில் பொறுப்பில்லாத சில ஆண்கள் நன்றாகக் குடித்து விட்டு, பசியோடு வீட்டுக்குப் போய் அங்குள்ள பெண்கள், குழந்தைகளை அடித்து நொறுக்குவார்கள். இது அன்றாடம் வாடிக்கையாக நடப்பது. நம்முடைய கருணைக்கடலுக்கு இது தெரியாதா? ஏழைகளிடம் தனியானதொரு பிரியம் வைத்திருப்பவர் அல்லவா மகா பெரியவா?! வாழைத்தார் கட்டின அன்று இரவு அவ்வழியாக குடித்துவிட்டு வீட்டுக்குப் போனவர்கள், வாழைத் தாரில் இருந்து பழத்தைப் பிய்த்து சாப்பிட்டுவிட்டுப் போனார்கள். பெரியவா திருவுள்ளப்படி குடித்துவிட்டுப் போனவர்களின் பசி வெகுவாக அடங்கியதால், வீட்டில் உள்ள பெண்களும், குழந்தைகளும் அடியிலிருந்து தப்பித்தனர்.

மறுநாள், ‘‘இனிமே மடத்துக்கு வர்றவா குடுக்கற பழங்கள் மொத்தத்தையும் புளியமரத்துல கட்டிடுங்கோ’’ என்று நிரந்தரமாகவே ஓர் உத்தரவு போட்டுவிட்டார். அதிலிருந்து தினமும் புளிய மரத்தில் வாழைப்பழம் தொங்கவிடப்பட்டது.

சுமார் பதினைந்து நாள்களுக்குப்பின், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் வந்தார். ``சாமி, இப்போ ரொம்ப ஆளுங்க திருந்திட்டாங்க. ‘தண்ணி’ போடறதையே நிறுத்திட்டாங்க சாமி! குடிசைல பொம்பளைங்க, கொளந்தைங்க எல்லாம் இப்ப சந்தோஷமா இருக்காங்க சாமி...”  என்று சொல்லி வணங்கினார்.

மதுவுக்கு அடிமையானவர்களின் மனமாற்றத் துக்கு வாழைப்பழம் மட்டும்தானா காரணம்? நிச்சயமாக இல்லை. ஞானத்தின் உருவாகவும், கருணையின் பிறப்பிடமாகவும் அவதரித்த காஞ்சி மாமுனிவரின் கருணைத்திறமும்தான் காரணம்!

நகரங்களிலேயே சிறந்ததாகக் கவி காளி தாசனால் வர்ணிக்கப்பட்ட காஞ்சி மாநகரத்தில் அருளாட்சி செலுத்திய மகா பெரியவா சாட்சாத் கயிலை சங்கரனின் அவதாரமாக அவதரித்தவர் என்று எல்லோரும் போற்றுகிறார்கள். கயிலை சங்கரனின் அவதாரம் என்றால், அவருடைய திருமுடியில் பிறைச் சந்திரன் இருக்கவேண்டுமே! ஆனால், மகா பெரியவா திருமுடியில் பிறைச் சந்திரன் இல்லையே? இதற்குக் காரணம் என்ன?

- திருவருள் தொடரும்

படங்கள்: தே.அசோக்குமார்